 |
இதழ் 416 |
 |
மே 11 2009
|

|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
Your Advertisement Here
|
| |
|
| |
 |
add nilacharal to your favourites |
 |
nilacharal as your homepage |
|
|
|
|
| தலைவலி கொடுக்கும் தாலிபான்கள் (1)
- டி.எஸ்.பத்மநாபன் |
| | பத்து வருடங்களுக்கு மேலாக ஆஃப்கானிஸ்தானை கட்டுக்குள் வைத்திருந்த ரஷ்யப் படைகள் 1989ல் விலகிய பிறகு உள்நாட்டுச் சண்டையில் உருவானதுதான் தாலிபான் அமைப்பு. நவம்பர் 26ல் மும்பையில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலும் பின்பு பாகிஸ்தானின் லாஹூர் எல்லையில் நமது வாகா பாகிஸ்தான்-இந்தியா எல்லைக்கோட்டுக்கு 12 மைல் தொலைவில் ஒரு காவல்துறை பயிற்சிக் கல்லூரியில் நடந்த தீவிரவாதத் தாக்குதலும்உலகத்தையே உலுக்கின.
தாலிபான்களின் தாக்குதல் ஒன்றும் புதிதல்ல. ஆஃப்கானிஸ்தானில் கொடி கட்டிப் பறந்த (இன்றும் பறந்து கொண்டிருக்கும்!) மதத் தீவிரவாதிகள் பாகிஸ்தானிற்குள் புகுந்து, ‘ஆட்டைக் கடித்து மாட்டைக் கடித்து மனுஷனையே கடிப்பது போல’ இன்று இந்தியாவின் எல்லைக்கோடு வரை வந்துவிட்டார்கள். அடுத்ததாக அமெரிக்காவில் வாஷிங்டனைக் குறி வைத்திருப்பதாக வேறு பகிரங்க எச்சரிக்கை விடுகிறார்கள்.
தாலிபான்களை வளர்த்து கொம்பு சீவி விட்ட பெருமை பல மேல்நாடுகளுக்கும், பாகிஸ்தானுக்கும் உண்டு. இன்று வளர்த்த கடா மார்பில் பாயும் போதுதான் அவர்களுக்குப் புரிகிறது. பாகிஸ்தான் உள்துறை அமைச்சர் சொல்கிறார். “இப்போதிருக்கும் நிலையில் ஒன்று தாலிபான்களிடம் நாட்டைக் கொடுத்துவிட்டு ஒதுங்கிக் கொள்ள வேண்டும்; அல்லது தீவிரமாகப் போராடி அவர்களை அழிக்கவேண்டும்"
யார் இந்தத் தாலிபான்கள்?
1994ம் ஆண்டிலிருந்து உலகையே அச்சுறுத்திக் கொண்டிருக்கும் இந்தத் தாலிபான்கள் யார்? எப்படி முளைத்தார்கள்?
பெர்சிய மொழியில் ‘தாலிப்’ என்றால் ‘தேடுபவர்கள்’ என்று பொருள். மதங்களைப் பற்றிப் படிக்கும் மாணவர்கள் இந்தப் பெயரால் அழைக்கப் படுகிறார்கள். தாலிபான் என்பது தாலிப் என்ற வார்த்தையின் பன்மை. ஒரு மாணவன் மவுல்வியாகப் பட்டம் பெறுவதற்குப் பதினான்கு வருடங்கள் படிக்க வேண்டும். இந்த பதினான்கு வருடப் படிப்பின்போது, ஏதாவது மதப்போர் என்றால் (ஜிஹாதி) அதற்கு முக்கியத்துவம் கொடுத்து படிப்பை விட்டு விடுவார்கள்.
ஆஃப்கானிஸ்தானில் தாலிபான்களின் பின்னணி இஸ்லாமிய மதம் ஆஃப்கானில் வேரூன்றிய காலம் (635 A.D) தொட்டுப் பழமையானது. அந்த ஆண்டுதான் இஸ்லாம் மதம் சார்ந்த படைவீரர்கள், அன்று ஆஃப்கானிஸ்தானை ஆண்டு வந்த குஷன் குடும்பத்தைச் சேர்ந்த இந்து மன்னனை வென்று காபூலைப் பிடித்தார்கள். 2000 ஆண்டுகளுக்கு மேலாக, ஆஃப்கானிஸ்தானும் இன்றைய பாகிஸ்தானும் ஒரே நாடாகத்தான் இருந்தன என்பதை இங்கே குறிப்பிட வேண்டும். பிரிட்டிஷார் இந்தியாவில் புகுந்த பிறகே ஆஃப்கானிஸ்தான் தனிநாடாயிற்று.
தாலிபான்கள் தீவிர மதக்கொள்கைகளைத் தவிர வேறு எதையும் ஏற்றுக் கொள்வதில்லை. குடியரசு, சுதந்திரம் மற்றும் அரசியல் கட்டுப்பாடுகள் போன்றவை இஸ்லாம் மதத்திற்கு எதிரானது என்று கருதுபவர்கள். ஆஃப்கானிஸ்தானில் வசிக்கும் பெரும்பான்மையானவர்கள் பஷ்டூன் (பதான்) இனத்தைச் சேர்ந்தவர்கள். ஆஃப்கானிஸ்தான் மட்டுமல்ல, பாகிஸ்தானிலும் பெரும் பகுதியில் அவர்கள் நிறைந்திருக்கிறார்கள்.
பத்து வருடங்களுக்கு மேலாக ஆஃப்கானிஸ்தானை கட்டுக்குள் வைத்திருந்த ரஷ்யப் படைகள் 1989ல் விலகிய பிறகு உள்நாட்டுச் சண்டையில் உருவானதுதான் தாலிபான் அமைப்பு. 1989ல் ரஷ்யர்கள் ஆஃப்கானிஸ்தானை விட்டு வெளியேறியபோது, அங்கு பஞ்சமும், வறுமையும் தலை விரித்தாடின.
15 லட்சம் பேர்கள் மடிந்துபோய் நாட்டைத் தலைமை ஏற்றுச் செல்வதற்கு யாரும் இல்லாத நிலையில், முஜாஹுதீன் ராணுவத் தலைவர்கள் உள்ளே புகுந்தார்கள். ஆஃப்கானைச் சேர்ந்த பல்லாயிரக்கணக்கான குழந்தைகள் தங்கள் பெற்றோர், தாய் நாடு இவை பற்றி அறியாமல் பாகிஸ்தானில் மதரசா எனப்படும் மதப்பள்ளிகளில் பயின்றார்கள். அவர்களைப் பாகிஸ்தானும், சவுதி அரேபியாவும் மதத் தீவிரவாதிகளாகப் பயிற்றுவித்தனர். அவர்களைக் காஷ்மீரில் இந்தியாவிற்கு எதிரான பயங்கரவாதச் செயல்களைச் செய்ய பயன்படுத்தினார்கள். அந்த சிறுவர்கள் மூலம் ஆஃப்கானிஸ்தானையும் தன் பிடியில் கொண்டுவர பாகிஸ்தான் முயற்சி செய்தது. மதத் துவேஷமே தாய்ப்பாலாக ஊட்டப்பட்ட அவர்கள், ‘இந்தியாவிற்கு எதிரான புனித சண்டை’ என மூளைச் சலவை செய்யப்பட்டு எதற்கும் துணிந்தவர்களாக உருவாக்கப்பட்டனர்.
தாலிபான்கள் பரப்பி வரும் 'ஷரிய' என்று சொல்லப்படும் இஸ்லாமியக் கொள்கைகள் உண்மையான இஸ்லாமியக் கொள்கைகளிருந்து வேறுபட்டது; அவைகளுக்கு முற்றும் புறம்பானது. தங்கள் ஆளுமையை நிலைநாட்ட தாலிபான்கள் அவர்களாகக் கொண்டு வந்த சட்டங்கள் இவை!
தாலிபான்களின் முக்கிய நோக்கம், ஆஃப்கானிஸ்தானில் மக்கள் யாரும் புரட்சி செய்யாமல் அமைதியாக கீழ்ப்படிந்து வாழ்வது, ஷரிய சட்டத்தை அமலாக்குவது, முற்றிலும் சுதந்திரமான இஸ்லாமிய நாடாக ஆப்கானிஸ்தானை ஆக்குவது ஆகியவைதான். அவர்கள் தங்களை சமூகத்தைச் சீர்திருத்தும் அமைப்பாகவே காட்டிக் கொண்டார்கள். மதபோதகர் மொஹமத் அமரைத் தங்கள் தலைவராக ஏற்றுக் கொண்டார்கள்.
(மீதி அடுத்த இதழில்)
|
| | டி.எஸ்.பத்மநாபன் அவர்களின் இதர படைப்புகள்.
| ஸ்பெஷல்ஸ் பகுதியில் வந்த இதர படைப்புகள்.
|
|
|
|
|
|