 |
இதழ் 484 |
 |
செப்டம்பர் 06 2010
|

|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
Your Advertisement Here
|
| |
|
| |
 |
add nilacharal to your favourites |
 |
nilacharal as your homepage |
|
|
|
|
| உறுதுணை தேடுமின்- 38
- அமர்நாத் |
| | இந்தமுறை பேசித்தான் ஆகவேண்டும். இல்லாவிட்டால் ஒரு டயாபெடிக் இளைஞனுக்கு சிறைவாசம். யோசித்துப்பார்! அது எத்தனை கொடூரம்! அவன் வாழ்க்கையே உன்வார்த்தையில் அடங்கி இருக்கிறது 'ஓ நீங்களா?' குரலைச் சிரமப்பட்டு சாதாரணநிலைக்குக் கொண்டுவர முயற்சித்தாள் குமாரி. ஆனாலும் வார்த்தைகளில் ஒரு கரகரப்பு. 'ட்யூக் செல்ல சவிதாவைத் தேர்ந்தெடுத்தற்கு மிக்கநன்றி. அதை ஏற்கும் கடிதத்தை திங்கள் அனுப்பலாமா? இன்று ஏதேதோ வேலைகள். நேரமில்லை.'
'தாராளமாக. அதற்காக நான் கூப்பிடவில்லை.'
திடீரென்று மாணவர்களின் இசைக்கருவிகள் அனைத்தும் உச்சத்தில் ஒலிக்கத்தொடங்கின. குமாரி அங்கிருந்து வேகமாக நடந்தாள்.
'மோகனைப்பற்றிச் சொல்லத்தான் அழைத்தேன்' என்றான்.
'அவன் வகுப்பில் ஒழுங்காகப் படிக்கவில்லையா?'
'அதெல்லாமில்லை. பாடத்தில் அக்கறையாகத்தான் இருக்கிறான்.'
கார் ஓடத்தொடங்கி உடனே நின்றுவிட்டதுபோல் உரையாடலில் ஒருமௌனம். அந்த ஆசிரியரின் குரல் பழக்கப்பட்டதுபோல் குமாரிக்குத் தோன்றியது. ஆனால் அவளுக்கிருந்த குழப்பத்தில் நினைவுகள் இயங்க மறுத்தன.
'நான் கூப்பிட்டது வேறொரு காரணத்திற்காக. தனியாகப் பேசமுடியுமா?'
'சொல்லுங்கள்!'
'பக்கத்தில் யாரும் இல்லையே.'
'இல்லை. நான் மட்டும்தான் நடக்கிறேன்.'
'நான் உயிரியல் கட்டடத்திற்கு வந்தபோது நீங்கள் அழுது சென்றதைப் பார்த்தேன்.'
குமாரிக்குத் தன்துயரத்தை இன்னும் யாரிடமாவது, அது அறிமுகமாகாத ஆசிரியராக இருந்தாலும், பகிர்ந்துகொண்டால் கொஞ்சம் குறையுமோ என்கிற நம்பிக்கை. அதிலும் அவன் குரலில் வெளிப்பட்ட பரிவு அவள் மனதைத் திறக்கவைத்தது.
'எப்படிச் சொல்வதென்று தெரியவில்லை. நான் என்பங்கிற்கு வாழ்க்கையில் நிறைய கஷ்டங்களை அனுபவித்திருக்கிறேன். அவற்றையெல்லாம் பொறுத்துக்கொள்ள முடிந்திருக்கிறது. ஆதரவாக மற்றவர்கள் இருந்திருக்கிறார்கள். இதுபோன்ற எல்லைகடந்த துன்பத்தை நான் அடைந்ததில்லை. இந்த விஷயத்தில் யாராவது எனக்கு உதவி செய்யமுடியுமா என்பதும் சந்தேகம்தான்.'
'எது உங்களைப் பாதித்தது என்று எனக்குத் தெரியும். நான் முன்னிருந்த இடத்தில் ஒருபெண்ணால் குற்றம் சாட்டப்பட்டு வேலையை இழந்தேன். அதனால், என்வகுப்பில் எழுகின்ற எல்லா குரல்களையும் நான் பதிவுசெய்கிறேன். அதிலிருந்து ஜான் குட்லிங் உங்கள் மகனைச் சிறைக்கு அனுப்பத்துடிப்பது தெரிந்தது. நான் அதைக்கேட்டது தவறுதான்.'
தான் விவரிக்காமல் அவனே அவளுடைய இக்கட்டான நிலையை அறிந்ததில் அவளுக்கு நிம்மதிதான். 'பரவாயில்லை, எப்படியும் இதெல்லாம் வெளியே வரத்தானே போகிறது.'
'வரவேண்டிய அவசியமில்லை. சுற்றி வளைக்காமல் சொல்லிவிடுகிறேன். செவ்வாய் நடந்ததில் இருவருக்கும் உடன்பாடு இருந்தது என்பதற்கு என்னிடம் நிரூபணம் இருக்கிறது. சொல்லப்போனால், அந்தப்பெண்ணின் இயற்கையான ஆர்வம்தான் அதை ஆரம்பித்து வைத்தது.'
குமாரிக்கு என்ன சொல்வதென்று தெரியவில்லை. கடந்த ஐந்தாண்டுகளில் மோகனையும், சவிதாவையும் வர்ஜினியா, நார்த் கரோலைனா மாநிலங்களில் இருக்கும் இரண்டு மூன்று குகைகளுக்கு அழைத்துச் சென்றிருக்கிறாள். எப்போதும் வழிகாட்டி செய்யும் ஒரு வித்தை நினைவுக்கு வந்தது. குகைக்குள் இருக்கும் விளக்குகளையும், கைவிளக்கையும் அணைத்துவிட்டு முழுஇருட்டு எப்படி இருக்குமென்று காட்டுவார். மூக்கருகில் விரலைவைத்தால்கூடத் தெரியாது, அப்படிப்பட்ட காரிருள். ஒரு தீக்குச்சியை ஏற்றி இந்த வெளிச்சத்தில்தான் அந்தநாளின் முன்னோடிகள் பள்ளத்தில் விழாமலும், குட்டையில் மூழ்காமலும், கல்லில் மோதாமலும் குகைக்குள் வந்து வெளியேறினார்கள் என்பார். இந்த வெளிச்சத்திலா என்று அனைவருக்கும் வியப்பாக இருக்கும். அது போலிருந்தது குமாரிக்கு. கும்மிருட்டில் தீக்குச்சியின் ஒளிகூடப் போதும்.
'அவர்களின் டிஎன்ஏ சான்றுக்குமுன் இது எடுபடுமா?'
'கோர்ட்வரை சென்றால் என்ன நடக்குமென்று சொல்லமுடியாது. அதுவரை ஏன் போகவேண்டும்? அந்தப்பெண் தன் அப்பாவின் கோபத்திற்குப் பயந்து பொய்சொல்லி இருக்கலாம். அவர் பேச்சில் தன்னம்பிக்கை தெரிந்தது.'
'கொஞ்சம்கூட அவர் இரங்கவில்லை' என்றாள் வருத்தத்துடன்.
'டிஎன்ஏ ஆதாரம் நிச்சயம் நடந்ததை நிரூபிக்குமென்ற தைரியம். இதைப் போட்டுக்காட்டினால், கதவைத்திறந்து மூடுவது போன்று நிச்சயமாகிவிட்ட வழக்கு என்ற அவர் நம்பிக்கை ஆட்டம் காணலாம்.'
அவனுடைய குரலில் தெரிந்த உறுதி அவன் கையில் தீக்குச்சிக்குப்பதிலாக தீப்பந்தம் பிடித்திருப்பதுபோல் குமாரிக்குத் தோன்றியது. நடந்துகொண்டே பள்ளியின் வாயிலுக்குமுன் வந்தவள் அங்கிருந்த கைப்பிடிச்சுவரில் அமர்ந்தாள்.
'நான் எப்படிப்பட்ட விடுதலை உணர்ச்சியை அனுபவிக்கிறேன் என்று உங்களுக்குத் தெரியாது' என்று சொல்லும்போது குமாரிக்கு அழுகையே வந்துவிட்டது. 'தண்ணீரில் மூழ்கும்போது கைதூக்கிவிட்ட மாதிரி. நான் என்ன நன்றி சொன்னாலும் அது வெறும் வார்த்தைதான்.'
'அவசியமே இல்லை. சில ஆண்டுகளுக்குமுன் ஜியார்ஜியாவில் இந்தமாதிரியொரு சிறுதவறுக்காக சிறைக்கு அனுப்பப்பட்டு வாழ்க்கை பாழான ஒரு பதினேழுவயதுப் பையனின் அவலத்தைப் படித்தபோது என்ன அக்கிரமமென்று தோன்றிது.
அதைப்போல இன்னொரு அநியாயம் நடக்காமல் தடுக்க எனக்கொரு வாய்ப்பு கிடைத்திருக்கும்போது நான் எப்படி நழுவவிட முடியும்?'
'நீங்கள் உரையாடல்களைப் பதிவுசெய்தது எங்கள் அதிருஷ்டம்.'
'எனக்கும் மகிழ்ச்சிதான். ஆனால், என்பெயர் வெளிவராமல் பார்த்துக்கொள்வது மிக அவசியம்.'
அவளுக்கிருந்த குழப்பத்தில் அவன் பெயரைக் கேட்காமலேயே அதுவரை பேசிக்கொண்டிருந்தது நினைவுக்கு வந்தது. 'உங்கள் பெயரைச் சொல்லவில்லையே' என்றாள்.
'ஏற்கனவே தெரிந்திருக்கும் என்று நினைத்தேன். பெரியசாமி புதுமலை, மாணவர்கள் பெர்ரி என்றழைப்பார்கள்.'
குமாரியின் எண்ணங்கள் பின்னோக்கிப் பறந்தன. ஆசிரியரின் குரல் பரிச்சயப்பட்டதுபோல் தோன்றியதன் காரணம் புரிந்தது. உரையாடலை நிறுத்தாமல், 'நீங்கள் எனக்கு உதவியது யாருக்கும் தெரிய வேண்டியதில்லை. அது நம்முடைய ரகசியமாகவே இருக்கும்' என்றாள்.
'அந்தப்பதிவை உங்கள் ஈ-முகவரிக்கு அனுப்பட்டுமா?'
'அது சரியில்லை. அது உங்களிடமிருந்து வந்ததென்று மற்றவர்கள் கண்டுபிடிக்கக்கூடும்.'
'நான் ஒரு டிஸ்கில் போட்டுத்தருகிறேன்.'
அவனிடம் சென்று வாங்கிக்கொள்ளலாமா? அதைவிடச் சிறந்த ஒருவழி. 'இன்று என்வீட்டிற்குச் சாப்பிடவரும்போது அதைத்தரலாமே! நண்பர் என்கிற முறையில்தான் அழைக்கிறேன். என் குழந்தைகளின் மார்க்கை உயர்த்த அவர்களின் ஆசிரியருக்கு நான்தரும் லஞ்சமல்ல' என்றபோது மழைக்குப்பிறகு வந்த வெயில் மாதிரி அவளுக்குப் புன்னகைகூட வந்தது.
'சவிதாவின் க்ரேடை உயர்த்துவதென்றால் நூற்றுப்பத்துக்கும் மேலே செல்லவேண்டும். இதுவரை இரண்டு வாரங்கள்தான் பாடம் எடுத்திருக்கிறேன். ஆனால் என்னுடைய ஆசிரியத் தொழிலில் அவளைப்போன்ற அறிவும் ஊக்கமும் நிரம்பிய ஒருபெண்ணை நான் கண்டதில்லை. அப்படிப்பட்ட புத்திசாலியின் தாயைச் சந்திக்க ஆசை. கட்டாயம் வருகிறேன். எத்தனை மணிக்கு?'
'ஏழுமணிக்குப்பிறகு எப்போது வேண்டுமானாலும். என்னுடைய அழைப்பு உங்கள் குடும்பத்திற்கும்.'
'மாணவர்கள்தான் என் குழந்தைகள். என் மனைவியும் நானும் சமீபத்தில் பிரிந்துவிட்டோம்.'
'ஐ'ம் சாரி!' என்பதுக்குமேல் குமாரிக்குச் சொல்லத்தோன்றவில்லை.
விடைபெறுமுன் அவன், 'உங்கள் முகவரி மாணவர் புத்தகத்தில் '2ஏ வைல்ட்வுட் கோர்ட்' என்றிருக்கிறது, அதுதானே' என்று கேட்டான்.
'ஆமாம்.'
'கட்டாயம் வருவேன், மிஸ் சிவம்!'
'பை மிஸ்டர் பெர்ரி!' என்று அவள் தழைந்த குரலில் சொன்னவுடன் தொடர்பு அறுந்தது.
பெரியசாமியைப் பற்றி மேலும் யோசிப்பதற்குமுன் அவள் உடனடியாகச் செய்யவேண்டிய காரியம் ஒன்றிருக்கிறது. குட்லிங் தந்த வணிக அட்டையில் அலுவலகத் தொலைபேசி எண் இருந்தாலும் அவருடைய வீட்டை அழைப்பது மேல் என்று தோன்றியது. பள்ளி அலுவலகத்திற்குள் சென்றாள். வெள்ளி முடிக்கவேண்டிய வேலைகளைக் கவனிக்க ஒருபெண். குமாரியைப் பார்த்து புன்னகைத்தாள். 'ஒரு கைகொடுக்கிறாயா?'
'இன்று முடியாது' என்று குமாரி மன்னிப்புக் கேட்டாள். 'இன்னொரு வெள்ளி, நிச்சயமாக உதவுவேன்.'
அப்போது உயிரியல் கட்டடத்திலிருந்து வெளியில்வந்த பெரியசாமி சுற்றிப்பார்த்தான். டென்னிஸ் கோர்ட்டிலிருந்து இரைச்சல் ஒருபக்கம். டைடானிக் படப்பாடலை ஐந்தாவதுமுறையாக ஒத்திகை பார்க்கும் இசைக்குழு இன்னொரு பக்கம். ஆனால் பள்ளியின் முன்புறம் காலியாக இருந்தது. மிஸ் சிவம் வீட்டிற்குச் சென்றுவிட்டாள் போலிருக்கிறது. எப்படியும் அவளைச் சந்திக்கப்போகிறோமே என்று கார் நிற்குமிடம்வரை சென்று அதைக் கிளப்பினான்.
தொலைபேசிப் புத்தகத்தில் குட்லிங்கின் வீட்டு எண் குமாரிக்குக் கிடைத்தது. வீட்டில் ஜேன் மட்டுமிருந்தால் இன்னும் நல்லது. அவள் கொஞ்சம் இரக்கம் காட்டலாம். அலுவலகத்திற்கு வெளியில் யாருமில்லை. அங்கிருந்த பெஞ்ச்சில் உட்கார்ந்து குட்லிங் இல்லத்தை அழைத்தபோது மறுபக்கம் எடுக்கப்பட்டது, ஆனால் குரல் உடனே வரவில்லை.
'ஹலோ! நான் மிசஸ் ஜேன் குட்லிங்குடன் பேசமுடியுமா?' என்றாள் அதிகப்படியான பணிவுடன்.
தயக்கத்துடன் பதில் வந்தது. 'அவள் இல்லையே. அப்பாவுடன் வெளியே சென்றிருக்கிறாள். திரும்பிவரும் நேரம்தான். வந்தபிறகு கூப்பிடச் சொல்கிறேன். நீங்கள்?'
'நான் எஸ். சிவம், மோகனின் அம்மா. லின்டா! தயவுசெய்து நான் சொல்வதை...' முடிப்பதற்குள் டக். அவள் தனியாக இருக்கிறாள். அதுவும் நல்லதுதான். வாதியிடமே மன்றாடிப் பார்க்கலாம்.
மறுபடி அழைத்தபோது எதிர்பார்த்தபடி ஒலிவாங்கி எடுக்கப்படவில்லை. 'லின்டா! மோ உன்னைக் கட்டாயப்படுத்தவில்லை என்பதற்கு என்னிடம் ஆதாரம் இருக்கிறது' என்ற செய்தியோடு தன் செல்பேசியின் எண்ணையும் பதித்தாள். லின்டாவிடமிருந்து பதில்வர அதிக நேரம் காத்திருக்கவில்லை.
'ஹாய் மிஸ் சிவம்! உங்களுக்கு என்ன வேண்டும்? என்னை ஏன் தொந்தரவு செய்கிறீர்கள்?' குரலில் கோபத்தைவிட சலிப்புதான் அதிகமாக இருந்தது.
'நீதான் காரணம் சொல்லவேண்டும்.'
நீண்ட மௌனம். யோசிக்கிறாள் போலிருக்கிறது.
'என் பெற்றோரின் கோபத்திற்குப் பயந்து பொய்சொன்னது உண்மைதான். அது அத்துடன் முடிந்துவிடுமென்று எதிர்பார்த்தேன். வழக்குவரை போகுமென்று நான் நினைக்கவேயில்லை. நான் அவர்களை எதிர்த்துப்பேசியது கிடையாது.'
'நீ இந்தமுறை பேசித்தான் ஆகவேண்டும். இல்லாவிட்டால் ஒரு டயாபெடிக் இளைஞனுக்கு சிறைவாசம். யோசித்துப்பார்! அது எத்தனை கொடூரம்! அவன் வாழ்க்கையே உன்வார்த்தையில் அடங்கி இருக்கிறது.' சிறிது நேரம்கொடுத்துப் பிறகு தொடர்ந்தாள்.
'மோகன் செய்தது தவறுதான், மறுக்கவில்லை. எப்படி, யார் ஆரம்பித்திருந்தாலும், அவன் மனம் வைத்திருந்தால் கடைசிக் கட்டம் போவதற்குமுன் நிறுத்தியிருக்கலாம். அவனைப் பெற்று வளர்த்தவள் என்பதற்காக உன்னிடம் மன்னிப்பு கேட்கிறேன்.' குமாரியும் ஒருகாலத்தில் பதினேழுவயதுப் பெண்ணாக, மற்றவர்கள் துயரத்திற்கு இரங்கும் இளகிய மனதுடன் இருந்திருக்கிறாள்.
'நான் சொல்வதை அவர்கள் கேட்காவிட்டால்...' என்றாள் லின்டா கைவிட்ட குரலில். 'என் அப்பா இந்தத் தவறை ஏன் இவ்வளவு பெரிதுபடுத்துகிறார் என்று தெரியவில்லை.'
'செவ்வாய் நடந்ததற்கு முழு ஒலிப்பதிவு இருக்கிறதென்று அவரிடம் சொல்! அப்போது அவர் மனம் மாறலாம். அவர் சந்தேகப்பட்டால் அதன் பிரதியை என்னால் அனுப்ப முடியும்.'
'முதலில் என் அம்மாவுடன் பேசிப்பார்க்கிறேன்.'
'தயவு செய்து...'
'அவள் புரிந்துகொள்வாள் என்றுதான் நினைக்கிறேன்.'
'இதுபோதாதென்று மோகனை யாரோ தொலைபேசியில் மிரட்டுகிறார்கள்.'
'அது நானில்லை, மிஸ் சிவம்! பெக்கியிடம் சொன்னது தவறாகப் போய்விட்டது.'
'நீ முதலிலேயே நடந்ததை உன் அம்மாவிடம் ரகசியமாகத் தெரிவித்திருந்தால் எவ்வளவோ நன்றாக இருந்திருக்கும். போகட்டும், இதுபற்றி இனி இன்னும் பலருக்குத் தெரிவதால் யாருக்கும் லாபமில்லை.' அறிவுரையோடு உரையாடலை முடித்துக் கொள்ளாமல், 'உன் ஒத்துழைப்பிற்கு மிக்க நன்றி, லின்டா! இந்த விவகாரம் இப்படியே முடிந்துவிட்டால் உன்னுதவியை நான் எப்போதும் மறக்கவேமாட்டேன். இன்னொன்று, மோகன் ஏதோவொருவிதத்தில் உனக்குக் கடமைப்பட்டிருக்கிறான் என்று நீ நினைத்தால் என்னிடம் தயங்காமல் சொல்லலாம்' என்றாள்.
'உங்கள் இந்த வார்த்தைகளை நினைவில் வைத்துக்கொள்வேன்' என்ற லின்டாவின் குரலில் பயத்திற்குப் பதிலாக அன்பின் நெருக்கம்.
'பை லின்டா!'
'பை மிஸ் சிவம்!'
பள்ளியின் கதவுகளைச் சாத்த வேண்டிய நேரம். குமாரி வெளியில் வந்து நடையைத் தொடர்ந்தாள்.
|
| | அமர்நாத் அவர்களின் இதர படைப்புகள்.
| தொடர் பகுதியில் வந்த இதர படைப்புகள்.
|
|
|
|
|
|