Home  
இதழ் 482

ஆகஸ்ட் 23 2010


www.guruji.com

Search

 

Nilacharal Web

Search in English

Help
 

Login

 

Username

Password

Click Here to Login

New Members!
Register Here..
 

Your Advertisement Here

 
  add nilacharal to your favourites nilacharal as your homepage  
Danush
Wanted Freelancers!
Home>>தொடர்

உறுதுணை தேடுமின்- 36
- அமர்நாத்

உங்கள் கருத்துகள்நண்பருக்கு அனுப்பபிரதி எடுக்க

சவிதா தன்னைப் பலமுறை திரும்பிப் பார்த்ததைக் குமாரி கவனித்தாள். அவள் தொலைவில் சென்றபிறகே குமாரி நிழல் விழுந்த இடமாகப் பார்த்து தன் நடையைத் தொடங்கினாள்.

ஜேன் தன்கணவன் விட்ட இடத்திலிருந்து தொடர்ந்தாள். 'என் மகளை, எப்படி வாய்விட்டுச் சொல்வது? உன்மகன் வாய்வழி உறவிற்கு அவளைக் கட்டாயப்படுத்தியிருக்கிறான்' என்று சோகத்தைக் கண்ணீராக மாற்றினாள்.


அதைக்கேட்ட குமாரிக்கு, 'இவ்வளவுதானா, இதற்கா இத்தனை ஆர்ப்பாட்டம்? நோய் பரவாது, அவள் கருவுற்றுவிடுவாளோ என்கிற அச்சமும் இல்லை' என்ற நிம்மதி. ஆனால், அது வெகுநேரம் நீடிக்கவில்லை.

'வயதுக்குவராத பெண்ணை அப்படிப்பட்ட இச்சைக்குப் பயன்படுத்துவது சட்டப்படி குற்றமாகும். அதற்குச் சிறைதண்டனை தரப்படலாம்' என்றார் ஜான் கடுமையான குரலில். குமாரிக்கு இதயம் வயற்றில் இறங்கியதுபோல் இருந்தது.

'என் பையனும் மைனர்தானே?'


'சட்டத்தின் கண்களில் வேறுபாடு கிடையாது.'

தழைந்துபோவதைத் தவிர குமாரிக்கு வேறுவழி தெரியவில்லை. 'குழந்தைகளின் விஷமம் என்று விடமுடியாதா? இதுபோல, இதைவிடக் கேவலமாக எவ்வளவோ நடக்கின்றன. அனைவரையும் தண்டிக்க முடியுமா?'


'சாலைவிதிகள் தினமும் பலமுறை மீறப்படுகின்றன. ஒரு சிலருக்குத்தான் அபராதம் விதிக்கப்படுகிறது. எல்லோரையும் தண்டிக்கமுடியாது என்கிற காரணத்திற்காக அனைவரையும் மன்னிக்க முடியுமா? மற்றவர்கள் செய்யாமலிருக்க ஒரு எச்சரிக்கை தேவை.'

'இதற்கு சிறைத்தண்டனை மிக அதிகமில்லையா?'


'எது குற்றமென்று பெரும்பான்மையான மக்கள் தேர்ந்தெடுத்த அரசாங்கம் நிர்ணயிக்கிறது. அதற்கேற்ற தண்டனையை வழங்குவது நீதிபதியின் கையில். வக்கீலாகிய நான் என்கடமையைச் செய்கிறேன், அவ்வளவுதான்.'

'இதுபோன்ற தவறுகளில் இருவருக்கும் பங்கிருக்கலாமே.' குமாரிக்கு அப்படியொரு நம்பிக்கை இருந்தது.


'என் பெண்ணைப்பற்றி எனக்கு நன்றாகத்தெரியும். கன்னித்தனத்தைக் காப்பாற்றுவதாக என் எதிரிலேயே தீர்மானம் எடுத்திருக்கிறாள்.'

'என்ன நடந்ததென்று பள்ளியிலிருந்து லின்டா வந்த உடனேயே கேட்டுத் தெரிந்துகொண்டேன்' என்றாள் ஜேன்.

'கட்டாயத்தினால்தான் உன் பையனின் விருப்பத்திற்கு அவள் உடன்பட்டாள்.'


'வழக்கென்று வந்தால் பள்ளியின் பேர்கெட்டுவிடாதா?'

'பாஸ்டோரல் ஹைஸ்கூல் என்றிருந்ததை ஏபெக்ஸ் அகாடெமி என்று அழைக்கப்படுவதே எங்களுக்குப் பிடிக்கவில்லை. அப்போதே அவளை மதச்சார்புடைய வேறொரு பள்ளிக்கு மாற்றியிருக்க வேண்டும்' என்றாள் ஜேன்.


'எங்களிடம் அன்று அவள் அணிந்த சட்டை இருக்கிறது. அதை டிஎன்ஏ சோதனைக்கு அனுப்பியிருக்கிறேன். விரைவில் மோகன் அவனுடைய சாம்பிளைத் தரவேண்டியிருக்கும்' என்ற குண்டைப்போட்டார் ஜான்.

என்னை மடக்க இப்படியொரு பொய்யோ? சம்பவம் நடந்தவுடன் சட்டையைத் தோய்க்கத்தானே ஒருபெண்ணுக்குத் தோன்றும்.
குமாரி தோல்வியை ஒப்புக்கொள்வதுதான் சரியென நினைத்தாள். 'என் மகனுக்காகக நான் மன்னிப்பு கேட்கிறேன். உங்கள் பெண்ணின் நிலை நன்றாகப் புரிகிறது, எனக்கும் பதினான்கு வயதில் ஒருபெண் இருக்கிறாள்.' சொல்லிவைத்தாற்போல இருவர் காதிலும் அவள் வார்த்தைகள் விழவில்லை.


'என் பெண்ணின் கன்னித்தன்மை போய்விட்டதே. திரும்பப் பெறமுடியாத ஒன்று' என்று முனகினாள் தாய்.

'என்ன பிரயாச்சித்தம் செய்ய வேண்டுமென்றாலும் சொல்லுங்கள், செய்கிறேன்.'


'நீங்கள் செய்யக்கூடியது எதுவுமில்லை' என்று ஜான் ஒரு வணிகஅட்டையை நீட்டினார். குமாரி அதை வாங்கிவைத்துக் கொண்டாள். நன்றி சொல்லத் தோன்றவில்லை.

'திங்கள் உங்களுக்கு அதிகாரபூர்வமான கடிதம் வரும். செவ்வாய் டிஸ்ட்ரிக் அட்டர்னி முன்னால் சந்திப்போம். உங்கள் பையனையும் அழைத்துவந்தால் நல்லது. ஹாவ் அ குட் டே!' என்று அவர் எழுந்து மனைவியுடன் நடந்தார். குள்ளமாக இருந்தாலும் ஜானின் நடையில் ஒரு பெருமிதம் இருந்தது.


'யூ டூ!' என்று நுனி உதட்டால் சொன்னாள் குமாரி.

அட்டையின் ஒரு பக்கத்தில் 'கோர்க்கர், ஃபீல்வெல், குட்லிங் - சட்ட அலுவலகங்கள்' என்று நீல எழுத்துகளில். அதன்

பின்புறத்தில்:


வாய்வழி உறவு இயற்கைக்கு எதிரான குற்றம். அந்த செயலுக்கு இளம்பெண்ணை வற்புறுத்துவது ஒன்றிலிருந்து பத்தாண்டு வரையிலான சிறைதண்டனையில் முடியும் - நார்த் கரோலைனா சட்டம்.

கதவைத் திறந்து வெளியேறுவதற்குமுன் குட்லிங், 'இன்னொன்று, அவன் வற்புறுத்தலை ஒப்புக்கொண்டால் நீதிபதி தண்டனையைக் குறைப்பதற்கு வழி இருக்கிறது' என்றார் பெரியமனது பண்ணி.


'அதைப்பற்றி யோசனை செய்வேன். தாங்க்ஸ்.'

அவர்கள் வெளியேறும்வரை காத்திருந்ததுபோல் அடக்கிவைத்த அழுகை பீரிட்டது. அந்தச்சிறிய கட்டடத்தில் அது ஓலமாக எதிரொலித்தது. யாராவது அங்கே வரலாமென்று எழுந்தாள். கால்கள் பின்னிக்கொண்டன. நாற்காலிகளின் முதுகுகளைப் பிடித்து மெதுவாக நடந்து வெளியே வந்தாள். சூரியவொளி கண்ணைக்கூசியது. பையிலிருந்த கறுப்புக்கண்ணாடியை அணிந்தாள். கண்ணீர் குறைந்தாலும் அழுகையின் ஒலி குறையவில்லை. நல்லவேளையாக காதுக்கெட்டும்படி அருகில் யாருமில்லை.
அவர்கள் காரில் ஏறுவது தொலைவில் தெரிந்தது. அது உடனே கிளம்பவில்லை. ஒருவேளை அவளுக்காகத்தான் காத்திருக்கிறதோ. ஓடிச்சென்று, 'என் மகன் டயாபெடிக். அவனைச் சிறைக்கு அனுப்புவதால் உங்களுக்கென்ன லாபம்?' என்று கெஞ்சினால்... அவனுக்குப் பதிலாக அவள் சிறைக்குப் போகமுடியுமா என்கிற அசட்டுத்தனமான எண்ணம்கூடத் தோன்றியது. அவர்களை மறுபடி சந்திப்பது பலன்தராதென்று கிட்டத்தட்ட நிற்கும்நிலைக்கு வந்தாள். அவர்கள் காரும் அவளுக்காகக் காத்திருந்து அலுத்ததுபோல் வேகமாகக் கிளம்பிச்சென்றது.


காருக்கு வரும்வரையில் அவளுடைய அழுகை நிற்கவில்லை. நிழலில் நின்றிருந்ததால் அதன் ஜன்னல்களை இறக்கிவிட்டு இருக்கையில் உட்கார்ந்தாள். பாங்க் அலுவலகத்தை அழைத்து வேலைக்குத் திரும்ப இயலாதென்று அறிவித்தாள்.
பள்ளியின் வகுப்புகள் முடிய இன்னும் அரைமணிக்குமேல் இருந்தது. அழுததால் நாக்கு உலர்ந்து தொண்டையில் ஒரு வலி. மோகனுக்காக வைத்திருக்கும் பவரேட் புட்டியிலிருந்து சில மிடறுகள் குடித்தபோது சிறிது உணர்வு வந்தது. இந்தமாதிரிப் பிரச்சினை அவள் வாழ்வில் அதுவரை நடக்காதது மட்டுமல்ல, இப்படி நடக்கலாமென்று அவள் கனவிலும் நினைத்ததில்லை. எப்படி அதை அணுகுவதென்றே தெரியவில்லை. மோகனிடம் சொல்வதா வேண்டாமா? வெறும் பயமுறுத்தலாக இருக்குமோ? நிஜமாக இருந்தால் என்னிடம் சொல்ல வேண்டிய அவசியமென்ன? ஒருவேளை எனக்கு எவ்வளவு தெரியுமென்று கண்டுபிடிக்க இருக்கலாம். அவரே ஒரு வழக்கறிஞரென்று தெரியாமல் போய்விட்டதே. என்மகனின் வாக்குப்படி உங்கள் பெண்ணின் விருப்பத்துடன்தான் அது நடந்திருக்கிறது என்று அடித்துச் சொல்லாமல் குற்றத்தை ஒப்புக்கொண்டது தவறோ? எதிராளிக்கு எங்கள் பலவீனம் வெளிப்பட்டுவிட்டதே. குழப்பமாக இருந்தது.

மாணவர்களை அழைத்துச் செல்லும் பெற்றோர்களின் கார்கள் வரிசையில் சேர்ந்து நிற்கத் தொடங்கின. தினம் மோகனையும் சவிதாவையும் வீட்டிற்குக் கூட்டிச்செல்லும் பெண்ணை அழைத்து, 'இன்று அவர்களை நான் கவனித்துக்கொள்கிறேன்' என்றாள். பிறகு சரவணப்ரியா. அவள் வெள்ளிக்கிழமைகளில் வேலைக்குப் போவதில்லை என்று தெரியும்.


'அக்கா! நீங்க எத்தனையோ கஷ்டங்களிலே எனக்கு உதவி செஞ்சிருக்கீங்க. இப்ப உங்களாலகூட என்னை குட்லிங் கிட்டேர்ந்து காப்பாத்த முடியுமான்னு சந்தேகமா இருக்கு.'


'என்ன சொன்னார்?'

'அவரே ஒரு வக்கீல்னு போனப்புறம்தான் தெரிஞ்சுது. அந்தப்பெண்ணோட அம்மாவும் கூடஇருந்தாங்க. இவ்வளவு பயங்கரமா இருக்கும்னு நினைக்கவே இல்லை' என்று அழ ஆரம்பித்தாள். அது ஓயும்வரை சரவணப்ரியா காத்திருந்தாள்.

'நடந்தது என்னன்னு அவங்க பொண்ணு சொல்லிச்சாம்' என்று குமாரி கோடிகாட்டினாள். 'அதைக் கேட்டப்போ இவ்வளவுதானே, முழுஉறவு இல்லியேன்னு இருந்திச்சு. இப்ப அது இன்னும் மோசம்போலத் தெரியுது.'


'நானும் அர்த்தமில்லாத அந்த சட்டத்தைக் கேள்விப்பட்டிருக்கேன்.'

'மோகனை ஜெயிலுக்கு அனுப்பிட்டமாதிரியே பேசறார்.'


'கல்யாணம் வரைக்கும் கன்னியாக இருப்பேன்னு வாக்குத்தந்துவிட்டு இந்தமாதிரி செய்துவிட்டாளே என்கிற கோபமோ, விரக்தியோ இருக்கலாம்.'

'அப்பகூட அவருக்கென்ன லாபம்?'


'வக்கீலுங்க தொழிலே அதுதான். அமெரிக்காலே கணக்குவழக்கில்லாத பட்டதாரிகள். மணிக்கு ஆயிரக்கணக்கிலே சம்பாதிக்கிற ஒருசிலரைத்தவிர மத்தவங்களுக்கு வருமானம் நிச்சயமில்லை. இந்த கேஸைப்பத்தி பேப்பர்லே வரும், காலை மாலை நியூஸ்லே கேள்வி கேப்பாங்க, குட்லிங்கோட பேர் பிரபலமாகும். ஃபாக்ஸ் நியூஸ்காரங்க நிச்சயம் ட்யுரம் வருவாங்க. ஒரு கறுப்பு ஆசியப்பையன் வெள்ளை கிறித்தவப் பெண்ணை பலவந்தம் செய்தான்னே சொல்லிடுவாங்க.'

'சொந்தப்பெண்ணோட பேர் கெட்டுவிடாதா?'


'ஏன் கெடணும்? அவ மைனர்னு பேர் வெளியவேவராது.'

'கடைசிலே ஏதோ ப்ளீ பார்கெய்ன், தண்டனை குறையும்னு சொன்னார்.'


'ஐயோ அது வேண்டாம். அப்படி செஞ்சா வாழ்நாள் முழுக்க செக்ஸ் அஃபன்டர்னு முத்திரை குடுத்திடுவாங்க. சாமி வேலைலேர்ந்து வந்தப்புறம் என்ன செய்யலாம்னு கேட்டு சொல்றேன். இன்னும் ரெண்டு நாளிருக்கே.'

'அந்த ரெண்டுநாளை எப்படி கழிக்கப்போறேன்னு தெரியலே?'


'மெடிகல் பில் மாதிரிதான். புரியாத கணக்குப்போட்டு நெறைய பணம்கேட்டு வெள்ளிக்கிழமை மதியம் நம்ம கையிலே கிடைக்கிறமாதிரி அனுப்புவாங்க. உடனே கூப்பிடமுடியாது. கூப்பிட்டாலும் பதில் கிடைக்காது. ரெண்டுநாள் மனசு பதறிண்டு தவிக்கணும். திங்கள்காலைலே பணம் தொலையறது, நிம்மதி கிடைச்சா போதும்னு கேட்ட பணத்தை சரியா தப்பான்னு கேக்காம அனுப்பிவிடுவோம். உன்னை ரெண்டுநாள் நரகத்திலே போட்டு, மோகனையே ஒப்புக்கொள்ள வச்சிரலாம்னு பாக்கறார். யோசிச்சா எதாவது வழி கிடைக்காம போகாது.'

'நீங்க சொன்னா சரி. எனக்குத்தான் இப்ப யோசிக்கிற சக்தியே இல்லை.' வகுப்புகள் முடிந்து மாணவர்களின் உற்சாகப் பேச்சு காதில் விழத்தொடங்கியது.


'ஆள் சும்மா பயமுறுத்தல்தான்னு நம்புவோம்.'

குட்லிங்கின் முக இறுக்கத்தையும், வார்த்தைகளின் நிச்சயத்தையும் நேரில் பார்த்த குமாரிக்கு அந்த நம்பிக்கை சிறிதுமில்லை. இருந்தாலும், 'பாப்போம், அக்கா!' என்று செல்பேசியை மூடினாள். அவசரம்அவசரமாக கண்ணாடியை எடுத்து, முகத்தைத் துடைத்து, உதட்டிற்கு சாயமேற்றினாள். தொலைவில் தெரிந்த தன் குழந்தைகளைப் பார்த்து ஜன்னல் வழியாகக் கையசைத்தாள்.


சவிதாவுக்கும், அவள் பின்னால் மெதுவாக நடந்துவந்த மோகனுக்கும் அவர்கள் காரைப்பார்த்து ஆச்சரியம்.

'ஹாய் மாம்!' என்று ஓடிவந்த சவிதா தாயின் முகத்தைப் பார்த்தவுடன் நின்றாள். 'ஆர் யூ ஆல்ரைட்?'


'இந்த வாரம் நாலுநாள்தான். ஆனாலும் வேலையின் பளு அதிகம். அத்துடன் நேற்று சரியாகத் தூங்காததால் தலைவலி. அதனால் சீக்கிரமே வந்தேன். ஆட்வில் சாப்பிட்டப்புறம் பரவாயில்லை' என்று குமாரி சமாளித்தாள்.

சவிதாவும், மோகனும் புத்தகப்பைகளைக் காரின் பின்-இருக்கையில் வைத்தார்கள். மோகன் தங்கையைப் பார்த்துத் தயங்கினான். அவள், 'நான் உன் சர்க்கரையை அளக்கிறேன், விரலைக் காட்டு!' என்றாள். அவன் மகிழ்ச்சியுடன் கையை நீட்டினான். அது முடிந்தவுடன் 'நான் உன் புத்தகத்தில் எழுதுகிறேன்' என்றாள். மோகன் டென்னிஸ் பையுடன் கோர்ட்டை நோக்கி ஓடினான். கைப்பையோடு குமாரி காரிலிருந்து இறங்கினாள். 'சவி! நீயும் போய் அவர்கள் விளையாடுவதை வேடிக்கை பார்! நான் ஒருசுற்று நடந்துவிட்டு வருகிறேன்.'


சவிதாவுக்குத் தன் அம்மாவின் கலக்கம் வேலை காரணமாக வந்ததென்று தோன்றவில்லை. அவள் குரலில் அச்சத்தினால் வரும் ஒரு நடுக்கம். செவ்வாய் மாலையில் அவள் அழுததும், நேற்று அதற்கு அவள் தந்த திருப்தியற்ற பதிலும் நினைவுக்கு வந்தன. 'மாம்! நானும் உனக்குத் துணையாக நடக்கிறேனே' என்றாள் ஆதரவாக.

'அவசியமில்ல. உன் தோழிகள் உனக்காகக் காத்திருக்கிறார்கள். ஹாவ் ஃபன்!'


அரைமனதுடன் சவிதா அகன்றாள். டென்னிஸ் கோர்ட்டை நோக்கிச் செல்லும்போது தாயின் நினைவுதான் அவளுக்கு. அம்மாவைப் பாதிப்பது எதுவாக இருக்கும்? மோகனின் டயாபெடிஸ் கட்டுப்பாட்டில் இருக்கிறது, கவலைப்பட வேறென்ன இருக்கிறது? தனிமரமாக நிற்கும் அம்மாவின் துயரத்தை சமீபகாலமாகத்தான் அவள் உணரத்தொடங்கி யிருந்தாள். வேடிக்கைக்காக அல்லாமல் நிஜமாகவே அவளுக்குத் துணை தேடித்தர வேண்டுமோ?

சவிதா தன்னைப் பலமுறை திரும்பிப் பார்த்ததைக் குமாரி கவனித்தாள். அவள் தொலைவில் சென்றபிறகே குமாரி நிழல் விழுந்த இடமாகப் பார்த்து தன் நடையைத் தொடங்கினாள். யூ.எஸ். வந்தது தவறோ என்று தோன்றியது. எல்லோரும் விமானத்தில் ஏறி நாளைக்கே திரும்பிப் போய்விட்டாலென்ன? பெசன்ட்நகரில் ஒரு ஃப்ளாட், வங்கியில் பணம் எல்லாம் இருக்கிறது. எப்படியாவது வேலைகிடைக்கும்வரை சமாளிக்கலாம். தினகரனின் தொல்லையும் அவளைத் தொடராது.
முதலில் உயிரியல் கட்டடம் கண்ணில்பட்டது. அது கொடூர மிருகம்போல் அவளுக்குக் காட்சியளித்தது. முகத்தை வேறுபக்கம் திருப்பி, அதிலிருந்து விலகிச்செல்ல காலடிகளை வேகமாக எடுத்துவைத்தாள்.


டென்னிஸ் கோர்ட்டுகளுக்கருகில் செல்லும்போது சவிதா தோழிகளுடன் அரட்டை அடிப்பது கேட்டது. அவர்கள் கண்ணில்படாமல் ஒதுங்கி நடந்தாள். மோகன் எப்படிப்பட்ட சிக்கலில் அவன் அகப்பட்டிருக்கிறான் என்பதை அறியாமல் கோச் செய்யச்சொல்வதைக் கவனமாகக் கேட்டுக்கொண்டிருந்தான். அவனிடம் குட்லிங் வழக்குத் தொடுக்கப்போவதை எப்போது சொல்லலாம்? ஞாயிறு மாலை? அதிகாரபூர்வமான கடிதம் வரும்வரையில் காத்திருந்தால் போகிறது. அவன் நிம்மதியை ஏன் குலைக்க வேண்டும்? இந்தவயதில் அவனுக்கு ஏனிந்தத் துன்பம்?

சவிதாவை வளர்த்ததில் அத்தைக்கும் தங்கைக்கும் கொஞ்சம் பங்குண்டு. இரண்டரைவயதுவரை மோகனை அவளே வளர்த்ததால் அவன்மேல் பெற்றபாசம் அதிகம். பெரியசாமி பிரிந்துசென்றபிறகு மூன்று மாதங்கள் இருவராக வாழ்ந்ததும், அவனுக்கு டயபெடிஸென்று தெரிந்ததும் பாசத்தை இன்னும் இறுக்கின.


குமாரி கோர்ட்டுகளைச் சுற்றிக்கொண்டு பள்ளியின் முன்புறத்தை நோக்கித் திரும்பினாள். இடப்பக்கத்தில் விளையாட்டுக் களம். கால்பந்தாட்டத்தின் இடைவேளையின்போது மக்களை மகிழ்விக்கும் பள்ளிக்கூட இசைக்குழு பயிற்சிசெய்யத் தயாராக நின்றது. அலுமின பெஞ்ச்சில் அமர்ந்த குமாரி கனமான இசைக்கருவிகளை வாசித்து மாணவர்கள் சீராக நடந்ததை வேடிக்கை பார்த்து கவலையை மறக்க முயன்றாள். அவர்கள் போட்ட சத்தத்தில் செல்பேசியின் அழைப்பு நான்குமுறை அடித்தபிறகுதான் அவள் காதில் விழுந்தது. பையிலிருந்து எடுத்து அதைப்பிரித்தாள்.


'ஹலோ! நான் உயிரியல் ஆசிரியன்.'

(தொடரும்)

அமர்நாத் அவர்களின் இதர படைப்புகள். தொடர் பகுதியில் வந்த இதர படைப்புகள்.
                         
Your Comments
Comment
உங்கள் கருத்து
பெயர் :
மின் அஞ்சல் :
சுட்டி :

Comment In:

Tamil English
(Type here in Thanglish and see tamil text in bottom. Tamil conversion powered by : www.suratha.com)
NOTE : Please do not use single quote in your comments. You can use double quote in place.
(English / தமிழில் - யூனிகோட்)
What you see in this box gets posted as feedback.

Hot properties in India

ஜோதிடம் கேளுங்கள் பகுதி தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. விரைந்து கட்டண சேவை பெற இங்கே சுட்டவும்.

 

 


 

 


About us | Team | Contact Us | Press | Feedback | Favourites | Communities | Shopping | Services | Site map

tamil magazines, Hindu devotional songs, tamil links, tamil movies, tamil songs, tamil dvd, tamil news, tamil, tamil comedy, tamil movie, tamil music DVDs, bharatanatyam, Yoga DVDs, carnatic music, tamil cinema, sivaji movie, cricket world cup, tamil ebooks, web design, web design resources, global warming, outsourcing, mutual funds, India Pakistan cricket series, Kuselan, India Cricket, Sultan The Warrior

A web magazine from Nilacharal Ltd
Privacy Policy|Terms of use|Disclaimer| Copyright Nilacharal Ltd - All Rights Reserved Worldwide