சூரியன் கோடானு கோடி ஆண்டுகளாக இந்த ஃப்யூஷனால் தான் வெப்பத்தைக் கக்கிக் கொண்டிருக்கிறான். இப்போது விஞ்ஞானிகள் இதே சக்தியை உருவாக்க முயல்கின்றனர்
நான்காவது கண்டுபிடிப்பு: முற்றிலுமாக கழிவு ஒழியும்!
இப்போது, புதிய தொழில்நுட்ப உத்திகள் கழிவுகளை எப்படி மறுசுழற்சிப் பொருள்களாக ஆக்குவது என்பதைச் செய்து காட்டுகின்றன. கோழி இறகுகள் தான் எதிர்கால பிளாஸ்டிக் என்றால் ஆச்சரியமாக இல்லை? கடல்நீரில் தீங்கு பயக்காமல் கரைந்து விடும் அபாயமற்ற பிளாஸ்டிக் பொருள்கள் உருவாகப் போகின்றன! ஆகவே பயமில்லாமல் பிளாஸ்டிக் கழிவை கடலில் தூக்கி எறியலாம்! உணவு மிச்சங்கள்,சாக்கடைக் கழிவுகள் இன்னும் இதர கழிவுகள் ஆகியவை எதிர்காலத்தில் எரிபொருள்களாக மாறப் போகின்றன! ஏற்கனவே அமெரிக்க ராணுவத்திலும் குடிமக்கள் உபயோகத்திலும் இவை ஜெனரேட்டர் மற்றும் பவர் ப்ளாண்டுகளை இயக்குவதற்கான எரிபொருள்களாக ஆகி பயன்பாட்டிற்கு வந்து விட்டன! நூறு சதவிகித பயன்பாடு என்பது தான் இனி அடைய வேண்டிய லட்சியம்! நியூயார்க், சியாட்டில், லண்டன் ஆகிய நகர்களில் கழிவுகளை அகற்ற ஆகும் செலவு எவ்வளவு, அவை எப்படிப்பட்ட கழிவுகளாக வருகின்றன என்பதை ஆராய ட்ராஷ் ட்ராக் ப்ராஜெக்ட் என்ற ஒரு திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு விட்டது. இதன் மூலம் பசுமை நிறைந்த இயற்கை சூழல் இனி உலகெங்கும் உருவாக வழி உதித்து விட்டது!
மூன்றாவது கண்டுபிடிப்பு: உலக சீதோஷ்ண நிலையில் கட்டுப்பாடு!
ஒலிம்பிக் விளையாட்டு நடக்கும் போது மழை பெய்யாமல் அதைத் தடுத்து நிறுத்தவேண்டும் அப்போது தான் தடையின்றி விளையாட்டுகள் நடக்கும் என்பன போன்ற இயற்கையைக் கட்டுப்படுத்தும் சாதாரண விஞ்ஞான லட்சியங்களை இனி மறந்து விடலாம். சூரியனுடைய கடுமையான வெப்பத்தை ரிப்ளெக்டர் மூலமாக பிரதிபலிக்க வைத்து பூமி மீது படாமல் செய்து பூமியைக் குளிர்ச்சியாக வைத்து அதை வெப்பமயமாகும் அபாயத்திலிருந்து காப்பதற்கான அதிரடித் திட்டங்கள் இப்போது தயார்! அல்லது கடல் மீது 'அயர்ன் விதைகளைத்' தூவி கார்பன் மயமாகும் அபாயத்தைத் தடுக்கவும் ஒரு வழி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பில் கேட்ஸ் ஒரு புது ஐடியாவை தனக்கென பேடண்ட் செய்திருக்கிறார்! அது என்ன ஐடியா தெரியுமா? பயங்கரமாக ஆர்ப்பரித்து வரும் சூறாவளியின் வேகத்தைக் குறைத்து அதை வலுவிழக்கச் செய்வது அல்லது முற்றிலுமாகத் தடுத்து நிறுத்துவது- இது தான் அவர் பேடண்ட் எடுத்திருக்கும் ஐடியா!! இதற்கு ஏராளமான கப்பல்களைக் கடலில் செலுத்தி ‘கடலைக் கடைந்து' வெப்பமாக உள்ள பரப்பில் வெப்பத்தைக் குறைத்து குளிர வைக்க வேண்டும்! இந்த வெப்பமான கடல் பரப்பே சூறாவளிகளை உருவாக்குகிறது என்பதால் முளையிலேயே அதைக் கிள்ளி எறிந்து விட ஒரு ‘புதிய ஏற்பாடு' இது! உலகின் சீதோஷ்ண நிலையைக் கட்டுக்குள் கொண்டு வருவதற்கான உத்திகள் விஞ்ஞானிகள் மட்டத்தில் தயார். கொள்கை முடிவுகளை எடுக்கும் அரசியல்வாதிகள் பக்கவிளைவுகளை எதிர் நோக்கி ரிஸ்க் எடுக்கத் தயாராகும் போது இவை அமுல்படுத்தப்படும்!
இரண்டாவது கண்டுபிடிப்பு: சூரியன் என்னும் கொதி உலையைப் பயன்படுத்தலாம்!
ந்யூக்ளியர் ஃப்யூஷன் - இது தான் மந்திர வார்த்தை. சூரியன் கோடானு கோடி ஆண்டுகளாக இந்த ஃப்யூஷனால் தான் வெப்பத்தைக் கக்கிக் கொண்டிருக்கிறான். இப்போது விஞ்ஞானிகள் இதே சக்தியை உருவாக்க முயல்கின்றனர். அளவற்ற ஆற்றலை பூமி இனி பெறும்! ராக்ஷஸ லேசர்கள் தங்கள் சக்தியை ஒரு சிறிய ஹைட்ரஜன் எரிபொருள் குண்டு மீது செலுத்தும். அது அளப்பரிய ஆற்றலை வெளிப்படுத்தும், இது தவிர அளப்பரிய ஆற்றலை உருவாக்க அதி உஷ்ணத்தைக் கொண்டிருக்கும் பிளாஸ்மாவைப் பயன்படுத்துவது உள்ளிட்ட மாற்று உத்திகளையும் கூட விஞ்ஞானிகள் கைவசம் வைத்துள்ளனர். இனி பூமியில் ஆற்றலுக்குப் பஞ்சமே இருக்காது!
முதலாவது கண்டுபிடிப்பு: செயற்கை மூளையை உருவாக்குவது!
இன்று கூட மூளை ஒரு விளங்காத மர்மம் தான்! புரியாத புதிர் தான்! கோடிக்கணக்கில் நியூரான்களைக் கொண்டிருக்கும் அபூர்வ அங்கம் மனித மூளை!! ப்ளூ ப்ரெய்ன் ப்ராஜக்ட் என்ற ஒரு புதிய திட்டம் இப்போது வகுக்கப்பட்டுள்ளது! இதன் ஒரே நோக்கம் மனித மூளையைப் போலவே செயல்படும் ஒரு செயற்கை மூளையை அமைப்பது தான்!! இன்னும் பத்து ஆண்டுகளுக்குள் இந்த செயற்கை மூளையை உருவாக்க வேண்டும் என்ற லட்சியத்தைக் கொண்டு இந்த திட்டம் அமைக்கப்பட்டுள்ளது. செயற்கை மூளைக்கான அடிப்படை மாடல் தயார். ஐபி எம் சூப்பர் கம்ப்யூட்டர் ப்ளூ ஜெனி என்பதன் உதவி கொண்டு இது அமைக்கப்பட்டு விட்டது. இந்த மாடல் மூளையில் உள்ள செல்கள் இப்போதே மனிதனின் உதவியின்றி தாமாகவே தம்மை நிர்வகித்துக் கொள்கின்றன! மனிதனிடம் இருக்கும் பிரக்ஞை அல்லது கான்ஸியஸ்னெஸ்ஸை அது எப்படிப் புரிந்து கொள்ள வேண்டும் என்பதற்கு இப்போது ஆராய்ச்சிகள் நடைபெறுகின்றன. செயற்கை மூளை தான் விஞ்ஞானிகளின் டாப் டென் லிஸ்டில் முதலாவதாக உள்ளது.
பிரம்மாண்டமான பத்து முக்கியமான கண்டுபிடிப்புகளைப் படித்து முடித்தாகி விட்டதா? இனி முதலிலிருந்து பத்து வரை டாப் டென்னை இன்னொரு முறை படித்துப் பாருங்கள்! இன்றைய துன்ப உலகம் நாளை அதிசய இன்ப லோகமாக மாற இருப்பதை எண்ணி சந்தோஷப்படலாம்!!
அறிவியல் அறிஞர் வாழ்வில்....
1669ம் ஆண்டு நடந்தது இது! ஹென்னிங் ப்ராண்ட் என்ற விஞ்ஞானி சிறுநீரைப் பரிசோதனை செய்து கொண்டிருந்தார். ஒரு புதிய கூட்டுப் பொருளைக் கண்டுபிடிப்பதே அவரது நோக்கம். அவர் நோக்கம் வெற்றி பெற்றது. ஒரு புதிய பொருளை அவர் கண்டுபிடித்தார். என்றாலும் அவருக்கு சந்தோஷமோ திருப்தியோ ஏற்படவில்லை. ஆகவே அவர் அதை அப்படியே விட்டு விட்டார். இதே பொருளை பின்னால் ராபர்ட் பாயில் (1627-1691) மீண்டும் கண்டுபிடித்தார்.
ஹென்னிங் ப்ராண்ட் ஏன் ஏமாற்றம் அடைந்தார் தெரியுமா? அவர் கண்டு பிடிக்க விரும்பியது, சாதாரண உலோகங்களைத் தங்கமாக மாற்ற வைக்கும் ஒரு அரிய ரஸவாதப் பொருளை. ஏனெனில் அவர் ஒரு ரஸவாத நிபுணர், பெரிய வணிகரும் கூட! தங்கமாக மாற்ற வல்ல ஒன்றைக் கண்டுபிடித்தால் கோடீஸ்வரர் ஆகி விடலாம் என்று கனவு கண்டார். ஆனால் கண்டுபிடித்ததோ பாஸ்பரஸ்! பாஸ்பரஸ் மீது அவருக்கு அவ்வளவாக ஆர்வம் இல்லை! ஆகவே அவர் அதை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை!
ரஸவாத வித்தைக்கு ஆசைப்படாதவரே இல்லை - விஞ்ஞானி உட்பட!
We use cookies on this website. By using this site, you agree that we may store and access cookies on your device. Find out more and set your preferences here . X