கரடிக்கு வைக்கோலும், ஒநாய்க்கு உமியும், நரிக்கு அரிசியும் கிடைத்தன. தத்தம் குவியலோடு மாவு அரைக்கும் இடத்துக்குச் சென்றன மூன்று விலங்குகளும். (மூலம்: பின்லாந்து)
முன்னொரு காலத்தில் கரடி, ஓநாய், நரி மூன்றும் சேர்ந்து நெல் பயிர் செய்தன. அறுவடை அமோகமாக இருந்தது.
மூன்று விலங்குகளும் சேர்ந்து பயிரிலிருந்து வைக்கோல் தனியாகவும், உமியைத் தனியாகவும் அரிசியைத் தனியாகவும் பிரித்தன. வைக்கோல் பெரிய குவியலாகவும், அரிசி சின்னக் குவியலாகவும் உமி இரண்டுக்கும் இடைப்பட்ட அளவிலுமாக இருக்க, தந்திரக்கார நரி, தன் தோழர்களிடம், "அவரவர் உருவத்துக்குத் தகுந்தாற் போல நாம் நம் பாகத்தைப் பிரித்துக் கொள்வதே நியாயமாக இருக்கும்" என்று கூறியது.
அந்த யோசனைக்கு மற்ற இருவரும் ஒப்புக் கொள்ள, கரடிக்கு வைக்கோலும், ஒநாய்க்கு உமியும், நரிக்கு அரிசியும் கிடைத்தன. தத்தம் குவியலோடு மாவு அரைக்கும் இடத்துக்குச் சென்றன மூன்று விலங்குகளும்.
வைக்கோலும் உமியும் அரைபடும் போது 'முறு முறு' வென்ற சத்தமும், நரியின் அரிசி அரைபடும்போது 'கர கர'வென்ற சத்தமும் வந்தன. ஒநாய் நரியிடம் அதற்கான காரணம் கேட்டதும் நரி, "நான் என் பங்கில் கொஞ்சம் கற்கள் சேர்த்து அரைக்கிறேன். அதனால்தான் சத்தம் வேறு மாதிரியாக இருக்கிறது" என்றது.
அதனைக் கேட்ட ஓநாயும் கரடியும் சிறு சிறு கற்களைச் சேர்த்து அரைத்தன. முழுவதையும் அரைத்து மாவு தயாரானதும் நரியின் மாவு மட்டும் வெள்ளையாக இருந்ததையும் தங்கள் இருவரின் மாவும் கருமையாக இருந்ததையும் கண்ட கரடி காரணத்தைத் துருவியது
"நான் யாரிடமும் என் ரகசியத்தைச் சொல்வதில்லை. உங்களுக்காகச் சொல்கிறேன்" என்று பிகு பண்ணிக் கொண்ட நரி, "நான் என் மாவினை நதியில் அலசினேன் அதனால்தான் வெள்ளையாக இருக்கிறது" என்றது.
தங்கள் மாவுப் பாத்திரத்தை எடுத்துக் கொண்டு நதிக்கு ஓடின கரடியும் ஓநாயும். நதியில் அலசியதில் முக்கால்வாசி மாவு நீரோடு போக, எஞ்சியது எப்படி இருந்தாலும் பரவாயில்லை என்று வீட்டுக்குத் திரும்பின இரண்டு விலங்குகளும்.
தாங்கள் பயிர் செய்த தானியத்திலிருந்து தயார் செய்த கஞ்சியைக் குடிக்கும் ஆவலுடன் மூன்று விலங்குகளும் சமையலில் இறங்கின. நரியின் வீட்டிலிருந்து வாசனை கமகமவென்று வர தன் கஞ்சியை முகர்ந்து பார்த்த கரடி ஒரு வாசனையும் வராதது கண்டு ஏமாற்றமடைந்தது.
நரியின் வீட்டு வாசலை அடைந்த கரடி ஒநாய் ஏற்கெனவே இது குறித்து நரியிடம் விசாரித்துக் கொண்டிருந்ததைக் கண்டது.
"ஏன் என்னை இப்படித் தொந்தரவு செய்கிறீர்கள்? உங்களுக்குச் சரியாக வேலை செய்யத் தெரியாவிட்டால் நான் என்ன செய்ய முடியும்?" என்று எரிச்சலோடு சொன்னது நரி.
"கோபம் கொள்ளாதே, நண்பா. நம் மூவரில் நீதான் புத்திசாலியாக இருக்கிறாய். எங்களுக்குக் கொஞ்சம் உதவி செய்யக் கூடாதா?" என்று கெஞ்சியது ஓநாய்
"சரி, சரி... இதுவே கடைசி முறை" என்று சொன்ன நரி, தான் அடுப்பில் தன் வாலைச் சுட்டு கொழுப்பெடுத்து கஞ்சியில் சேர்த்ததால்தான் வாசனை ஊரையே எழுப்புவதாகக் கூறியது.
ஓநாயும், கரடியும் தத்தம் வீடுகளுக்குத் திரும்பி, வாலை அடுப்பில் வைக்க, நெருப்பு வாலில் பற்றிக் கொண்டது. எரிச்சல் தாங்க முடியாமல் இரண்டு விலங்குகளும் அலறிக் கொண்டு யோசனை கேட்க நரியின் வீட்டை நோக்கி ஓடின. வாலிலிருந்த நெருப்பு நரியின் வீட்டுத் தோட்டத்தைப் பற்றிக் கொண்டு திகுதிகுவென எரிய ஆரம்பித்தது.
பயந்து போன கரடியும் ஓநாயும் அருகிலிருந்த குளத்தில் குதித்து உயிர் தப்பின. தந்திரக்கார நரியின் வீடு முழுவது எரிந்து சாம்பலாகியது.
(முற்றும்)
|