Home  
இதழ் 483

ஆகஸ்ட் 30 2010


www.guruji.com

Search

 

Nilacharal Web

Search in English

Help
 

Login

 

Username

Password

Click Here to Login

New Members!
Register Here..
 

Your Advertisement Here

 
  add nilacharal to your favourites nilacharal as your homepage  
Ashwin Ravichandran
Wanted Freelancers!
Home>>தொடர்

உறுதுணை தேடுமின்- 37
- அமர்நாத்

உங்கள் கருத்துகள்நண்பருக்கு அனுப்பபிரதி எடுக்க

கைகடந்து போகும்வரை காத்திராமல் உடனே செயல்பட வேண்டும். அவன் வேலைக்கு ஆபத்துவருமோ என்ற அச்சம் குறுக்கிட்டது

பெரியசாமி ஏபெக்ஸ் அகடெமியின் நூலகத்தில் காத்திருந்தான். கல்லூரிகளில் பாடம் நடத்திப் பழக்கப்பட்ட அவனுக்கு இரண்டுவாரங்களிலேயே இந்த வேலை பிடித்துவிட்டது. படிப்பில் எல்லோருமே அக்கறை காட்டினார்கள். ஒருசிலர் அதி புத்திசாலிகள். நிறைய கேள்விகள் கேட்டார்கள். அவன் கேள்விகளுக்கு சரியான பதில் சொன்னார்கள். அவர்கள் கவனத்தைப் பிடித்துவைப்பதும் எளிதாக இருந்தது. ஏபி உயிரியல் பாடத்திற்கும் அவன் கல்லூரிகளில் சொல்லிக்கொடுத்த பொது உயிரியலுக்கும் அதிக வேறுபாடில்லை. அறிமுக உயிரியலுக்குத்தான் கொஞ்சம் இறங்கிவர வேண்டியிருந்தது.

நூலகத்திலிருந்து பார்த்தால் தொலைவில் செவ்வகவடிவில் அமைந்த உயிரியல் கட்டடம் தெரியும். தற்காலிக அமைப்பு என்பது பெயரளவில்தான், ஐந்தாண்டுகளாக அது அங்கே இருப்பதாகக் கேள்வி. பொதுவாக பிற்பகல் வேளைகளில் அவன் அங்கே தங்குவதில்லை. ஜன்னலில் பொருத்தப்பட்ட குளிர்சாதனத்தின் சக்தி குறைவு. செப்டம்பருக்குப் பிறகு வெப்பம் தணிந்துவிடும். அதுவரை பொறுத்துப் போகவேண்டும். உயிரியலுக்கான இரண்டு வகுப்புகளும் காலையிலேயே முடிந்துவிடும். இன்னும் சிலவாரங்கள் சென்றபிறகு பிற்பகலில் பரிசோதனைகள் நடத்தத் திட்டமிட்டிருந்தான்.

இன்று அந்த இடம் இரண்டிலிருந்து மூன்றுவரை சில பெற்றோர்கள் அந்தரங்கமாகப் பேசுவதற்கு வேண்டுமென்று செக்ரடரி சொல்லியிருந்தாள். அவள் குறிப்பிட்டபடி இரண்டுமணிக்கு ஆணும் பெண்ணுமாக இரு வெள்ளை அமெரிக்கர்களும், சில நிமிடங்கள் கழித்து ஒருபெண்ணும் அதைநோக்கிச் செல்வதைக் கவனித்தான். கல்லூரிகளில் மாணவர்களை அறிந்தால் போதும். பள்ளிகளில் அவர்களின் பெற்றோர்களையும் தெரிந்துவைத்துக் கொள்வது அவசியம். இதுவரை ஒருசிலரைச் சந்தித்திருந்தான். இவர்கள் இன்னும் அறிமுகம் ஆகவில்லை.

குயின்சிடி கல்லூரியில் வேலையிழந்தபோது, ஊர் மாற்றவேண்டாமென்று ஷார்லெட்டிலும் அதைச்சுற்றிய இடங்களிலும் நேரிலேயே பல கல்லூரிகளை முற்றுகையிட்டான். வலைத்தளத்திலும் அவன் பெயரைப் பதிவுசெய்தான். ஜூன் நடுவில் பெரும்பாலான கல்விக்கூடங்களில் அடுத்த கல்வி ஆண்டிற்கான இடங்களை ஏற்கனவே நிரப்பியிருந்தார்கள். அவன் பலமுறை வேலைமாறியதும் அவனுக்குச் சாதகமாக இல்லை. ஜூலை வந்தபோது நார்த் டகோடாவின் ஒரு கல்லூரியும், ஏபெக்ஸ் அகடெமியும்தான் அவனிடம் அக்கறை காட்டினார்கள். பள்ளிக்கூடத்தில் சம்பளம் குறைவென்றாலும் வின்ஸ்டன்-சேலத்திற்கு அம்பிகா வரும்போதெல்லாம் அவளைப் சந்திக்கச் செல்லலாமென்ற ஆசையில் ஏபெக்ஸ் அகடெமி பிடித்திருந்தது. அத்துடன் ஒரு தனிஆளுக்கு எவ்வளவு பணம் வேண்டும்?

பள்ளியைப் பார்வையிட ஷார்லெட்டிலிருந்து காரிலேயே வந்தான். அதன் பழையபெயர் பாஸ்டோரல் ஹைஸ்கூல் என்பதால் நிர்வாகத்தினர் நடத்திய நேர்முகசந்திப்பில், 'உயிரியல் வகுப்பில் பரிணாமத்தைப் போதிக்க அனுமதி உண்டா?' என்று கேட்டான்.

யாரும் ஒருநிமிடம் வாய்திறக்கவில்லை. லாரி மட்டும், 'ஆட்சேபமில்லை. இந்த வட்டாரத்திலிருக்கும் ட்யுரம் அகாடெமி, கேரி அகாடெமி போன்ற தனியார் பள்ளிகளுடன் கல்வியில் போட்டியிட எங்களுக்கு விருப்பம்' என்றார்.

'மாணவர்களைப் பல விஞ்ஞானப் போட்டிகளில் பங்குகொள்ளப் பயிற்சிகொடுப்பேன். ஆனால், தற்போதைய உயிர்கள் ஆண்டவனின் சிருஷ்டி என்று மட்டுமல்லை, புத்திசாலியான அமைப்பாளரின் படைப்பு என்றும் விஞ்ஞானத்திற்குப் புறம்பாகச் சொல்லித்தரமாட்டேன்' என்றான் கண்டிப்பாக.

லாரி ஒப்புக்கொண்டார். மற்றவர்களின் மௌனத்தைச் சம்மதத்தின் அறிகுறியாக ஏற்றுக்கொண்டான். ஜூலைமுடிவிலேயே ஒரு வாடகை ட்ரக்கில் எல்லா சாமான்களையும் அடைத்து, அதால் அவனுடைய காரையும் இழுத்துக்கொண்டு ட்யுரம்வந்தான். ட்யூக் அருகில் தங்குவதற்கு ஓரிடம் பிடித்தான். பல்கலைக்கழகத்தில் பலமாற்றங்கள். டாக்டர் வில்சன் இப்போது இல்லை.

அவனும் சரவணப்ரியாவும் வேலைசெய்த கட்டடம் இடிக்கப்பட்டு அந்த இடத்தில் புதிய பலமாடிக்கட்டடம். ஆனால் குமாரியுடன் அவன் குடியிருந்த சென்ட்ரல் அபார்ட்மென்ட் அப்படியே இருந்தது.

குமாரியைப் பிரிந்தபோது வராத தனிமை இப்போது அவனை வாட்டியது. அப்போது அம்பிகாவுடன் வாழப்போகும் புதுவாழ்க்கையின் கனவுகளில் மனம் மிதந்தது. இப்போது அம்பிகா இல்லாத வாழ்க்கை எட்டுமாதங்களாகியும் பழகவில்லை. ஷார்லெட்டில் இருந்தவரையில் அடங்கிக்கிடந்த ஏக்கம் ட்யுரம் வந்தபிறகு பெருகத்தொடங்கியது. திட்டமிட்டபடி ஒருகுழந்தையை சுவீகாரம் எடுத்திருந்தால் அதற்கு இப்போது பத்து வயதிருக்கும். அதைப் பொறுப்பாக வளர்ப்பதில் அம்பிகாவின் பிரிவை மறந்திருக்கலாமே என்று நினைத்தான். காலையில் பள்ளிக்குத் தயார் செய்து மாலையில் பாடமோ அல்லது பேஸ் பால்பந்தை வீசவோ கற்றுத்தந்தால் நாள் ஓடிவிடும். குழந்தை இருந்திருந்தால் அம்பிகாவே பிரிவை யோசித்திருக்க மாட்டாளென்று தோன்றியது. இப்போதுகூட ஒருகுழந்தையை தத்தெடுக்கலாம். ஆனால், அதற்கொரு மனைவி தேவை, தனியாக வாழும் ஒருவனுக்குத் தரமாட்டார்கள். அமெரிக்காவின் நிரந்தர விசாவை சம்பாதிக்க ஒருகுடிமகளைக் பெயரளவுக்குத் திருமணம் செய்துகொள்வதுபோல் இதற்கும் ஒருத்தியை சௌகரியத்திற்காக மணந்துவிட்டுப் பிறகு அதை முறித்துவிடலாம் என்கிற அபூர்வ யோசனைகூட வந்தது.

வாரநாட்களை ஒருவாறு பொறுத்துக்கொள்ள முடிந்தது. வீட்டிற்கு வரும்போது ஐந்துமணி. நிதானமாக சமைத்துச்சாப்பிட ஆறரை. பிறகு ஒய் (ஒய்.எம்.சி.ஏ) சென்று உடலின் எல்லாத்தசைகளையும் வலுவாக்க எடைகளைத் தூக்கிவிட்டு வந்தால், குளிக்கவும் தூங்கச்செல்லவும்தான் நேரம். சனிஞாயிறுதான் பெரிய பிரச்சினை. தொலைக்காட்சியில் விளையாட்டுகளைப் பார்ப்பதிலும், வாடகைக்கு வாங்கிவந்த திரைப்படங்களை ரசிப்பதிலும் பழக்கம் எப்போதோ விட்டுப்போய்விட்டது. மறுபடி தொடங்க மனம்வரவில்லை. நேரத்தைச் செலவழிக்க உடைகளைத் தோய்த்து, சுருக்கமில்லாமல் உலர்த்தி, பொறுமையாக இஸ்த்ரிபோட்டான். அதனால் பள்ளிக்கு மடிப்புக்கலையாத உடையில் மிடுக்காகச் சென்றான். கல்லூரிக்கு அதுபோல் ஒருபோதும் செய்ததில்லை. மாணவர்களை விஞ்ஞானப் போட்டிகளுக்குத் தயார்செய்ய சனிக்கிழமைகளில் சிறப்புவகுப்புகள் நடத்தினாலென்ன? பையன்களின் பேஸ்பாலுக்குத் தனியாக ஒருகோச் இருந்தார். அவருக்கு உதவிவேண்டுமா என்று கேட்கலாம். இல்லையென்றால் பெண்களின் சாஃப்ட்-பால் குழுவிற்கு கோச் தேவைப்படலாம். ஞாயிறுமாலையில் மறுநாள் திங்கள் வருகிறதே என்று முனகும் உலகில் ஒருவழியாக வாரக்கடைசி முடிந்ததென்று மகிழ்ந்தவன் அவனொருவன்தான்.

அவன் குடியிருந்த கட்டடத்தின் மேல்மாடியில் துணிகளைத் துவைத்து அவற்றை உலர்த்தும் இயந்திரங்களின் வரிசை. அங்கே அவனைத் தனியாகவே பலமுறை பார்த்த ஒரு வெள்ளைப்பெண் அவளாகவே சென்ற வாரம் பேச்சுக்கொடுத்தாள். அவளும் தனியாக வாழ்கிறாளாம். பல ஆண்டுகளாக சரியான துணை கிடைக்காமல் தவிப்பதுபோல் தெரிந்தது. அவன் சரியென்றால் போதும், அவள் வீட்டின் கதவு திறக்கும். ஆனால் அப்படிப்பட்ட ஒருத்தியோடு வாழ்வதில், சாப்பாட்டிலிருந்து பணத்தைச் செலவுசெய்வதுவரை பலசிக்கல்கள் வரும். ஒருவேளை, இருபதாண்டுகளுக்குமுன் அவன் அவளுடன் ஒத்துப்போயிருக்கலாம். நடுவயதை எட்டப்போகும் அவனுக்கு ஒரு தடுமாற்றம்.

அம்பிகாவுடன் பேசி மூன்றுமாதமாகிவிட்டது. எங்கே இருக்கிறாளோ தெரியவில்லை. அவளுடன் அவசரமாகத் தொடர்பு கொள்ள பெரியசாமி ஈ-தபாலில்தான் செய்தி அனுப்பவேண்டும். மற்றபடி, செல்பேசியில் அவளாக அழைத்தால்தான் உண்டு, அவன் அவளைத் தொந்தரவு செய்வதில்லை. செல்பேசி மெல்ல அதிர்ந்தது. எடுத்துப்பார்த்தான், அம்பிகா. மிகவேகமாக நூலகத்திலிருந்து வெளியேவந்தான்.

'அம்பிகா! எங்கே இருக்கே? உன்னைத்தான் இப்ப நினைச்சிட்டிருந்தேன்' என்றான் ஆர்வத்துடன். மற்றவர்களுக்குத் தொல்லைதராமல் பள்ளிக்கு வெளியில்வந்து பெஞ்ச்சில் அமர்ந்தான்.

'அட்லான்ட்டா ஏர்போர்ட். சென்னைலேர்ந்து வரேன். ஃப்ளைட் ரெண்டுமணி லேட். வின்ஸ்டன்-சேலம் போற ப்ளேனைக் கோட்டை விட்டுட்டேன். அடுத்ததுக்குக் காத்திண்டிருக்கேன். நீ எப்படி இருக்கே?'

'நான் இப்போ ட்யுரம்லே ஒரு ஸ்கூல் டீச்சர். நீ என்னைக் கூப்பிட்டு மூணுமாசத்துக்கு மேலேயே இருக்கும்' என்றான் ஆதங்கத்துடன்.

'இந்தியாவிலும் சைனாவிலும் ஒரே அலைச்சல்.' வார்த்தையின் அலுப்பு குரலில் தென்படவில்லை.

பெரியசாமி கார்மன் கதையை அவளுக்குச் சொன்னான்.

'க்ரேடுக்காகன்னு ஏன் நினைக்கிறே? உன்மேலே ஆசைப்பட்டே அவ அப்படி செஞ்சிருக்கலாம்.'

'என்வயசிலே பாதிகூட தேறமாட்டா.'

'சில அமெரிக்கப்பொண்களுக்கு அப்பா வயசில இருக்கிற ஆண்களைத்தான் பிடிக்குமாம்.'

'அந்த ஆள் பெரிய அரசியல்வாதியா, இல்லை பணக்காரனா இருப்பான். நான் சாதாரண வாத்தியார்தானே.'

'அவ போகட்டும். முப்பதுக்குமேலே யாரையாவது பிடிக்கவேண்டியதுதானே.'

'என்ன அவசரம்?'

'உனக்காக நான் 'மங்கையர்மலர்'லே மணமகள் தேவைன்னு போடத்தான் போறேன். நாற்பத்திமூன்று வயதுக் கட்டிளங்காளைக்கு முப்பத்தைந்திலிருந்து நாற்பதுக்குள் மங்கை தேவை. ஜாதி, மதமென்ற கட்டுப்பாடுகளில்லை. விதவைகள், கணவனைப் பிரிந்தவர்கள் தாராளமாக விண்ணப்பிக்கவும். குழந்தைகள் இருந்தால் இன்னும் சிலாக்கியம்.'

'என்னை விடமாட்டே.'
'நீ தனியா இருக்கறது எனக்குக் கில்டியா இருக்கு.'

'அதுக்கு அவசியமே இல்லை. பதிமூணுவருஷம் நாம சொர்க்கத்திலே இருந்திருக்கோம்.'

அடுத்துவந்த அவர்களின் எண்ணங்கள் வார்த்தைகளால் இணையமுடியாதென்று மௌனத்தில் கரைந்தன.

'நாளைக்கு வேண்டாம். பணத்துக்கு ஏற்பாடு பண்ண ஒரு முக்கியமான வேலை இருக்கு. ஞாயத்துக்கிழமை வீட்டுக்கு வாயேன். உனக்கு வின்ஸ்டன்-சேலம் ஒண்ணரை மணிதான். ராத்ரிக்குள்ள திரும்பிப்போயிடலாம்' என்று அம்பிகா அழைத்தாள்.

'ராத்ரி என்னைத் தங்கவேண்டாம்னு சொல்றே, தெரியுது.'

பின்னணியில் வின்ஸ்டன்-சேலம் செல்லும் விமானத்தில் பயணிகள் ஏறுவதற்கான அழைப்பு. முதல்வகுப்பில் செல்லும் அவள் முதலில் நுழையலாம்.

'நான் போகணும். பை பெர்ரி!'

'பை அம்பிகா! நாளன்னைக்குக் கட்டாயம் வரேன்.' வரும்ஞாயிறு பொழுதை என்னசெய்வது என்ற கவலைவிட்டது.

நாளைக்குத்தான் எதையாவது யோசிக்கவேண்டும்.

பேசிமுடித்தவுடன் அங்கேயே உட்கார்ந்திருந்தான். இரண்டேமுக்காலுக்கு முதலில் சென்ற இருவரும் வெளியே வந்து, மௌனமாக நடந்து காரில் ஏறினார்கள். சிலநிமிடம் கழித்து அந்த இன்னொருத்தி. அவளைக்கண்டவுடன் வெள்ளி பிற்பகலில் செய்யவேண்டிய ஒருகாரியத்திற்காக பெரியசாமி எழுந்து, உயிரியல் கட்டடத்தின் திசையில் காலடிவைத்தான். பூச்செடிகள் அலங்கரித்த அகன்ற முன்வட்டத்தின் ஒருபுறமாக அவன் செல்லும்போது பின்னலிடாமல் காற்றில் அலைபோல் பறந்த கூந்தலோடு அவள் மற்றொருபுறமாக நடந்துவந்தாள். அவளொரு இந்தியப்பெண் என்பதில் சந்தேகமில்லை. அவள் அழுகை காதில்விழுந்து மனதை என்னவோ செய்தது. அனுதாபம் எழுந்தாலும் அவள் வருத்தத்தில் குறுக்கிடுவது சரியில்லையென நினைத்தான். புதிதாக ஒருவன் அவள்முன் சென்றுநின்றால் அவள் திடுக்கிடக்கூடும். அவளும் அவனைக் கவனித்ததாகத் தெரியவில்லை. சுற்றுப்புறத்தை மறந்து சிறுபெண்போல் ஒருத்தி அழுவதற்குக் காரணம் எதுவாக இருக்கும் என்ற கேள்வியுடன் உயிரியல் கட்டடத்தினுள் நுழைந்தான்.

குயின்சிடி கல்லூரியில் கார்மனின் குற்றச்சாட்டிற்குப்பிறகு வகுப்பிலும், அதை ஒட்டிய சிறுஅலுவலக அறையிலும் எந்தப்பேச்சுக்குரல் எழுந்தாலும் அது நோவானோ கணிப்பொறியில் பதிவாக ஏற்பாடு செய்திருந்தான். ஒவ்வொரு வெள்ளிமாலையும் வீட்டிற்குச் செல்லுமுன் அந்த உரையாடல்களில் தேவை என்று தோன்றுவதை சேமித்துவிட்டு, மீதியை அழித்து அடுத்த வாரத்திற்குத் தயார்செய்வது வழக்கம். அந்தமுறையில் கணினியில் அந்தவாரத்தின் பதிவுகளைக் கேட்கத்தொடங்கினான்.

அந்தத்திங்கள் விடுமுறையாதலால் செவ்வாயிலிருந்துதான் ஒலிகளின் ஆரம்பம். முதலில் பாடம், பிறகு வகுப்பு முடியும்போது கேள்விகள், அவற்றுக்கான பதில்கள். சிறப்பான கேள்விகளை மட்டும் கற்றுத்தருவதில் முன்னேற்றம் காண உதவுமென்று கேட்டான்.

'மனிதன் உட்பட எல்லா உயிர்களையும் ஆண்டவன் படைத்தான் என்று புனிதநூல் சொல்லும்போது பரிணாமத்தை நான் ஏன் கற்கவேண்டும்?' என்று கீச்சுக்குரலில் ஒருபெண்ணின் முறையீடு.

'நியாயமான கேள்வி. இதைப்பற்றி மற்ற மாணவர்களின் எண்ணங்களைத் தெரிந்துகொள்ள விருப்பம். சவிதா! நீ இதைப்பற்றி என்ன நினைக்கிறாய்?'

'நாம் எந்தக் காலஅளவைப் புரிந்துகொள்ள விரும்புகிறோம் என்பதை முதலில் தீர்மானிக்க வேண்டும். பரிணாமம் இந்த பூமியில் மூன்று பில்லியன் (நூறுகோடி) ஆண்டுகளாக இயங்கிவரும் உயிர்களைப் புரிந்துகொள்ள உதவும் ஒரு கோட்பாடு. ஐயாயிரம் ஆண்டுகளாகப் பதிவுசெய்யப்பட்ட மனிதசரித்திரத்தின் அர்த்தத்தைத்தேட மதநூல்கள் ஒருவழிகாட்டி' என்றாள் சவிதா.

'வெரி குட்! நான்கூட இவ்வளவு தெளிவாகச் சொல்லியிருக்க முடியாது. இந்த வகுப்பில் நாம் கற்கப்போகும் உயிரினங்களின் மாறுதல்கள் பல மில்லியன் ஆண்டுகளில் நடந்தவை. அவற்றைப் புரிந்துகொள்ள ஒருசில நூற்றாண்டுகளை மட்டும் கணக்கில் எடுத்துக்கொண்டு புனையப்பட்ட புனிதநூல்களைப் பயன்படுத்தப் போவதில்லை' என்று பெரியசாமி முடித்தான்.

மூன்றுமணிக்குப்பிறகு லின்டா, மோகன் இருவரின் உரையாடல். ஏபி அல்லாத அறிமுக உயிரியல் வகுப்பில் லின்டா என்கிற பெயரைக்கேட்ட நினைவு, அவளாக இருக்கலாம். ஏபி வகுப்பில் பதினைந்து பேர்கள்தான், அவர்களில் தனித்துத் தெரியும் மோகனும் அவன் தங்கை சவிதாவும் அவன் கவனத்தைக் கவர்ந்திருந்தார்கள். பாவம்! மோகன், லின்டா இருவருக்கும் டயாபெடிஸ் என்று தெரிகிறது. அதைப்பற்றி ஆரம்பித்த பேச்சு திடீரெனத் திசைமாறி கிளுகிளுப்பை உண்டாக்கியது. பெரியசாமியின் மனதில் கொடுத்துவைத்த பையனென்ற பொறாமை ஒருகணம் எழுந்து மறைந்தது. ரகசியம் என்கிற தலைப்பில் அதைத்தனியாக சேமித்துவைத்தான்.

அடுத்த மூன்று நாட்களில் வழக்கமான பாடங்கள், கேள்விகள். சேமிக்க வேண்டியது அதிகமில்லை. ஒலிப்பதிவை வேகமாக ஓட்டினான்.

வெள்ளி பிற்பகல் இரண்டுமணிக்குப்பிறகு ஒரு விசாரணை. அதற்காகத்தான் அறையைக் கேட்டார்கள் போல. கேட்பது சரியா என்று மனதில் விவாதிக்கும்போதே மிஸ் சிவம் என்று ஒருத்தி அறிமுகமானது கேட்டது. அவள்தான் பின்னதாக வெளியே வந்தவளாக இருக்க வேண்டும். எஸ். சிவம் என்ற பெயருக்கு முதல்நாள் ஒரு கடிதம் எழுதியது நினைவுக்கு வந்தது. அப்போது அது ஒருபெண் என்று தெரியாது. ஒருவேளை மிஸ் சிவம் அழுததற்குக் காரணம் அதில் இருக்கலாம் என்று தொடர்ந்து கேட்டான். சொந்தவிஷயமாக இருந்தால் நீக்கிவிடலாம். விசாரிப்பு மிஸ் சிவத்தின் அழுகையொலியோடு முடிந்தபோது ஜியார்ஜியாவில் நடந்த ஒருவழக்கு நினைவுக்குவந்து மனதை வாட்டியது.

அந்தக் குற்றச்சாட்டிற்குக் காரணமாக இருந்த செவ்வாய் பிற்பகல் உரையாடலைப் பெரியசாமி மறுபடியும் கவனமாகக் கேட்டான். முதலில், இந்தியாவிலிருக்கும் தன்பையன் மோகனுக்கும் இந்தவயதுதான் என்ற நினைவுவந்தது. பிறகு, சொந்தமென்ன, ஏதோவொரு இந்தியப்பையன் என்று மாற்றிக்கொண்டான். இறுதியில், இந்தியன் என்று ஏன் நினைக்க வேண்டும், ஒரு பதினேழுவயதுப் பையன், அவ்வளவுதான் என்று மனப்பான்மை விரிந்தது.

குற்றத்திற்கேற்ற தண்டனைதானே தர வேண்டும்? முதலில் இது குற்றமா, பரஸ்பர அனுதாபத்தினால் நிகழ்ந்துவிட்ட தவறுதானே. அந்தத் தவறில் இருவருக்கும் சமபங்கு இல்லையா? சிலநிமிட மகிழ்ச்சிக்காக வாழ்நாள் முழுவதும் கற்பிழந்தவளென்ற பட்டத்தைச் சுமக்கும் பெண்களின் அவலம்போல், இளமையின் துடிப்பில் செய்த தவறுக்கு ஓராண்டோ, சில ஆண்டுகளோ அவன் சிறைக்குப்போவது சரியா? யூ.எஸ்.ஸில் வெள்ளையர்கள் தவறு செய்தால் அவர்கள் மன்னிப்பைப் பெற்று வாழ்க்கையைத் தொடரலாம். அதிலும், தந்தத்தின் நிறத்தில் நீண்ட கூந்தலுடைய பெண்கள் எந்தத் தப்பிலிருந்தும் தப்பிவிடலாம். ஆனால், ஒரு இந்தியப் பையனுடைய வாழ்க்கையின் முன்னேற்றத்தை பாதிக்க, சிறைதண்டனை கூட வேண்டாம், இந்த குற்றச்சாட்டு வெளிவந்தாலே போதும்.

ஜான் குட்லிங்கின் வருத்தமும் கோபமும் நியாயமானவைதான். ஆனால், வழக்கு தண்டனை என்கிற தீவிரம்தான் புரியவில்லை. அவர் பேச்சிலிருந்து எவ்வளவு முனைப்பாக இருக்கிறாரெனத் தெரிந்தது. நிலைமை கைகடந்து போகும்வரை காத்திராமல் உடனே செயல்பட வேண்டும். அவன் வேலைக்கு ஆபத்துவருமோ என்ற அச்சம் குறுக்கிட்டது. தன்னிடமிருந்த ஒலிப்பதிவை மிஸ் சிவத்திடம் ஒப்படைத்துவிட்டுத் தன்பெயர் வெளிப்படாமல் ஒதுங்கிக்கொள்வது சாத்தியமென்று நினைத்தான்.

மாணவர்களின் பட்டியலில் சிவம் என்கிற கடைசிப்பெயரைப் பெரியசாமி தேடினான். மோகன் குமார், சவிதா ராணி இருவருக்கும் அம்மா மட்டும்தான் போலிருக்கிறது. வீட்டு எண் கிடைத்தது. அதை அழைத்தபோது பதிலில்லை. அவள் இன்னும் வீட்டிற்குச் செல்லவில்லை போலிருக்கிறது. அடுத்தது அவளுடைய செல்பேசி எண். தொடர்பு உண்டானபோது, 'ஹலோ! நான் உயிரியல் ஆசிரியன்' என்றான். பின்னணியில் பள்ளிக்கூட மார்ச்சிங் பான்ட் இசைத்த 'டைடானிக்' திரைப்படப்பாட்டின் ஒலி காதில் விழுந்தது. அவள் அருகில்தான் இருக்க வேண்டும். அவளை நேரில் சந்தித்துப்பேசலாமா என்று பெரியசாமி ஒருகணம் நினைத்தான். பிறகு அசௌகரியமான விஷயத்தைத் தொலைபேசியில் உரையாடுவது எளிதெனத் தோன்றியது.


அமர்நாத் அவர்களின் இதர படைப்புகள். தொடர் பகுதியில் வந்த இதர படைப்புகள்.
                         
Your Comments
 
rara
8/30/2010 , 5:35:47 AM

 [Comment url]
திருப்பம் அடுத்த வாரம் ஆவல் உடன் எதிர்பார்கிரேன்
Comment
உங்கள் கருத்து
பெயர் :
மின் அஞ்சல் :
சுட்டி :

Comment In:

Tamil English
(Type here in Thanglish and see tamil text in bottom. Tamil conversion powered by : www.suratha.com)
NOTE : Please do not use single quote in your comments. You can use double quote in place.
(English / தமிழில் - யூனிகோட்)
What you see in this box gets posted as feedback.

Hot properties in India

ஜோதிடம் கேளுங்கள் பகுதி தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. விரைந்து கட்டண சேவை பெற இங்கே சுட்டவும்.

 

 


 

 


About us | Team | Contact Us | Press | Feedback | Favourites | Communities | Shopping | Services | Site map

tamil magazines, Hindu devotional songs, tamil links, tamil movies, tamil songs, tamil dvd, tamil news, tamil, tamil comedy, tamil movie, tamil music DVDs, bharatanatyam, Yoga DVDs, carnatic music, tamil cinema, sivaji movie, cricket world cup, tamil ebooks, web design, web design resources, global warming, outsourcing, mutual funds, India Pakistan cricket series, Kuselan, India Cricket, Sultan The Warrior

A web magazine from Nilacharal Ltd
Privacy Policy|Terms of use|Disclaimer| Copyright Nilacharal Ltd - All Rights Reserved Worldwide