 |
இதழ் 378 |
 |
ஆகஸ்ட் 18 2008
|

|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
Your Advertisement Here
|
| |
|
| |
 |
add nilacharal to your favourites |
 |
nilacharal as your homepage |
|
|
|
|
| அம்புப் படுக்கை (1)
- விமலா ரமணி |
| | அம்மாவிற்காக அப்பா அழுது இவள் பார்த்ததில்லை. வருடத்தில் அம்மாவின் இறந்த நாளன்று ஏதாவது அனாதை ஆஸ்ரமத்திற்குப் போய் உணவுப் பொட்டலம் வழங்குவார். (நன்றி : ஓம் சக்தி)
பாரதி பத்திரிக்கை படித்துக் கொண்டிருந்தாள். அதில் ஒரு படம். அம்புப் படுக்கையில் சயனித்திருக்கும் பிதாமகன் பீஷ்மரின் படம். உறவுகளே விரோதிகளாக, கடைசியில் மரணத்தை வேண்டி அம்புப் படுக்கையில் தவமிருந்த பிதாமகர்! திருமணம் செய்து கொள்ளாத பிரம்மச்சாரி... உத்தமர்...
இப்போது பிதாமகர் என்ற வார்த்தைக்கே வெவ்வேறு அர்த்தங்கள் வந்துவிட்டன. உண்மையான அர்த்தத்தை அனைவருமே மறந்து போனார்கள்.
எப்போதுமே உண்மைகள் இப்படித்தான் மறைந்து போகும். மறந்து போகும். இந்தப் படத்தைப் பார்த்ததும் அப்பாவின் நினைவு வந்தது பாரதிக்கு.
எத்தனை பெரிய மாமேதை..! ஞானி... தாமரை இலைத் தண்ணீர் போல வாழ்ந்தவர். உறவுகளுடன் இருந்தாலும் அவர்களை விட்டு விலகி, எட்ட நின்று வேடிக்கை பார்த்த வானப்ரஸ்த ஸ்ரம நிலை.
அம்மா சிறு வயதிலேயே இறந்து போனாள். அம்மாவிற்காக அப்பா அழுது இவள் பார்த்ததில்லை. வருடத்தில் அம்மாவின் இறந்த நாளன்று ஏதாவது அனாதை ஆஸ்ரமத்திற்குப் போய் உணவுப் பொட்டலம் வழங்குவார். மாலை அனைவரையும் அழைத்துக் கொண்டு கோவில் போவார்.
அம்மாவின் படம் அன்று பரபரப்பாகத் துடைக்கப்பட்டு சந்தன குங்குமத்துடன், மாலையுடன், ஊதுபத்தி மணக்க கம்பீரமாக வீற்றிருக்கும் படத்தைப் பார்த்தால் அம்மாவே இறங்கி வந்து 'பாரதி' என்று கூப்பிடுவது போல் தோன்றும்.
இவளுக்கு மூத்த சகோதரிகள் இருவர், கமலா, சரோஜினி. அப்பாவிற்குக் கொஞ்சம் தேசபக்தி அதிகம். கமலா நேருவின் நினைவாகவும், கவிக்குயில் சரோஜினி நாயுடுவின் நினைவாகவும் தன் குழந்தைகளுக்குப் பெயர் வைத்தார். இவள் பெயர் பாரதி.
"உங்க அம்மா பேரை மாத்தலை. அது அவளோட பொறந்த வீட்டு சீதனம். ஏன் அதுகூட நல்லாத்தான் இருக்கு. பாக்கியம். எனக்குப் பாக்கியத்தைக் கொடுத்தவ. குழந்தைகளைப் பெற்றுத் தந்து என்னை அப்பனாக்கிய பாக்கியவாதி. கடைசியிலே பூவும் பொட்டுமா போய்ச் சேர்ந்த பாக்கியவதி... சுமங்கலி."
சில நாட்களில் அப்பாவுடன் கை பிடித்தபடி காலை நேர வாக்கிங் போயிருக்கிறாள் பாரதி. அப்போது கேட்பாள். "அப்பா.. அம்மா எப்படி செத்தாங்க?"
அப்பா சிரிப்பார்.
"சாவுக்கு காரணமா? எமன் எப்பவுமே பழி ஏத்துக்க மாட்டான். கால் தடுக்கிக் கீழே விழுந்து மரணம். மாடிப்படியில் இருந்து விழுந்து மரணம், விபத்தால் மரணம். நெஞ்சு வலியால் மரணம். எப்போதாவது எமன் பாசக்கயிற்றை வீசி மரணம்னு கேள்விப்பட்டிருக்கியா? நான் ஒரு பைத்தியம்... நீ குழந்தை, உங்கிட்ட போய் இதையெல்லாம் சொல்றேனே!"
அப்பாவின் பதிலில் இவளுக்குத் திருப்தி கிடைக்காது.
அம்மா எப்படி செத்தாள்?
கால் தடுக்கி விழுந்தா?
மாடிப் படியில் இருந்து விழுந்தா?
நெஞ்சு வலியா? ஊஹும்.. பதிலே இல்லை!
அக்காக்கள் இருவருக்கும் அப்பா திருமணம் செய்து கொடுத்துவிட்டார். இவள் கடைக்குட்டி.
"நீ நிறைய படி பாரதி. இப்போ கல்யாணத்துக்கு அவசரமில்லை" என்பார் அப்பா.
பெரியவர்கள் இருவருக்கும் இவளின் அதிகப் படிப்பு அத்தனை இஷ்டமில்லை. "இவ பெரிய படிப்பு படிச்சு என்ன கிழிக்கப் போறா? பேசாம கல்யாணம் பண்ணிக் கொடுத்தா ஒரு கடமை முடிஞ்சது"
அவர்களுக்கு பயம். அப்பா காலத்திற்குப் பிறகு எங்கே பாரதியின் திருமணச் செலவை தாங்கள் ஏற்க நேரிடுமோ என்ற அச்சம்!
ஒரு நாள் அப்பா இவர்களை அழைத்துச் சொன்னார். "அம்மாடி... நாம் மற்றவர்களை நேசிக்க முடியும். ஆனால் நமக்காகத்தான் சுவாசிக்க வேண்டும். வங்கியிலே என் பேர்ல இருக்கிற டிபாசிட்களை மூணு பாகமா பிரிச்சு உங்க மூணு பேருக்கும் கொடுத்துடலாம்னு இருக்கேன். அப்புறம் நான் உங்க கேர் ஆப்பிலே தான்... ஒவ்வொருத்தர் வீட்டிலேயும் ஒரு மாசம்னு எனக்குச் சோறு போடுங்க... என்ன? பட்டினி போடாதீங்க!"
பெரிய அக்கா மகிழ்ச்சியுடன் கூறினாள். "அப்பா நீங்க பணம் தரலேன்னாக்கூட நாங்க சோறு போட மாட்டோமா என்ன?"
"அதானே? பாரதி பேர்ல என்னத்துக்கு பணம்! அதையும் எங்ககிட்டே கொடுத்துடுங்கோ. பாரதிக்குக் கல்யாணம் கார்த்திகை எல்லாம் நாங்களே பண்ணி வைக்கிறோம். அப்புறம் பாக்கி பாத்துக்கலாம்."
அப்பா பேசவில்லை.
ஆனால், இவளிடம் மட்டும் அன்று இரவு ரொம்ப நேரம் பேசிக் கொண்டிருந்தார். "பீஷ்மருக்கு இச்சாமிருத்யு வரம் உண்டு. அதாவது அவராக சாக நினைத்தால்தான் சாக முடியும். யாராலும் அவரைக் கொல்ல முடியாது. அதனால்தான் உத்திராயணத்துக்காகக் காத்திருந்து பாண்டவர்கள் - குருஷேத்திர போர்க்களத்துலே ஜெயிச்ச செய்தியைக் கேட்டப்புறம், தானே விருப்பப்பட்டு மரணமடைந்தார். எனக்கு அப்படி 'இச்சாமிருத்யு' வரம் இருந்திருந்தா உங்க அம்மாவோடயே நான் செத்துருப்பேன்."
பாரதி அப்பாவின் கைகளைப் பிடித்துக் கொண்டாள்.
அதன் பின் சில வருடங்களில்...
என்ன என்னவோ நிகழ்வுகள்... இவளே எதிர்பாராத நிகழ்வுகள்...
இன்று...
'போன்' கூப்பிட்டது. பாரதி கனவு கலைந்து ரிசீவரை எடுத்தாள்.
ரவிக்குமார்தான் பேசினான்.
"பாரதி, உங்கப்பா ரொம்ப சீரியஸா படுத்த படுக்கையிலே இருக்காராம். ஆறு மாசமா இருக்காராம். உங்க அக்கா ரெண்டு பேரும் மாத்தி மாத்தி அந்தக் கிழவரைப் படுத்தி எடுக்கிறாங்களாம். மாசம் ஒருத்தர் வீட்டிலேன்னு திட்டமாம். உடம்பு சரியில்லாத இந்த சமயத்துலே கூட அப்பாவை சின்னவ வீட்டுக்கு அனுப்புறதும்... அவ அலுத்துக்கறதும்... மறுபடியும் அவரைத் திருப்பி அனுப்புறதும்... பேசாம முதியோர் இல்லத்திலோ வேற எங்கேயாவதோ சேர்த்திருக்கலாம். வர்றீயா? நாம போய் உங்க அப்பாவை இங்கே கூட்டிட்டு வந்துடலாம்."
பாரதி யோசித்தாள். ஆனால்...?
"ஏன் எனக்குத்தான் தலையெழுத்தா? கிழவனுக்குப் 'பெட்பேன்' வைக்கறதும், துணி மாத்தறதும்... கழுவி விடறதும்... நீயும்தான் பண்ணேன்..."
"நானும் பண்ணிட்டுத்தான் இருக்கேன். ஏன் அப்பா பணம் கொடுத்திருக்கார் இல்லை? அதுலே இருந்து ஒரு ஆயா போட்டுக்கறது. நீயே ஏன் அவஸ்தைப்படணும்? நான் பாத்துக்கலியா?"
"சொல்லுவேடி... உனக்கென்ன உன் வீட்டுக்காரர் பிசினஸ் பண்றார். உன்னால முடியும். நீ பாத்துக்குற லட்சணத்தை அக்கம் பக்கம் சொன்னாங்களே... வேலைக்காரங்ககிட்டே விட்டுட்டு நீ பாட்டுக்கும் லேடிஸ்கிளப் போயிடறியாம், பாவம். அந்தக் கிழவர் பாத்ரூம் போக முடியாம... அலறி... கத்தி அவஸ்தைப் பட்டாராம். வேளா வேளைக்குக் கஞ்சியும், சோத்தையும் ஏதோ நாய்க்குப் போடற மாதிரி உங்க வீட்டு வேலைக்காரங்க போடறாங்களாம். கட்டில்லே படுத்தபடி கூரையைப் பாத்துட்டு..."
"தெரியும். நீயே அப்படியே அன்பா அப்பாவை பாத்துக்கறதுதானே? உனக்கும்தான் சரிசமமான பங்கு கிடைச்சிருக்கு இல்லை!"
"என்ன பண்றது? என் பையனை இன்ஜினியரிங் சேர்த்துட்டேன். எவ்வளவு செலவாகுது தெரியுமா? நான் இவ்வளவு பண்றதே அதிகம்!"
"கொடுத்து வைச்சவ அந்த பாரதிதான். பேங்க் பணத்தைத் தூக்கிட்டு எவனோ ஒருத்தனை காதலிச்சு அமெரிக்கா ஓடிட்டாளே... டாலர் டாலரா பணம் இருக்கு இல்லை? அவ பணம் அனுப்பினாளா? இல்லை... அப்பாவை வந்தாவது பார்த்தாளா?"
"நாம இப்படி அவஸ்த்தை படறது அவளுக்குத் தெரியுமா? அவ விலாசமும் நமக்குத் தெரியாது. என்ன பண்றது?"
இவர்கள் பேசப் பேச...
'போன்' கூப்பிட்டது.
(அடுத்த இதழில் முடியும்) |
| | விமலா ரமணி அவர்களின் இதர படைப்புகள்.
| கதை பகுதியில் வந்த இதர படைப்புகள்.
|
|
|
|
|
|