'பழகிரும்'என்ன அற்புதமான வார்த்தை. 'பழகிரும்' எதுவுமே பழகி விடுகிறது காலப் போக்கில். துயரமும் சரி, இன்பமும் சரி. நிகழ்கிற நேரம் கிடைக்கிற அதிர்வுகள் தற்காலிகம் மட்டுமே.
எனக்கு இப்படி நிகழும் என்று யாராவது போன மாதம் ஜோசியம் சொல்லியிருந்தால் நம்பியிருக்க மாட்டேன். சில நேரங்களில் உண்மை கற்பனையை விட சுவாரசியமானது.
எங்கள் தலைமை அலுவலகத்தில் ஒருவர் தனக்கு பழனி பஞ்சாமிர்தம் வேண்டும் என்று மெயில் அனுப்பியிருந்தார். எனக்கோ என்ன செய்வது என்று முதலில் புலப்படவில்லை. அப்புறம் தெரிந்தவர் ஒருவர் அவரது உறவினர் பழனியில் இருப்பதாகவும் அவரிடம் சொல்லி அனுப்பச் சொல்வதாகவும் உறுதி தந்தார்.
கடைசியில் அவர் உறவினர் செய்த ஏற்பாடு என்ன தெரியுமா? பழனியிலிருந்து வரும் அரசு போக்குவரத்து பேருந்தில் ஓட்டுநரிடம் கொடுத்து அனுப்பி விட்டு என்னைப் பெற்றுக் கொள்ள சொல்லி விட்டார். வேறுவழி? நானும் போனேன். பேருந்து எண் சொல்லியிருந்தார். வண்டி வந்து நின்றதும் அருகில் போனேன். 'பஞ்சாமிர்தம்' என்றதும் பையைத் தூக்கி கொடுத்தார். 'தேங்க்ஸ்.. ங் உங்க பேர்?' என்றேன் ஓட்டுநரிடம். 'முருகானந்தம்'
சியாமளா என்னுடன் ஒட்டிக் கொண்டதும் இதைப் போல ஒரு அதிசயம்தான். உளவியல் ரீதியாக இதற்குக் காரணங்கள் கற்பிக்கலாம். போன ஜன்ம விட்ட குறை தொட்ட குறையாகக் கூட இருக்கலாம்.
எதுவானால் என்ன.. நேசிப்பதும், நேசிக்கப் படுவதும் வாழ்வின் அர்த்தம் கூட்டுகிறது. இந்த மூன்று மாதங்களில் எங்கள் மாடர்னைசேஷன் வேலை ஒரு பக்கம் நடந்து கொண்டிருக்க, சியாமளாவுடனான என் நட்பும் தொடர்ந்து கொண்டிருந்தது. வித்யா இரண்டாம் பட்சம் ஆகிற அளவுக்கு!
ஒரு நாள் வித்யா எனக்கு ஃபோன் செய்து தனக்கு வீடு திரும்ப தாமதம் ஆகும் அதுவரை சியாமளாவுடன் இருக்க முடியுமா என்று கேட்டாள். எனக்கென்ன.. ஒரு பிரச்சினையும் இல்லை. பிறகு அதுவே வாரம் இரண்டு முறையாகிப் போனது. சியாமளா என்னுடன் மனரீதியாக ஒட்டிக் கொள்ள உதவியாகிப் போனது.
நடுவே என் வீட்டிற்கும் அழைத்துப் போனேன். அம்மாவுக்கும் ஏனோ சியாமளாவைப் பிடித்து விட்டது. அவளைத் திரும்ப கொண்டு போய் விட்டு விட்டு வந்ததும் அம்மா வாசலிலேயே நின்றிருந்தது புரிந்தது.
அம்மா எதையோ மறைத்தாள். அவளின் உள்ளுணர்வு எதையோ உணர்த்தியிருக்க வேண்டும். அதை என்னுடன் பகிர மனசில்லை அம்மாவுக்கு.
மேலே ஃபால்ஸ் ஸீலிங் போட்டாகி விட்டது. டக்டிங் ஆரம்பித்து விட்டது. ஏசி யூனிட்கள் வந்து சேர்ந்து விட்டன. தரைத்தளம் புதுப்பித்து டைல்ஸ் போட்டது சில பேருக்குப் பிடிக்கவில்லை.
'வழுக்குது. கிரிப் கிடைக்கலை' என்றார்கள்.
'பழகிரும்'
என்ன அற்புதமான வார்த்தை. 'பழகிரும்' எதுவுமே பழகி விடுகிறது காலப் போக்கில். துயரமும் சரி, இன்பமும் சரி. நிகழ்கிற நேரம் கிடைக்கிற அதிர்வுகள் தற்காலிகம் மட்டுமே.
தற்செயலாகத்தான் அன்றைய தினம் இரண்டாவது மாடிக்குப் போனேன். மணி ஆறு. இந்நேரம் வித்யா வீட்டுக்குப் போயிருக்கலாம் என்கிற நினைப்பில் அவள் இருக்கையை எட்டிப் பார்த்தேன்.
தலையாட்டினாள். கிச்சனுக்குள் போனேன். தேநீர் வைத்தது கூடத் தெரியாமல் உதட்டைத் துருத்திக் கொண்டு சியாமளி வரைந்து கொண்டிருந்தாள்.
கைக்குக் கிடைத்த புத்தகத்தைப் பிரித்துப் படித்துக் கொண்டிருந்தேன். நேரம் போனது தெரியவில்லை.
சட்டென்று விழித்து வாட்சைப் பார்த்தால் மணி எட்டரை. ஏன் இன்னும் வித்யாவைக் காணோம்?
சியாமளி டீயைக் குடிக்கவில்லை. ஏடு தட்டியிருந்தது. அவளும் அப்படியே சோபாவில் சரிந்திருந்தாள். மிகவும் மெனக்கெட்டு வரைந்ததின் அலுப்பு.
சியாமளியின் கண்கள் மூடி ஆழ்ந்த சுவாசம். மெல்ல எட்டிப் பார்த்தேன். .. அப்படியே வித்யா. தத்ரூபமாய். கண்சிமிட்டியது ஓவியம் என்று கூடச் சொல்லலாம். அத்தனை உயிரோட்டம்.
என் மூச்சுக் காற்று பட்டு ஓவியம் கலைந்து விடப் போகிறது என்கிற பதட்டம் வந்த மாதிரி வேகமாய் நகர்ந்ததில் எதன் மேலோ மோதிக் கொண்டேன். கீழே விழுந்த சத்தத்தில் சியாமளி விழித்துக் கொண்டு என்னைப் பார்த்தாள்.
'ஸாரி..'
அதே நேரம் செல்போன் கிணுகிணுத்தது.
'காலிங் ஃப்ரம் சூர்யா ஹாஸ்பிடல்ஸ்.. நீங்க யார் பேசறது'
சொன்னேன். உள்மனதில் எதுவோ முனக ஆரம்பித்தது.
'ஸாரி ஸார்.. உடனே வரமுடியுமா.. ஒரு பேஷண்ட்.. வித்யா.. மெட் வித் அன் ஆக்சிடெண்ட்.. அவங்க செல்லுல உங்க நம்பர் பார்த்துட்டு கால் பண்ணோம்'
'சீரியஸா ஒண்ணும் இல்லியே'
'பிளீஸ்.. உடனே நேர்ல வாங்க' டிஸ்கனெக்ட் ஆகி விட்டது.