 |
இதழ் 484 |
 |
செப்டம்பர் 06 2010
|

|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
Your Advertisement Here
|
| |
|
| |
 |
add nilacharal to your favourites |
 |
nilacharal as your homepage |
|
|
|
|
| சங்கம் காண்போம்- 22
- சித்ரா பாலு |
| | என்னுள் புதைந்து கிடக்கும் அந்த இன்பத்தேனை யாரிடமாவது சொல்லத் துடிக்கின்றேன். என் நண்பர்களிடம் கூட சொல்ல முடியாத அந்த ரகசியத்தை உன்னுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன் "நாங்கள் இப்போது புறப்படப் போகிறோம் நீ என்ன செய்யப் போகிறாய்?" என்று தலைவனைத் தாய் கேட்டு கொண்டிருக்கும் போதே, தந்தை "அவன்தான் படிக்க வேண்டும் என்று சொல்லி விட்டானே ஏன் தொந்தரவு செய்கிறாய்?" என்று அதட்டினார்.
"சரி உன் விருப்பம்! இரண்டு நாட்களுக்குத் தேவையான உணவைத் தயாரித்து வைத்திருக்கிறேன். நேரம் தவறாமல் உண்ண வேண்டும் தெரிந்ததா?" என்று பாசத்தோடு கூறினாள் தாய். இன்னும் சில வேலைகளையும், சில அறிவுரைகளையும் கூறிய பின்னர் தலைவனின் தாயும் தந்தையும் கிளம்பிச் சென்றனர்.
அவர்கள் இருவரும் குலதெய்வக் கோயிலில் நடைபெறும் திருவிழாவிற்குச் செல்கின்றனர். தலைவனும் வர வேண்டும் என்றுதான் பெற்றோர்கள் விரும்பினர். ஆனால் படிப்பு, வகுப்பு என்று ஏதேதோ கூறி தலைவன் தப்பித்து விட்டான். இப்போது தனிமையில் என்ன செய்யப் போகிறான்?
அப்பாடா! யாரும் இல்லாத வீடு சொர்க்கமாக இருந்தது அவனுக்கு. தலைவியைப் பற்றி எவ்வித தடையும் இன்றி சிந்தித்துக் கொண்டே இருக்கலாம் என்று நினைத்து மகிழ்ந்தான். கடந்த சில நாட்களாக தலைவன் தன் நண்பர்கள் கூட்டத்துடன் கூட சேராமல் தனியாகத்தான் இருந்தான். நண்பர்கள் பல முறை அவனைக் கேட்டுப் பார்த்தார்கள். அவன் தாயும் அவனுடைய விசித்திரமான போக்கைப் பற்றிக் கேட்டாள். ஏதோ காரணம் கூறி சமாளித்தான். தனிமையில் அமர்ந்து ஒவ்வொரு வினாடியும் தலைவியுடன் சல்லாபித்ததை- அந்த இன்ப நினவுகளைத் திரும்ப திரும்ப எண்ணி அனுபவிக்கத் துடித்தான். இதோ! இன்றுதான் அவனுக்கு அந்த வாய்ப்பு கிடைத்துள்ளது. சரி தனிமை கிடைத்து விட்டது. ஆனால் மனதினுள் இருக்கும் அந்த இனிமையான, இன்பமான நினைவுகளை யாரிடம் பகிர்ந்துகொள்வது? தலைவியுடன் தனிமையில் அந்தரங்கமாக இருந்ததை எவரிடம் பகிர்ந்துக் கொள்ள முடியும் என்று குழம்பினான். சுற்றும் முற்றும் பார்த்தான். 'இதோ இந்த நிலைக் கண்ணாடிதான் உசித்தமானது' என்று முடிவிற்கு வந்தான்.
தலைவனுக்கும் தலைவிக்கும் ஏறத்தாழ ஆறு ஆண்டுகளாக பழக்கம். தலைவனுக்குச் சம்மதம் அளிக்கவே இரண்டு ஆண்டுகள் கடத்தி விட்டாள் தலைவி! பின்னர் தலைவனுடன் பேச ஆரம்பிக்க இரண்டு ஆண்டுகள்… என்று இப்படி நிதானமாக ஆரம்பித்து... . நிலையாக இருந்து வருவதுதான் தலைவனின் காதல்! இன்று வரை... இல்லை... சென்ற வாரம் வரை அவர்கள் இருவரும் தனியே எங்கும் சந்தித்ததில்லை. ஏதாவது பொது இடங்களில். . கோயிலில், திருவிழாக்களில். . என்று மக்கள் கூடுகின்ற இடங்களில்தான் அதுவும் தோழியின் அருகாமையில்தான் சந்திப்பார்கள். கண்களால்தான் பேசிக் கொள்வார்கள். தேவையென்றால் தோழி பேசுவாள். வெறும் பார்வை தரிசனத்திலேயே மனம் நிரம்பி விடுவான் தலைவன். அவனுடைய நண்பர்கள் பலரும் தத்தம் தலைவியுடன் 'இங்கு சென்றோம். . அங்கு சென்றோம்' என்று இவனைச் சீண்டும் போதும் இவன் அமைதியாகவே இருப்பான். தன் தலைவியின் சிறப்புத்தன்மையே அவளின் அச்சம், அமைதி, நாணம், மென்மை என்று எண்ணி அவற்றை வெகுவாக ரசித்தான். இப்படியாக தலைவியின் உணர்வுகளைப் புரிந்தவனாக இருந்த தலைவனுக்குப் போன வாரம் ஒருநாள் தோழி இன்பாதிர்ச்சியைத் தந்தாள்!
"தலைவனே நாளை மறுநாள் தலைவியின் வீட்டினர் அனைவரும் வெவ்வேறு அலுவல் காரணமாக வெளியூர் செல்ல இருக்கின்றனர். தலைவியும் நானும் மட்டுமே இருப்போம். நீ மாலை ஐந்து மணிக்குப் பின்வாசல் வழியாக வா. . தலைவி உன்னை எதிர்பார்த்துக் காத்திருப்பாள். ." என்று கூறி விட்டுச் சென்றாள். தலைவன், 'கனவா. . நனவா' என்று சுதாரிப்பதற்குள் தோழியும் சென்று விட . திகைத்துப் போனான். 'தலைவியா சொல்லியனுப்பினாள்?' என்று மீண்டும் மீண்டும் தோழி சொன்னவற்றை நினைவுபடுத்திக் கொண்டிருந்தான். அந்நாளின் வரவிற்காக ஆவலாக காத்திருந்தான். தன் அன்பை, ஆசையை, காதலை, ஆதரவை தலைவியிடம் முழுமையாகக் காட்டிவிட எண்ணினான். அந்த நாளும் வந்தது.
அவள் வீட்டிற்கு சென்று வந்த நாளிலிருந்துதான் தலைவன் இப்படி பிரமை பிடித்தது போல் ஆகி விட்டான். என்ன நேர்ந்திருக்கும். . ? இதோ! இந்தக் கண்ணாடி முன்னால் நின்றுகொண்டு என்ன செய்கின்றான்?
கண்ணாடியின் முன் நின்றிருந்த தலைவன் கண்ணாடியைத் தன் நெஞ்சமாக எண்ணிக்கொண்டான். எப்படி ஆரம்பிப்பது என்று தெரியாமல் கொஞ்சநேரம் மௌனமாக இருந்தான். பின் "நெஞ்சே.." என்று யாரும் இல்லாத தைரியத்தில் உரக்கக் கூப்பிட்டான். "என்னுள் புதைந்து கிடக்கும் அந்த இன்பத்தேனை யாரிடமாவது சொல்லத் துடிக்கின்றேன். என் நண்பர்களிடம் கூட சொல்ல முடியாத அந்த ரகசியத்தை உன்னுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்!"
தன் கண்களாலும் புன்முறுவலாலும் பேசாமல் பேசி என்னை வசப்படுத்திய தலைவியைக் காண அவர்கள் வீட்டிற்குச் சென்றேன். தோழிதான் புறக்கடையில் நின்றிருந்தாள். என்னைப் பார்த்தவுடன் சீக்கிரமாக உள்ளே வருமாறு ஜாடை செய்தாள். உள்ளே சென்றதும் கதவு அடைக்கப்பட்டது. திரும்பினேன்.. . என் தலைவி! நாணத்தினால் இன்னும் அதிகமாக சிவந்து. . தலை கவிழ்ந்து நின்றிருந்தாள். என் உதடும் நாக்கும் உலர எனக்கு பேச்சு வரவில்லை. "தலைவி" என்றேன் மெதுவாக. "உம்" என்றாள். மெல்ல அவள் அருகில் சென்று கைகளைப் பற்றினேன். மறுப்பு ஏதும் சொல்லவில்லை. மனம் துள்ளிற்று. அவளை மெதுவாக என் பக்கம் சாய்த்தேன். ஒத்துழைத்தாள். அவளுடைய நீண்ட கூந்தலும், நெற்றியின் அழகும் என்னைக் கிறங்க அடித்தன. மிக நெருக்கமாக அவள் நின்றிருந்தாள். அவளிடமிருந்த வந்த அந்த இனிமையான நறுமணம். . . ! அம்மம்மா. . . வாழ்வில் நான் இதுவரை அறிந்திராத ஒன்று! 'எங்கிருந்து வருகின்றது' என்று ஒவ்வொரு அங்கமாக. . முகம், கழுத்து, மார்பு, கைகள் என்று நுகர்ந்தேன். . நுகர்ந்தேன்.. . நுகர்ந்து கொண்டேயிருந்தேன். . இறுதி வரை கண்டுபிடிக்க முடியவில்லை! அவளுடைய அங்கம் ஒவ்வொன்றும் மிக நேர்த்தியாக. . மிக கச்சிதமாக. . அமைந்திருப்பதைக் கண்டு வியந்து போனேன். அவள் அழகைப் புனைந்து பாராட்ட வார்த்தைகளே இல்லை. வார்த்தைக்குள் அடங்காத பேரழகு அவள்! என் கண்களுக்கும், நாசிக்கும் இன்பத்தைத் தந்தவள் என் செவிகளுக்கு அவ்வளவாக இன்பம் தரவில்லை. ஆம்! வெறும் சில சொற்களே. . அதுவும் மென்மையாகவே பேசினாள். அவளை அள்ளி அணைத்துக் கொள்ள ஆவல் மீறியது. மார்புறத் தழுவிக் கொண்டேன். அப்பப்பா! என்ன மென்மை... என்ன மென்மை! பஞ்சணையைத் தழுவிக்கொண்டது போல் இருந்தது. ஆனந்தத்தில் கண்கள் மூடி கிடந்தோம்... உலகம் அங்கேயே அப்படியே நின்று விடக்கூடாதா என்று ஏங்கினேன். தோழியின் காலடி ஓசையால் விலகினேன். நெஞ்சே! சுருக்கமாகக் கூறினால் என் தலைவி என் ஐம்புலன்களுக்கும் பேரின்பத்தைத் தந்து விட்டாள். எனக்கு இதுவே போதும்! என் அந்தரங்க அனுபவத்தை உன்னைத் தவிர யாரிடம் கூறுவேன். நன்றி என் நெஞ்சே! நன்றி! என்று உணர்ச்சி மிகுந்தவனாக தலைவன் பேசினான். இக்காட்சி குறுந்தொகையில் அமைந்துள்ளது.
குறிஞ்சித்திணை தலைவன் கூற்று ஒடுங்குஈர் ஓதி ஒண்ணுதற் குறுமகள் நறுந்தண் நீரள் ஆர்அணங் கினளே இனையள் என்றுஅவட் புனைஅளவு அறியேன் சிலமெல் லியவே கிளவி அணைமெல் லியள்யான் முயங்குங் காலே! ஓரம்போகியார்
ஒடுங்கிய ஒளிபொருந்திய கூந்தலை உடைய இவள் உடல் முழுதும் நறுமணம் மிக்கவள்! பேரழகுடையவள்! புனைந்துரைக்க வார்த்தைகள் அறியேன். சிலவாகிய மென்சொற்கள் உடையவள்! அணைக்கும் போது பஞ்சணை போன்று மென்மையானவளே!
|
| | சித்ரா பாலு அவர்களின் இதர படைப்புகள்.
| ஸ்பெஷல்ஸ் பகுதியில் வந்த இதர படைப்புகள்.
|
|
|
|
|
|