Home  
இதழ் 433

செப்டம்பர் 07 2009


Weekly Newsletter Subscription

Name
Email

Login

 

Username

Password

Click Here to Login

New Members!
Register Here..
 

Your Advertisement Here

 
  add nilacharal to your favourites nilacharal as your homepage  
Madhavan
Astrology paid service
Home>>தொடர்

திடீரென்று ...(21)
- அமர்நாத்

உங்கள் கருத்துகள்நண்பருக்கு அனுப்பபிரதி எடுக்க

என் அம்மாவும் நானும் எவ்வளவோ உங்களுக்குக் கடமைப்பட்டிருக்கோம். நான் மனசார எந்தத்தப்பும் பண்ணலை. இனிமே அவனுக்கா தோணினாத்தான் உண்டு, நான் எதாவது சொன்னா அவனுக்கு வைராக்கியம் இன்னும் ஏறத்தான் செய்யும்’னேன்.

...நான் பெரிய அதிருஷ்டசாலியா இருந்திருக்கணும்.
இப்படிப்பட்ட அனுபவம் யாருக்குக் கிடைக்கும்?

பிரசன்னா அழைப்புமணியை அழுத்துமுன்பே வாசற்கதவு திறந்தது. தலையைத் திருப்பி நிமிர்ந்து பார்த்தான்.

“என்ன பிரசன்னா! உள்ளே வரலாமா வேண்டாமான்னு யோசனை பண்ணிண்டிருக்கியா?” என்றாள் கதவைப்பிடித்து காத்துநின்ற ராஜம். “நெத்திதான் அகலமாப் போயிருக்கு. மத்தபடி முன்னபாத்த மாதிரிதான் இருக்கே.”

நுழைவிடத்தின் அடுக்குவிளக்கிற்குக் கீழே அவள் உருவத்தைக் கண்டான் பிரசன்னா. ‘நீ நான் கடைசியா பாத்ததுக்கு இன்னும் அழகாவே இருக்கே, ராஜம்!’ வார்த்தைகளை வெளியேறாமல் சிரமப்பட்டுத் தடுக்க வேண்டியிருந்தது. தோளுக்கும் கீழே இறங்கிய கூந்தல் அலைபோல் பறந்தது. வெள்ளிக்கம்பி ஃப்ரேமில் கண்ணாடி. இடையில் பான்ட்ஸூக்கும் டைட்ஸூக்கும் நடுப்பட்ட ஓருடை. மேலே முழங்கைவரை வந்த மஞ்சளில் பூப்போட்ட ஒருசட்டை. பத்துப்பன்னிரண்டு பொத்தான்களாவது இருக்கும். நெற்றியில் ஒரு புள்ளிப்பொட்டு, கழுத்தில் ஒரு மிகமெல்லிய சங்கிலி, காதில் வளையங்கள், கையில் அதுகூட இல்லை. ராஜம் நகர்ந்து வழிவிட்டவுடன் உள்ளே வந்த பிரசன்னா செருப்பைக் கழற்றிவிட்டு நடைவழியின் மேஜைமேல் எடுத்துவந்த கார்னேஷன் பூங்கொத்தையும் ஸ்வெட்டரையும் வைத்தான். அவன்மேல் பார்வையைப் பதித்திருந்த அவள் அதைக் கவனித்ததாகத் தெரியவில்லை.

முன்கதவைச் சாத்திவிட்டு, “ஏன் ஒண்ணும் பேசமாட்டேங்கறே? இன்னும் என்மேல கோபமா?” என்று ராஜம் குழைவாகக் கேட்டாள்.

“கோபம் இல்லைன்னு சொல்லணும்னுதான் திட்டம்போட்டு வந்தேன். ஆனா கார்லேர்ந்து இறங்கினப்புறம்தான் கிருஷ்ணன் இல்லைன்னு தெரிஞ்சிது. அதனாலதான் என்ன சொல்றதுன்னு தெரியல.”

“இப்படி நடக்கும்னு எதிர்பார்க்கலை. விபத்துன்னாலே அதுதான். ஸ்டூடென்ட்ஸ் குடுத்த பார்ட்டிக்குப் போயிட்டுத் திரும்பிவரச்சே நடந்தது. யார் என்ன செய்யமுடியும்?”

அடுத்துவந்த அசௌகரியமான மௌனத்தை அவளே கலைத்தாள். “ஏதாவது குடிக்கத் தரட்டுமா?”

“ஃப்ளாரிடாவுக்கு வந்து ஆரஞ்சு ஜூஸூக்கு அடிமையாயிட்டேன்.”

ராஜம், பிரசன்னா பின்தொடர, வரவேற்புக்கூடம் வழியாகச் சமையலறைக்குச் சென்றாள். நடுவில் அடுப்போடு கூடிய உயர்மேஜை. அதற்கேற்றாற்போல் மூன்று ஸ்டூல்கள். ஒன்றில் பிரசன்னா உட்கார ராஜம் கண்ணாடி தம்ளரில் பழச்சாறு விட்டுக்கொடுத்தாள்.

“நான் காலைலே மட்டும்தான் குடிப்பேன்.”

அதை அருந்தியபோது அவன், “நின்னுண்டே என்ன யோசிக்கிறே?” என்று கேட்டான்.

“நீ வரட்டுமான்னு கேட்டப்போ ஆறுமணின்னு உடனே வாயிலே வந்துடுத்து. அப்பதான் கவிதா அவளோட குழந்தைகளை அழைச்சுண்டு போவோ. இன்னிக்கி குழந்தைகள் வராட்டாகூட வீடு ஒரே களேபரம். ஒழிக்கத்தான் நேரம் சரியா இருந்தது. இனிமேதான் என்ன சமைக்கலாம்னு யோசிக்கணும்.”

“கவிதாதான் முதல் பொண்ணா?”

“ஆமாம். ரெண்டாவதா ஒரு பையன், கார்த்திக்.”

“நீ தினம் உனக்கு என்ன பண்ணுவியோ அதுவே எனக்கும் போரும்.”

“ஒருத்திக்கு சமைக்கறதுதான் பெரிய வித்தை. வீட்டிலே நாலுபேர்லேர்ந்து மூணு, ரெண்டுன்னு குறைஞ்சப்போ அதிகம் வித்தியாசம் தெரியலை. சமைச்சதை நான் மட்டும் உக்காந்து சாப்பிடறது அதைவிட கஷ்டம்.” அவள் குரலில் வெளிப்பட்ட தனிமைத் துயரத்தைப் பிரசன்னா அனுபவித்துப் பார்த்தான். வீட்டில் அவன் தனியாக உட்கார்ந்து சாப்பிட்டதில்லை. அம்மா, பல சமயங்களில் விருந்தினர்கள், என்று எப்போதும் யாராவது கூடஇருப்பார்கள். அப்படி இருந்திராவிட்டால் அவனுடைய ப்ரேமவிரதம் ஆட்டம் கண்டிருக்குமோ?

“இன்னிக்கி மத்தியானம் வெளிலே வெஜிடப்ல் ரைஸ் சாப்பிட்டேன். சப்பாத்தி பண்ணட்டுமா?”

“தாராளமா.”

ராஜம் அவனுக்குப் பின்னாலிருந்த ரெஃப்ரிஜரேடரின் பக்கம் வந்தாள். அதன் கதவில் டாக்டரிலிருந்து பீட்ஸா கொண்டுதருபவர்வரை பலரின் தொலைபேசி எண்கள், வெவ்வேறு வயதில் குழந்தைகளின் படங்கள். அதைத் திறக்குமுன், “இதுதான் இப்ப எடுத்தது” என்று ஒன்றைப் பிய்த்துப் பிரசன்னாவிடம் தந்தாள். பையனிடம் இந்தியக்களை அதிகமில்லை, பெண் கொஞ்சம் வெள்ளையாக இருந்தாலும் கவிதாவைக் கொண்டிருப்பாள் என்று தோன்றியது. அப்பா வெள்ளை அமெரிக்கன் என்று ஊகித்தான். இருவரும் விளையாட்டு உடையில் கால்பந்தைக் கையில் வைத்திருந்தனர்.

எப்படிப் பாராட்டுவதென்று யோசிக்கும்போது அவளே “ரெண்டு பேரும் ரொம்ப துருதுருப்பு, அதிலியும் சின்னது சாயாக்கு எதாவது பண்ணிண்டே இருக்கணும்” என்றாள்.

“படத்திலே பாத்தாலே தெரியறதே” என்று அவன் அதைக் கதவின்மேல் வைத்து அழுத்தினான். அதனருகில் உடற்பயிற்சியின் பன்னிரண்டு நன்மைகளை வரிசைப்படுத்திய ஒரு நீளக்காகிதம்: 1. இரத்த அழுத்தத்தைக் குறைக்கும், 2. தீய கொலஸ்ட்ராலைக் கட்டுக்குள் வைத்திருக்கும், 3. மனச்சோர்வைப் போக்கும், 4. தூக்கம் நன்றாக வரும்...
பிரசன்னா படிப்பதைப்பார்த்த ராஜம், “ஹார்ட் அட்டாக்குக்கப்புறம் அவரையும் பண்ணவைக்கலாம்னு நான் எக்சர்சைஸ் ஆரம்பிச்சேன். இந்த சமயத்திலே மனசைத் தைரியமா வச்சுக்க ரொம்ப உதவியா இருக்கு. டாக்டர் அவர்கிட்ட சாப்பாட்டைக் குறைச்சு எக்சர்சைஸ் பண்ணினாலும் தினம் எட்டு மாத்திரை போட்டுக்கணும்னு சொன்னது தப்பாப்போயிடுத்து. மருந்துதான் சாப்பிடறேனேன்னு மத்ததெல்லாம் விட்டுவிட்டார்” என்று பெருமையா குறையா என்று பிரித்துப்பார்க்க முடியாத குரலில் சொன்னாள். அவள் இளம்வயதில் ஒல்லியாக இருப்பாள், இப்போது நல்ல உறுதியான ஒல்லி உடல்.

பீன்ஸ், காரட், காலிஃப்ளவர், பச்சைப்பட்டாணி, ஸூக்கினி எடுத்து மேஜைமேல் வைத்தாள். மூலையிலிருந்த கூடையிலிருந்து ஒரு உருளைக்கிழங்கைக் கொண்டுவந்தாள். “கூட்டுதான் சுலபம்.”

“நான் எதாவது பண்ணட்டுமா?”

“இந்தியாவில உனக்குச் சமையல் பக்கம் போறதுக்கு சான்ஸ் எங்கே இருந்திருக்கப் போறது.”

“கிருஷ்ணன் எப்படி?”

“சமைக்கெல்லாம் தெரியாது. காய் நறுக்குவார். சிலசமயம் பாத்திரங்களை அலம்புவார். அதைவிட அனுபவிச்சு நன்னா சாப்பிடுவார். குழந்தைகளுக்குச் சொல்றமாதிரி, சாப்பிட்டது போரும் எழுந்திருங்கோன்னு சொல்லணும்.”

“அது உன்மேல தப்பு. நீ வக்கணையா விதவிதமா சமைச்சுப்போட்டிருப்பே.”

“சாப்பாடு மாதிரி சங்கீதத்திலும் அவருக்கு நல்ல ரசனை. எதிர்லே டிவிக்குக் கீழே நிறைய சிடி அடுக்கி வச்சிருக்கே, எல்லாம் அவர் சேத்துவச்சது. எனக்குத்தான் சங்கீதம்னா அட்சரம்கூடத் தெரியாதே. கார்த்திக் அதிலே அவரைக்கொண்டிருக்கான். சுமாராப் பாடுவான், குரல் நன்னாவே இருக்கும்.”

காய்களை அலம்பி, அவனுக்கருகில் உட்கார்ந்து நறுக்கத் தொடங்கினாள். பிரசன்னா பட்டாணிகளைப் பிரித்தான். அவற்றைப்போட ஒருசிறிய கிண்ணத்தை அவன்முன் வைத்தாள். வேலைசெய்துகொண்டே பேச்சைத் தொடர்ந்தாள். “எல்லாரையும்போல கல்யாணத்துக்கப்பறம் நாங்களும் பெங்களுர் போறதா இருந்தோம். எனக்கு மனசே சரியில்லை. வாழ்க்கையைத் தவற விட்டுவிட்டேனோன்னு ஏமாற்றம். அம்மாவை நினைச்சுத்தான் வருத்தப்படறேன்னு அவர் அதைக் கான்சல் பண்ணிட்டார். ஒரு வாரத்துக்குள்ள அவர் இங்கே திரும்பிவந்தார். அம்மா காரியம் முடிஞ்சு ஒருமாசம் கழிச்சுத்தான் நான் வந்தேன். தப்பா எடுத்துக்காதே, பிரசன்னா! அமெரிக்க வாழ்க்கையோட ஓட்டத்திலே பழசெல்லாம் அடிச்சிண்டு போயிடுத்து. எப்பவாவது உன்னை நினைக்கிறப்போ கடைசியா பாத்த உன்னோட கோபமான முகம்தான் ஞாபகத்துக்கு வரும்.”

“இனிமே அப்படி வரக்கூடாது. அதுக்குத்தான் இப்ப உன்னைத் தேடிண்டு வந்தேன்.”

“தாங்க்ஸ். இதுவரைக்கும் ஒரேஒரு தடவைதான் இந்தியா வந்தேன், பையனுக்கு மொட்டையடிக்க. எப்பன்னு ஞாபகம் இல்லை. அப்பத்தான் நீ பாம்பேலே ரிசர்ச் ஆரம்பிச்சேன்னு கேள்விப்பட்டேன். காயத்ரிதேவியைப் போய்ப்பாத்தப்போ, ‘நீ சொன்னா ஒருவேளை பிரசன்னா மனசு மாறுவானோன்’னு சொன்னா. அதுகூட அன்பாத்தான் சொன்னா, குத்திக்காட்டற மாதிரி சொல்லலை.

‘என் அம்மாவும் நானும் எவ்வளவோ உங்களுக்குக் கடமைப்பட்டிருக்கோம். நான் மனசார எந்தத்தப்பும் பண்ணலை. இனிமே அவனுக்கா தோணினாத்தான் உண்டு, நான் எதாவது சொன்னா அவனுக்கு வைராக்கியம் இன்னும் ஏறத்தான் செய்யும்’னேன்.

சரிதானே?” என்று அவன் பக்கம் திரும்பினாள்.

“சரிதான், என்னை நன்னா தெரிஞ்சுவச்சிருக்கே.”

“அந்த ட்ரிப்லே கார்த்திக் டிஹைட்ரேட் ஆகி பிழைப்பானோன்னு ஆயிடுத்து. எனக்கு அதுக்கப்புறம் இந்தியாவுக்கு வர ஆசையே போயிடுத்து. தங்கை கல்யாணம், அண்ணாவுக்கு சஷ்டியப்தபூர்த்தி எல்லாத்துக்கும் அவரே போயிட்டு வந்தார். கூடவரணும்னு அவரும் என்னைக் கட்டாயப்படுத்தலை. நான் வீட்டையும் குழந்தைகளையும் பாத்துண்டேன். நீயும் இதுக்கு முன்னாடி யூ.எஸ். வரவே இல்ல போலிருக்கு.”

“எதுக்கு வரணும்? எனக்கு வேண்டியதெல்லாம் ஒரு லாப், அதில சில சாமான்கள், அவ்வளவுதான்.”

“ஏன், என்னைப்பாக்க வந்திருக்கலாமே!”

“நீ எங்கே இருக்கேன்னு நிச்சயமா தெரியாதே.”

“என்னைப்பாத்தா கோபம் இன்னும் அதிகமானாலும் ஆகலாம்” என்று ராஜம் சிரித்தாள்.

“என் அதிருஷ்டம் - ராஜம், சந்தானம், ஃபிசிக்ஸ் ப்ரொஃபசர், ஒர்லான்டோ - இந்த நாலைமட்டும் வச்சு ரெண்டுநாளிலே ஒருத்தன் ரொம்ப அக்கறை எடுத்து உன்னைத்தேடிக் கண்டுபிடிச்சான்.”

“பழைய வீட்டு ஃபோன்லே எக்கச்சக்க கால் வரும். அதனாலே இந்த வீட்டுக்கு வந்தப்போ அன்லிஸ்டட் நம்பரா மாத்தினோம்.

அவருக்கு எப்படித் தெரிஞ்சுது?” என்று ராஜத்திற்கு ஆச்சரியம்.

“விவரமெல்லாம் சொல்லலை. நீயா இருக்கலாம்னு இந்த நம்பரைத் தந்தான். நீ சரின்னு சொன்னதனாலே ஓட்டல்லேர்ந்து கார்லே கொண்டுவந்துவிட்டான்.”

காய்களை நறுக்கியபின் எழுந்து அலமாரியிலிருந்து பாத்திரம் எடுத்தாள். அடுப்புக்கு எதிரில் நின்று கூட்டை ஆரம்பித்தாள். “முதல் பதினைஞ்சு வருஷம் திருப்தியோடதான் போயிண்டிருந்தது. அவர் அப்பதான் சென்ட்ரல் ஃப்ளாரிடாலே சேர்ந்திருந்தார். டென்யூருக்காக உழைக்க வேண்டியிருந்தது. நான் இங்கே வந்த அடுத்த வருஷமே கவிதா பிறந்துட்டா. ஹாஸ்பிடல்லேர்ந்து அவளை எடுத்துண்டு வரச்சியே, ‘நீ வீட்டிலே இருந்து குழந்தையைக் கவனிச்சிண்டா நன்னா இருக்கும்’னு மெதுவாச் சொன்னார். அதனாலே வேலைக்குப் போறதைப்பத்தி நினைக்காம கவிதாவையும், கார்த்திக்கையும் கவனிச்சிண்டேன். நேரம் கிடைச்சப்போ அக்கௌன்டிங் படிக்கச்சொன்னார்னு அதலே கோர்ஸ் எடுத்துண்டேன். எல்லாம் நிலையா இருந்தப்போதான் ‘ப்ளாக் மன்டே’ வந்தது. கேள்விப்பட்டிருக்கியா?”

இல்லையெனத் தலையசைத்தான் பிரசன்னா.

“தெரிஞ்ச ப்ரோக்கர் மூலமா எல்லாப்பணமும் ஸ்டாக்லே போட்டிருந்தார். அந்தத் திங்கக்கிழமை கார்த்தாலே அவன் கூப்பிட்டு மார்க்கெட் சரியில்லை எல்லாத்தையும் வித்திடுடறேன்னு சொன்னான். சரின்னுட்டார். நாள் முடியும்போது முப்பது பர்சென்ட்டுக்கும் அதிகமா கீழே இறங்கிடுத்து. அந்த அதிர்ச்சியிலே ஹார்ட் அட்டாக். நல்லவேளையா எமர்ஜென்சிக்கு உடனே அழைச்சுண்டு போனா. ஒருவாரத்திலே வீட்டுக்கு வந்துட்டார். ஒரு மாசம் ரெஸ்ட். அப்ப ஸ்டாக் மார்க்கெட்டைப் பத்தி நிறைய தெரிஞ்சிண்டார். வேலைக்குத் திரும்பிப்போனப்போ யூனிவெர்சிடிலே கஷ்டம் தர ஆரம்பிச்சா. அவருக்கும் க்ரான்ட் எழுதி ரிசர்ச் பண்ணறதிலே ஆர்வம் போயிடுத்து. அதை விட்டுட்டு ஹாம்லின் காலேஜ்லே சேர்ந்தார் மூணு கோர்ஸ்தான் சொல்லித்தரணும், நிம்மதியான வேலை. மிச்சமிருந்த பணத்தைவச்சு தானே ஒருவழியிலே இன்வெஸ்ட் பண்ணவும் நேரம் நிறையக் கிடைச்சுது. அதிலே நல்ல பலன். அதைப்பாத்து மத்தவா பணம் போட ஆரம்பிச்சா. ‘இன்டெல்லிவெஸ்ட்’ என்கிற பேர்ல ஒரு சின்ன கம்பெனி ஆரம்பிச்சார். அதோட கணக்கெல்லாம் நான் கவனிச்சிண்டேன். அக்கௌன்டிங் படிச்சது சௌகரியமா இருந்தது.”

‘கணக்கு உன் ரத்தத்திலேயே ஓடுமே’ என்று நினைத்தான், ஆனால் சொல்லத் தோன்றவில்லை.

“ஸ்கூல்லே படிக்கும்போதே கவிதாவை அவர்வழிலே பழக்கிட்டார். அவ மத்த பெண்கள்மாதிரி பேப்பர்லே காமிக்ஸைப் பாக்காம பிசினஸ்தான் படிப்போ. வார்ட்டன்லே போய் பிசினஸ்லே டிகிரி வாங்கினா. அவளுக்குக் கல்யாணம் ஆனப்பறம் கம்பெனியை அவபேருக்கே மாத்திட்டார். இப்போ கவிதா அதைப் பெரிசா எடுத்து நடத்தறா” என்று முடித்தாள்.

“பையன் என்ன பண்ணறான்?”

“இன்டீ-பான்ட்லே இருக்கான். கான்செர்ட்னு ஊரெல்லாம் சுத்துவான். டிஸ்னி வோர்ல்ட்லே பெர்ஃபார்ம் பண்ண நிறைய தடவை வந்திருக்கான். அப்ப ஒருகும்பலே இங்கே வந்து தங்கும்.”

ராஜம் கூட்டை அணைத்துவிட்டுச் சப்பாத்திக்கு மாவு பிசையும்போது, “கிருஷ்ணனுக்கு என்னைப்பத்தித் தெரியுமா?” என்று வெகுநேரமாகக் கேட்க நினைத்ததைப் பிரசன்னா கேட்டான்.

“காயத்ரிதேவியைப்பத்தி ஒருதடவை பேச்சு வந்தப்போ, அவளோட பையனுக்கு சின்னவயசிலே என்மேல ஒரு இன்டரெஸ்ட் இருந்ததுன்னு சொன்னேன். வயசான பெண்மேல டீன்ஏஜ் பையங்களுக்கு க்ரஷ் வர்றது சகஜம்தான்னார். இது சாதாரண க்ரஷ் இல்லை, அதுக்கும் பலபடிகள் மேலேன்னு அவருக்குத் தெரியாது” என்று அவனைப்பார்த்து சிரித்தாள். அவனும் ஒப்புதலோடு புன்னகைத்தான்.

‘அதுபோல சாதாரண க்ரஷ்லே பெண் கொஞ்சநாளைக்கு அதை வேடிக்கையா எடுத்துண்டு, அப்புறம் அலட்சியமா அவனைத் தள்ளிட்டுப் போயிடுவோ. என் விஷயத்துலே எனக்கிருந்த அன்பின் தீவிரம் அந்தப்பெண்ணுக்கும் இருந்தது, பல ஆண்டுகளாக.’ உணர்ச்சிகளை மனதிலேயே அடக்கிவைக்க பிரசன்னா நாற்காலியிலிருந்து எழுந்து சமையலறையைச் சுற்றி நடந்தான். பின்ஜன்னல் வழியாக வெளியே பார்த்தான். இங்கேயும் பலவீடுகளுக்கு நடுவில் ஒரு குட்டை. அது அந்திக்கருக்கலில் வெள்ளையாகத் தெரிந்தது. சுவர்க் கடிகாரத்தில் ராபின் பறவையின் கூவல் ஏழுமணியை அறிவித்தது. சாமி ஏரியைச்சுற்றி நடந்துவிட்டு எப்போதோ செவன்த் இன் போயிருப்பான். திரும்பிப் பார்த்தபோது சப்பாத்திக்கு மாவை இடுவதற்காக ராஜம் மேஜைமேலிருந்த எல்லா சாமான்களையும் அகற்றியிருந்தாள்.

“நீ இட்டா நான் கல்லுலே போட்டெடுக்கறேனே!”

“பண்ணிருக்கியா?” அவள் குனிந்து கீழ் அலமாரியிலிருந்து குழவியையும், ஒட்டிக்கொள்ளாத தோசைக்கல்லையும் எடுத்தாள். கல்லை அடுப்பின் சூட்டில் வைத்துவிட்டு சப்பாத்திக்கு இடலானாள்.

“காட்டினா செய்யறேன். ஏன் நாப்பத்தேழு வயசிலே கத்துக்க முடியாதா?”

“எந்த வயசிலியும் முடியும், ஐம்பதுலே கூட முடியணும்.”

ராஜத்திற்குச் சென்றமாதம் பதினெட்டாம்தேதி ஐம்பதாவது பிறந்தநாள் வந்திருக்க வேண்டும். “வயசைத்தவிர வேறெதாவது பேசலாம்.”

“கல் சுட்டுடுத்து.” முதல் சப்பாத்தியை அதில் போட்டு ஒருபக்கம் ஆனவுடன் கரண்டியால் திருப்பிக் காண்பித்தாள்.

“மிச்சத்தை நான் பண்ணறேன்.”

“நான் அமெரிக்கா வந்தப்புறம் நடந்ததெல்லாம் சொல்லிட்டேன். உன்னைப்பத்தி நீ எதுவுமே சொல்லலியே.”

“சொல்றதுக்கு ரொம்ப இல்லை. பி.எஸ்ஸி., எம்.எஸ்ஸி. அப்புறம் பிஎச்.டி. படிப்பு முடிஞ்சதும் ரேடியேஷன் இன்ஸ்டிட்யூட்லே வேலை. சுவாரசியமா எதாவது சொல்லணும்னா, ஒருவாரம் முன்னாடிதான் இங்கே கான்ஃபரன்ஸூக்கு வரப்போறேன்னு முடிவாச்சு. நான் முதல்தடவை பிஎச்.டி. பண்ணினப்போ என்னோட அட்வைசர் பாதிலே என்னை விட்டுட்டு அமெரிக்கா போறேன்னு சொன்னார். அப்ப கோபத்திலே அலட்சியமா அவர் மனசு புண்படறமாதிரி பேசிட்டேன்.”

“உன்கோபம் எனக்குத் தெரிஞ்சதுதானே. அந்த சப்பாத்தியை எடுத்துடு, அடுத்தது போடறேன்.”

பிரசன்னா சிரித்தான். “அவர் இப்போ லேக்லன்டிலே இருக்கார். இன்னிக்கி மத்தியானம் ரெண்டுபேரும் சுமுகமாப்பேசி ராசியாயிட்டோம்.”

“அப்போ, நானும் உன்னை மன்னிக்கணும், அதுதானே எதிர்பாக்கறே? நான் மன்னிச்சுட்டா நீயும் என் தப்பை மறந்துடணும்.”

“நீ என்ன தப்பு பண்ணினே?”

“மத்தவா கேள்வித்தாளை அனுமதி இல்லாம எடுத்துப் பாத்திருக்கக்கூடாது” என்று அவனை நேராகப் பார்க்காமல் சொன்னாள்.

“அதைவிட மகாதப்பு, அதுல இருந்த கணக்கெல்லாத்தையும் மனசிலேயே வேகமாப்போட்டு அவன் எழுதிண்டுவந்த ஆன்சரெல்லாம் சரியான்னு பாத்தது.”

ராஜம் சிரித்தாள். “நன்னா ஞாபகம் வச்சிண்டிருக்கியே! பெரியபெரிய விஞ்ஞான கண்டுபிடிப்புகளெல்லாம் யாரோ செஞ்ச தப்புலதான் நடந்திருக்கு. இதுதான் கடைசி.”

வட்டமேஜையில் கூட்டையும் சப்பாத்திகளையும் வைத்தாள்.

“சாப்பிடற தட்டு எங்கே இருக்கும்?”

“உனக்குப் பின்னாடி மேலே பார்!” இரண்டு தட்டுகளை எடுத்து மேஜையில் வைத்தான்.

ஒருதட்டில் சிறிது கூட்டையும் இரு சப்பாத்திகளையும் வைத்து, சமையலறையைத் தாண்டி இருந்த பூஜை அறையில் விளைக்கைப் போட்டு படங்களின்முன் வைத்தாள். அந்தத்தட்டை எடுத்துவந்து மேஜையில் பிரசன்னாமுன் வைத்தாள். இன்னொரு தட்டில் தனக்கு வேண்டியதை எடுத்துக்கொண்டாள். சாப்பிடத் தொடங்கினார்கள்.

“எப்படி இருக்கு?”

“வித்தியாசமா இருக்கு. ஆனா நன்னா இருக்கு.” தொடர்ந்து அவனே, “முன்னமாதிரி அம்மாவால இப்போ நின்னுண்டு சமைக்க முடியறதில்லை. உறவுக்கார மாமி ஒருத்தர் சமைக்கறார்” என்றான்.

அதுவரையில் அவன் சொந்த வாழ்க்கையைப் பற்றி வெளிப்படையாக ஒன்றும் சொல்லாவிட்டாலும் அவனுக்கென்று ஒரு குடும்பம் இருக்குமென்ற நம்பிக்கை காற்றில் அகல்விளக்காக ஒடுங்கி எரிந்துகொண்டிருந்தது. அது பட்டென்று அணைந்ததும் விவரிக்க முடியாத துயரத்தில் அவள் மௌனமானாள். தட்டைப்பார்த்துச் சாப்பிடுவதுபோல் குனிந்தாள். கை எடுத்தது, வாய் திறந்தது, தொண்டை விழுங்கி வயிற்றை நிரப்பியது, ஆனால் மனத்தில் ஆட்டம் முடிந்து காலியான விளையாட்டு அரங்கம் போல் ஒரு வெறுமை.

(தொடரும்)

அமர்நாத் அவர்களின் இதர படைப்புகள். தொடர் பகுதியில் வந்த இதர படைப்புகள்.
                         
Your Comments
Comment
உங்கள் கருத்து
பெயர் :
மின் அஞ்சல் :
சுட்டி :

Comment In:

Tamil English
(Type here in Thanglish and see tamil text in bottom. Tamil conversion powered by : www.suratha.com)
NOTE : Please do not use single quote in your comments. You can use double quote in place.
(English / தமிழில் - யூனிகோட்)
What you see in this box gets posted as feedback.

Hot properties in India

ஜோதிடம் கேளுங்கள் பகுதியில் விரைந்து பதில் பெற, விரிவான விளக்கம் பெற கட்டண சேவையைப் பயன்படுத்தலாம். மேலும் விவரங்களுக்கு...

 

 


 

 


About us | Team | Contact Us | Press | Feedback | Favourites | Communities | Shopping | Services | Site map

tamil magazines, Hindu devotional songs, tamil links, tamil movies, tamil songs, tamil dvd, tamil news, tamil, tamil comedy, tamil movie, tamil music DVDs, bharatanatyam, Yoga DVDs, carnatic music, tamil cinema, sivaji movie, cricket world cup, tamil ebooks, web design, web design resources, global warming, outsourcing, mutual funds, India Pakistan cricket series, Kuselan, India Cricket, Sultan The Warrior

A web magazine from Nilacharal Ltd
Privacy Policy|Terms of use|Disclaimer| Copyright Nilacharal Ltd - All Rights Reserved Worldwide

We use cookies on this website. By using this site, you agree that we may store and access cookies on your device. Find out more and set your preferences here . X