கூரத்தாழ்வாரிடம் சிறந்த குரு பக்தி, ஜீவகாருண்யம், நற்பண்பு, நல்லொழுக்கம், வைராக்கியம் என்று பல சிறப்புகள் இருந்தன, இவரது அவதார நாள் பிப்ரவரியில், அதாவது தை மாதம் ஹஸ்தம் நட்சத்திரத்தில் வரும். ஸ்ரீராமானுஜரின் அபிமான சீடராக இவர் விளங்கினார். குருவும் தான் திருக்கோட்டியூர் நம்பியிடம் பெற்றுக்கொண்ட எட்டெழுத்து மந்திரத்தை இவருக்கு உபதேசித்தார்.
ஒரு சமயம் சோழ மன்னரால் ஸ்ரீராமனுஜரின் உயிருக்கே அபாயம் ஏற்பட்டது. தன் குருவைக் காப்பாற்ற ஆழ்வார் ராமானுஜரைப்போல் வேஷம் தரித்து சோழ மன்னரைக் காணச் சென்றார். பின் மன்னரிடம் "நாராயணனே எல்லாம். அவன் தான் பரம்பொருள்” என்று எடுத்துரைத்தார்.
சோழ மன்னருக்கு விஷயம் தெரியவந்து இவர் கண்களைப் பிடுங்க ஆணை பிறப்பித்தான். ஆனால் கூரத்தாழ்வார் "உன்னைப்போல் பாவிகளைப் பார்ப்பதைவிட எனக்கு கண்கள் இல்லாமல் இருப்பதே உத்தமம்" என்று தன் இரு கண்களையும் பிடுங்கிக்கொண்டார்.
பின்னர் கண்கள் இல்லாமல் 12 வருடங்கள் திருமாலிருஞ்சோலையில் தங்கி இருந்தார். தன் குருவையும் சோழ மன்னர் பார்வையிலிருந்து ஒளித்து திருநாராயணப்புரத்தில் வாசம் செய்ய ஏற்பாடு செய்து விட்டார்.
பல வருடங்களுக்குப் பிறகு இருவரும் காஞ்சியில் சந்தித்துக் கொண்டனர். ராமானுஜர் மனம் உருகி காஞ்சி வரதராஜப் பெருமாளிடம் தன் சீடன் கூரத்தாழ்வானுக்குக் கண் பார்வை திரும்பி வர வேண்டினார். உடனே அவருக்கும் பார்வை வந்தது. அரங்கநாதன் கூரத்தாழ்வானுக்கு மோட்சம் அளிக்க உத்தரவாதம் அளித்தார். குருவோ கண் கலங்கினார்.
"நீ இல்லாமல் நான் எப்படி வாழ்வேன்? உன்னை விட்டு நான் இருக்க முடியுமா?
"நான் சீடன். முதலில் பரமபதம் போய் உங்களை வரவேற்கக் காத்திருப்பேன்". என்றார் ஆழ்வார் தன் குருவிடம்.
உறையூர் சோழ அரசனின் மெய்க்காப்பாளர் பிள்ளை உறங்காவல்லி என்பவர் ஒரு அழகு பிம்பத்தைத் திருமணம் செய்துகொண்டார். சர்வ லட்சணமும் பொருந்திய அவளைக் கண்ணின் இமைபோல் காத்தார். அவளது மோகம் அவர் கண்ணை மறைத்தது. அவள் வெயிலில் போனால் உடல் கறுத்துவிடுமே என்று அவளுக்குக் குடையும் பிடித்தார். பார்க்கிறவர்கள் சிரித்தனர், என்ன இப்படிப் பெண்பித்தாக அலைகிறானே என்று. ஸ்ரீ ராமானுஜர் கூரத்தாழ்வாரைக் கூப்பிட்டு அவரை எப்படியும் இந்த மோகத்திலிருந்து மாற்றிவிடு" என்றார்.
கூரத்தாழ்வாரும் அவரிடம் போய்ப் பேசினார், "மெய்க்காப்பாளரே, ஏன் இப்படி மோகித்துப் போய் அவள் பின்னால் அலைக்கிறீர்கள்? அவளிடம் எதைக் கண்டு மயங்குகிறீர்கள்?”
"அவள் கண்கள் என்னை மயக்குகின்றன, அந்தக் கண்களைப் பார்த்துக்கொண்டே இருக்கத் தோன்றுகிறது"
"சரி, இதைவிடப் பேரழகுக் கண்களைப் பார்த்தால் இந்த மோகத்திலிருந்து விடுபடுவீர்கள் இல்லையா?'
"முதலில் காட்டுங்கள், இதைவிட அழகு இருக்க முடியாது"
"சரி என்னுடன் வாருங்கள் காட்டுகிறேன்" அவரைத் தன்னுடன் ஸ்ரீரங்கநாதரின் கோயிலுக்கு அழைத்துப் போனார். அரவணை துயிலும் திரு அரங்கநாதரின் கண்களைக் காட்டினார்.
"இந்தக் கண்களைப் பாருங்கள், இந்தக் கண்களைவிட அந்தக் கண்கள் அழகா? சொல்லுங்கள்"
பிள்ளை உறங்காவல்லியின் கண்களிருந்து தாரை தாரையாகக் கண்ணீர் கொட்டியது. மோகத்திலிருந்து விடுபட்டார். அந்தக்கணமே ரங்கதாசர் ஆனார்.
கூரத்தாழ்வாரிடம் சிறந்த குரு பக்தி, ஜீவகாருண்யம், நற்பண்பு, நல்லொழுக்கம், வைராக்கியம் என்று பல சிறப்புகள் இருந்தன, இவரது அவதார நாள் பிப்ரவரியில், அதாவது தை மாதம் ஹஸ்தம் நட்சத்திரத்தில் வரும்.
இவரைத் தொழுதால் கண்கள் உபாதைகள் தீரும். இவரது திருநாள் எல்லா வைஷ்ணவ ஆலயங்களிலும் கொண்டாடப்படுகிறது. இவரது ஆயிரமாவது ஆண்டு நிறைவும் வெகு விரைவில் வர இருக்கிறது.
அவரது அருளை நாமும் பெறலாம். |