தமிழில் திரைப்படங்கள் தோன்றி வெளி வர ஆரம்பித்து ஆண்டுகள் பல கடந்து விட்டன! நூற்றுக்கணக்கான படங்கள்! ஆயிரக்கணக்கான பாடல்கள்!! பாடல்கள் பல விதம்! ஒவ்வொன்றும் ஒரு விதம்!!
தமிழில் திரைப்படங்கள் தோன்றி வெளி வர ஆரம்பித்து ஆண்டுகள் பல கடந்து விட்டன! நூற்றுக்கணக்கான படங்கள்! ஆயிரக்கணக்கான பாடல்கள்!! எத்தனை எத்தனை கவிஞர்கள்! எத்தனை எத்தனை இசை அமைப்பாளர்கள்! எப்படிப்பட்ட காட்சிகள் பாடல்களுக்காக! முழுப்பாடலுக்கான காட்சிகளை கணம் கணமாகப் பிரித்து அதற்கு நடன அசைவுகள், உடைகள், ஒளிப்பதிவு, ஒலிப்பதிவு, இயக்கம் என்றெல்லாம் அமைத்துப் பாடுபடும் கலைஞர்கள் எத்தனை எத்தனை பேர்!
இவற்றை லட்சக்கணக்கானோர் கேட்டு மெய்மறந்து இசை இன்பத்தை அனுபவிக்கும் போது ஓசை தரு இன்பம் உவமை இலா இன்பம் என்ற பாரதியின் கூற்று மெய்ப்பிக்கப்படுகிறது.
காதல் பாடல்கள் - அதிலே உட்பிரிவாக மலர், நிலா, மேகம், உடல் வர்ணனை, உள்ள மகிழ்ச்சிப் பொங்கல்கள், உவமைகள், இசைக்கப்படும் ராகங்கள், பிஜிஎம் எனப்படும் பேக் க்ரவுண்ட் மியூசிக் என்று எடுத்துப் பார்த்தால் அதுவே ஒரு பெரிய ஆய்வுப் புத்தகமாக மலர்ந்து விடும்.
இது தவிர, பாசப் பாடல்கள் (மலர்ந்தும் மலராத), தத்துவப் பாடல்கள் (நம் வாழ்வில் காணா சமரசம் உலாவும்), அறிவுரைப் பாடல்கள் (தூங்காதே தம்பி தூங்காதே), நகைச்சுவை பாடல்கள் (அடுத்தாத்து அம்புஜத்தைப் பார்த்தேளா), நினைவுப் பாடல்கள் (நினைக்கத் தெரிந்த மனமே), லட்சியப் பாடல்கள் (செய்யும் தொழிலே தெய்வம்-அந்தத் திறமை தான் நமது செல்வம்), பாரதியார் பாடல்கள் (மங்கியதோர் நிலவினிலே), வினா விடை பாடல்கள் (ஒருத்தி ஒருவனை நினைத்து விட்டால் அந்த உறவுக்குப் பெயர் என்ன?), சிறுவர் பாடல்கள் (மனம் விட்டு), கிறிஸ்தவ பாடல்கள் (நீலக்கடலில் ஓரத்தில்), தாலாட்டுப் பாடல்கள் (நீல வண்ணக் கண்ணா வாடா) நடனப் பாடல்கள் (ஆடாத மனமும் உண்டோ?) பக்திப் பாடல்கள் (முருகா என்று ஒரு தரம் சொன்னால் உருகுது நெஞ்சம், பெருகுது கண்ணீர்), குடி போதைப் பாடல்கள் (ஏ.. தண்ணி தொட்டி தேடிவந்த) சடங்குப் பாடல்கள் (பூப்பு நீராடல், வளைகாப்பு) ஆங்கிலச் சொற்கள் கலந்த பாடல்கள் (மேலே பறக்கும் ராக்கெட்டு, மின்னல் வெட்டு ஜாக்கட்டு, ஆளை மயக்கும் ஃபேஸ் கட்டு, அது தான் இப்போ மார்க்கெட்டு), ராகங்களை விளக்கும் பாடல்கள் (சங்கீத சௌபாக்கியமே, என்றும் குன்றாத பெரும் பாக்யமே), இதிஹாஸ, புராணப் பாடல்கள் (மனம் கவரும் புண்ய கதை ராமனின் கதையே), இனிய ஹம்மிங் உள்ள பாடல்கள் (பூவரையும் பூங்கொடியே பூமாலை போடவா), கவிஞனின் சுயசரிதை போல உள்ள சுய கூற்றுப் பாடல்கள் (ஒரு கோப்பையிலே என் குடியிருப்பு), கம்யூனிஸ தத்துவப் பாடல்கள் (காடு வெளஞ்சென்ன மச்சானே நமக்கு கையும் காலும் தானே மிச்சம்), இசையின் பெருமை பற்றிய பாடல்கள் (துள்ளாத மனமும் துள்ளும், சொல்லாத கதைகள் சொல்லும்), தமிழின் பெருமை பற்றிய பாடல்கள் (தமிழுக்கும் அமுதென்று பேர்), படகில் போகும் போது பாடும் பாடல்கள் (தேன் நிலவு உள்ளிட்ட படங்கள்), காரில் போகும் போது பாடும் பாடல்கள் (செந்தாழம் பூவில்), குதிரை சவாரி பாடல்கள் (சத்தியமே லட்சியமாய்க் கொள்ளடா), தேசபக்திப் பாடல்கள்(இந்திய நாடு என் நாடு), ஊர்கள் வரும் பாடல்கள் (மணப்பாறை மாடு கட்டி), ஒரு சொல்லே பல முறை வரும் பாடல்கள் (அத்திக்காய், காய் ஆலம்காய் வெண்ணிலவே).. .. இந்தப் பட்டியலுக்கு முடிவே இல்லை.
இது தவிர இசை அமைப்பாளர்களின் பாடல்கள், நல்ல வாத்தியங்கள் பிரத்யேகமாகப் பயன்படுத்தப்பட்ட பாடல்கள், மேலை நாட்டு அல்லது ஹிந்துஸ்தானி இசையைத் தழுவிய பாடல்கள், நவரஸங்களை அடிப்படையாகக் கொண்ட பாடல்கள், வெவ்வேறு கவிஞர்களின் பாடல்கள் என்றும் பாடல்களை இனம் பிரிக்கலாம்; தரம் பிரிக்கலாம்! லேண்டிங் நோட்ஸ், உச்ச ஸ்தாயி, சங்கதிகள் என்றெல்லாம் நுணுகி ஆராய ஆரம்பித்தால் அதற்கு எல்லையே இல்லை!
இது தவிர, இந்தப் பாடல்கள் எழுதும் முயற்சியில் ஏற்பட்ட ஏராளமான சம்பவங்கள், பாடல்கள் வெளி வந்த பின்னர் அதன் தாக்கத்தால் ஏற்பட்ட ஏராளமான சம்பவங்கள் என்பதை எல்லாம் தொகுக்க ஆரம்பித்தால் முடிவே இல்லை. இந்த முயற்சி சாதாரண முயற்சி இல்லை!
முக்கியமான ஒரு விஷயம் இந்த இசையை ஜீவாதாரமாக்கி தன் உயிரைக் குரலுடன் கலந்து கொடுக்கும் பாடகர்கள், பாடகிகள்! எம்.எஸ்.சுப்புலட்சுமி, வசந்த கோகிலம், எம்.கே.தியாகராஜ பாகவதர், பி. சுசீலா, லதா மங்கேஷ்கர் (தமிழிலும் பாடியுள்ளார்), ஜானகி, டி.எம்.சௌந்தரராஜன், திருச்சி லோகநாதன், ஏ.எம்.ராஜா, எஸ்.பி.பாலசுப்ரமணியன் என்று பாடகர்களை எடுத்துக் கொண்டால் அவர்களின் இசைக் கவர்ச்சியை மனதில் பிடித்துப் பார்த்தால்.. நிஜமாகவே :- "துள்ளாத மனமும் துள்ளும் சொல்லாத கதைகள் சொல்லும் இல்லாத ஆசையைக் கிள்ளும் இன்பத் தேனையும் வெல்லும் - இசை இன்பத் தேனையும் வெல்லும்' துன்பக் கடலைத் தாண்டும் போது தோணியாவது கீதம் அன்புக் குரலில் அமுதம் கலந்தே அருந்தத் தருவது கீதம் எங்கும் சிதறும் எண்ணங்களையும் இழுத்து வருவது கீதம் இணைத்து மகிழ்வதும் கீதம் - துயர் இருளை மறைப்பதும் கீதம்" (படம் :கல்யாண பரிசு; பாடல் ஆசிரியர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்)
திரை இசைப்பாடல்கள் ஒரு பெரிய கடல். ஆனால் பெரிய கடலில் ஒரு சில திவலைகளைத் தொட்டு மகிழ்வது போல சில பாடல்களைத் தொட்டு மகிழலாமா? சில வாரங்கள் மகிழ்ந்துதான் பார்ப்போமே!
(தொடரும்)
|