Home  
இதழ் 470

மே 31 2010


www.guruji.com

Search

 

Nilacharal Web

Search in English

Help
 

Login

 

Username

Password

Click Here to Login

New Members!
Register Here..
 

Your Advertisement Here

 
  add nilacharal to your favourites nilacharal as your homepage  
Ashwin Ravichandran
Wanted Freelancers!
Home>>பூஞ்சிட்டு

மாயக் குதிரை
- நிலா

உங்கள் கருத்துகள்நண்பருக்கு அனுப்பபிரதி எடுக்க

வானத்தில் பறந்த இளவரசன் குதிரையை எப்படித் தரை இறக்குவது எனத் தெரியாமல் தவித்தான். கண்ணில் தெரிந்த ஒரே விசையைத் திருகிய போது குதிரை இன்னும் உயர உயரப் பறந்தது.

(மூலம்: ஈரான்)

ஒவ்வொரு வருடமும் மங்கள தேசத்தில் வசந்த விழா கோலாகலமாக நடப்பது வழக்கம். இந்த விழாவிற்கு உலகின் பல பகுதிகளிலிருந்தும் கலைஞர்களும் வணிகர்களும் வந்து கலந்து கொள்வார்கள்.

அந்த வருடமும் விழா முடியும் தறுவாயில் மன்னர் தன் அரசவையில் கலைஞர்களுக்குப் பரிசுகளை வழங்கிக் கொண்டிருந்தார். அப்போது வணிகன் ஒருவன் ஒரு செம்மண் குதிரையைக் காண்பித்து, "அரசே, இதைப் போல ஒரு பொருளை நீங்கள் உலகில் எங்குமே கண்டிருக்க மாட்டீர்கள்" என்று கூறினான்.

அதனைக் கேட்ட அரசர், "இது போன்ற செம்மண் குதிரை உலகத்தில் பல்லாயிரக் கணக்கில் இருக்கிறதே! இதிலென்ன விசேஷம்?" என்று சற்று எரிச்சலுடன் கேட்டார்

"அரசே, இந்தக் குதிரை காற்றைவிட விரைந்து செல்லும் வல்லமை படைத்தது" என்றுரைத்தான் வணிகன்

அவன் கூறியதில் அரசருக்கு நம்பிக்கை ஏற்படவில்லை. எனவே, "நீ சொல்வது உண்மையானால், நம் நாட்டின் தென் எல்லையில் இருக்கும் அத்தி மலையில் மட்டுமே பூக்கக் கூடிய நீலத் தாமரையைப் பறித்துவந்து காட்டு" என்று கட்டளை இட்டார்.

வணிகனும் குதிரையிலேறிப் பறந்து பத்து நிமிடத்துக்குள் நீலத்தாமரையுடன் அரண்மனை திரும்பினான். அதைக் கண்டு அரசவையிலிருந்த அனைவரும் மிக்க வியப்படைந்தனர்

திருப்தியுற்ற அரசர் வணிகனிடம், " இந்த குதிரைக்கு என்ன விலை கேட்கிறாய்?" என்று வினவினார்

அதற்கு வணிகன், "அரசே, இந்தக் குதிரையைச் செய்த மந்திரவாதி, இதனை விலைக்கு விற்கக் கூடாது என்று என்னிடம் சத்தியம் வாங்கியிருக்கிறார். அதனால் என்னால் இதனை விலைக்குத் தரமுடியாது. மன்னித்துக் கொள்ளுங்கள்" என்றுரைத்தான்

"அப்படியானால் உனக்கு வேறென்ன வேண்டுமென்று கேள்" என்றார் அரசர்

சற்று யோசித்த வணிகன், "அரசே, எனக்கு இளவரசியை மணமுடித்துத் தாருங்கள்" என்று கேட்டான்

அவனது வேண்டுகோளைக் கேட்ட அனைவரும் அதிர்ச்சியடைந்தனர். இளவரசன் தன் ஆசனத்திலிருந்து துள்ளி எழுந்து வாளுடன் வணிகனை நெருங்கியதைக் கண்ட அரசர், "மகனே சற்றுப் பொறுமையாக இரு" என்றார் அவனிடம்

"தந்தையே, ஒரு சாதாரண நாடோடி வணிகன், தன் தரம் அறியாமல் என் தங்கையை மணம் முடிக்கக் கோருகிறான். இதில் பொறுமையாக இருக்க என்ன இருக்கிறது?" என்று பொங்கினான்.

அரசருக்கோ இந்தக் குதிரை கெட்ட சக்திகளிடம் சிக்கிக் கொண்டால் மக்கள் வெகுவாக அவதியுறுவார்களே என்ற கவலை. அதனால் மீண்டும் இளவரசனைப் பார்த்து, "கோபப் படாமல் அந்தக் குதிரையை சோதித்துப் பார்" என்று உத்தரவிட்டார்

தந்தையின் சொல்லுக்குக் கட்டுப்பட்ட இளவரசன், குதிரையை நெருங்கி அதில் ஏறி அமர்ந்தான். வணிகன் அந்தக் குதிரையை இயக்கும் விதத்தை இளவரசனுக்குக் கற்றுக் கொடுக்க முயல, அதனைக் காதில் வாங்கிக் கொள்ளாத இளவரசன், கையில் கிடைத்த விசை ஒன்றைத் திருகினான். அனைவரும் பார்த்துக் கொண்டிருக்கும் போதே குதிரை வானத்தில் எழும்பி அதிவிரைவாய்ப் பறந்து மறைந்தது.

அதனைக் கண்டு அச்சமுற்ற வணிகன், அரசரனின் காலில் விழுந்து, "அரசே, என்னைத் தண்டித்து விடாதீர்கள். குதிரையை இயக்கும் விதத்தைச் சொன்னபோது இளவரசர் கவனிக்கவே இல்லை. அவருக்கு ஏதாவது நேர்ந்தால் அதற்கு தயவு செய்து என்னைப் பொறுப்பாக்கிவிடாதீர்கள்" என்று கதறி அழுதான்

ஆனால் அரசர் மனமிறங்காமல், "இளவரசன் இன்னும் சில தினங்களில் நாடு திரும்பாவிட்டால் உன் உயிர் உன்னிடம் இருக்காது" என்று அவனைப் பார்த்து எச்சரித்து விட்டு சேவகர்களிடம் அவனை சிறையில் அடைக்குமாறு பணித்தார்

வானத்தில் பறந்த இளவரசன் குதிரையை எப்படித் தரை இறக்குவது எனத் தெரியாமல் தவித்தான். கண்ணில் தெரிந்த ஒரே விசையைத் திருகிய போது குதிரை இன்னும் உயர உயரப் பறந்தது. இளவரசன் தன்னை அமைதிப் படுத்திக் கொண்டு வேறேதும் விசைகள் உள்ளனவா என்று குதிரையை. குதிரையின் கழுத்தினருகிலிருந்த ஒரு சிறிய விசையில் கை வைத்ததும் குதிரையின் வேகம் குறைய ஆரம்பித்தது. அந்த விசையை பலம் கொண்ட மட்டும் அவன் அழுத்த, குதிரை கீழே இறங்க ஆரம்பித்தது.

ஏதோ ஒரு உயரமான கட்டிடத்தின் கூரையில் இறங்கிய இளவரசனுக்கு இரவின் கருமையில் எதுவும் தெளிவாகத் தெரியவில்லை. குதிரையை ஓரிடத்தில் மறைத்து வைத்துவிட்டு மிதமாக வெளிச்சம் வந்த இடத்தை அணுகினான். அங்கு படிகள் இருப்பதைக் கண்ட இளவரசன், மெல்ல அதன் வழியாகக் கீழே இறங்கினான். படிகளில் காவலர்கள் உறங்கிக் கொண்டிருந்ததைக் கண்ட அவன், இது ஏதோ ஒரு அரசனின் அரண்மனையாக இருக்குமென்றும் தான் மாட்டிக் கொண்டால் சிறையலடைக்கப் படுவோம் என்றும் எண்ணி, திரும்பவும் கூரைக்கே திரும்ப முயன்றான். ஆனால் இரவில் உறக்கம் வராமல் உலவிக் கொண்டிருந்த இளவரசியின் கண்களில் அவன் பட்டுவிட்டான்.

இளவரசியின் ஆணைக்கேற்ப காவலர்கள் இளவரசனைப் பிடித்துக் கொண்டு வந்தார்கள். இளவரசன் இளவரசியை வணங்கி, "இளவரசி, நானும் தங்களைப் போல் அரசகுலத்தைச் சேர்ந்தவன்தான். வழி தப்பி இங்கே வந்து சேர்ந்தேன். எவருக்கும் தீங்கு ஏதும் விளைவிக்க எண்ணவில்லை. அதனால் என்னை விடுவிக்க வேண்டுகிறேன்" என்று வேண்டினான். சந்தேகம் அகலாத இளவரசி அவனை அரண்மனையிலேயே காவலில் வைக்க உத்தரவிட்டாள்.

அடுத்த சில தினங்கள் காவலிலிருந்த இளவரசனைச் சென்று பார்த்த இளவரசி அவனது நற்பண்புகளால்ஈர்க்கப்பட்டாள். இளவரசனும் இளவரசியை மணம் செய்ய விரும்பினான். தன் எண்ணத்தை அவளிடம் தெரிவித்து தன்னுடன் தன் நாட்டிற்கு வரும்படிக் கேட்டான். சம்மதித்த இளவரசி அன்று இரவே கடிதம் ஒன்றை எழுதி வைத்துவிட்டு மாயக் குதிரையில் அவனுடன் பறந்தாள்.

மங்கள தேசத்தை அடைந்ததும் தலைநகரத்தை விட்டுத் தள்ளி இருந்த ஒரு சிற்றூரின் மாளிகையில் இளவரசியைத் தங்க வைத்தான் இளவரசன். பின் அவளிடம், "இளவரசி, என் பொருட்டு இந்தக் குதிரையின் சொந்தக்காரன் துன்பம் அனுபவித்துக் கொண்டிருப்பான். முதலில் நானும் இக்குதிரையை சபிக்கவே செய்தேன். ஆனால் இதன் உதவியால்தானே என் இதயராணியான உன்னைச் சந்தித்தேன்! அதனால் அவனைக் காப்பாற்றும் பொறுப்பு எனக்கு இருக்கிறது. நான் தலைநகரம் சென்று அதற்கு ஆவன செய்துவிட்டு, பின் என் தந்தையிடம் உன்னைப் பற்றிப் பேசுகிறேன். எதிர்கால அரசியான உன்னைத் விமரிசையாக வரவேற்கவே அரசர் விருப்பப்படுவார்" என்று கூறினான்.

இளவரசி சம்மதம் தெரிவிக்கவே, அவளுக்கு ஏதும் அபாயம் நேரும் பட்சத்தில் பயன்படுமென மாயக் குதிரையை இயக்கும் விதத்தை அவளுக்குக் கற்றுக் கொடுத்தான். இது அனைத்தையும் ஒளிந்து நின்று பார்த்துக் கொண்டிருந்த திருடன் ஒருவன் இளவரசன் அங்கிருந்து அகன்றதுமே மாயக் குதிரையில் இளவரசியைக் கடத்திக் கொண்டு வானில் பறந்தான். வானிலிருந்து இளவரசியின் அபயக் குரல் இளவரசியின் காதில் ஒலிக்க அவன் செய்வதறியாது திகைத்தான்.

பின்னர் அரண்மனைக்குத் திரும்பி தன் தந்தையிடம் நடந்தவை அனைத்தையும் கூறி வணிகனை விடுவிக்கும்படி வேண்டினான். அன்று மாலை வணிகனுக்கு நிறைவேற்றப்படவிருந்த மரண தண்டனை ரத்து செய்யப்பட்டது. அவன் விடுவிக்கப்பட்டான். இளவரசன் ஒரு சாதாரணக் குடிமகனைப் போல வேடமணிந்து நாடு நாடாக இளவரசியைத் தேடிப் புறப்பட்டான்.

இளவரசியைக் கடத்திச் சென்ற திருடன் நேரே மருத நாட்டின் அரண்மனைக்குச் சென்றான். மருதநாட்டு அரசருக்குப் பெண் தேடிக் கொண்டிருந்ததை அவன் ஏற்கெனவே கேள்விப்பட்டிருந்தான்.

இளவரசியை அரசருக்கு மிகவும் பிடித்துவிட்டது. திருடனுக்குத் தகுந்த வெகுமதி அளித்து அவனை அனுப்பிவிட்டு இளவரசியை அந்தப் புரத்தில் அடைத்தார். பணிப்பெண்கள் தனக்கும் அரசருக்கும் திருமணம் நடக்கப் போவதாகப் பேசிக் கொண்டிருந்ததைக் கேட்ட இளவரசி அதிர்ச்சியடைந்தாள். மறுநாள் காலை பணிப்பெண்கள் அவளது அறைக்கு வந்த போது கந்தல் ஆடையை அணிந்திருந்த இளவரசி அவர்கள் மேல் பாய்ந்து அவர்களைத் தாக்க ஆரம்பித்தாள்; பைத்தியம் போல ஏதேதோ பேசிப் பிதற்றினாள். அடி தாங்காமால் வெளியேறிய பணிப்பெண்கள் அரசரிடம் நடந்ததைத் தெரிவித்தனர்.

அவர்களை நம்பாத அரசர் தானே அவளது அறைக்குச் சென்றார். அவரிடமும் இளவரசி அவ்வாறே நடந்து கொள்ள, வருத்தமடைந்த அரசர், அரச வைத்தியரை வரவழைத்து இளவரசிக்கு சிகிச்சை செய்யும்படி பணித்தார். ஆனால் இளவரசி அவரை அருகிலேயே வரவிடாமல் துரத்தி அடித்தாள்.

பச்சிலை வைத்தியர், சீன வைத்தியர், சித்த வைத்தியர் என எத்தனையோ விதமான வைத்தியர்களை அழைத்து வந்து சிகிச்சை செய்தாலும் இளவரசியின் நடத்தையில் எந்த மாற்றமுமில்லை. பேய் விரட்டுபவர்களையும், மந்திரவாதிகளையும் கூட முயற்சித்துப் பார்த்தனர். ஒன்றும் பயனில்லை.

இளவரசியைத் தேடிக் கொண்டிருந்த இளவரசனோ அவளைக் கண்டுபிடிக்க முடியாமல் மனம் தளர்ந்து ஒரு பாறையின் மேல் அமர்ந்து அடுத்த என்ன செய்வதென சிந்திந்துக் கொண்டிருந்தான். அந்த சமயம் அந்த வழியே செல்ல நேரிட்ட வணிகன் இளவரசனை அந்த நிலையில் கண்டு அதிசயத்து, "இளவரசரே, இதென்ன கோலம்? குதிரையால் தங்களுக்கு வேறேதும் தீங்கு நேரிட்டுவிட்டதா?" என்று வினவினான்

நடந்ததை இளவரசன் விவரித்ததும், வணிகன், "இளவரசரே, நான் இப்போதுதான் மருத நாட்டிலிருந்து வந்து கொண்டிருக்கிறேன். அந்நாட்டின் அரசருக்கு எங்கிருந்தோ வந்த இளவரசி ஒருவருடன் திருமணம் நடக்கவிருந்ததாகவும், இளவரசிக்கு சித்த பிரமை பிடித்துவிட்டதால் அது நின்றுவிட்டதாகவும் கேள்விப்பட்டேன். இளவரசியைக் குணப்படுத்துவோருக்கு சன்மானம் கூட அறிவித்திருக்கிறார்கள். ஒருவேளை அது தங்களின் இளவரசியாக ஏன் இருக்கக் கூடாது? நீங்கள் மருதநாடு சென்று பாருங்களேன்" என்று தெரிவித்தான்.

நம்பிக்கை ஊட்டம் பெற்ற இளவரசன் ஒரு மருத்துவன் போல் வேடம் தரித்து மருதநாட்டினைச் சென்றடைந்தான். அரசரைச் சந்தித்து தன்னால் இளவரசியைக் கண்டிப்பாகக் குணப்படுத்த முடியுமென்றும், முதலில் அவளுக்குத் தெரியாமல் தான் அவளைக் காணவேண்டும் என்றும் கூறினான். அரசரும் ஒரு சாளரம் வழியாக அவன் இளவரசியைப் பார்க்க ஏற்பாடு செய்தார்.

சன்னலின் வழியாக அறையினுள் பார்த்த இளவரசன் அவள் தன் காதலிதான் என உறுதி செய்து கொண்டான். பின் அரசரிடம் தான் இளவரசியைச் சந்திக்கத் தயார் எனத் தெரிவித்தான்.

காவலர்களோடு இளவரசியின் அறைக்குள் நுழைந்த இளவரசன் மேல் பாய்ந்து தாக்க முயன்ற இளவரசியின் கரங்களைத் தடுத்து, "இளவரசி, நான் தான் மங்கள இளவரசன். உன்னைக் காப்பாற்றவே வந்திருக்கிறேன்" என்று மிக மெல்லிய குரலில் அவளுக்கு மட்டும் கேட்குமாறு கூறினான். அவனை அடையாளம் கண்டுகொண்ட இளவரசி அமைதியானாள்.

காவலர்கள் அரசரிடம் சென்று, "அரசே இந்த மருத்துவரின் கைபட்டதுமே இளவரசியார் அமைதியாகிவிட்டார்கள். இவர் ஏதோ மாயம் வைத்திருக்கிறார்" என்று தெரிவித்தனர்.

இளவரசன் அரசரைப் பணிந்து, "அரசே, மந்திரமுமில்லை, மாயமுமில்லை. வர்மக் கலையின் மூலம் சில நரம்புகளை நிதானப்படுத்தி இருக்கிறேன். ஆனால் இது தற்காலிகம்தான். இளவரசியின் சித்தம் வெகுவாகக் கலங்கி இருக்கிறது. அவர் தொட்ட பொருட்களில்தான் ஏதோ விஷம் இருக்க வேண்டும். அரண்மனையிலிருக்கும் பொருட்களில் ஏதுமிருக்க வாய்ப்பில்லை. அரண்மனைக்கு வெளியே வேறு எதையாவது தொட்டாரா? குறிப்பாக மண்ணால் செய்யப்பட்ட எந்தப் பொருளையாவது தொட்டாரா" என்று கேட்டான்

யோசித்த அரசன், "இளவரசி ஒரு மண் குதிரையைக் கொண்டு வந்தாள். அதில் ஏதாவது இருக்கலாம்" என்று கூறி, கஜானாவிலிருந்த மாயக்குதிரையைக் கொண்டு வரச் செய்தான். அதனை ஆராய்வதாக பாவனை செய்த இளவரசன், "அரசே, நீங்கள் நினைத்தது சரிதான். இதில்தான் விஷம் இருக்கிறது. விஷத்தை விஷத்தால்தான் முறிக்க வேண்டும். நாளைக் காலை இந்தக் குதிரையுடன் இளவரசியை மைதானத்துக்கு அழைத்து வாருங்கள். முற்றிலும் அவரைக் குணப்படுத்திவிடலாம்" என்று தெரிவித்தான்

மறுநாள் காலை மைதானத்தில் அந்த மண்குதிரையின் மேல் இளவரசியை அமர்த்தி அவளைச் சுற்றி ஏதேதோ பொடிகளைத் தூவினான் மருத்துவர் வேடத்திலிருந்த இளவரசன். சற்று நேரத்தில் அந்த இடம் முழுவதும் புகையால் சூழந்தது. சட்டெனக் குதிரையில் தாவி ஏறிய இளவரசன், விசையை அழுத்தி வானத்தில் பறந்தான்.

மங்கள தேசம் வந்து சேர்ந்த இளவரசனுக்கும் இளவரசிக்கும் கோலாகலமாகத் திருமணம் நடந்தது. அதன்பின் அவர்கள் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தனர்.

நிலா அவர்களின் இதர படைப்புகள். பூஞ்சிட்டு பகுதியில் வந்த இதர படைப்புகள்.
                         
Your Comments
Comment
உங்கள் கருத்து
பெயர் :
மின் அஞ்சல் :
சுட்டி :

Comment In:

Tamil English
(Type here in Thanglish and see tamil text in bottom. Tamil conversion powered by : www.suratha.com)
NOTE : Please do not use single quote in your comments. You can use double quote in place.
(English / தமிழில் - யூனிகோட்)
What you see in this box gets posted as feedback.

Hot properties in India

ஜோதிடம் கேளுங்கள் பகுதி தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. விரைந்து கட்டண சேவை பெற இங்கே சுட்டவும்.

 

 


 

 


About us | Team | Contact Us | Press | Feedback | Favourites | Communities | Shopping | Services | Site map

tamil magazines, Hindu devotional songs, tamil links, tamil movies, tamil songs, tamil dvd, tamil news, tamil, tamil comedy, tamil movie, tamil music DVDs, bharatanatyam, Yoga DVDs, carnatic music, tamil cinema, sivaji movie, cricket world cup, tamil ebooks, web design, web design resources, global warming, outsourcing, mutual funds, India Pakistan cricket series, Kuselan, India Cricket, Sultan The Warrior

A web magazine from Nilacharal Ltd
Privacy Policy|Terms of use|Disclaimer| Copyright Nilacharal Ltd - All Rights Reserved Worldwide