சாதாரணமாக நாம் நடந்து முடிந்த நிகழ்ச்சிகளை நினைவில் வைத்துக் கொள்ள முயற்சி எடுத்துக் கொள்வதில்லை. நடக்கப்போகும் அல்லது செய்ய வேண்டிய நிகழ்ச்சிகளை நினைவில் வைத்துக் கொள்ளவே முயற்சிக்கிறோம்
நம் எல்லாருக்கும் இது சாதாரணமாக நிகழ்வதுதான் - கார் சாவியை எங்கேயோ வைத்து விட்டுத் தேடுவோம்; நமக்குத் தெரிந்தவரைப் பார்க்கும்போது சமயங்களில் அவர் பெயர் தொண்டையிலிருக்கும், வாய்க்கு வராது; கண்ணாடியை எங்கே வைத்தோம் என்பது மறந்துவிடும். ஏன் இந்த ஞாபக மறதி?
ஞாபக மறதிக்கு முக்கியமான ஒரு காரணம் நாம் அந்தக் குறிப்பிட்ட தருணத்தில் எவ்வளவு கவனம் செலுத்துகிறோம் என்பது. சரியான கவனம் செலுத்தாமல் இருப்பது எவ்வளவு தூரம் நம் நினைவுகளை பாதிக்கிறது என்பதை மனவியல் நிபுணர்கள் தங்கள் சோதனைகள் மூலம் காட்டியிருக்கிறார்கள். அதில் ஒன்றுதான் கொரில்லா சோதனை!
இந்த சோதனையில் கலந்து கொண்டவர்களுக்கு ஒரு படம் காண்பிக்கப்பட்டது. அந்தப் படத்தில் கூடைப்பந்து வீரர்கள் பந்தை ஒருவருக்கொருவர் 'பாஸ்' செய்வார்கள். பார்வையாளர்கள் அவர்கள் ஒவ்வொருவரும் எத்தனை முறை பந்தை பாஸ் செய்தார்கள் என்று சொல்லவேண்டும். பார்வையாளர்கள் மிக கவனமாகப் பார்த்துக் கொண்டிருந்தார்கள்.
காட்சி முடிந்தது. சோதனையாளர் கலந்து கொண்டவர்களிடம் அந்தக் காட்சியில் ஏதாவது வித்தியாசமாகப் பார்த்தார்களா என்று கேட்டார்.
"வித்தியாசமாகவா? அப்படி ஒன்றுமில்லையே" என்று பார்த்தவர்களில் பாதிப் பேருக்கு மேல் வியப்புடன் சோதனையாளரை நோக்கினார்கள். 'பந்தை ஒருவருக்கொருவர் பாஸ் செய்து கொண்டார்கள்.. அவ்வளவுதானே!' என்பது போலப் பார்த்தார்கள்.
சோதனை செய்தவர் சிரித்தவாறே மறுபடியும் அந்தப் படத்தை ஓடவிட்டார். படம் ஓட ஆரம்பித்து முப்பது விநாடிகளில் யாரோ ஒருவர் கொரில்லாவைப் போல உடை அணிந்து மைதானதிற்குள் நுழைவதுபோல காட்சி. அவர் நின்று காமிராவை நோக்கிப் பார்க்கிறார். பிறகு அவர் இருக்கைக்குத் திரும்புகிறார். இந்தக் காட்சி ஐந்து விநாடிகளுக்கு நீடிக்கிறது. பார்வையாளர்களில் பெரும்பான்மையானோர் இதைக் கவனிக்கவில்லை.
இதற்குக் காரணம் நினைவுச் சிதறலே. கவனம் முழுவதும் பந்தை எத்தனை முறை மாற்றிக் கொள்கிறார்கள் என்பதில் இருந்தபோது இயல்புக்கு மாறான இந்தக் காட்சி ஏனோ மனதில் பதியவில்லை. 1999ல் இந்த வீடியோ காட்டப்பட்டபோதும் பார்வையாளர்களில் பாதிப்பேருக்கு மேல் கொரில்லா ஆளை அடையாளம் காணவில்லை. 30 ஆண்டுகளுக்கு முன் இந்த சோதனை முதன்முதலாக நடத்தப்பட்டபோதும் இதே நிலைதான்!
இன்னொரு நினைவுச் சிதறல் சோதனை. இதில் சோதனையாளர் பார்வையாளர்களிடம் மும்முரமாக உரையாடுகிறார். கவனம் முழுவதும் உரையாடலில் இருக்கிறது. அப்போது இருவர் ஒரு கதவை தூக்கிக்கொண்டு அவர்களிடையே நடந்து செல்கிறார்கள். செல்லும்போதே சோதனை செய்பவர் இடத்தில் வேறு ஒருவர் மாறி அவர் பார்வையாளர்களிடம் தொடர்ந்து உரையாடுகிறார். பார்வையாளர்கள் கவனத்தில் கதவை இருவர் எடுத்துக் கொண்டு சென்றதும் பதியவில்லை; முற்றிலும் புதிய ஒருவருடன் உரையாடிக் கொண்டிருக்கிறோம் என்பதையும் அவர்கள் உணரவில்லை.
இந்த கவனச் சிதறலுக்கு இன்னொரு காரணம் நாம் எவ்வளவு தூரம் ஆழமாக ஒரு செய்தியை மனதில் பதிய வைக்கிறோம் என்பது. இதனை Memory encoding: depth of processing என்று கூறலாம்.
இதனை அறிய மூன்று விதமாக சோதனை செய்து பார்க்கப்பட்டது.
1. மேலோட்டமாகப் பார்ப்பது : இதில் கலந்து கொண்டவர்களிடம் ஒரு வார்த்தையைக் காட்டி அது எந்த எழுத்துருவில் (font)ல் எழுதப்பட்டிருக்கிறது எனக் கேட்கப்பட்டது.
2. நடுத்தரமாக சிந்திப்பது : இதில் கலந்து கொண்டவர்களிடம் ஒரு வார்த்தையைச் சொல்லி அதற்கு எதுகையான வார்த்தைகளை சொல்லச் சொன்னார்கள்.
3. ஆழமாகச் சிந்திப்பது : பங்கு கொண்டவர்களிடம் ஒரு வார்த்தையைச் சொல்லி அதனை ஒரு வாக்கியத்தில் எப்படி பொருத்தலாம் என்று கேட்டார்கள்.
ஆழமாக சிந்திக்கச் சொன்னவர்கள் கொடுக்கப்பட்ட வார்த்தைகளை அனேகமாக மனதில் நினைவு வைத்திருந்தார்கள். ஆனால் அவர்களுக்கு சிந்தித்து வாக்கியத்தில் அமைப்பதற்கும் அதிக நேரம் தேவைப்பட்டது.
சாதாரணமாக நாம் நடந்து முடிந்த நிகழ்ச்சிகளை நினைவில் வைத்துக் கொள்ள முயற்சி எடுத்துக் கொள்வதில்லை. நடக்கப்போகும் அல்லது செய்ய வேண்டிய நிகழ்ச்சிகளை நினைவில் வைத்துக் கொள்ளவே முயற்சிக்கிறோம். உதாரணமாக, இன்று 12 மணிக்கு மருந்து சாப்பிட வேண்டும்; இந்த வாரம் ஞாயிற்றுக் கிழமை சினிமா போக டிக்கெட் ரிசர்வ் செய்ய வேண்டும்; 26ம் தேதி நண்பனின் திருமணம் - கண்டிப்பாகச் செல்லவேண்டும்; போகும் வழியில் காருக்குப் பெட்ரோல் போட்டுக் கொள்ள வேண்டும் என செய்ய வேண்டிய விஷயங்களையெல்லாம் இந்த நேரத்தில் அல்லது இந்த நிகழ்ச்சிக்குப் பிறகு செய்ய வேண்டும் என்று மனதிற்குள் ஒரு அலாரம் வைத்துக் கொள்கிறோம்.
ஞாபக மறதி என்பது செய்ய வேண்டிய நிகழ்ச்சிகளை நினைவில் வைத்திருக்கிறோமா அல்லது செய்ய வேண்டிய காலத்தை நினைவு கொள்கிறோமா என்பதைப் பொறுத்தது என்று மனவியல் நிபுணர்கள் சொல்கிறார்கள்.
பொதுவாக நாம் நினைவில் வைத்துக் கொள்ள ஒரு வெளித் தூண்டுதலைப் பயன்படுத்துகிறோம். உதாரணமாக, ஒரு நிகழ்ச்சிக்குப் போக வேண்டுமென்றால் அதனை நாளேட்டில் குறித்துக் கொள்கிறோம். பெட்ரோல் நிலையத்தைக் கடந்து செல்லும் போதுதான் பெட்ரோல் போடவேண்டும் என்று நினைவு வருகிறது. ஆனால் அந்த வழியாகச் செல்லும்போது வழியில் ஒரு விபத்து நேர்ந்திருந்தால் நம் கவனம் சிதறிப்போய் பெட்ரோல் போட வேண்டும் என்பதை மறந்து விடுகிறோம்.
இந்த நினைவுச் சிதறல் ஒரு சாபமல்ல - வரமாகக் கூட இருக்கக் கூடும் சிலநேரங்களில் என்பதை ரஷ்யாவைச் சேர்ந்த ஒரு பத்திரிகையாளரின் வாழ்க்கைக் குறிப்பு காட்டுகிறது. அவரது ஞாபக சக்தி மிகவும் அபாரமானது. அவரால் சின்னச் சின்ன விஷயங்களைக்கூட நினைவில் வைத்துக் கொள்ள முடியும். பிறருடன் பேசியவை, அவரது வாழ்க்கையில் நடந்த சின்ன சின்ன சம்பவங்கள் என்று எல்லாவற்றையும் அணு அணுவாக நினைவிலிருந்து சொல்ல முடியும். ஆனால் அதுவே அவரது பலவீனமாகவும் இருந்தது.
உதாரணமாக, ஒரு குறிப்பிட்ட சம்பவத்தை நினைவில் கொண்டு வர வேண்டுமென்றால் அது போன்ற எல்லா சம்பவங்களும் நினைவுக்கு வரும். அவரால் எதையுமே குறிப்பாக நினைவுக்குக் கொண்டு வர முடியாது. ஒரு நண்பர் கூறிய குறிப்பிட்ட விஷயத்தை நினைவுக்குக் கொண்டு வர வேண்டுமென்றால் அவர் பேசிய அத்தனை செய்திகளும் ஒன்றாக நினைவில் வரும். அதிலிருந்து அவருக்கு வேண்டிய செய்தியை மட்டும் பிரித்தெடுக்கும் ஒரு சூழ்நிலை - அவரைப் பொறுத்தவரை அவரது நினைவாற்றலே அவருக்கு ஒரு சாபமாகவும் அமைந்தது.
இதை சரி செய்வதற்கு அவரே ஒரு வழியைக் கண்டுபிடித்தார். அவர் மறக்கவேண்டும் என்று கருதிய விஷயங்களை ஒரு கரும்பலகையில் எழுதியதைப் போல் கற்பனை செய்து அதனை மனதிற்குள் அழித்து விடுவாரம். இந்த வழி அவருக்கு மிகவும் உதவியாகவே இருந்தது எனச் சொல்கிறார்.
இந்த நினைவுக் குறைவும் இறைவன் நமக்குக் கொடுத்த ஒரு வரம்தான் எனக் கருத வேண்டும். இல்லையென்றால் நம் வாழ்வில் நடந்த துயரமான நிகழ்ச்சிகள் நம்மைத் தொடர்ந்து வந்து நம் எதிர்காலத்தையே பாதிக்கக் கூடும்.
We use cookies on this website. By using this site, you agree that we may store and access cookies on your device. Find out more and set your preferences here . X