கிளம்பியவன் அப்படியே பிரேக் அடித்தேன். எனக்கும் அதே பதில்தான் கிடைக்குமா? போய் வாங்கிக் கட்டிக் கொள்ள வேண்டுமா.. அம்மா சொன்னதை நிறைவேற்ற முடியாது போலிருக்கே.
ஆனால் போக வேண்டியிருந்தது. மதியம் மீட்டிங் என்பதால் வித்யாவைப் பார்த்து ஞாபகப்படுத்தி விட்டு வேறு சில ஃபைனான்ஸ் சம்பந்தமான கேள்விகளைக் கேட்டு வரச் சொன்னார் பாஸ்.
தலை குனிந்து ஏதோ எழுதிக் கொண்டிருந்தவளை சில வினாடிகள் பார்த்துக் கொண்டிருந்தேன்.
"ம்க்கும்"
"யெஸ்.. பிளீஸ்"
"டிஸ்டர்ப் பண்ணலாமா?"
"நோ ஃபார்மாலிட்டீஸ்"
வந்த வேலையை முடித்துக் கொண்டு விட்டேன். குரல் திடீரென கரகரத்தது.
"வந்து.. உங்க குழந்தைக்கு இப்ப தேவலையா.. ஜஸ்ட்..வொர்ரீட்"
நிமிர்ந்து என்னைப் பார்த்தாள். இதோ இப்போது அடி விழப் போகிறது. வார்த்தை அடி. என்னையும் அறியாமல் என் கண்களை மூடிக் கொண்டுவிட்டேன். கடவுளே.. கடவுளே..
"...."
என்ன சொன்னாள்.. கண்ணைத் திறந்து பார்த்தேன்.
"தேங்க்ஸ்.. "
"எ..துக்கு.."
"குழந்தையைப் பத்தி கேட்டதுக்கு.. அவ பிறந்தப்பவே கொஞ்சம் வீக்.. மாசம் ஒரு தடவை டாக்டரைப் பார்த்தாகணும்.. வளர்ந்தா சரியாயிரும்னு டாக்டர் சொல்றார்..ஆக்டிவ்வாதானே இருக்கா.. ஏன் வொர்ரி பண்றீங்கன்னு.."
பெண் குழந்தையா.. பேரு..
"சியாமளா.. ப்ச்.. மார்னிங் ஒருத்தர்.. உங்க டிபார்ட்மெண்ட்.. என்ன குழந்தைன்னுகூடத் தெரியாம.. பையன் எப்படி இருக்கான்னு ஒப்புக்கு விசாரிச்சப்ப.. கொஞ்சம் டிஸ்டர்ப் ஆயிட்டேன். பர்சனலா ஒரு கேள்வி கேட்கறப்ப மனசு பூர்வமா அது இருக்கணும்னு நான் நினைக்கறேன்.. அப்படி இல்லாம இருந்தா எனக்கு அது பிடிக்கறதில்லே.."
தேங்க் காட்! அம்மா நீ வாழ்க!
"வீட்டுல பார்த்துக்க யாராச்சும் இருக்காங்களா?"
"ம். சர்வன்ட் மெய்ட்.. ஆனா அவங்க மோர் தேன் தட்.. என் சிஸ்டர் மாதிரிதான்.."
"வ..ந்து.. சி..யாமளியோட அ..ப்பா.."
எனக்குக் கொஞ்சம் கொழுப்புத்தான். இந்த அளவு வித்யா என்னை அனுமதித்ததே பெருசு. அதில் இப்படி ஒரு கேள்வி அவசியமா.. இந்த யோசனையை மீறி என் கேள்விக் கணை பாய்ந்துவிட்டது.
எழுந்தேன். திரும்பிக் கூட பார்க்காமல் பாதி ஓட்டமும் பாதி நடையுமாய் வந்து விட்டேன். என் அதிர்ஷ்டத்தை ரொம்பவும் சோதித்து விட்டேன் இன்று. நல்ல வேளை.. எதுவும் விபரீதமாய் நிகழவில்லை. இனி இப்படி ஒரு அசட்டுத்தனம் செய்து விடக் கூடாது.
மதியம் மீட்டிங்கில் மேனேஜ்மெண்ட் சர்வீசஸ், மெயின்டெனன்ஸ் அன்ட் சர்வீசஸ், ஃபைனான்ஸ், பர்ச்சேஸ் எல்லோரும் வந்து விட்டோம். டெக்னிகல் விஷயங்கள் விவாதிக்கப்பட்டன. டெண்டர் விடுவது பற்றி பரிசீலிக்கப்பட்டது. சிவில் வொர்க், ஒயரிங், மாடுலர் பீஸ் டிசைனிங் இப்படி ஒரேயடியாக ஹெவி மேட்டராக ஓட என் கவனமும் அதிலேயே இருந்ததால் வித்யாவை அவ்வளவாகக் கவனிக்கவில்லை. அதுவும் நன்மைக்குத்தான் என்று நினைத்தேன்.
மீட்டிங் முடிந்து ஒவ்வொருவராகப் போய் விட்டார்கள். நானும் வித்யாவும் மட்டும்.
என் ஃபைல்களை அள்ளிக் கொண்டு ஏசி அறையின் கதவைத் திறந்து வித்யா வெளியே செல்ல வழிவிட்டு நின்றேன்.
"அப்புறம் முடிஞ்சா என் ஸீட்டுக்கு வாங்க.. நாட் அர்ஜெண்ட்" என்றாள்.