 |
இதழ் 481 |
 |
ஆகஸ்ட் 16 2010
|

|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
Your Advertisement Here
|
| |
|
| |
 |
add nilacharal to your favourites |
 |
nilacharal as your homepage |
|
|
|
|
| | | "இங்கு அறிவுப் பஞ்சம் இருப்பதாகக் கேள்வியுற்றேன். அதனால் உதவிவிட்டுப் போகலாமென வந்தேன்" என்று கூறிவிட்டு தலைவரருகில் பந்தியில் அமர்ந்தார்.
 (மூலம்: கம்போடியா)
ஒரு ஊரில் ஒரு இளைஞன் இருந்தான் அவன் ஒரு இளம் பெண்மேல் அன்பு கொண்டு அவளை மணம் செய்ய விரும்பினான். அவளது பெற்றோரிடம் சென்று அவளைப் பெண் கேட்டான்.
தமது பெண்ணைத் திருமணம் செய்து கொள்ள வேண்டுமெனில் அவன் மூன்று இரவுகள், மூன்று பகல்கள் கால்களைக் கட்டிக் கொண்டு கழுத்துவரை நீரில் நிற்க வேண்டும். அவ்வாறு அவன் வீரத்தை நிரூபித்த பின்னரே திருமணம் என்று திட்டவட்டமாகத் தெரிவித்தனர்.
அந்த இளைஞனும் அதற்கு ஒப்புக் கொண்டு, கால்களைக் கயிற்றால் கட்டி கழுத்துவரை நீர் இருந்த ஏரியில் இறங்கினான். இரண்டு பகல்கள் ஒரு இரவு கடந்துவிட்டது. இரண்டாம் நாளிரவு அவன் மிகவும் களைப்பாக இருந்தான். தொலைவில் மலை உச்சியில் ஒரு ஜோதி தெரிந்தது. அலுப்பிலும் சலிப்பிலும் அந்த ஜோதியை நோக்கிக் கைகளை உயர்த்தினான்.
அதனைப் பார்த்த அந்தப் பெண்ணின் பெற்றோர், அவன் மலைமேலிருந்த ஜோதியிலிருந்து தன்னை உஷ்ணப் படுத்திக் கொள்ள முயல்வதாகவும், ஒரு ஏமாற்றுக்காரனுக்குத் தமது பெண்ணைத் திருமணம் செய்து தர முடியாதெனவும் மறுத்துவிட்டனர்.
வெறுத்துப் போன அந்த இளைஞன் அவ்வூர்த் தலைவரிடம் முறையிட்டான். பெரும் செல்வந்தர்களான பெண்ணின் பெற்றோர் ஊர்த்தலைவருக்கு பல பரிசுகளை வழங்கி தீர்ப்பைத் தமது பக்கம் சொல்லுமாறு தூண்டினர். வழக்கை மேலெழுந்தவாரியாய் விசாரித்த தலைவரும், "மலைமேலிருந்த ஜோதியில் தன்னை உஷ்ணப்படுத்திக் கொள்ள இளைஞன் முயன்றதைக் கண்ணால் கண்ட பெற்றோர் எடுத்த முடிவு சரியே. இந்த வழக்கைத் தள்ளுபடி செய்வதோடு, பெண்ணின் பெற்றோருக்கு நஷ்ட ஈடாக இளைஞன் ஊருக்கே விருந்தொன்று ஏற்பாடு செய்ய வேண்டும்" என்று தீர்ப்பளித்தார்.
அநியாயமான இந்தத் தீர்ப்பை எதிர்த்து இளைஞன் ஆர்பாட்டம் செய்தான். ஆனால் ஏழையான அவனது குரல் எடுபடவில்லை. மிகவும் மனம் சோர்ந்த நிலையில் வீட்டுக்குத் திரும்பிக் கொண்டிருந்த அவனை வழியில் கண்ட துறவி ஒருவர், "மகனே, உன் சோகத்துக்குக் காரணம் என்னவோ?" என்று பரிவுடன் வினவினார்.
இளைஞன் தன் கதை முழுவதையும் விரிவாகக் கூறினான். சற்று நேரம் சிந்தித்த துறவி, "நீ போய் விருந்துக்கான எல்லா ஏற்பாடுகளையும் செய். ஆனால் பதார்த்தம் எதிலும் உப்பு சேர்க்காதே. பரிமாறும் போது உப்பைத் தனியாக ஒரு பதார்த்தமாகப் பரிமாறு" என்று கூறினார். அவர் கூறியதன் காரணம் புரியாவிட்டாலும் அவர் கூறியபடியே செய்வதாக ஒப்புக் கொண்டான்.
அன்று இரவு ஊரே அவனது விருந்துக்காகக் கூடி இருந்தது. அனைவரையும் போல துறவியும் அங்கே வந்திருந்தார். ஊர்த் தலைவர் துறவிக்கு மரியாதை செலுத்தி, "தாங்கள் இந்த ஊருக்கு வந்ததன் காரணம் என்னவோ?" என்று வினவினார்.
"இங்கு அறிவுப் பஞ்சம் இருப்பதாகக் கேள்வியுற்றேன். அதனால் உதவிவிட்டுப் போகலாமென வந்தேன்" என்று கூறிவிட்டு தலைவரருகில் பந்தியில் அமர்ந்தார்.
தலைவருக்கு ஒரு பெரிய இலையில் உணவு பரிமாறினான் இளைஞன். துறவி கூறியபடியே, உப்பில்லா அனைத்துப் பண்டங்களையும் பரிமாறிவிட்டு உப்பையும் தனியே இலையில் வைத்தான். ஊர் வழக்கப்படி, தலைவர் முதலில் உணவருந்த ஆரம்பித்தார். இரு கவளங்கள் கூட அவரால் உண்ணமுடியவில்லை. இளைஞனை அழைத்து, "என்ன இது, உப்பில்லாத உணவைப் பரிமாறி இருக்கிறாய்?" என்று கோபமாகக் கேட்டார்.
அதற்கு அருகிலிருந்த துறவி, "அவ்வளவு தொலைவிலுள்ள மலையிலிருக்கும் ஜோதியிலிருந்து ஏரியிலிருந்த இந்த இளைஞனுக்கு உஷ்ணம் வருமானால், இலையின் ஒரு மூலையிலிருக்கும் உப்பின் சாரம் இலையின் நடுவிலிருக்கும் உணவுக்கு வராதா?" என்று தலைவரிடம் கேட்டார்.
தன் செயலுக்கு வெட்கித் தலை குனிந்த தலைவர் தானே முன்னின்று அந்த இளைஞன் விரும்பிய பெண்ணை மணம் முடித்து வைத்தார்.
(முற்றும்)
|
| | நிலா அவர்களின் இதர படைப்புகள்.
| பூஞ்சிட்டு பகுதியில் வந்த இதர படைப்புகள்.
|
|
|
|
|
|