இதற்குப் பின்னால் அன்னை ஊசி மேல் தவம் செய்கிறாள். மாங்காடு காமாட்சி அம்மனும் இதே போல் ஊசி மேல் தவசு இருக்கிறாள்.
தற்காலத்தில் மணமானவர்களுக்குள் விட்டுக்கொடுக்கும் தன்மை குறைந்து வருகிறது. ஈகோவின் காரணமாக கணவன் மனைவியரிடையே கருத்து வேற்றுமையில் தொடங்கி விவாகரத்தில் முடிந்து விடுகிறது.
'சக்திமுற்றம்' சென்று பிரார்த்தனை செய்து கொண்டால், தம்பதியருக்குள் இருக்கும் பிணக்குகள் நீங்கி வேண்டிய வரம் பெறலாம் எனக் கூறுகின்றனர். சக்தி முற்றம் என்றால் என்ன? அது எங்கே இருக்கிறது?
கும்பகோணம் அருகே உள்ள மிகப் புகழ்பெற்ற பட்டிஸ்வரம் நம் எல்லோருக்கும் தெரியும். அதன் அருகே உள்ளதுதான் இந்த "சக்திமுற்றம்". இங்குதான் அன்னை பார்வதி இறைவன் பரமசிவனை ஆலிங்கனம் செய்து கொண்டாள்.
இந்தக் கோயிலில் அன்னை பார்வதியின் அழகே அழகு. தன் ஒரு காலை கீழே ஊன்றி இருக்கிறாள். மறுகாலை மடித்துக்கொண்டு தன் முழங்கைகளை ஈசன் மேல் அன்புடன் அழகாகப் பதித்து தன் இரு கைகளையும் கொள்ளைப் பாசத்துடன் நீட்டி தன் நாதனை இறுகத் தழுவிக் கொண்டிருக்கிறாள்.
அவள் தாமரை வதனமோ நம் பக்கம் பார்த்தபடி இருக்கிறது. சிவந்த அதரத்துடன் மந்தஹாசவதனியாக புன்னகைப் பூ பூக்கிறாள். இந்த மாதிரி ஆலிங்கன காட்சி காண்பது மிக அரிது.
இதற்குப் பின்னால் அன்னை ஊசி மேல் தவம் செய்கிறாள். மாங்காடு காமாட்சி அம்மனும் இதே போல் ஊசி மேல் தவசு இருக்கிறாள். சக்தி முற்றத்தில் அன்னை ஏன் தவம் செய்கிறாள்?
ஒரு சமயம் அன்னை பார்வதி தன் நாதனிடம் கயிலாய மலையில் தான் தவம் செய்ய விரும்புவதாகவும் அதற்குத் தகுந்த இடம் கூறும்படி இயம்பினாள். அதற்கு சிவபெருமானும் இந்த சக்திமுற்றத்தைக் காட்டினார். அன்னை பார்வதியும் திருசக்திமுற்றம் வந்து ஊசி முனையில் தவம் இயற்றினாள்.
தவத்தின் வலிமை ஏற ஏற வெம்மையும் ஏறியது. அந்த வெம்மையால் ஈஸ்வரனும் தகதகக்க, தானும் ஜுவாலையாக மாறி திருசக்திமுற்றம் வந்து அக்னி பிழம்பாக ஒளி வீசினார். அன்னை தன் நாதனைக் கண்டு மனம் மகிழ்ந்து இன்புற்று ஓடிவந்து அப்படியே அவரை ஆலிங்கனம் செய்து கொண்டாள். இதனால் இங்கு ஈசனும் "தழுவக் குழந்தை ஈசன்" ஆனார். அன்னை சக்தி ஊசி மேல் தவம் செய்தமையால் இந்த இடமும் "திருசக்திமுற்றம்" ஆனது.
இங்கு கணவன் மனைவி வந்து பிரார்த்தனை செய்ய மனவேற்றுமை மறைந்து மணம் சிறக்கும்; மிகுந்த அன்புடன் அன்யோன்யமாய் இருப்பார்கள்.
இங்கு அப்பர், சுந்தரர், திருஞான சம்பந்தர், மாணிக்க வாசகர் ஆகிய நால்வரும் வந்து இங்கிருக்கும் ஈசனையும் அன்னையையும் பற்றி மிகப் பரவசமாக பாடி இருக்கின்றனர்.
ஒரு சமயம் திருஞானசம்பந்தர் இந்தக் கோயிலுக்கு நல்ல கத்திரி வெயிலில் வந்தார். அந்த இடமே தகித்தது. அவர் சக்திமுற்றத்தில் தங்கினார். பின் அன்னையிடம் தான் பட்டிஸ்வரம் துர்க்கையையும் தேனுபுரிஸ்வரர் ஆலயத்தையும் தரிசிக்க உத்தரவு கேட்டார். அன்னையும் அவருக்கு உத்தரவு கொடுத்தாள். ஆனால் மிகக் கடுமையான வெயிலில் தன் பக்தன் சூட்டில் தவித்துப் போவானே என்று மனம் கலங்கினாள்.
இளகிய அன்னையின் மனம் சிந்தனையில் ஆழ்ந்தது. பின் சக்திமுற்றத்திலிருந்து பட்டிஸ்வரம் வரை முத்துப் பந்தல் போடச்சொன்னாள். ஞானசம்பந்தரும் வெயில் தெரியாமல் முத்துப்பந்தல் கீழ் நடந்து ஸ்ரீ தேனுபுரீஸ்வரை தரிசித்தார். அப்போதுதான் "தோடுடைய செவியன்" என்ற பாடலைப் பாடினார்.
இன்றும் இந்த முத்துப்பந்தல் உத்சவம் திருவிழாப்போல் பிரமாதமாக நடக்கிறது. ஆதவனும் ரதசப்தமி அன்று அதாவது சூரியன் தக்ஷிணாயணத்திற்கு மாறும் போது இந்த சிவக்கொழுந்தீசனைத் தொழுது துதித்து பின் தன் பணியை மேலே தொடருகிறான்.
ஒரு சமயம் ஸ்ரீ ராமலிங்க அடிகளார் இங்கு வந்தார். தன் சக்தியால் அருள்பெரும் சோதி அனல் சோதியாக இருப்பதை உணர்ந்தார். அவரும் பாடல்களைப் பாடி இருக்கிறார்.
ஸ்ரீ அருணகிரிநாதரும் இங்கு வந்து பாடல் இயற்றி நெஞ்சுருகப் பாடியுள்ளார். கும்பகோணம் போகும் மக்கள் இந்த சக்திமுற்றம் கோவிலுக்கு போய் விட்டு வரலாம்.
நம்பிக்கையுடன் கீழ்க்கண்ட பதிகத்தை 11 முறை சொல்லவும்.