 |
இதழ் 481 |
 |
ஆகஸ்ட் 16 2010
|

|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
Your Advertisement Here
|
| |
|
| |
 |
add nilacharal to your favourites |
 |
nilacharal as your homepage |
|
|
|
|
| உறுதுணை தேடுமின்- 35
- அமர்நாத் |
| | காலையில் குட்லிங்கிடமிருந்து அவளுக்கு வந்த ஈ-தபால் சந்திப்பு உயிரியல் கட்டடத்தில் நடக்குமென்று அறிவித்தது. பள்ளியின் எதிரில் சர்ச்சின் நிழல் பரவுமிடத்தில் காரை நிறுத்திவிட்டு கைப்பையை எடுத்துக்கொண்டாள் சாப்பாட்டில் சாதத்தையும், அத்துடன் வேகவைத்துத் தயாரித்த உருளைக்கிழங்கு கறியையும் தவிர புதிதாக எதுவுமில்லை. குமாரிக்குக் குற்றஉணர்வு.
'இன்னைக்கி மிஞ்சியதையெல்லாம் தீத்துடலாம். நாளைக்கு நல்லா சமைக்கலாம். இல்லாட்டி வெளியிலே சாப்பிடலாம்' என்றாள் ஆறுதலாக.
'பீட்ஸா-கிங்லே ஒருபெரிய பீட்ஸாவை வீட்டுக்கு வாங்கிவந்து சாப்பிடுவோம். கூபான் கொடுத்தால் பன்னிரண்டு டாலர்தான் ஆகும்' என்றாள் பணக்கணக்குப் பார்க்கும் சவிதா. 'ரெஸ்டாரன்ட் போனால் மூன்றுபேருக்கு நாற்பதுடாலருக்குமேல் செலவாகும்.'
'மோகன்! நீ என்ன சொல்றே?' அவனுக்குத்தான் வெளியேசென்று சாப்பிடப்பிடிக்கும். அப்போதுமட்டும் உணவின் கட்டுப்பாடு சற்று தளர்த்தப்படும்.
'நாளை நான் டென்னிஸூக்குப் போகணும். அப்புறம் நீங்கள் சொல்கிறபடி செய்யலாம்.'
சாப்பாடு முடிந்தவுடன், 'நாளைத்தேர்வுக்குப் படிக்கணுமே' என்றான் மோகன் தயக்கத்துடன்.
'நான் பாத்துக்கறேன். இன்னைக்கு நீ வேலைசெய்ய வேண்டாம். மாடிக்குப் போ!' என்று அனுமதி கொடுத்தாள்.
இருவரையும் மாடிக்கு அனுப்பிவிட்டுத் தானே எல்லா தட்டு பாத்திரங்களையும் டிஷ்வாஷரில் அடுக்கி அதை இயக்கினாள். மணி எட்டரைதான், இருந்தாலும் முந்தைய தினம் தவறவிட்டதற்கும் சேர்த்து சீக்கிரமாகவே தூங்கலாமென்று குமாரி நினைத்தபோது, சுவரில் மாட்டிய தொலைபேசியின் மணி அடித்தது. 'நான் எடுக்கறேன்' என்று மாடியைப் பார்த்து கத்தினாள். மோகனைக்கூப்பிட்டு அச்சுறுத்தும் பெண்ணாக இருந்தால் அவளிடமே என்ன விவகாரமென்று கேட்டுத் தெரிந்துகொள்ளலாம். அதனால் ஒலிவாங்கியை எடுத்தவுடன் மௌனமாக இருந்தாள். அழைத்தது ஒரு ஆண்.
'ஹலோ! எஸ். சிவம்?'
'அது நான்தான்.'
'மோகனின் அம்மா?'
'யெஸ்.'
'நான் ஜான் குட்லிங். ஹெள ஆர் யூ?'
'குறைசொல்ல ஒன்றுமில்லை. நீங்கள்?'
'ஓகே. கேட்டதற்கு மிகவும் நன்றி.' உரையாடலின் மிகையான சம்பிரதாயம் நின்றுகொண்டிருந்த குமாரியை நாற்காலியில் உட்காரவைத்தது. 'என் மகள் லின்டாவும் ஏபெக்ஸ் அகடெமியில் ஜூனியர்.'
'அப்படியா?'
'முன்னறிவிப்பில்லாமல் உங்களை அழைத்து இதைச்சொல்ல வருந்துகிறேன். சென்ற செவ்வாய் ஒருகுற்றம் நடந்திருக்கிறது. ஆழ்ந்த மதஅடிப்படையில் நடக்கும் நம்பள்ளிக்கு அது பெரியஇழுக்கு. என் குடும்பத்திற்குப் பரிகாரம் செய்யமுடியாத அவமானம்.' அவர் குரலில் செயற்கையான பணிவு மறைந்து ஒருகடுமை ஆட்கொண்டது. 'உங்கள் மகன் மோகன் என்மகளுக்குச் சொல்லமுடியாத தீங்கை இழைத்திருக்கிறான். அதுபற்றி உங்களைச் சந்தித்து விவாதிக்க விரும்புகிறேன்.' எதிர்பாராத செய்தி குமாரியின் வாயை அடைத்துவிட்டது. அதுதான் இரண்டுநாளாக மோகன் ஒருமாதிரி இருக்கிறானா?
'மிஸ் சிவம்! நீங்கள் இன்னும் அங்கேதான் இருக்கிறீர்களா?'
'என்ன சொல்வதென்று தெரியவில்லை. சந்திக்க வருகிறேன். பேசி நிவர்த்திக்க முடிந்தால் நல்லது.'
அவர்குரல் நம்பிக்கை தரவில்லை. 'பேசித்தீர்க்கும் விவகாரமில்லை. இருந்தாலும் நான் தக்க நடவடிக்கை எடுக்குமுன் உங்களுக்கு விவரங்கள் தெரிவது நல்லதென்று நினைக்கிறேன். நாளை பிற்பகல் இரண்டுமணிக்கு பள்ளியில் சந்திக்கலாமா?'
அந்தக்குரல் மறுப்பதற்கு இடமளிக்கவில்லை. 'கட்டாயம் வருகிறேன்.'
'ஹாவ் அ குட் ஈவினிங்!'
குமாரி பதில்சொல்ல யோசிக்குமுன் தொடர்பு அறுந்தது. காலையில் தொலைபேசியில் கேட்ட செய்திகளின் அர்த்தம் புரிகிறமாதிரி இருந்தது. மோகன் என்னிடம் ஏன் சொல்லவில்லை, பயமா, இல்லை குற்றஉணர்வா? சவிதா காதுகேட்கும் தூரத்தில் இருக்கும்போது அவனை என்ன நடந்ததென்று விசாரிக்க மனம்வரவில்லை.
முதலில் சரவணப்ரியாவிடம் அறிவுரை கேட்கலாம்.
'அக்கா! அவர் பேசறதைப்பாத்தா விஷயம் சீரியஸ் போல இருக்கு. அப்படி என்ன நடந்திருக்கும்?'
'ஒரு வயசுப்பையனும், ஒரு வயசுப்பெண்ணும் தனியா இருந்தா என்ன செய்வாங்க?'
'பள்ளிக்கூடத்திலேயா?'
'நீ பயாலஜி கட்டடம் ஒதுங்கியிருக்குன்னு சொன்னதாக ஞாபகம்.'
'அதுக்காக... அப்பனாட்டம்தான் இருக்கான் போல. அப்படியே நடந்திருந்தாலும் அவ மனமொப்பித்தான் அவன் செஞ்சிருப்பான். மத்தவங்க அடிச்சாகூட திருப்பிஅடிக்கத் தெரியாது. ஆனா, அவனை எப்படி கேக்கறதுன்னு தெரியலை. இப்பத்தான் அப்பா இருந்தா நல்லாயிருக்குமேன்னு தோணுது.'
'இப்ப எதுவும் கேக்கவேண்டாம். அவரோட பேசினபிறகு பாத்துக்கலாம்.'
'மோகன் கதையைக் கேட்டாக்க அவர் சொல்றதை நான் மறுக்கலாமில்லையா?'
'அவர் உன் ரகசியத்தைத் தெரிஞ்சுக்கத்தான் கூப்பிடறார்னு நினைக்கிறேன். நடவடிக்கை எடுக்கறதுக்கு முன்னாடி உன்னோட எதுக்கு பேசணும்? நீ ஒண்ணும் தெரியாம போறதே நல்லது. நாளைக்கு விவரமா என்னைக் கூப்பிட்டுச் சொல்லு! அதுவரைக்கும் கவலைப்படாதே!'
'எப்படிக்கா கவலைப்படாம இருக்கமுடியும்? இந்தக் கவலையிலே ஒரு சந்தோஷமான சேதியை மறந்திட்டேன்' என்று உயிரியல் ஆசிரியரிடமிருந்து வந்த கடிதத்தைச் சொன்னாள்.
'இதொரு நல்ல வாய்ப்பு. சவிதாகிட்ட என் கன்கிராஜூலேஷனைச் சொல்!'
தூங்கி மறுநாள் விழித்தால் மிஸ்டர் குட்லிங்கைச் சந்திக்க வேண்டுமே என்ற அச்சத்தில் குமாரிக்கு அன்றிரவும் தூக்கம் வரவில்லை. பேச்சில் அவர் காட்டிய கடுமையைத் தவிர மனம் வேறெதையும் நினைக்க மறுத்தது. சவிதாவின் படுக்கைக்குச் சென்று அவளை ஆதரவாகக் கட்டிக்கொள்ளலாமா என்றுகூட நினைத்தாள். காரணம் சொல்ல வேண்டுமே என்று நள்ளிரவையும் தாண்டி உறக்கத்திற்குக் காத்திருந்தாள்.
வெள்ளி பிற்பகல் வங்கியிலிருந்து இரண்டுமணி அவகாசம்கேட்டு கிளம்பினாள் குமாரி. காலையில் அலாரம் அடித்து அரைமணி கழித்துத்தான் எழுந்தாள். வெள்ளிக்கிழமைகளில் தலைக்குக் குளித்து, கூந்தலை உலர்த்தி, பின்னலிட்டு வேலைக்குச் செல்வாள். அன்று அதற்கெல்லாம் நேரமில்லை. அரக்கப்பரக்க குளித்து, பரந்த தலைமயிரை ஒரு க்ளிப்பிற்குள் அடக்கி, வாசனையை அள்ளித்தெளித்து கீழே வந்தபோது இரண்டு வாய் சீரியல் சாப்பிடத்தான் நேரம். மதிய உணவைத் தயாரிப்பதிலிருந்து குப்பைப்பையை தெருவின் ஓரத்தில் வைப்பதுவரை எல்லா காரியங்களும் முடிந்திருந்தன. வேலையின் கெடுபிடியில் குட்லிங்கின் சந்திப்பை யோசிக்கக்கூட குமாரிக்கு நேரமில்லை. காரில் ஏறியதும் கிலி பிடித்துக்கொண்டது. ஏபெக்ஸ் அகடெமி நோக்கிச் செல்லும் சாலையில் திரும்பியபோது கார் மக்கர்செய்தது. அதற்குக்கூட அங்கே போகப் பிடிக்கவில்லை போலிருக்கிறது. ஒவ்வொரு ஆண்டிலும் இரண்டுமுறை மோகன் அல்லது சவிதாவின் ஆசிரியரைச் சந்திப்பதற்காக வேலைநடுவில் பள்ளிக்கு வந்திருக்கிறாள். 'உங்கள் குழந்தை என் வகுப்பில் இருப்பது எனக்கு மிக்க மகிழ்ச்சி. படிப்பிலோ நடத்தையிலோ குறைசொல்ல ஒன்றுமே இல்லை. நீங்கள் அதற்காகப் பெருமைப்படலாம்' என்கிற சம்பிரதாய வார்த்தைகளைக் கேட்க இவ்வளவு தூரம் வரவேண்டுமா என்று அலுத்ததுண்டு. இப்போது அப்படிப்பட்ட ஒரு சந்திப்பு நிகழக்கூடாதா என்று ஏங்கினாள். வேண்டுமானால், உயிரியல் ஆசிரியரை நேரில் பார்த்து சவிதாவின் கட்டுரையைத் தேர்ந்தெடுத்ததற்கு நன்றி சொல்லாம்.
காலையில் குட்லிங்கிடமிருந்து அவளுக்கு வந்த ஈ-தபால் சந்திப்பு உயிரியல் கட்டடத்தில் நடக்குமென்று அறிவித்தது. பள்ளியின் எதிரில் சர்ச்சின் நிழல் பரவுமிடத்தில் காரை நிறுத்திவிட்டு கைப்பையை எடுத்துக்கொண்டாள். டென்னிஸ் கோர்ட்டுகளுக்கருகில் தனியாக நிற்கும் கட்டடத்திற்குள் நுழைந்தாள். அங்கே ஏற்கனவே இருவர் அறையின் கோடியில் அமர்ந்திருந்தனர். மிஸ்டர் குட்லிங் மட்டும் வருவாரென்று நினைத்திருந்த அவளுக்கு அவர் மனைவியும் இருந்தது மனவலிமையைக் குறைத்தது. மேஜை-நாற்காலிகளின் வரிசையைத் தாண்டி அவர்களின் அருகில் சென்றாள். அவள் ஒருத்தி அந்த இருவரையும் சமாளிக்க வேண்டும்.
'ஐ'ம் சாரி. நேரமாகிவிட்டது.'
'பரவாயில்லை. நீங்கள்தான் மிஸ் சிவமாக இருக்கவேண்டும்' என்று அவள் பக்கம் கைநீட்டினார், எழுந்திருக்கவில்லை.
'ஆமாம்.' இருவர் கைகளையும் குலுக்கினாள். ஒரு மேஜை-நாற்காலியை அவர்கள் பக்கமாகத்திருப்பி உட்கார்ந்தாள்.
'நான் ஜான் குட்லிங். இது என்மனைவி ஜேன் குட்லிங்.' ஐந்தரை அடிதான் இருப்பாரென்று தோன்றியது. குண்டு உடம்பு. பின்புறம் மட்டும் கொஞ்சம் தலைமயிர், அதுவும் வெள்ளை. முகத்தில் மற்றவரை மடக்கும் பார்வை. ஜேன் அவரைவிட உயரம். அவருக்கும் சேர்த்துவைத்து நீண்ட பழுப்புநிறக்கூந்தல். சமீபத்தில் அழுததால் நீண்ட சோகமுகம். இருவரும் அப்பழுக்கற்ற வணிகஉடையில். சூடான அந்த அறையில் அவர்களால் எப்படி மேல்கோட்டை எடுக்காமல் இருக்க முடிகிறது என்று குமாரி வியந்தாள். வெள்ளிக்கிழமை என்பதால் அவள் மெல்லிய சல்வார் கமீஸ் அணிந்திருந்தாள்.
'நான் அழைத்தவுடனே சந்திக்க வந்ததற்கு நன்றி, மிஸ் சிவம். இந்த கட்டடம் ஒதுங்கியிருப்பதால் நாம் தைரியமாகப் பேசலாம்.
'மனம்விட்டுப் பேசத்தான் விருப்பம்.'
'சட்ட நடவடிக்கை எடுப்பதற்குமுன் உங்களுக்கு விவரங்கள் தெரியட்டுமென்று நினைத்தேன்.'
'தாங்க்ஸ்.' சட்டம் என்கிற வார்த்தை குமாரிக்குச் சிறிது அச்சத்தைத் தந்தது.
'இங்கே வைத்துக்கொண்டதற்கு இன்னொரு காரணமும் இருக்கிறது. இதே இடத்தில்தான் செவ்வாய் பிற்பகலில் என்னுடைய மகளின் விருப்பத்திற்கு எதிராக ஓரநீதி நடந்திருக்கிறது' என்று நிறுத்திவிட்டு அவளைப் பார்த்தார்.
குமாரி புரியாமல் அவர் மேலே சொல்லப்போவதற்குக் காத்திருந்தாள்.
'உங்கள் பையன் என்ன சொன்னான்?'
'அவனாக எதாவது சொன்னாலொழிய நான் அவன் விஷயத்தில் தலையிடுவதில்லை.'
'விட்டேற்றியாக எப்படி இருக்க முடிகிறது? எனக்கு என் பெண் எல்லா நேரத்திலும் என்னசெய்கிறாள், என்ன பேசுகிறாள் என்று தெரிந்தாகவேண்டும்.' என்று கேட்காமலேயே குழந்தை வளர்ப்புக்கு அறிவுரை வழங்கினாள் ஜேன்.
'எனக்கு அன்றே என்ன நடந்ததென்று ஓரளவிற்குத் தெரிந்தாலும் நேற்றுதான் எப்படிப்பட்ட வழக்குத்தொடுக்க வேண்டுமென்று முடிவுசெய்தேன்' என்று ஜான் மனைவியைப் பார்த்தார்.
சட்டத்திலிருந்து வழக்குவரை வந்துவிட்ட பேச்சு குமாரியைக் கலவரத்துக்குள்ளாக்கியது.
(தொடரும்)
|
| | அமர்நாத் அவர்களின் இதர படைப்புகள்.
| தொடர் பகுதியில் வந்த இதர படைப்புகள்.
|
|
|
|
|
|