Home  
இதழ் 473

ஜூன் 21 2010


www.guruji.com

Search

 

Nilacharal Web

Search in English

Help
 

Login

 

Username

Password

Click Here to Login

New Members!
Register Here..
 

Your Advertisement Here

 
  add nilacharal to your favourites nilacharal as your homepage  
Arya
Wanted Freelancers!
Home>>பூஞ்சிட்டு

மந்திர ஏரி
- நிலா

உங்கள் கருத்துகள்நண்பருக்கு அனுப்பபிரதி எடுக்க

இந்த சிறகுகளை விசிறி போலப் பிணைத்துக் கொள். அது நீ விரும்பும் இடத்துக்கு உன்னைக் கொண்டு சேர்க்கும். அதோடு உன்னைத் தீங்கிலிருந்து காக்கவும் செய்யும்

(மூலம்: தென் அமெரிக்கா)

முன்னொரு காலத்தில் அமுதா என்ற சிறுமி தன் பெற்றோருடனும் இரு மூத்த சகோதரர்களுடனும் நெல்கோட்டை என்ற நாட்டில் வாழ்ந்து வந்தாள். அவர்களனைவரும் தங்களது சிறிய விவசாய நிலத்தில் கடுமையாக உழைத்து வாழ்க்கையை நடத்திக் கொண்டிருந்தனர். அவர்கள் ஏழ்மையுடன் வாழ்ந்தாலும் அந்நாட்டின் மேலும் அரச குடும்பத்தின் மேலும் மிகுந்த பக்தி கொண்டிருந்தனர்.

அந்நாட்டு இளவரசன் சிறு வயதிலிருந்தே நோய்வாய்ப் பட்டிருந்தான். அவனது உடல்நிலை மிகவும் கவலைக்கிடமாகி விட்டது. அவனைப் பரிசோதித்த மருத்துவர் மன்னரிடம், "அரசே, எனக்குத் தெரிந்த அத்தனை மருத்துவமும் பொய்த்துப் போய்விட்டது. இளவரசர் பிழைக்க ஒரே ஒரு வழிதான் இருக்கிறது" என்று கூறினார்

"என்னவென்று கூறுங்கள், வைத்தியரே! எதுவானாலும் என் மகனுக்காகச் செய்து முடிப்பேன்" என்றார் அரசர்

"பூமியின் எல்லையில் ஒரு ஏரி இருக்கிறது. அது வானமும் பூமியும் சந்திக்குமிடத்தில் இருப்பதால் வானத்திலிருந்து அதீத ஆற்றல் அந்த ஏரியில் இறங்கி இருக்கும். அந்த ஏரியின் நீரை அருந்தினால் இளவரசரின் உயிர் சக்தி பெறும்" என்று விளக்கினார் வைத்தியர்.

இதனைக் கேட்ட அரசர், "இந்த மந்திர நீரைக் கொண்டு வருபவர் யாராக இருப்பினும் அவர் அரச குடும்பத்தைச் சேர்ந்தவராகக் கருதப்படுவார்" என்று நாட்டு மக்களுக்கு அறிவித்தார். அந்த நாட்டில் மக்கள் பொன், பொருளை விட அந்தஸ்தையே பெரிதாக மதித்தனர். இருப்பினும் அதற்காக பூமியின் எல்லை வரை செல்ல யாரும் தயாராக இல்லை. அது தற்கொலைக்கு சமானம் என எண்ணினர்

அமுதாவின் சகோதரர்கள் இளவரசருக்காக தாங்கள் இந்தப் பயணத்தை மேற்கொள்ள வேண்டுமென விரும்பினர். அதற்காக தங்களின் பெற்றோர் சம்மதத்தை அவர்கள் கேட்ட போது அவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

"காடும் மலையும் கடலும் தாண்டிச் செல்ல வேண்டும். என்னென்ன ஆபத்துக்கள் வருமோ, யாருக்குத் தெரியும்? உங்களை இழக்க நாங்கள் தயாராக இல்லை" என்று உறுதியாகக் கூறினார்கள்.

ஆனால் சகோதரர்களிருவரும் சமாதானமடையவில்லை. "நாங்கள் மந்திர நீரைக் கொண்டு வராவிட்டால் இளவரசர் மாண்டு போவது உறுதி. அதனால் அரசரும் மனமுடைவார். நாட்டு நிலை என்னவாகுமென்று யோசியுங்கள்" என்று ஏதோதோ கூறி தங்கள் பெற்றோரைத் தங்கள் பயணத்துக்கு இணங்க வைத்தனர்.

பூமியின் எல்லையைத் தேடி அவர்கள் வெகு தூரம் வந்துவிட்டனர். ஒவ்வொரு மலையை அடையும்போதும் பூமியின் எல்லையை அடைந்துவிட்டதாகவே எண்ணுவார்கள். ஆனால் அதன் மேல் ஏறியதும் மறுபுறம் மற்றோரு மலையோ காடோ நாடோ தெரியும். கடைசியாக உயர்ந்த மலையொன்றினை அடைந்த போது அதுவே பூமியின் எல்லை என்று உறுதியாக நம்பினார்கள். மிகுந்த சிரமத்துடன் அதன் சிகரத்தை அடைந்த போது மறுபுறம் அதனைவிடப் பெரிய மலை இருந்ததைக் கண்டு மிகுந்த ஏமாற்றமடைந்தனர்.

"தம்பி, பெற்றோர் நம்மைக் காணாமல் வருந்துவார்கள். அறுவடை நேரம் வேறு நெருங்கிவிட்டது. அதனால் நாடு திரும்புவதே நலம்" என்றான் அண்ணன்

"அதுவும் சரிதான், அண்ணா. எனினும், பூமியின் எல்லைக்கருகில் வந்துவிட்டோம். இவ்வளவு உயரமான சிகரத்திலும் இருக்கிறோம். இங்குள்ள ஏரியின் நீர் இளவரசருக்குக் கொஞ்சமாவது உதவாதா? அதனால் இதனைக் கொஞ்சம் எடுத்துப் போகலாம்" என்று தம்பி யோசனை கூற அவ்வாறே அங்கிருந்த ஏரியின் நீரை ஒரு கூஜாவில் சேகரித்துக் கொண்டு அரண்மனைக்குத் திரும்பினர்

அந்த நீரை தன்னிடமிருந்த குடுவையொன்றில் வைத்தியர் ஊற்றியதும் அது மாயமாக மறைந்து விட்டது. அதைக் கண்ட வைத்தியர் , "அரசே, இந்தக் குடுவையில் மந்திர நீர் மட்டுமே தங்கும். இவர்கள் தங்களை ஏமாற்ற முயன்றிருக்கிறார்கள்" என்று அரசரிடம் புகார் செய்தார்

அரசர் மிகுந்த சினம் கொண்டு அவர்கள் சொல்வது எதற்கும் செவி கொடாமல் சகோதரர்கள் இருவரையும் சிறையில் அடைக்க உத்தரவிட்டார். இதனை அறிந்த அமுதாவும் பெற்றோரும் சொல்லவொணா வேதனை அடைந்தனர்.

அமுதா தன் பெற்றோரிடம், "நான் போய் அந்த மந்திர நீரை எடுத்து வந்தால் என் சகோதரர்களைக் காப்பாற்றிவிடலாம். அதனால் எனக்கு அனுமதி தாருங்கள்" என்று கூறினாள்

அதிர்ச்சியடைந்த பெற்றோர், "ஏற்கெனவே மகன்களிருவரையும் பிரிந்து வாடுகிறோம். எங்களது ஒரே மகளான உன்னையும் எப்படி அனுப்ப முடியும்?" என்று கலங்கினர்

"சகோதரர்களை விடுவிக்க வேறு வழியேதுமில்லையே! நான் அபாயம் ஏதும் நேரிடாமல் கவனமாகச் சென்று வருகிறேன்" என்று அவர்களை சமாதானப்படுத்தினாள் அமுதா.

அமுதாவின் பயணத்துக்காக அவித்த சோளத்தையும் கோவைப் பழங்களையும் ஒரு பையில் கட்டித் தந்தார் அவளது தாய். பயணத்துக்குத் துணையாக ஒரு ஆட்டுக் குட்டியையும் அனுப்பி வைத்தார்.

பயணத்தின் முதல் நாள் காட்டில் வெகுதூரம் நடந்த அமுதா அன்று இரவு தன் ஆட்டுக் குட்டியுடன் புதர் மறைவில் நன்கு தூங்கிவிட்டாள். அடுத்த நாள் இரவு அவள் தூங்கும் போது புலியொன்றின் உறுமல் அருகில் கேட்டது. தன் செல்ல ஆட்டுக் குட்டி ஆபத்தில் மாட்டிவிடக் கூடாதென அதற்கு வீட்டுக்குத் திரும்ப வழி சொல்லி அனுப்பி வைத்தாள். பின் மரக் கிளையொன்றில் ஏறிப் படுத்துக் கொண்டாள்.

காலையானதும் மரத்துக்கு மேலே அழகான பஞ்சவர்ணக் கிளிகள் இரண்டு சுற்றிச் சுற்றிப் பறப்பதைக் கண்டாள். அவற்றின் சிறகுகள் வண்ணமயமாக கண்ணைக் கவர்ந்தன. அவற்றை ரசித்துக் கொண்டே தன் தாய் தந்திருந்த சோளத்தையும் பழங்களையும் உண்ண ஆரம்பித்தாள். சற்று நேரத்தில் அவள் அமர்ந்திருந்த கிளையில் அந்த பஞ்சவர்ணக் கிளிகள் இரண்டும் வந்து அமர்ந்தன. அமுதா கிளிகளுக்கு தன் உணவினைக் கொடுக்க, அவை மகிழ்ச்சியாக உண்டன. அவித்த சோளமும் கோவைப் பழங்களும் மிகுந்த சுவையான விருந்தாக அவற்றுக்கு அமைந்தன.

உண்டு முடிந்ததும், "மனித குலத்தைச் சேர்ந்த நீ ஏன் மரத்தில் தங்கி இருக்கிறாய்?" என்று வினவியது ஒரு கிளி.

தான் மந்திர ஏரியைத் தேடி வந்திருப்பதாக அமுதா தெரிவிதததும், கிளிகள், "அங்கு போவது உன்னால் முடியாத காரியம்" என்று கூறின. அமுதா தன் சகோதரர்களுக்காகவும் இளவரசருக்காகவும் தான் அங்கே சென்றே தீரவேண்டும் என்று உறுதியாகக் கூறினாள்

அதனைக் கேட்ட கிளிகள், "நீ எங்களுக்குப் படைத்த விருந்துக்கு பிரதியாக நாங்கள் உனக்கு அங்கே உதவி செய்கிறோம்" என்று சொல்லிவிட்டு நடனமாட ஆரம்பித்தன. இறக்கைகளை உரசி, பின்னிப் பிணைந்து ஆடியதில் உதிர்ந்த சிறகுகளில் மூன்றினை எடுத்து அமுதாவிடம் கொடுத்து, "இந்த சிறகுகளை விசிறி போலப் பிணைத்துக் கொள். அது நீ விரும்பும் இடத்துக்கு உன்னைக் கொண்டு சேர்க்கும். அதோடு உன்னைத் தீங்கிலிருந்து காக்கவும் செய்யும்" என்று கூறின

அமுதா கிளிகளுக்கு நன்றி சொல்லிவிட்டு, தன் தலையிலிருந்து முடியொன்றை எடுத்து சிறகுகளை விசிறி போலப் பிணைத்துக் கொண்டாள். பின் விசிறியைப் பார்த்து, "நான் மந்திர ஏரிக்குச் செல்ல வேண்டும்" என்று கூறினாள். உடனே தன் கால்கள் நிலத்திலிருந்து விடுபட்டு வானத்தில் பறப்பதை உணர்ந்தாள். அவள் கண் மூடித் திறக்குமுன் ஒரு ஏரியின் முன் நின்று கொண்டிருந்தாள். அந்த ஏரியின் நீர் தகதகவென வெள்ளி போல் மின்னியது. அதுதான் மந்திர ஏரியாக இருக்க வேண்டுமென எண்ணி அதனை நோக்கி ஒரு அடி எடுத்து வைத்தாள். ஏரிக்கரையிலிருந்து ஒரு பெரிய ஐந்து தலை நாகம் அவளை நோக்கிச் சீறிப் பாய்ந்தது. தன் மரணம் நெருங்கிவிட்டதென எண்ணிய அமுதா, தன் சிறகு விசிறியைத் தன் முகத்தின் முன் நீட்டி கண்களை இறுக மூடிக் கொண்டாள். நாகம் தன்னைக் கடிப்பதற்காகக் காத்திருந்தவள், அப்படி ஏதும் நேராத்தால் மெல்ல கண்களைத் திறந்து பார்த்தாள். தனக்கு முன் நாகம் பிணமாகக் கிடந்ததைக் கண்டு ஆச்சரியப்பட்டாள்.

தன்னுடன் கொண்டு வந்திருந்த ஜாடியில் மந்திர நீரை நிரப்புவதற்காக அவள் ஏரியை நோக்கி மீண்டும் நடந்தாள். ஆனால் இந்த முறை பல திசைகளிலிருந்தும் அவள் இதுவரை கண்டிராத பெரிய உருவத்துடன் கருந்தேள்கள் அவளை நோக்கிப் படையெடுத்தன. நடுநடுங்கிய அமுதா, இந்த சிறிய விசிறி பல திசைகளிலிருந்தும் வரும் ஆபத்திலிருந்து தன்னைக் காப்பாற்றுமா என்ற சந்தேகத்துடன் அதனை தன் முன் பிடித்தபடி மரணத்துக்குத் தயாரானாள். சிறிது நேரத்தில் அவள் கண் திறந்த போது எதிரில் கருந்தேள்கள் கால்களை விரித்தபடி செத்துக் கிடந்ததைக் கண்டு தன் விசிறியை மெச்சிக் கொண்டாள். ஆனால் அவளது மகிழ்ச்சி வெகு நேரம் நீடிக்கவில்லை. கரு மேகமொன்று அவளை நோக்கி வேகமாக வருவது போல் தோன்ற, அச்சத்தின் வசப்பட்ட அமுதா ஏரியை நோக்கி ஓடினாள். அந்த கரு மேகத்திலிருந்து 'ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்' என்ற சத்தம் வர, மேகத்தின் உருவில் வருவது தேனீக் கூட்டம் என்று அறிந்து கொண்டாள். இவ்வளவு பெரிய ஆபத்தில்ருந்து இந்த விசிறியால் தன்னைக் காப்பாற்றவே முடியாதென எண்ணிய அமுதா ஏரியில் 'தொபுக்' எனக் குதித்தாள். முழங்காலளவே இருந்த நீரில் மூழ்கி மறைந்து கொள்ள முயன்றாள். வெகு நேரம் மூச்சடக்க முடியாமல் தன் விசிறியைத் தூக்கிப் பிடித்தபடி தேனீ கடியை எதிர்பார்த்து அவள் எழுந்த போது அவள் முன் தேனீக்கள் கூட்ட்ம் கூட்டமாய் செத்து விழுந்தன. எஞ்சி இருந்த தேனீக்கள் எதிர்த் திசையில் பறந்தன

நிம்மதிப் பெருமூச்சு விட்ட அமுதா தனது ஜாடியில் மந்திர நீரை நிரப்பிக் கொண்டு, விசிறியிடம் தன்னை தன் நாட்டு அரண்மனைக்கு அழைத்துச் செல்லும்படி பணித்தாள். இமைக்கும் நேரத்தில் அரண்மனைக் காவலர் முன் நின்று கொண்டிருந்த அமுதா, தான் இளவரசரைக் குணப்படுத்த மந்திர நீரைக் கொண்டு வந்திருப்பதாகத் தெரிவித்தாள். காவலர்கள் அவளை அரச வைத்தியரிடம் அழைத்துச் சென்றனர்.

அமுதாவை சந்தேகத்துடன் நோக்கிய வைத்தியர் அவளது ஜாடியிலிருந்த நீரை தன் குடுவையில் ஊற்றினார். நீர் ஆவியாகாமல் அப்படியே தங்கி இருந்ததைக் கண்டு வியப்புற்ற வைத்தியர், "விரைந்து சென்று அரசரை அழைத்து வாருங்கள். இளவரசர் குணம் பெறப் போகிறார்" என்று காவலர்களை நோக்கிக் கூவினார்

இளவரசரின் அறைக்குச் சென்று அவரது வாயில் மந்திர நீரை வைத்தியர் ஊற்றியதும், இளவரசரின் முகம் தெளிவடையத் தொடங்கியது. சற்று நேரத்தில் இளவரசர் கண்களைத் திறந்து மெதுவாக எழுந்து அமர்ந்தார். அக்காட்சியைக் கண்ட அரசரின் கண்களில் ஆனந்தக் கண்ணீர் வழிந்தது.

அவர் அமுதாவைப் பார்த்து, "அம்மா, தெய்வம் போல வந்து என் மகனைக் காப்பாற்றினாய். நீ இன்று முதல் அரச குடும்பத்தில் ஒருவராவாய். நீ இங்கேயே தங்கிக் கொள்ள அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்படும்" என்றார்

"நன்றி, அரசே! இதற்குப் பதிலாக நான் மூன்று வரங்களைக் கேட்கலாமா?" என்று பணிவுடன் வினவினாள்

"கேளம்மா" என்று பரிவுடன் கூறினார் அரசர்

"முதலாவதாக சிறையிலிருக்கும் என் சகோதரர்கள் விடுதலையாக வேண்டும். அவர்கள் செய்தது பிழையே ஆயினும் இளவரசருக்கு உதவ எண்ணியே அவர்கள் அவ்வாறு செய்தார்கள். தயவு செய்து அவர்களை மன்னிக்க வேண்டுகிறேன்"

அமுதா இவ்வாறு கேட்டுக் கொண்டதும் அரசர் அவ்வண்ணமே செய்ய காவலர்களிடம் கட்டளையிட்டார்.

"இரண்டாவதாக, இந்த சிறகுகளை கிளிகளிடம் ஒப்படைக்கவேண்டும்" அமுதா சொல்லி முடித்ததுமே சிறகுகள் தானாகவே சன்னல் வழியாகப் பறந்து வானத்தில் மறைந்தன

"உன் இரண்டாவது விருப்பமும் நிறைவேறிவிட்டது, அமுதா. உனது மூன்றாவது விருப்பத்தைக் கேள்" என்று சிரித்தபடியே கூறினார் அரசர்

"முதுமையில் என் பெற்றோர் வளமையாக வாழ ஒரு கால்நடைப் பண்ணை வேண்டும்" என்று தனது மூன்றாவது வரத்தைக் கேட்டாள் அமுதா

தனக்குக் கிடைக்கவிருந்த உயர்ந்த அந்தஸ்தை விட்டுக் கொடுத்து, தனது குடும்ப நலத்தினை முதன்மையாக வைத்த அமுதாவின் உயர்ந்த குணம் அனைவரையும் கவர்ந்தது.

"உன் வரங்களெல்லாம் நிறைவேற்றப்படும், அமுதா. நீ எனக்கு ஒரு வரம் தர வேண்டும்" என்று அவளிடம் கேட்டார் அரசர்

அமுதா அவர் முன் மண்டியிட்டு, "தாங்கள் என்னிடம் வரம் கேட்பது சரியல்ல, அரசே. ஆணையிடுங்கள், செய்து முடிக்கிறேன்" என்றாள்

"நீ அரண்மனையில் தங்கப்போவதில்லை என்றாலும் அடிக்கடி இங்கு வந்து செல்ல வேண்டும் என்பதே என் விருப்பம்" என்று கூறினார் அரசர்

அதன்படியே ஒவ்வொரு வாரமும் தன் குடும்பத்தாருடன் அரண்மனைக்கு வந்து சென்று கொண்டிருந்தாள் அமுதா.

அரண்மனையில் அனைவருக்கும் செல்லப் பிள்ளையாக இருந்த அமுதா வளர்ந்ததும் இளவரசரை மணந்து அரச குடும்பத்தில் ஒருத்தியாகவே ஆகிவிட்டாள்

(முற்றும்)

நிலா அவர்களின் இதர படைப்புகள். பூஞ்சிட்டு பகுதியில் வந்த இதர படைப்புகள்.
                         
Your Comments
 
Radha
6/30/2010 , 5:41:27 AM

 [Comment url]
AAhaaa evlo arumayana kathai en vayathai maranthu rasici padithean.... nalla ullangal vallatummm
Comment
உங்கள் கருத்து
பெயர் :
மின் அஞ்சல் :
சுட்டி :

Comment In:

Tamil English
(Type here in Thanglish and see tamil text in bottom. Tamil conversion powered by : www.suratha.com)
NOTE : Please do not use single quote in your comments. You can use double quote in place.
(English / தமிழில் - யூனிகோட்)
What you see in this box gets posted as feedback.

Hot properties in India

ஜோதிடம் கேளுங்கள் பகுதி தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. விரைந்து கட்டண சேவை பெற இங்கே சுட்டவும்.

 

 


 

 


About us | Team | Contact Us | Press | Feedback | Favourites | Communities | Shopping | Services | Site map

tamil magazines, Hindu devotional songs, tamil links, tamil movies, tamil songs, tamil dvd, tamil news, tamil, tamil comedy, tamil movie, tamil music DVDs, bharatanatyam, Yoga DVDs, carnatic music, tamil cinema, sivaji movie, cricket world cup, tamil ebooks, web design, web design resources, global warming, outsourcing, mutual funds, India Pakistan cricket series, Kuselan, India Cricket, Sultan The Warrior

A web magazine from Nilacharal Ltd
Privacy Policy|Terms of use|Disclaimer| Copyright Nilacharal Ltd - All Rights Reserved Worldwide