நாய்கள் மற்றும் சில முள்ளெலும்பு உள்ள விலங்குகளுக்கு நுகர்வுணர்ச்சிக் குமிழ் பெரிதாகவும், மனிதர்களிடம் அது சிறிதாகவும் அமைந்திருக்கும்
நுகர்வுணர்ச்சி (olfactory) அமைப்பு என்றால் என்ன?
மணத்தை அல்லது நாற்றத்தை உணர்வதற்கான அறிவியல் சொல் நுகர்வுணர்ச்சி என்பதாகும்; இதற்கான அமைப்பு நுகர்வுணர்ச்சி அமைப்பு எனப்படும். விலங்குகள் மற்றும் மனிதர்களின் மிக முக்கியமான அடிப்படைப் புலனுணர்வுகளில் நாற்றத்தை உணர்வதும் ஒன்றாகும். சுவை, ஒளி, ஊறு, ஓசை, நாற்றம் என்பன ஐம்புலன் உணர்வுகள். நாற்றம் அல்லது மணத்தை அறியும் ஏற்பிகள் (receptors) மூக்குக் குழிவுப் பகுதி (nasal cavity) என அழைக்கப்படும் மூக்கின் மேல் பாதிப் பகுதியில் அமைந்துள்ளன. நறுமணத் துகள்களால் - நீங்கள் சுவாசிக்கும் நறுமண மூலக்கூறுகளால் – மணத்தை அறியும் ஏற்பிகள் பாதிக்கப்படுகின்றன. மணத்தை அறியும் ஒவ்வொரு ஏற்பி உயிரணுவிலும் (cell) ஒட்டும் பொருளான சளியுடன் (mucus) கூடிய முடிகள் உள்ளன. நீங்கள் மூச்சை உள்ளிழுக்கும்போது காற்றிலுள்ள நறுமணத் துகள்கள் சளியில் கரைந்து விடுகின்றன. மணத்தை அறியும் ஏற்பிகள் இத்தகவல்களை ஏற்று நரம்பணுக்களுக்கு அனுப்பி பின்னர் அவை மூளைக்குச் செல்கின்றன.
துகள்களின் மணத்தை நாம் கண்டறிய விரும்பினால், அதனை நாம் முகர்ந்து பார்க்கிறோம். இதனால் மணத்தின் துகள்கள் மூக்குத் துளைகள் வழியே மணத்தை அறியும் ஏற்பிகளைச் சென்றடைகின்றன.
நாய்கள் மற்றும் சில முள்ளெலும்பு உள்ள விலங்குகளுக்கு நுகர்வுணர்ச்சிக் குமிழ் பெரிதாகவும், மனிதர்களிடம் அது சிறிதாகவும் அமைந்திருக்கும். விலங்கின் நுகர்வுணர்ச்சிக் குமிழின் அளவைக் கொண்டு அதன் மோப்ப உணர்ச்சியின் முக்கியத்துவத்தை அறிந்து கொள்ளலாம்.
12. இரத்தம் ஏன் பின்னோக்கி ஓடுவதில்லை?
சிரை (vein) எனப்படும் இரத்த நாளம் இதயத்திற்கு இரத்தத்தைக் கொண்டு செல்லும் குழாயாகும். இரத்த நாளங்கள் என்னும் குழாய்களின் அமைப்பு மூலமே உடலில் இரத்த ஓட்டம் நடைபெறுகிறது. நமது சிரைகளின் வழியே செல்லும் இரத்தம் மிகவும் மெதுவாகச் செல்கிறது; பெரிய சிரைகள் பலவற்றில் இரத்தம் கால்கள் மற்றும் பாதங்களை நோக்கிப் பின்னே செல்வதைத் தடுக்கும் வகையில் வால்வுகள் அமைந்துள்ளன.
முன்னோக்கிச் செல்லும் இரத்தம் வால்வு மடிப்புகளை (valve flaps) திறக்கச் செய்கின்றன. பின்னோக்கிச் செல்லுகையில் வாவு மடிப்புகள் மூடி இரத்தம் வெளியேறுவது தடுக்கப் படுகிறது. இதயத்தில் உள்ள வால்வுகளும் இதே முறையில்தான் செயல்படுகின்றன.
கைகள் மற்றும் கால்களில் உள்ள தசைகள் சுருக்கமடைந்தும் இவ்வகையில் இரத்தத்திற்கு உதவி புரிகின்றன. அதனால்தான் ஒருவர் விறைப்பாக நீண்ட நேரம் நின்றால் கால்கள் ஊதிப்போய் கடுமையான வலி உண்டாகிறது.
தொற்று ஏற்படாமல் பாதுகாக்க உடலுக்கு நிணநீர் அமைப்பு உதவி புரிகிறது. உடலுக்குள் நுழைந்து விடுகின்ற இடர் விளைவிக்கும் பொருட்கள் மற்றும் பாக்டீரியாக்கள் நிண நீர் நாளங்களில் உள்ள சின்னஞ்சிறு திசுக்களால் வடிகட்டப் படுகின்றன. பருப்பு வடிவிலான இவை நிணநீர்க் கணுக்கள் எனப்படுகின்றன.