பசித்தவருக்கு கடவுள் ரொட்டி வடிவில்தான் வருகிறார். ஒரு நாய் பட்டினி கிடந்தால் கூட அத்தனை கடவுள்களுக்கும் அத்தனை மதங்களுக்கும் அர்த்தம் இல்லை
சொல்வது தெளிந்து சொல்
பகவான் இராமகிருஷ்ணரை சந்திக்க ஒரு தாய் தன் மகனுடன் வந்திருந்தார். “மிக அதிகமாக சர்க்கரை சாப்பிடுகிறான். கூடாது என்று அறிவுறுத்துங்கள்” என்று ராமகிருஷ்ணரை வேண்டினார். இராமகிருஷ்ணரோ ”நாளை மீண்டும் வா” என்று சொல்லி அனுப்பினார். இது போல ஒரு வாரம் கழிந்தது. கடைசியில் இராமகிருஷ்ணர் பையனைப் பார்த்து, “அதிகம் சர்க்கரை சாப்பிடுவது உடல் நலத்திற்கு கேடு. எனவே குறைத்துக் கொள்” என்று உபதேசம் செய்தார். அந்தத் தாய் “இதைச் சொல்லவா எங்களை ஒருவாரம் அலைக்கழித்தீர்கள்?” என்றார் கோபத்துடன். இராமகிருஷ்ணர் சிரித்துக் கொண்டே சொன்னார். “அம்மா நீங்கள் வந்து கேட்ட போது நானும் அதிகமாக இனிப்புகள் சாப்பிட்டுக் கொண்டிருந்தேன். அப்படி இருக்க, நான் எப்படி உபதேசம் செய்வது? எனவே ஒரு வாரம் நான் இனிப்பு சாப்பிடாமல் இருந்து விட்டு, பிறகு உன் மகனிடம் சொன்னேன்” என்றாராம்.
மஹாத்மா காந்தியிடம் ஒருமுறை “மக்களுக்கு உங்கள் செய்தி என்ன?” என்று கேட்டதற்கு “என் வாழ்க்கையே என் செய்தி” என்று கூறினார். இன்று இருக்கும் தலைவர்கள் யார் தங்கள் வாழ்க்கையே செய்தி என்று இளைஞர்களுக்கு கூற முடியும்? கூறினால் அடுத்த தலைமுறை அதை ஏற்க முடியுமா? என்று யோசித்துப் பார்க்க வேண்டும். ‘இந்தியா கிராமங்களில் தான் வாழ்கிறது’ என்று சொன்னதோடு நிற்காமல், தானும் ஒரு ஏழை கிராம விவசாயியைப் போல் நடை, உடை, பாவனைகளை மாற்றிக் கொண்டு, ஒரு வறுமையான குடியானவனைப் போல்தான் மஹாத்மா வாழ்ந்தார். எளிமையான ‘விரும்பி ஏற்றுக் கொண்ட வறுமை’ யில் வாழ்ந்த காந்தியின் படத்தைத்தான் இன்னும் நம் நாடு அச்சிடும் அத்தனை ரூபாய் நோட்டுக்களிலும் பார்க்கிறோம்!
“பசித்தவருக்கு கடவுள் ரொட்டி வடிவில்தான் வருகிறார். ஒரு நாய் பட்டினி கிடந்தால் கூட அத்தனை கடவுள்களுக்கும் அத்தனை மதங்களுக்கும் அர்த்தம் இல்லை” என்று கூறும் சுவாமி விவேகானந்தர், பசிப்பிணி போக்குவதற்காய் சேவை செய்யவும், அந்த சேவையை ஒரு இயக்கம் மூலம் செய்யவும் முற்பட்டார். தன்னுடன் இருக்கும் துறவிகளோடு இயக்கமாக இணைந்து, அதனுடன் சேர்த்து மக்களையும் அரவணைத்துக் கொண்டு, அத்தனை பேரையும் சேவையில் ஈடுபடுத்த எண்ணினார்.
உடனே வந்தன எதிர்ப்புகள். “உலகே மாயம்; பசியும் மாயம்; பிணியும் மாயம்; இதைப் போக்க நாம் யார்? அவரவர் விதிப்படி கஷ்டப்படுகிறார்கள். நம் கடமை நம் முக்தியை நாடுவதே” என்று கூட இருந்த துறவிகள் குரல் கொடுத்தார்கள். “சேவை செய்வது துறவிகள் செயல் அல்ல” என்று வாதிட்டார்கள். விடுவாரா விவேகானந்தர்? “உங்கள் முக்தியும் மாயை” என்று பதில் கொடுத்தார்.
இன்னும் ஒரு பிரிவினர், “இராமகிருஷ்ணர் நம்மை சேவை செய்யச் சொல்லி எப்போது சொன்னார்? அவர் உபதேசங்களில் சேவை பற்றி எதுவும் சொல்லவில்லை” என்று வாதிட்டார்கள். அதற்கு சுவாமி விவேகானந்தர், “நீங்கள் இராமகிருஷ்ணரை புரிந்து கொண்டது அவ்வளவுதான். நீங்கள் புரிந்து கொண்டதை வைத்து அவரை எடை போடாதீர்கள். அப்படியே அவர் சேவை பற்றி எதுவும் கூறவில்லையெனில் நான் இராமகிருஷ்ணரின் சேவகன் அல்ல. யார் தன் சொந்த முக்தியைப் பற்றி கவலைப்படாமல் சேவை செய்கிறாரோ அந்த சேவகனின் சேவகன் நான்” என்றார்.
துறவிகள் ஒரு அமைப்பாய் செயல்படுவது இதற்கு முன் நடந்தது இல்லை. எல்லாம் துறந்தபின் அமைப்பு மட்டும் எதற்கு? என்றெல்லாம், கூட இருந்த முக்கிய துறவிகளே வாதம் செய்தாலும், அவர்கள் எல்லாரையும் தன் திறமையான வாதங்களால் வென்று, இறுதியில் இராமகிருஷ்ணர் பெயரில் சேவைக்காக ஒரு மடம் துவங்கி விட்டார்.
“சாதிகள் இல்லையடி பாப்பா” என்று பாடிய பாரதி தனது வாழ்நாளில் எந்தவித சாதிய எண்ணமும் இல்லாமல் வாழ்ந்து காட்டினார். ஒரு தாழ்த்தப்பட்ட இளைஞனுக்கு பூணூல் அணிவித்ததும், தன் அக்கிரஹாரத்துக்குள் பல சாதியினரை அழைத்து வந்ததும் அதன் காரணமாக சாதிப்பிரஷ்டம் செய்யப்பட்டதும், அனைவரும் சமம் என்று மீண்டும் மீண்டும் பேசியும், செய்து காட்டியதும் பாரதி வாழ்வில் நடந்த விஷயங்கள்.
“சூத்திரனுக் கொருநீதி - தண்டச் சோறுண்ணும் பார்ப்புக்கு வேறொருநீதி என சாத்திரம் சொல்லிடு மாயின் - அது சாத்திரமன்று சதியென்று கண்டோம்.
என்று சமநீதி வழங்காத சாத்திரத்தையே சதி என்று தூக்கி எறிகிறார் பாரதி. நூறு ஆண்டுகளுக்கு முன்னால் இப்படிப் பேசவும் செயல்படவும் ‘அச்சம் தவிர்த்தால்’ தான் முடியும்.
இன்று தலைமைப் பண்புகளைப் பற்றி பல புத்தகங்கள் வெளி வந்துவிட்டன. பல நட்சத்திர ஹோட்டல்களில், இரண்டு அல்லது மூன்று நாட்கள், தலைமைப் பண்பு பற்றிய கருத்தரங்கங்கள் நடைபெறுகின்றன. இந்தப் புத்தகங்களை எழுதியவர்கள் அல்லது கருத்தரங்களில் பேசுபவர்கள் உலகப் புகழ் பெற்ற தலைவர்களா என்பது கேள்விக்குரியதே. ஆனால் தாங்கள் தலைமைப் பண்புகளைப் பற்றி பேசுகிறோம் என்ற எண்ணமே இல்லாமல் ”சேவகனுக்கு சேவகனாய்” தங்களை அறிவித்துக் கொண்டவர்கள் மகாகவி பாரதியும், மஹாத்மா காந்தியும், சுவாமி விவேகானந்தரும்.
இவர்கள் சொன்னதைவிட செய்து காட்டிய, நடைமுறைப்படுத்திய தலைமைப் பண்புகள் ஏராளம். இவர்கள் வாழ்க்கையில் இன்றைய இளைய தலைமுறை தெரிந்து கொள்ள வேண்டிய ஆளுமைப் பண்புகள், தலைமைப் பண்புகள் கொட்டிக் கிடக்கின்றன. முழுமையாக இவர்களின் வாழ்க்கையைப் பற்றி படித்து, நாம் ‘கற்றது ஒழுகினால்’ வையத் தலைமை கொள்ளல் சாத்தியமாகும்.
இன்று மலிவாகக் கிடைப்பது அறிவுரைதான் என்கிறார்கள். எனினும் இது போன்ற நல்ல கருத்துகளைச் சொல்ல நாட்டிலுள்ளோரின் கதவுகளைத் தட்டிக் கொண்டே இருப்போம். ஒரு சிலவாவது திறவாமலா போகும்! - அரிமா இளங்கண்ணன்