Home  
இதழ் 432

ஆகஸ்ட் 31 2009


Weekly Newsletter Subscription

Name
Email

Login

 

Username

Password

Click Here to Login

New Members!
Register Here..
 

Your Advertisement Here

 
  add nilacharal to your favourites nilacharal as your homepage  
Ravi
Access consciousness bars
Home>>தொடர்

திடீரென்று ...(20)
- அமர்நாத்

உங்கள் கருத்துகள்நண்பருக்கு அனுப்பபிரதி எடுக்க

“அதனாலென்ன? எவ்வளவுநாள் நீ தனியாக இருக்க முடியும்? நீ என்னையே நினைத்துக்கொண்டிரு என்று க்ரிஷ் எப்போதும் சொன்னதில்லையே.”

“அடப் பாவமே!” ராஜத்திற்கு ஏதோ புரிகிறமாதிரி இருந்தது. சிறு இடைவெளிக்குப்பின் “நீ எனக்கு வக்கீல் பார்க்கிறாயா? இல்லை கணவனைப் பிடித்துவிடுகிறாயா?” என்று கேட்டாள்.

“இரண்டும்தான்.”

“கிருஷ்ணன் என்னை விட்டுச்சென்று நேற்றோடு நான்கு மாதம்தானே ஆகிறது.”

“அதனாலென்ன? எவ்வளவுநாள் நீ தனியாக இருக்க முடியும்? நீ என்னையே நினைத்துக்கொண்டிரு என்று க்ரிஷ் எப்போதும் சொன்னதில்லையே.”

கோவிந்தராவ் வருவதைப் பார்த்து, “அப்புறம் பேசலாம். பை!” என்றாள்.

“ரத்னா இப்போது அழைத்தாள். உங்கள் மனைவியின் மறைவுக்கு என் அனுதாபங்கள்.”

“ம், என்னசெய்ய முடியும்? இழப்பு சுலபமானதல்ல. ஆனால், நம் மேல் கவனத்தைத் திருப்பவேண்டும் என்கிற அறிவுரையை
எனக்கும் சேர்த்துத்தான் சொன்னேன்.” ரசீதில் கையெழுத்திட்டு சாப்பாட்டு மேஜைமேல் வைத்தார்.

காரில் ஏறியபோது, “நான் இரண்டு மணிக்கு வீட்டில் இருந்தால் நல்லது” என்றாள் ராஜம்.

“அதற்குள் போய்விடலாம்.”

திரும்பிவரும்போது, இருவருமே வாழ்க்கையின் எந்த காலகட்டத்தைப் பற்றிப் பேசுவது என்கிற குழப்பத்தில் எதையும் பேசவில்லை. அவர் அவள் வீட்டின் முன்வட்டத்தில் நுழையும்போது, “நாம் மறுபடி சந்திக்கவேண்டும், ராஜம்! வெள்ளி மாலை முடியுமா?” என்று கேட்டார்.

“நான் எங்கும் போவதாக இல்லை. எதற்கும் அன்று காலை கூப்பிடுங்கள்.”

“ரத்னா உங்கள் செல்பேசியின் எண் தந்திருக்கிறாள். மறக்காமல் கூப்பிடுவேன்.”

கார் நின்றது. கோவிந்தராவ் எழுந்திருக்குமுன், “எல்லாவற்றுக்கும் நன்றி” என்று ராஜம் கதவைத் திறந்தாள்.

“எனக்கும் நேரம் சந்தோஷமாகச் சென்றது. கையெழுத்திட மறக்காதீர்கள்! நானில்லாவிட்டாலும் சட்ட அலுவலகத்தில் மற்றவர்கள் உதவுவார்கள்.”

“நாளை வருகிறேன். பை!”

காரிலிருந்து இறங்கியதும் ராஜத்தின் கண்ணில்பட்டது வீட்டுப் பாதை வழியில் நின்றிருந்த ஒரு பழைய ட்ரக். அதன் உச்சியில் ஒரு நீண்ட ஏணி. வலதுபுறத்தில் குடிதண்ணீர் வைக்க பழுப்பும் மஞ்சளும் கலந்த ஒரு பீப்பாய். பின்கதவில் ‘மைக்ஸ் ஃபிக்ஸிங்’ என்ற கோணலான எழுத்துகள். அது அங்கே எதற்கு வந்ததென்று அவளுக்குத் தெரியும்.
*****

சென்ற வெள்ளிமாலை எட்டுமணிக்கு, உடற்பயிற்சியை முடித்துவிட்டு ராஜம் நுழைவிடத்திற்கு வந்தாள். அங்கத்தினருக்கான அட்டைகள் இரண்டில் கிருஷ்ணனின் பெயரில் இருப்பதைத் திருப்பிக் கொடுத்துவிடலாம் என்று அன்றுதான் அவளுக்குத் தோன்றியது. உயர்மேஜைக்குப் பின்னாலிருந்து பயிற்சிக்கூடம் வருகிறவர்களைக் கண்காணிக்கும் இருவரில் ஒருத்தி எப்போதும் இருப்பவள், அறுபதுக்குமேல் இருக்கும். ப்ளீச் போடாமலே வெளுத்த தலைமயிர். அவளுக்கு உதவியாக ஓர் இளம்பெண், மாலையில் மட்டும் பார்க்கலாம். அச்சில் வார்த்தது போன்ற அழகு. கறுப்பென்றே சொல்லக்கூடிய நீண்ட கூந்தல். கல்லூரியில் சோஃபாமரென்று சொன்னதாக நினைவு. பேச்சு சுவாரசியத்தில் அவர்கள் ராஜத்தைக் கவனிக்கவில்லை. அவளும் அவர்களுடைய உரையாடலில் குறுக்கிடாமல் சற்றுத்தள்ளி நின்று காத்திருந்தாள். அவளுக்குத்தான் நேரத்துக்குப் பஞ்சமில்லையே, வீட்டிற்குப்போய் என்ன சாதிக்கப்போகிறாள்?

“பரவாயில்லையே ரீனா! இருபது வயதிலேயே வீடு வாங்கியிருக்கிறாய்.” பொறாமையா, பாராட்டா தெரியவில்லை.

“வாங்கவில்லை. என் அப்பாவின் பாட்டி எனக்கு எழுதிவைத்துச் சென்ற ஒரு பழைய வீடு. ஓய்வு நேரத்தில் மைக் மூன்று மாதம்
வேலைசெய்து அதை ஒருவழியாக ஒப்பேற்றியிருக்கிறான்.”

“நீ எப்போது அங்கே போகப்போகிறாய்?”

“இந்த வாரக்கடைசியில்.”

“வீட்டில் எல்லா ஃபர்னிசரும் இருக்கிறதா?”

“சாப்பாட்டு மேஜை-நாற்காலிகள் பாட்டி உபயோகித்தவை. சோஃபா, அலமாரி அம்மா தந்தாள். மூலையில் போடும் இரண்டு குட்டிமேஜைகள் ஒருவர் வீட்டுவாசலில் ஐந்து டாலருக்கு வாங்கினோம். இன்னும் படுக்கைதான் பாக்கி.”

ராஜம் மேஜைக்கருகில் சென்றாள். “எக்ஸ்க்யூஸ் மீ! நீங்கள் பேசியது என் காதில் விழுந்தது. ரீனா! என்னிடம் குயின் அளவில் ஒரு படுக்கை உபயோகமில்லாமல் இருக்கிறது. எடுத்துக்கொள்ள விருப்பமா?”

“அது எவ்வளவு?”

“ஒன்றுமில்லை. எனக்கு அது அவசியமில்லை. நீ வந்து எடுத்துச்செல்லலாம்.”

“நிச்சயமாகவா?” என்று தன் பழுப்பு நிறக்கண்களை விரித்தாள் ரீனா.

“ஆமாம். உண்மையில், நீ எடுத்துச்சென்றால் எனக்குப் பெரிய உதவியாக இருக்கும்.”

பேசிக்கொண்டே ரீனா கணினியின் திரையில் அவள் பெயரைக் கண்டெடுத்தாள். “மிஸ் க்ரிஷ்னன், 2 ஐவி கோர்ட்.”

“அதுதான்.”

“வரும் செவ்வாய் என் வகுப்பு முடிந்தவுடன் இரண்டுமணி சுமாருக்கு வரலாமா?”

“தாராளமாக. மூன்றுமணிக்கு முன்னால் என் பேரக்குழந்தைகளை அழைத்துவர நான் வெளியே கிளம்புவேன். அதற்குமுன் வேலை முடிந்தால் நல்லது.”

“ஞாபகம் வைக்கிறேன். தாங்க்ஸ், மிஸ் க்ரிஷ்னன்!” என்று எழுந்தாள். வேலைநேரம் முடிந்து அவள் வெளியே சென்றபிறகு ராஜம் தன்னிடமிருந்த பயன்படுத்தப்படாத அங்கத்தினர் அட்டையை மற்றவளிடம் திருப்பிக்கொடுத்தாள்.
*****

ரீனாவுக்கு உதவியாகச் சுருள்சுருளான தலைமயிருடன் இன்னொரு இளைஞன். ராஜத்தைப் பார்த்ததும் ட்ரக்கிலிருந்து இறங்கினார்கள். இருவரும் ஒரேமாதிரி நீல ஜீன்ஸிலும், ஆர்லான்டோ மேஜிக் டி-சட்டையிலும். முகமன்களுக்குப் பிறகு ராஜம் முன்கதவைத் திறந்து, “மாடியில் இருக்கிறது” என்றாள். வீட்டிற்குள் நுழைந்தவுடன் ஞாபகமாகக் காலணிகளைக் கழற்றியபின் அவளைத் தொடர்ந்தார்கள். மாடியில் நடைவழியைத் தாண்டி பிரதான படுக்கை அறை.

‘இவ்வளவு நன்றாக இருக்கிறதே’ என்ற அர்த்தத்தில் “இதுவா?” என்று ரீனா சந்தேகமாகக் கேட்டாள்.

ராஜம் தலையசைத்து, “மேலுறையை இன்று காலையில்தான் தோய்த்தேன்” என்றாள். ‘என் ஒருத்திக்கு இது மிகவும் பெரிது. இதில் தூக்கம் வராமல் நான் தவிக்கிறேன். உங்களுக்காவது பயன்படட்டும். இப்போதைக்கு விருந்தினர் தங்கும் அறையில் இருக்கும் படுக்கையே எனக்குப் போதும். யாராவது வந்தால் அப்போது பார்த்துக்கொள்ளலாம்.’

இருவரும் கட்டிலின் மேல்மெத்தையை எதிலும் இடிக்காமல் கவனமாகத் தூக்கிச்சென்றார்கள். திரும்பிவந்து மற்ற பகுதிகளைப் பிரித்து ஒவ்வொன்றாகக் கீழே எடுத்துச்சென்று ட்ரக்கின் பின்புறம் வைத்தார்கள். கடைசியாக தலைச்சட்டம், வேலை பதினைந்து நிமிடத்தில் முடிந்துவிட்டது. பேசிக்கொள்ளாமலேயே இருவருக்குள் என்ன ஒற்றுமை! அவன் ட்ரக்கின் பின்பக்கக்கதவை உயர்த்தி கொக்கியை மாட்டினான்.

வாசற்படியில் நின்றிருந்த ராஜம், “நினைவிருக்கட்டும், ரீனா! இந்தப் படுக்கைக்கு எந்தவித உத்தரவாதமும் கிடையாது” என்று சிரித்தாள்.

“உங்கள் நல்ல மனமே போதும். மிக்க நன்றி, மிஸ் க்ரிஷ்னன்!”

“கவனமாக ஓட்டுங்கள்!”

ரீனா விடைபெறுமுன் எதையோ கேட்பதுபோல் இளைஞனை ஒருகணம் பார்த்தாள். அவனும் பார்வையிலேயே ஒப்புதல் தந்ததாகத் தெரிந்தது. பிறகு ராஜத்திடம், “எங்கள் திருமணத்திற்கு நீங்கள் வரவேண்டும், மிஸ் க்ரிஷ்னன்!” என்றாள்.

“எப்போது?”

“அடுத்த திங்கள் மைக்கின் பதினெட்டாவது பிறந்தநாள். அதற்கடுத்த ஞாயிறு ஹாம்லின் கம்யூனிடி சர்ச்சில் திருமணம். அழைப்பிதழ் அனுப்புகிறேன்.”

“ஊரில் இருந்தால் கட்டாயம் வருவேன். இப்போதே என் வாழ்த்துக்கள்!” ரீனாவால் முடிகிறது, அவளால் முடியவில்லையே...
அவள் மனதில் எங்கேயோ ஒரு பொறி பற்றிக்கொண்டது,

“இன்னொருமுறை நன்றி, மிஸ் க்ரிஷ்னன், பை!”

அந்த வார்த்தைகள் அவள் காதில் விழவில்லை. அந்த இளையவர்கள் அவளை ஒருகணம் கூர்ந்து கவனித்துவிட்டு வண்டியைக் கிளப்பிச்சென்றது அவள் கண்ணுக்குத் தெரியவில்லை.
*****

சிலவாரங்களாக பூப்போட்ட மஞ்சள் தாவணி அணியத் தொடங்கியிருந்த அந்தப்பெண்ணுக்குக் கணக்கு போட்டுக்கொண்டே இருக்கவேண்டும். வாழ்க்கையில் வேறென்ன சந்தோஷம் இருக்கமுடியும்? ஒருநாள் இந்தி வகுப்பு தொடங்குமுன் யாரோ வைத்துவிட்டுப்போன கணித வினாத்தாளின் ஓரத்தில் எழுதியிருந்த விடைகளைச் சரிபார்க்கிறாள். முடியும்போது அவற்றை எழுதியவனே வந்துவிட்டான். அவனை ஏறிட்டுப்பார்க்கிறாள். காயத்ரிதேவியின் பையன் இவ்வளவு உயரம் வளர்ந்துவிட்டானா? செல்வத்தில் செழுமையாக வளர்ந்த மற்ற பெண்களைப்போல உருவமில்லை, உடைகளுமில்லை என்று நினைத்திருந்த அவளைப் பாடம் நடக்கும்போது அவன் ஏன் அடிக்கடி பார்க்கிறான்? தழுவுவதுபோன்ற அவன் பார்வைகள் அவளை ஏன் பரவசப்படுத்துகின்றன? ப்ராத்மிக் ஆரம்பித்த நாளன்றே தேவராஜன் சொல்லிவிட்டார், மே மாதத்தில் மூன்றுவாரம் பாடம் கிடையாதென்று. அப்போது அது ஒன்றும் முக்கிய செய்தியாகப் படவில்லை. நடுவில் வந்துசேர்ந்த அவன் அதுதான் சாக்கென்று இந்தி வகுப்புக்கு வருவதையே நிறுத்திவிட்டால்... அவளுக்குப் பகீரென்கிறது. அந்த மூன்றுவாரம் முடியும்போது அவள் முன்னாலேயே சென்று கொட்டகைக்குக் கீழே காத்திருக்கிறாள். அவன் உள்ளே நுழைவதைப் பார்த்து அவளுக்குண்டான கிளர்ச்சியைப் புத்தகத்தால் மறைப்பது சுலபமாக இல்லை. அவனைப் பிடித்திருக்கிறது என்று அவனிடம் சொல்லிவிடவேண்டும். சொன்னால்தான் பரபரக்கும் அவள் மனம் அமைதி அடையும். விரைவிலேயே ஒரு வாய்ப்பு கிடைக்கிறது. அவள் அம்மாவைச் சந்திக்க அவனை வீட்டிற்கு அழைத்துவருகிறாள். யாரும் பார்க்காதபடி ஒருசில வினாடிகள்தான். அதற்குள், ‘உன்னை எனக்கு ரொம்பப்பிடிச்சிருக்கு, உனக்கும்தானே’ என்று கண்கள் சொன்னாலும் “உனக்கு நானும் ட்யூஷன் சொல்லித்தருவேன்” என்ற சாதாரண வார்த்தைகள்தான் வெளிப்பட்டன. சிறுவயதிலிருந்தே அவள் நேரடியாகப் பேசித்தான் பழக்கம். குறும்பும், வேடிக்கையும் அவளுக்குத் தெரியாது. ஆனால் அவன் அவளை விளையாட்டுக்காக பேட்டிகாண வந்தபோது அவனுடன் சிரிக்கச் சிரிக்கப் பேசுவதை எங்கே கற்றாள்?

நிகழ்காலம் இத்தனை இனிமையாக இருக்கும்போது எதிர்காலத்தையெல்லாம் ஆரம்பத்தில் யார் யோசித்தார்கள்? சில ஆண்டுகள் கடந்தபோதுதான் எப்படி நடக்குமோ என்ற கவலை அவ்வப்போது தலைகாட்டிற்று. காயத்ரிதேவிமேல் அவளுக்கு மரியாதையும் நம்பிக்கையும் உண்டு, நிச்சயம் மறுப்பு சொல்லமாட்டாள். அந்தப்பெண் அவனைவிட இரண்டு வயதுதானே பெரியவள், பத்துக்கு மேலெல்லாம் இல்லையே. அப்படித்தான் அவள் நினைத்திருந்தாள், காயத்ரிதேவியும் நினைத்திருப்பாள்.
ஆனால், திடீரென்று ஒருநாள் கண்ணாடியில் பார்த்தபோது அவளுக்கு முப்பது வயது காட்டியது. பத்தாண்டுகள் எங்கே தொலைந்தன என்று தெரியவில்லை. ஒன்றுமட்டும் நிச்சயம், அவளுக்கு இன்னொரு முப்பதுவயதுக்காரன்தான் சரி, பதினெட்டு வயது இளைஞன் சரியில்லை. அதுவும் ஐந்து ஆண்டுகளாக உயிருக்கும் மேலாக அன்பு செலுத்தியவனுக்கு, அவளைக் கணிதமேதையென்று மதிப்பவனுக்கு அவள் பொருத்தமே இல்லை. அவனுக்கேற்ற அறிவும் அழகும் இளமையும் ஒன்றுசேர்ந்த ஒருத்தி பிறந்திருப்பாள்.
*****
எவ்வளவோ ஆண்டுகளுக்குமுன் நடந்த சம்பவங்களுக்கு இவ்வளவு சக்தியா? மூன்றேகால் மணிக்கு வீட்டின் நுழைவிடத்து மேஜைமேல் வைத்த அவள் கைப்பையில் செருகியிருந்த செல்பேசியின் அழைப்பு இருமுறை ஒலித்தும் அவள் காதில் விழாதது வியப்பில்லை. ஆனால், வாசலுக்கு அடுத்த அறையில் வைத்திருக்கும் தொலைபேசியின் சத்தமான மணிகூட அல்லவா அவளுக்குக் கேட்கவில்லை. நான்கு மணிக்குப்பிறகு உதிர்ந்த மழைத்துளிகள் அவளை நிகழ்காலத்துக்கு இழுத்துவந்தன. எவ்வளவு நேரம் நின்றிருந்தாள், எப்போது களைத்துப்போய் படியில் உட்கார்ந்தாள், எவ்வளவு நேரமாக அவளையும் மீறி கண்ணீர் ஆறாக வழிந்து சட்டையை நனைத்தது என்றெல்லாம் எதுவும் நினைவில்லை. எழுந்து கண்ணாடியை எடுத்து, கண்களைத் துடைத்துக்கொண்டாள். உள்ளே நுழைந்தபோது பக்கத்து அறையிலிருந்த தொலைபேசி ஒலித்தது.
அழைத்தது கவிதா.

“மாம்! நீ அமித்தையும் சாயாவையும் கூட்டிப்போக வராததால் அவர்கள் ஆசிரியையும், பிறகு நானும் செல்பேசியில் உன்னை அழைத்தோம். நான் தொலைபேசியிலும் பிறகு கூப்பிட்டேன். அப்போதும் பதிலில்லை. நானே அவர்களைப் பள்ளியிலிருந்து அழைத்துவந்து என்னிடம் வைத்துக் கொண்டிருக்கிறேன். உன் உடம்புக்கொன்றும் இல்லையே.”

“மத்தியானம் ரத்னா சிபாரிசு செய்த வக்கீலுடன் வெளியே போயிருந்தேன். சாப்பாட்டின் கனத்தால் தூங்கிவிட்டேன் போலிருக்கிறது.
கவிதா! மன்னித்துக்கொள்! இனி இந்தமாதிரி நடக்காது.”

“மாம்! இட்ஸ் ஓகே! ஒருநாள் தவறியதற்காக நீ வருத்தப்படாதே! எவ்வளவோ தடவை நீ என் குழந்தைகளைப் பார்த்துக் கொண்டிருக்கிறாய். நீ எப்படி இருக்கிறாய் என்று தெரிந்துகொள்ளத்தான் கூப்பிட்டேன். சுலபமாக எடுத்துக்கொள்!”

“அப்படியே செய்கிறேன். நாளை கூப்பிடு!”

“பை.”

தொலைபேசியை வைத்துவிட்டுத் திரும்பியபோது காத்திருந்ததுபோல் மறுபடி ஒலிக்கத் தொடங்கியது. கவிதா எதாவது சொல்ல மறந்துவிட்டாளோ?

“ஹலோ! உங்களுக்கு யார் வேண்டும்?”

“நான் பிரசன்னா!”
(தொடரும்)

அமர்நாத் அவர்களின் இதர படைப்புகள். தொடர் பகுதியில் வந்த இதர படைப்புகள்.
                         
Your Comments
Comment
உங்கள் கருத்து
பெயர் :
மின் அஞ்சல் :
சுட்டி :

Comment In:

Tamil English
(Type here in Thanglish and see tamil text in bottom. Tamil conversion powered by : www.suratha.com)
NOTE : Please do not use single quote in your comments. You can use double quote in place.
(English / தமிழில் - யூனிகோட்)
What you see in this box gets posted as feedback.

Hot properties in India

ஜோதிடம் கேளுங்கள் பகுதியில் விரைந்து பதில் பெற, விரிவான விளக்கம் பெற கட்டண சேவையைப் பயன்படுத்தலாம். மேலும் விவரங்களுக்கு...

 

 


 

 


About us | Team | Contact Us | Press | Feedback | Favourites | Communities | Shopping | Services | Site map

tamil magazines, Hindu devotional songs, tamil links, tamil movies, tamil songs, tamil dvd, tamil news, tamil, tamil comedy, tamil movie, tamil music DVDs, bharatanatyam, Yoga DVDs, carnatic music, tamil cinema, sivaji movie, cricket world cup, tamil ebooks, web design, web design resources, global warming, outsourcing, mutual funds, India Pakistan cricket series, Kuselan, India Cricket, Sultan The Warrior

A web magazine from Nilacharal Ltd
Privacy Policy|Terms of use|Disclaimer| Copyright Nilacharal Ltd - All Rights Reserved Worldwide

We use cookies on this website. By using this site, you agree that we may store and access cookies on your device. Find out more and set your preferences here . X