பற்கூழ் என்பது பல்லின் உட்பகுதியில் அமைந்துள்ளது. இதில் இணைப்புத் திசு, இரத்த நாளங்கள் மற்றும் நரம்புகள் ஆகியவை அடங்கியுள்ளன. இரத்த நாளங்கள் பல்லுக்கு ஊட்டமளிப்பவை, நரம்புகள் வலி உணர்வுகளை மூளைக்கு அனுப்புபவை.
குழந்தைகளின் பால் பற்கள் எப்போது விழுகின்றன?
நமக்கு வாயில் முளைக்கும் முதல் பல் தொகுதியை குழந்தைகளுக்கான பால் பற்கள் அல்லது விழுந்துவிடும் பற்கள் என்கிறோம். பிறப்பதற்கு முன்னரே, சிறு முளைகளைப் போன்று ஈறுகளுக்கு அடியில் பற்கள் தோன்றுகின்றன. பிறந்த சில மாதங்களுக்குப் பின்னரே ஈறுகளுக்கு மேல் அவை காட்சியளிக்கின்றன. ஏறக்குறைய மூன்று வயது ஆன பின்னர் வாயில் சுமார் 20 பற்கள் வரை முளைக்கின்றன. சுமார் ஆறு வயது ஆகும் போது முதல் பல் விழுகின்றது. இதன் பின்னர் பெரியவர்களுக்கான இரண்டாவது அல்லது நிலையான பற்கள் முளைக்கின்றன. மறுபடியும் முளைக்கும் முதலாவது பல் தொகுதி வாயின் முன் பகுதியிலுள்ள வெட்டும் பற்கள் மற்றும் பின்பகுதியிலுள்ள அரைக்கும் பற்கள் ஆகியவையாகும்; ஏழு அல்லது எட்டு வயதுகளில் இவை முளைத்து விடுகின்றன. கடைசியாக முளைப்பவை வாயின் கடைப் பகுதியிலுள்ள கடை வாய்ப் பற்கள் அல்லது அறிவுப் பற்கள் ஆகும். சிலருக்கு இப்பற்கள் தோன்றுவதே கூட இல்லை! சிலருக்கு இந்த அறிவுப் பற்கள் முளைப்பதற்குரிய போதுமான இடம் தாடைகளில் இல்லாமல் போவதும் உண்டு. இதன் காரணமாக தாடை எலும்புக்கும் மற்றொரு பல்லுக்கும் இடையே அறிவுப் பற்கள் முளைத்து சிக்கிக் கொள்ளலாம். இந்நிலை உண்டாகும் போது அறிவுப் பல்லை பல் மருத்துவர் எடுத்து விடுமாறு பரிந்துரைக்கக் கூடும்.
நாம் பல்வேறு வகையான உணவை உட்கொள்கிறோம், இதற்கேற்ப பல்வேறு பணிகளைச் செய்ய வெவ்வேறு வகையான பற்கள் உதவுகின்றன. 1. முன் பற்கள் / உளிப்பற்கள் – வெட்டுதல் 2. கோரைப் பற்கள் – கிழித்தல் 3 & 4. முன் & பின் கடைவாய்ப் பற்கள் – நசுக்குதல் மற்றும் அரைத்தல்.
ஒரு பல்லில் அடங்கிருப்பவை யாவை?
ஒரு பல்லில் நான்கு வகையான திசுக்கள் அடங்கியுள்ளன: அவை 1. பற்கூழ் (pulp) 2. பற்காழ் (dentine) 3. பற்சிப்பி (enamel) மற்றும் 4. பற்காரை (cementum) ஆகியன.
பற்கூழ் என்பது பல்லின் உட்பகுதியில் அமைந்துள்ளது. இதில் இணைப்புத் திசு, இரத்த நாளங்கள் மற்றும் நரம்புகள் ஆகியவை அடங்கியுள்ளன. இரத்த நாளங்கள் பல்லுக்கு ஊட்டமளிப்பவை, நரம்புகள் வலி உணர்வுகளை மூளைக்கு அனுப்புபவை.
பற்காழ் என்பது பற்கூழைச் சுற்றி இருக்கும் கடினமான மஞ்சள் நிறப் பொருளாகும். பல்லின் பெரும் பகுதியில் இது அமைந்துள்ளது. பற்காழ் என்பது எலும்பை விடக் கடினமானதாகும். இதில் முக்கியமாகக் கனிம உப்புக்களும் நீரும் அடங்கியுள்ளன; இதில் சில உயிரணுக்களும் கூட இருக்கின்றன.
பற்சிப்பி என்பது பற்காழைச் சுற்றி பல்லின் மகுடத்தில் (crown) அமைந்துள்ள பகுதியாகும். இது மகுடத்தின் வெளிப்புறத்தில் மூடியுள்ளது. பற்சிப்பியே உடலின் மிகக் கடினமான திசுவாக உள்ள பகுதி. மெல்லும் போது ஏற்படும் அழுத்தத்தை தாங்கும் வலிமையை பல்லுக்கு அளிப்பது இப்பற்சிப்பியே ஆகும்.
பற்காரை என்பது, பல்லின் வேர்ப் பகுதியில் பற்காழின் மேல் கவிந்துள்ள பகுதியாகும். பல் வேர் முடிவுற்று மகுடம் துவங்கும் பகுதியில் பற்காரையும் பற்சிப்பியும் சந்திக்கின்றன. பல்லின் புறப் பகுதி தேய்வுறும் போது, வேர்ப் பகுதியை வெளிக் காட்டும் வகையில் பல் அதன் உறைக்கு வெளியே வந்துவிடும்.
சிலருக்கு வாயில் பற்கள் தாறுமாறாக அல்லது ஒழுங்கற்று காட்சியளிக்கும். இதனைச் சரிப்படுத்த பல் இணைப்பிகரைப் (teeth braces) பயன்படுத்துவர். இவ்விணைப்பிகளில் உலோகம் அல்லது சிராமிக் பிராக்கட்கள் இருக்கும். ஒவ்வொரு பல்லின் முன் பகுதியிலும் இவை பொருத்தப்பட்டு அவை சம்பிகள் மூலம் இணைக்கப்பட்டிருக்கும்.