உன் அடிமனதில் எழும் எண்ணங்கள் உன்னைப் பணக்காரனாகவோ, ஏழையாகவோ ஆக்கும்! அதனால் நேசிக்கவும், வெறுக்கவும் முடியும்!
வெற்றிப்பாதை
வெற்றிக்கான வழி எப்போதும் கரடுமுரடானதாகத்தான் இருக்கும். அதில் தோல்வி என்ற பள்ளங்கள் இருக்கும். குழப்பம் என்ற வளைவுகள் இருக்கும். நண்பர்களால் ஏற்படும் வேகத்தடைகள் இருக்கும். உறவினர்கள் காட்டும் எச்சரிக்கை விளக்குகள் எரியும். ஆனால், உங்களிடம் உறுதி என்ற உதிரி பாகம், விடாமுயற்சி என்ற இஞ்சின், நம்பிக்கை என்ற கவசம், கடவுள் என்ற ஓட்டுனர் இருந்தால் நீங்கள் வெற்றி என்ற இலக்கை எல்லாத் தடைகளையும் கடந்து அடைய முடியும். - யாரோ!
*****
இலக்குடன் வாழுங்கள்!
நல்லதே செய்யுங்கள். உங்களுக்குப் பிறகு நீங்கள் விட்டுச் செல்லும் அந்த நல்ல பெயரை காலச் சூறாவளிகளினால் அழிக்க முடியாது. உங்கள் வார்த்தைகளை அன்பு, நேசம், காருண்யம் என்ற மொழிகளால் உங்களுடன் தொடர்புள்ளவர்கள் மனதில் எழுதுங்கள். உங்கள் நினைவு என்றும் நீங்காததாக இருக்கும். உங்கள் பெயரும், உங்களது நல்ல செயல்களும் வானத்தில் ஒளி விடும் நட்சத்திரங்களைப் போலப் பிரகாசமாக இருக்கும்.
*****
உன்னால் முடியும்!
நீ எப்படியிருக்க வேண்டும் என்று மனதில் எண்ணுகிறாயோ, அதுபோல் இருப்பாய். உன் அடிமனதில் எழும் எண்ணங்கள் உன்னைப் பணக்காரனாகவோ, ஏழையாகவோ ஆக்கும்! அதனால் நேசிக்கவும், வெறுக்கவும் முடியும்! சந்தோஷமாகவோ துக்கமாகவோ இருக்க முடியும்! உன்னை பலசாலியாக்குவதும், கோழையாக ஆக்குவதும் உன் மனதின் அடித்தளத்தில் தோன்றும் எண்ணங்கள்தான்! மனதில் என்ன எண்ணங்களை விதைக்கிறாயோ அவைதான் மரமாக வளரும். அப்படித்தான் மனோதத்துவ விதிகள் சொல்கின்றன.
உன் மனதுடன் விடாமல் தொடர்ந்து பேசிக்கொண்டே இரு. நம்பிக்கை விதைகளை மனசுக்குள் தூவு. அந்த வார்த்தைகளே உன்னுள் ஒரு நம்பிக்கையை ஊட்டும். அது நீ எண்ணியபடி உன்னை மாற்றும்! உன்னால் முடியும் என்று நீ உண்மையாகவே மனதார நம்பினால் நிச்சயமாக அது உன்னால் முடியும்.
*****
இன்னும் ஒரு அடிதான்!
வெற்றி அடைய இன்னும் ஒரு அடி எடுத்து வைத்தால் போதும் என்றால் நீங்கள் அந்த அடியை எடுத்து வைப்பீர்களா, மாட்டீர்களா? இன்னும் ஒரு அடிதான் இருக்கிறது என்பதை எப்படி உங்களால் தெரிந்து கொள்ள முடியும்? அவ்வளவு தூரம் கடந்துவிட்டு ஒரு அடி எடுத்து வைக்காததால் தோல்வி அடைந்தால் எவ்வளவு வெட்கமாக இருக்கும்? நீங்கள் எடுத்து வைக்கும் அடுத்த அடி இதுவரை நடந்த அடிகளுக்கெல்லாம் பலனளிப்பதுபோல வெற்றிக்கான படியாக இருக்கலாம். நீங்கள்தான் எந்த நேரத்திலும் முயற்சியைக் கைவிடாமல் தொடர்ந்துகொண்டே இருக்க வேண்டும். அடுத்த அடி வெற்றியைத் தராமல் போகலாம். ஆனால் இன்னும் சில அடிகள் தொடர்ந்தால் வெற்றியை நிச்சயம் அடைவீர்கள். அப்போது உங்களது விடாமுயற்சிக்காக நீங்களே உங்களைத் தட்டிக் கொடுத்துக்கொள்வீர்கள். எப்போதுமே வெற்றி இன்னும் சிறிது தூரம்தான், சில அடிகள்தான் என்று உணருங்கள். அதை அடையும்வரை பயணத்தைத் தொடருங்கள்.
*****
இப்படிச் செய்தால் என்ன?
புன்னகை செய்யுங்கள். சாய்ந்துகொள்ளத் தோள் கொடுங்கள். யாரையேனும் முதுகில் தட்டிக்கொடுங்கள். 'மிக்க நன்றி' என்று சொல்லுங்கள். நீ மிகவும் நன்றாக வேலை செய்தாய் என மனமாரச் சொல்லுங்கள். நீயென்றால் எனக்கு மிகவும் பிரியம் என அன்பாகச் சொல்லுங்கள். சோகமாயிருக்கும் போது ஒரு நல்ல பாட்டை சீட்டி அடியுங்கள். ஒரு பழைய நண்பருக்கு 'எத்தனை நாளாச்சு உன்னைப் பார்த்து' என்று அக்கறையுடன் ஒரு கடிதம்/இமெயில் அனுப்புங்கள். தினம் ஒரு நல்ல செய்தியை நண்பர்களுக்கு அனுப்புங்கள்.