என்னால் ஆகாதப்பா! நீயே காளியிடம் நேரில் சென்று முறையிட்டுக் கொள். நான் அவளிடம் பலமுறை உனக்காகப் பிரார்த்தித்து விட்டேன்.
ஆசைகள் பொசுங்கின; ஆனந்தம் நிறைந்தது!
நரேந்திரனின் குடும்ப வறுமை நிலை பற்றி ஏற்கெனவே குறிப்பிட்டிருக்கிறோம். வறுமையை நீக்கக் கோரி பலமுறை பிரார்த்தித்தும் நரேந்திரனுக்குப் பலன் கிடைத்த பாடில்லை. எனக்காகக் காளியிடம் முறையிடுங்கள் என்று ஏன் குருதேவரிடம் கேட்டுக் கொள்ளக் கூடாது? "எதைத் தின்றால் பித்தம் தீரும்?" என்ற நிலைதான்.
குருதேவர் சொன்னார்:- "என்னால் ஆகாதப்பா! நீயே காளியிடம் நேரில் சென்று முறையிட்டுக் கொள். நான் அவளிடம் பலமுறை உனக்காகப் பிரார்த்தித்து விட்டேன். அவள் ஏற்றுக் கொள்ள மாட்டாளாம். நீ அவளை ஒத்துக் கொள்ளவில்லை என்கிறாள்."
அவர் தொடர்ந்து சொன்னார், "சரி, இன்று செவ்வாய்க்கிழமை. இப்போதே காளி கோயிலுக்குப் போ. அம்மாவின் பாதத்தில் விழுந்து என்ன வரம் வேண்டுமானாலும் கேள். நிச்சயம் தருவாள். இரவு 9 மணி. இதுதான் சரியான நேரம். உடனே போ!" என்று விரட்டினார் குருதேவர்.
சந்நிதியை நோக்கிச் செல்லும் வழியிலேயே பக்தி வெறி நரேந்திரனை ஆட்கொண்டு விட்டது. ஆனந்தமாகி அறிவிழந்து அன்னையின் பாதத்தில் அப்படியே விழுந்தார். "அம்மா! எனக்கு விவேகத்தைக் கொடு! பக்தியைக் கொடு! நீங்காமல் உனது தரிசனம் எனக்குக் கிடைத்துக் கொண்டே இருக்க வேண்டும்!" மனம் நிரம்பிப் பொங்கித் ததும்பிய ஆனந்தத்துடன் நரேந்திரன் குருதேவரை அடைந்தார்.
குருதேவர் நமுட்டுச் சிரிப்புடன் கேட்டார், "என்ன, உன் குடும்ப வறுமையைப் போக்க வேண்டும் என்று அம்மாவிடம் கேட்டுக் கொண்டாயா? அம்மா வரம் தந்திருப்பாளே?" அப்போதுதான் நரேந்திரனுக்குத் தாம் எதற்காகக் காளியிடம் சென்றோம் என்ற நினைவு வந்தது. நாக்கைக் கடித்துக் கொண்டார். "போ, போ! மறுபடியும் போ! மறக்காமல் கேள்!" என்று அறிவுறுத்தி அனுப்பினார் குருதேவர்.
மறுபடியும் அதே கதை. மூன்றாம் முறையும் அதே நிகழ்ந்தது.
"நீங்கள்தாம் எனக்கு ஒரு மயக்கத்தை ஏற்படுத்திக் கேட்க வந்ததைக் கேட்க ஒட்டாமல் செய்து விட்டீர்கள்!" என்று சிணுங்கினார் நரேந்திரன். குருதேவர் சிரித்தார், "போகட்டும், போ! இனி ஒருக்காலும் உன் குடும்பத்துக்கு உணவுக்கும் உடைக்கும் பஞ்சம் இருக்காது" என்று ஆசீர்வதித்தார். இறுதி வரை அப்படியே நடந்தது.
ஆகக் கூடி இப்போது நரேந்திரன் காளிதேவியை ஏற்றுக் கொண்டு விட்டார். அன்று இரவு குருதேவரின் அறை வாசலில் படுத்துக் கிடந்தார் நரேந்திரன். மறுநாள் விடியற்காலை பார்க்க வந்த ஒரு பக்தரிடம் சந்தோஷம் பொங்கச் சொன்னார் குருதேவர், "வெளியே படுத்துக் கொண்டிருக்கிறானே ஒரு பையன், அவன்தான் நரேந்திரன். நேற்று வரை அவன் காளியை ஒத்துக் கொள்ளவே இல்லை. நேற்றுதான் ஒத்துக் கொண்டான். பிரமாதம் இல்லே?" இப்படிச் சொல்லிச் சொல்லிச் சந்தோஷப் பட்டார் அந்தத் தாயிற் சிறந்த தயாபரர்.