வாழ்க்கை முறை (life style) ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு மாதிரி இருக்கிறது. அதனால் பிரச்சினைகளும், அதன் பல்வேறு வடிவங்களும் மனிதருக்கு மனிதர் மாறுபடுகின்றன – அதற்கான தீர்வுகளும் மாறுகின்றன.
பிரச்சினைகள் இல்லாத மனிதர்கள் உண்டா? கவலை இல்லாத கனவான்கள் இருக்கின்றனரா? அனில் அம்பானிக்கும் பிரச்சினை...அம்பானி டிரைவருக்கும் பிரச்சினை. நான்கிலக்க சம்பளம் வாங்குபவருக்கு ஒருவித மனக்குழப்பமென்றால் ஆறிலக்க சம்பளம் வாங்குபவருக்கோ அதே மனக்குழப்பம் – வேறு பரிமாணத்தில்.
வாழ்க்கை முறை (life style) ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு மாதிரி இருக்கிறது. அதனால் பிரச்சினைகளும், அதன் பல்வேறு வடிவங்களும் மனிதருக்கு மனிதர் மாறுபடுகின்றன – அதற்கான தீர்வுகளும் மாறுகின்றன. இது கலியுகமென்றும் இந்த யுகத்தில் உலகம் பாபம் செய்பவர்களுக்கான வாழ்விடமாக விளங்குமென்றும் ஒரு நண்பர் கூறுகிறார்.
அப்போது நல்லவர்களுக்கு இந்நிலவுகத்தில் இடமில்லையா? நல்லவர்கள் என்று அடைமொழிகிறோமே.. “நல்ல” என்பதற்கான அளவுகோல் எது?
ஒருவரது உயரத்தை அடி அளவுகோலை எடுத்து இத்தனை அடி இத்தனை அங்குலம் என்று தெளிவாக உரைப்பதுபோல “நல்ல” என்பதற்கான அளவுகோலைத் தெளிவாக வரையறுக்க முடியாதா?
முடியாதா அல்லது கூடாதா? கூடாது என்று கூறுவர் உளர். வாழ்க்கை வாழ்வதின் சஸ்பென்ஸ் போய்விடுமாம். அனுபவத்தின் மூலமே அதை உணர்ந்துகொண்டு அதன்படி வாழ்ந்தால் போதுமென்று கூறுகிறார்கள் அவர்கள்.
சாலையில் கார் ஓட்டிக்கொண்டு செல்கிறோம். சிக்னலில் நிறுத்தும்போது மஞ்சள் கோட்டைத் தாண்டி நிறுத்தக்கூடாது என்று சட்டத்தின் மூலம் அறிவுறுத்தப்படுகிறது. இதன்மூலம் போக்குவரத்தில் கட்டுப்பாடு ஏற்படுத்தப்பட்டு வாகனங்கள் சிக்கலில் மாட்டிக்கொள்ளாமல் ஒழுங்கமைக்கப் படுகிறது. நாம் வாழும் முறைக்கு இது போல ஒரு அளவுகோல் ஏன் இருக்கக்கூடாது. ஏற்கனவே அப்படி ஒரு அளவுகோல் இருக்கிறதென்றால் அது எது?
இந்தியாவில் பொருட்களின் சிறப்பான தரத்திற்கு ISI முத்திரை அளிக்கப்படுகிறது. கல்லூரிகள் சரியான முறைமையில் மாணவர்கள் படிக்கத் தகுந்த சூழலும், வசதிகளும் ஏற்படுத்தியுள்ளனவா என்பதை AICTE ஆய்வு செய்து சான்றிதழ் வழங்குகிறது.
இதுபோல மனிதர்கள் எப்படி இருக்கவேண்டும் என்று அளவுகோல் யாரும் வகுத்திருக்கின்றனரா?
கடவுள் வகுத்திருக்கிறார் என்கிறார்கள் கடவுள் அபிமானிகள். மத கோட்பாடுகள் ஒருவகையில் இந்த அளவுகோல்களே! உலகில் எந்த மதமானாலும் அவை போதிக்கும் கருத்துகள் பெரும்பாலும் ஒன்று போல் தான் உள்ளன. அவற்றைப் பின்பற்றுபவர்கள் அவற்றைத் தங்களுக்கு ஏற்றவாறு வடிவமைத்துக் கொள்கிறார்களே தவிர, அவற்றை அப்படியே பின்பற்றுவதில்லை.
வாழ்க்கைக்குப் பொதுவான பாடத்திட்டம் (Common syllabus) இருந்துவிட்டால் எந்தப் பிரச்சினையும் இல்லை. அப்படி இல்லாதபோது – அப்படி இருந்தாலும் அதை முழுமையாக ஏற்றுக்கொள்ளாதபோது – தான் பிரச்சினைகள் தோன்றுகின்றன.
இந்த இடத்தில்தான் வாத, விவாதங்கள் உருவாகின்றன. பட்டிமன்றங்களும், வழக்காடு மன்றங்களும் தோன்றி மக்களின் கொஞ்ச நஞ்ச தெளிவான மனத்தையும் குழப்பி அவர்களுக்குள் சண்டையிட வைக்கின்றன!
அப்படியே இதை ஏற்றுக்கொண்டாலும் சிறிது நேரத்தில் நமது மனத்தின் ஈகோ தலை தூக்குகிறதே! ஈகோக்களை விட்டொழித்த பரமஹம்சரைப் போல, ரமணரைப் போல ஆவது எங்ஙனம்?
முடிவு யாரிடம்? தீர்ப்பு வழங்கப்போகிறவர் யார்?
அது சரியான முடிவா? அது சரியான தீர்ப்பா?
நம் வழியைப் பார்த்துக் கொண்டு சிவனேயென்று பேசாமல் அமைதியாக இருந்துவிட்டால் ரொம்ப நல்லதுபோலத் தோன்றுகிறதோ!