 |
இதழ் 368 |
 |
ஜூன் 09 2008
|

|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
Your Advertisement Here
|
| |
|
| |
 |
add nilacharal to your favourites |
 |
nilacharal as your homepage |
|
|
|
|
| ஐ.பி.எல். திருவிழா 2008
- டி.எஸ்.பத்மநாபன் |
| | இந்த போட்டிகளைப் பற்றி சில புள்ளிவிவரங்கள் நம்மைத் திகைக்க வைக்கின்றன. ஏப்ரல் 18லிருந்து மே 14 வரை ஐ.பி.எல் போட்டிகளைக் கண்டு களித்தவர்கள் எண்ணிக்கை 99 மில்லியனாம். 44 நாட்கள் - 59 போட்டிகள்!
இதுவரை இதுபோல பிரம்மாண்டமான விளையாட்டு விழா நடந்திருக்கிறதா! என்று வியக்க வைக்கும் பிரமிப்பு ஜூன் ஒன்றாம் தேதி முடிவடைந்தது. ரசிகர்கள் இந்த விழா ஏற்படுத்திய மயக்கத்திலிருந்து இன்னும் வெளிவரவில்லை.
ஐ.பி எல் போட்டிகள் ஆரம்பித்தபோது இதற்கு எத்தகைய வரவேற்பு இருக்கும் என்ற சந்தேகம் நமக்குள் இருந்தது. ஏலத்திற்கு வீரர்களை எடுப்பதுபற்றி பல விமரிசனங்களும் கேலிப்பேச்சுகளும் இருந்தன.
ஷேன் வார்னையும், வாட்சனையும் நமது போட்டியாளராகப் பார்த்த நாம் அவர்கள் நம் நாட்டு வீரர்களை அவுட்டாக்கும்போது விசிலடித்துப் பாராட்டும் விந்தைகளைக் காண முடிந்தது. முரளிதரன் பந்தில் யூசுஃப் பதான் அவுட்டாகமாட்டாரா என்று துடித்தது நம் இதயம்.
அரை இறுதிக்குள்ளேயே நுழைவோமா மாட்டோமா என்றிருந்த நிலையில் அரையிறுதியிலும் வென்று இறுதிப்போட்டிக்கும் சென்னை அணி நுழைந்தபோது ஆரவாரித்த சென்னையர் இதயங்கள் ஏராளம்!
இதுவரை நடந்த போட்டிகளிலேயே விறுவிறுப்பாக அமைந்தது இந்த இறுதிப்போட்டி. கடைசிப் பந்து வீசப்படும்போது இரு அணி ஆதரவாளர்களின் இதயங்களுமே துடிக்கத் தவறின.
பந்தயங்களுக்கு அரங்கு நிறைய வந்திருந்த ரசிகர்கள், தொலைக்காட்சியில் மூழ்கிய ஆர்வலர்கள் என அமோக வரவேற்பைப் பெற்றது 20- 20 போட்டிகள்.
சீரியலிலேயே தங்கள் முகங்களைப் புதைத்துக்கொள்ளும் குடும்பத் தலைவிகள்கூட இரவு எட்டுமணிக்கு ஐ.பி.எல் போட்டிகளைக் காணத் தயாராய் இருந்தார்கள். ஒவ்வொரு நாளும் இரவு பன்னிரண்டு மணிவரை திருவிழாக் கோலந்தான்!
பூர்வாங்க போட்டிகள் முடிவடையும் நிலையில் சென்னை அணி அரை இறுதிக்குள் நுழையுமா என்பதே நம்மவர்கள் மத்தியில் கேள்விக்குறியாக இருந்தது. முதல் நான்கு போட்டிகளில் பரபரப்பான முறையில் வென்ற சென்னை அணி நட்சத்திர வீரர்களான ஹைடன், ஹஸ்ஸி, மற்றும் ஜேக்கப் ஓரம் தத்தமது நாடுகளுக்கு நடையைக் கட்ட திடீரெனத் தடுமாறியது. நாம் நம் முயற்சியால் ஜெயிப்பதைவிட, எந்த அணி எந்த அணியிடம் தோற்றால் அல்லது ஜெயித்தால் நமக்கு வாய்ப்புக் கிடைக்கும் என்று கணக்குப் போடுகிறோம்.
நல்ல வேளையாக ‘தப்பித்தோம்.. பிழைத்தோம்’ என்று அரை இறுதியில் நுழைந்த நிலையில் சென்னை ரசிகர்களின் உற்சாகம் வானை எட்டியது. அரை இறுதியிலும் யுவராஜ் அணி பரிதாபமாகத் தோல்வியைத் தழுவ, அதிர்ஷ்ட தோனியின் தலைமையில் இறுதி ஆட்டதிற்குள் பிரவேசித்தது சென்னை.
இந்த போட்டிகளைப் பற்றி சில புள்ளிவிவரங்கள் நம்மைத் திகைக்க வைக்கின்றன. ஏப்ரல் 18லிருந்து மே 14 வரை ஐ.பி.எல் போட்டிகளைக் கண்டு களித்தவர்கள் எண்ணிக்கை 99 மில்லியனாம். ஐ.பி.எல் போட்டிகளை அயல்நாட்டில் கண்டு களித்தவர்களின் எண்ணிக்கை இதில் சேரவில்லை.
உலகக் கோப்பை ஒருநாள் போட்டிகளின் போது அதனை டி.வி யில் கண்டு ரசித்த ரசிகர்கள் கூட 32.8 மில்லியன்தான்! தென் ஆப்பிரிக்காவில் நடந்த 20-20 போட்டியைப் பார்த்த ரசிகர்களின் எண்ணிக்கை 48 மில்லியன்.
விளம்பரங்கள் மூலம் கிடைத்த தொகை 350 கோடியையும் தாண்டியது. இறுதி ஆட்டத்திற்கு மட்டும் 300 கோடி அளவிற்கு சூதாட்டம் நிலவியது எனச் சொல்கிறார்கள். நேரடி ஒளிபரப்பு செய்த செட் மாக்ஸ் பார்வையாளர்கள் 5.7 சதவிகிதத்திலிருந்து 27 சதவிகிதத்திற்கு உயர்ந்ததாம்!
ஐ.பி.எல் போட்டிகளின் இந்த அசாதாரண வெற்றிக்குக் காரணம் என்ன? வணிகநோக்கில் இந்தப் போட்டிகளை மக்களிடையே சேர்ப்பதில் அமைப்பாளர்களின் சாதனைதான்.
ஐந்து நாள் போட்டிகள் ஒரு ஆரவாரமில்லாத கர்நாடக சங்கீதம் என்றால் இந்த 20-20 போட்டிகள் குத்துப்பாட்டுக்ளைப்போல.
20 ஓவர் போட்டிகள் முதல் ஓவர் ஆரம்பித்த வேகத்திலேயே சூடுபிடிக்கத் துவங்கி உச்சஸ்தாயியை எட்டுவதற்குள் முடிந்தே விடுகின்றன.. அதற்குள் எத்தனையோ சிக்சர்கள், பவுண்டரிகள், காட்சுகள் என்று ஒவ்வொரு கணமும் மைதானமே அதகளமாகிறது. பறக்கும் விசில் சத்தங்கள், ஒவ்வொரு பவுண்டரிக்கும், சிக்சருக்கும் கவர்ச்சி கன்னிகளின் ஆட்டம்!
இந்தத் துரித உணவு யுகத்தில் யாரால் பொறுமையாய் நாள் பூராவோ ஐந்து நாட்களோ காத்திருக்க முடியும்? ஏதோ வந்தோமா, அடித்தோமா, அவுட்டானோமா என்று மூன்று மணி நேரத்தில் முடிப்பதை விட்டு!
இந்தப் போட்டிகளின் சிறப்பு அம்சம் இந்தியாவின் மூலைகளில் ஒளிந்திருந்த பல இளம் கிரிக்கெட் வீரர்களின் திறமைகளை வெளிக்கொண்டு வந்தது. அடுத்த உலகக் கோப்பையின் போது பல இளம்வீரர்கள் சாதனை படைக்கக் காத்திருக்கிறார்கள். இவர்களில் யாரைத் தேர்வு செய்வது, யாரை விடுவது என்று தேர்வாளர்களுக்கு தர்மசங்கடமாகவே இருக்கும். எப்படியோ இந்திய அணிக்கு சிறந்த இளம் பட்டாளங்கள் கிடைத்தால் சரிதான்!
|
| | டி.எஸ்.பத்மநாபன் அவர்களின் இதர படைப்புகள்.
| உலக நடப்பு பகுதியில் வந்த இதர படைப்புகள்.
|
|
|
|
|
|