 |
இதழ் 485 |
 |
செப்டம்பர் 13 2010
|

|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
Your Advertisement Here
|
| |
|
| |
 |
add nilacharal to your favourites |
 |
nilacharal as your homepage |
|
|
|
|
| உறுதுணை தேடுமின்- 39
- அமர்நாத் |
| | 'அன்றைய உங்கள் உரையாடல் அவருடைய கணினியில் பதிவாகியிருக்கிறது. அதன் பிரதியை அவர் இப்போது எடுத்துவருவார். மிஸ்டர் குட்லிங்கின் மனதை மாற்ற அது பயன்படும் என்று நம்புகிறேன். கவலைப்படாதே! பிறகு அதை அழித்துவிடலாம் 'ஹலோ!' என்று தொலைபேசியை எடுத்தான் சூரன்.
'ஹாய் சூரன்! உன் கால் எப்படி இருக்கிறது?'
'கிட்டத்தட்ட சரியாகிவிட்டது, குமாரி ஆன்டி!'
'உன் அம்மா என்ன செய்கிறாள்? அவளுடன் பேசமுடியுமா?'
'வீட்டின் பின்னால் உட்கார்ந்திருக்கிறாள்.'
'அவளிடம் கொடுக்கிறாயா?'
'ஷூர்.'
'தாங்க்ஸ்'.
'மோவின் அம்மா' என்று ஒலிவாங்கியைத் தன் அம்மாவிடம் எடுத்துச்சென்று தந்தான் சூரன்.
'இப்ப நடந்ததைச் சொன்னா நம்ப மாட்டீங்க, அக்கா!'
'குமாரி! என்ன விஷயம்? முன்னல கேட்டதுக்கு உன்குரல் கொஞ்சம் தெளிவானமாதிரி இருக்கே.'
'கொஞ்சம்தானா? செத்துப்போய் பிழைச்சுவந்த மாதிரி இருக்கு, அக்கா!'
'விவரமாச்சொல்லு!'
'பயாலஜி கட்டடத்திலேதான் குட்லிங்கோட பேச்சு நடந்தது. இந்தவருஷம் பயாலஜிக்கு புதுசா ஒருவாத்தியார் வந்திருக்கார். அவர் முன்னாடி இருந்த இடத்திலே ஒருபெண் வீண்பழி சுமத்தினதாலே வேலை போயிருச்சாம். அதனால வாய்ஸ்-ஆக்டிவேடட் ரெகார்டிங் வச்சிருக்கார்போல. ஒருவாரம் முழுக்க நடந்ததைப் போட்டுப் பாத்திருக்கார். விஷயம் தெரிஞ்சிருக்கு. அவர் என்னைக் கூப்பிட்டார். செவ்வாக்கிழமை மோகன் கட்டாயப்படுத்தலை, அந்தப் பெண்தான் ஆரம்பிச்சுவச்சதுன்னு காட்ட முடியும்னு சொன்னார்.'
'அவரா கூப்பிட்டிருக்காரா? பரவாயில்லையே.'
'சின்ன விஷயத்துக்காக ஒரு பையன்மேல அநாவசிய பழிசுமத்தி ஜெயிலுக்கு அனுப்பறது கொடுமைன்னு தோணிச்சாம்.
அப்புறம் லின்டாவோட பேசி அவளை எங்கபக்கமா இழுத்துருக்கேன். அவ மனசுவைப்பாள்னுதான் தோணுது.'
'அது ரொம்ப முக்கியம்.'
ஒரு இடைவெளிக்குப்பின் குமாரி, 'அக்கா! உதவிசெஞ்ச பயாலஜி டீச்சர் பெரியசாமி. நம்பமுடியுதா?' என்று கேட்டாள்.
'எதிர்பாக்காததுதான், ஆனா நம்பமுடியாததில்லை. பெரியசாமி காலேஜ்லே பயாலஜி சொல்லிக்கொடுத்தார்னு தெரியும். அது
போகட்டும், அவர் உன்னை அடையாளம் கண்டுகிட்டாரா?'
'இன்னும் இல்லைன்னுதான் நினைக்கிறேன். மோகனும், சவிதாவும் மிடில் ஸ்கூல்லே படிச்சப்போ டெலிபோன்-புக்லே போடறதுக்கு குடும்பத்தின் விவரம் கேட்டாங்க. அப்பா இல்லை, அம்மா மட்டும்தான், பேர் செல்வகுமாரி சிவம்னு குடுத்திருந்தேன். தனியா இருக்கிற சில அப்பாக்கள் கூப்பிட்டு, 'ஹலோ! நாம சந்திக்கலாமா?'ன்னு கேட்டாங்க.'
'தனியா இல்லாத அப்பாக்களும் அதைச்செய்யலாம், தினகரன் இல்லையா?' என்று சரவணப்ரியா குறுக்கிட்டாள்.
'அதனால இந்த வாட்டி டெலிபோன் புத்தகத்திலே ஒரு பேரன்ட், பேர் எஸ். சிவம், அவ்வளவுதான் போட்டிருக்கும்.'
'எப்போ அவரைச் சந்திக்கப்போறே?'
'இன்னைக்கி வீட்டுக்கு சாப்பிட அழைச்சிருக்கேன். அப்போ, அவர் மனைவியும் அவரும் சமீபத்திலே பிரிஞ்சிட்டாங்கன்னு சொன்னார்.'
'அது எனக்குத் தெரியாது. அவங்களுக்குக் குழந்தைகள் இல்லைன்னு தெரியும். அதனால இருக்கலாம். திட்டம் நிறைவேறாம போனதிலே குட்லிங் கோபப்படுவாரோ?'
'நிச்சயமா. எனக்கு உதவி செஞ்சது பெரியசாமின்னு உடனே இல்லாட்டியும் கொஞ்ச நாள்லே தெரிஞ்சிரும். அவரை வேலைலேர்ந்து தள்ள முயற்சி செய்யலாம். அது அவ்வளவு சுலபமில்லை. ரெண்டுவாரத்திலேயே அவருக்கு பள்ளிக்கூடத்திலே நல்லபேர்.'
'வெறும் சாப்பாட்டுக்குமட்டும் நீ அவரைக் கூப்பிடலைன்னு தோணுது.'
'சவிதா அப்பாவைப் பாக்க ஆசைப்படறாள்னு நீங்கதானே சொன்னீங்க. அப்புறம்...' டென்னிஸ் பயிற்சி முடிந்து கோர்ட்டில் மாணவர்கள் தங்கள் ராக்கெட்டுகளைப் பைகளில் நுழைப்பது தெரிந்தது. சவிதாவும் அவள் தோழிகளும் ஏற்கனவே நடக்கத் தொடங்கியிருந்தார்கள். 'நான் நாளைக்குக் கூப்பிடறேன், அக்கா!'
'ஒருமணிக்கு முன்னால நீ கூப்பிட்டதுக்கும், இப்போதைக்கும் எவ்வளவு வித்தியாசம்? தலைக்கு வந்தது தலைப்பாகையோடு போச்சுன்னு சொல்வாங்களே, அந்தமாதிரி மோகனுக்கு வர இருந்த சோதனை போனதிலே எனக்கு நிம்மதிதான். பை!' ஒப்பனை முடிந்து குமாரி மாடியிலிருந்து இறங்கிவருவதற்கும் அழைப்புமணி ஒலிப்பதற்கும் சரியாக இருந்தது. மோகன் கணினியில் கவனமாக இருந்தான். சமையலறையில் சாமான்களை ஒழுங்கு படுத்திக்கொண்டிருந்த சவிதா, 'நான் கவனிக்கிறேன்' என்று வேகமாக நகர்ந்தாள். கையில்லாத, குறுக்காக வரிவரிபோட்ட ஆடை மூன்றுவயதைக் கூட்டியது.
'உன்னைப் பாத்தா காலேஜ் போற பொண்ணுமாதிரி இருக்கு' என்று படியில் நின்றிருந்த குமாரி சொன்னபோது முகத்தைத் திருப்பிப் பெருமிதத்தோடு புன்னகைத்தாள்.
டென்னிஸ் பயிற்சி முடிந்தபோது, முதலில் சவிதா பெண்கள் கும்பலிலிருந்து பிரிந்து வந்தாள். நடைவழியில் செல்பேசியும் கையுமாக நின்றிருந்த தாயின் முகத்தைப் பார்த்தபோது முன்பிருந்த சோகம் குறைந்து தெளிவடைந்ததுபோல் தோன்றியது. ஆனால் ஒன்றும் கேட்கவில்லை. பிறகு மற்ற ஆட்டக்காரர்களிடம் விடைபெற்று மோகன் வந்தான்.
'ப்ராக்டிஸ் எப்படி இருந்தது?'
'நிறைய செர்வ் போட்டேன். கோச் சொல்வது காதில்விழாதபடி சவிதாவும் அவள் சினேகிதிகளும் என்ன கூச்சல் போட்டார்கள்!' 'அவர்களெல்லாம் உங்களை ஊக்குவித்ததாக நினைத்தேனே.'
'அரட்டை அடித்தார்கள், அவ்வளவுதான்.'
சவிதா மறுக்கவில்லை. காரின் கதவுகள் திறந்ததும் சவிதா அண்ணனின் இரத்தத்தின் சர்க்கரையை மறுபடி அளந்தாள்.
'மாம்! நான் ஓட்டட்டுமா?'
'தாராளமா' என்று சாவியை அவனிடம் கொடுத்தாள்.
'அதற்குமுன் சிறிது பவரேட்' என்று சவிதா பாட்டிலை நீட்டினாள்.
குமாரி முன்னாலும், சவிதா பின்னாலும் அமர்ந்தார்கள். காரில் ஏறியவுடன், 'இன்று எங்கே சாப்பிடலாம்?' என்றான் மோகன்.
'வீட்டிலேயே சமைக்கப்போறோம். பயாலஜி வாத்தியாரை சாப்பிடக் கூப்பிட்டிருக்கேன்.'
இதுவரை சவிதாவின் கணக்கு ஆசிரியை ஒருத்திதான் அவர்கள் வீட்டிற்கு வந்திருக்கிறாள். அதுவும் சாப்பிட அல்ல. சவிதா கணிதப்போட்டியில் வெற்றிபெற்றதை நேரிலேயே அறிவித்து வாழ்த்துத் தெரிவிக்க. அதனால் அவர்களுக்கு வியப்பாக இருந்தது. மோகனுக்கு ஏமாற்றமாக இருக்குமென்று அவனைச் சமாதானப்படுத்த, 'நாளைக்குக் கட்டாயம் வெளியே அழைச்சுட்டுப் போறேன்' என்றாள்.
மோகன் பள்ளியின் பாதையிலிருந்து நெடுஞ்சாலையில் திரும்பினான்.
பெரியசாமியின் வருகைக்கு அவர்களைத் தயார்செய்ய குமாரி, 'சவி! மிஸ்டர் பெர்ரியைப் பத்தி என்ன நினைக்கிறே?' என்று கேட்டாள்.
'வீட்டிலேயே நன்கு தயாரித்துவந்து முறையாகப் பாடமெடுக்கிறார். பாடம் நடத்தும்போது மாணவர்களை அதில் ஈடுபடுத்துகிறார். இவ்வளவு ஆர்வம் காட்டிய ஆசிரியரை இதுவரை பார்த்ததில்லை. சென்ற ஆண்டு இருந்தவன் வகுப்புக்கு வந்தபிறகுதான் எதை நடத்தலாமென்று யோசனை செய்வான். முன்வரிசைப்பெண்கள் நிறைய உதவாக்கரை ஐடியாக்கள் கொடுப்பார்கள். அதற்குள் பாதிநேரம் போய்விடும். நாங்களே புத்தகத்தைப் படித்தால்தான் உண்டு.'
'சவிதாதான் அவருடைய பெட்' என்று குறுக்கிட்டான் மோகன்.
'அதெல்லாம் ஒன்றுமில்லை. அவர் கேள்விகளுக்கு நான் நிதானமாக யோசித்து சரியான பதில்சொல்கிறேன்.'
'சவிதா! நீதான் வகுப்பிலே மிகவும் புத்திசாலி. மைடோகான்டிரியாவில் இருக்கும் டிஎன்ஏ பற்றி நீ என்ன நினைக்கிறாய்?' என்று கட்டைக்குரலில் துளி இந்திய உச்சரிப்பைக் கலந்து சொன்னான். பிறகு கீச்சுக்குரலில், 'நீங்கள் என்னைக் கேட்டதற்கு நன்றி. மற்ற டிஎன்ஏக்களைப்போல் அதிக மாற்றங்கள் அடையாமல்...' பொய்க்கோபத்துடன் சவிதா அவன் தோளைத் தட்டினாள். அவர்களின் சண்டை குமாரிக்கு புன்னகையை வரவழைத்தாலும், 'காரோட்டறபோது அவனைத் தொந்தரவு செய்யாதே, சவிதா ராணி!' என்று கண்டித்தாள்.
வீட்டிற்குமுன் கார் நின்றதும், 'குட் ஜாப், மோகன்!' என்று குமாரி பாராட்டினாள். இயலாமையிலிருந்து விடுபட்ட உணர்ச்சியில் அவளுக்குப் பேசிக்கொண்டே இருக்கவேண்டும் போலிருந்தது.
வீட்டிற்குள் வந்ததும் மூவரும் அவசரம் அவசரமாக உடை மாற்றிக்கொண்டார்கள்.
'இரண்டுமணிக்குள் விருந்து சமைத்துவிட முடியுமா?'
'நாம தினம் சாப்பிடறதுதான். அவருக்குன்னு ஸ்பெஷல்லா ஒண்ணும் கிடையாது, ஒரு ஸ்வீட்டைத்தவிர.'
மோகன் வெந்தயக்கீரையைக் கழுவி வடித்தான். சவிதா பூண்டு வெங்காயம் இரண்டையும் பொடிப்பொடியாக நறுக்கினாள். அவை பச்சைப்பட்டாணி தக்காளியுடன் சேர்ந்தன. குமாரி கீரையைக் கலந்து சப்பாத்திக்கு மாவு பிசைந்தாள். அவள் இட்டுத்தந்ததை சவிதா கல்லில் போட்டெடுத்தாள். அது முடிந்ததும் காய்கறிகள் கலந்த சாதமும், பச்சடியும். கடைசியாக சர்க்கரைபாதி, ஸ்ப்லென்டாபாதி போட்டுத்தயாரித்த கேசரி. எல்லாம் ஆறரைக்குள் முடிந்தவிட்டது.
'சவி! நீ முதலில் சென்று உடை மாற்றிக்கொள்! மோகன் டென்னிஸ் பயிற்சிக்குச் சென்றதால் குளிக்க வேண்டும்.'
அவள் மாடிக்குச்சென்று குளியலறையின் கதவைச் சாத்தும் சத்தம் கேட்டது. மோகன் நான்குபேருக்குத் தேவையான தட்டுகளையும், தம்ளர்களையும் அலமாரியிலிருந்து எடுத்து மேஜைமேல் வைத்தான்.
மெல்லிய குரலில் நிறைய கண்டிப்பையும் சேர்த்து குமாரி, 'மோகன் குமார்! நீ செவ்வாய் பிற்பகல் உயிரியல் கட்டடத்தில் நடந்ததை என்னிடம் சொல்லாமல் மறைத்துவிட்டாய். இன்று வேறுயாரோ சொல்லித்தான் நான் அதைத் தெரிந்துகொண்டேன்' என்றாள்.
வேலையை நிறுத்திவிட்டு அவன் தலைகுனிந்து நின்றான்.
'மோகன்! எதுவானாலும் பள்ளிப்படிப்பு முடியும்வரையிலாவது நீ என்னிடம் எதையும் மறைக்காமல் சொல்வதுதான் முறை.' இந்தவிதமான அறிவுரைகளில், 'அதிலும் அப்பா இல்லாமல் தனியாக நான் உங்களை வளர்க்கும்போது' என்று குமாரி எப்போதும் சேர்த்ததில்லை. அது அவர்களுக்கே தெரியும்.
'அதற்காக மிகவும் வருத்தமும் அவமானமும் அடைந்தேன். உன்னைப் பார்க்கவே எனக்கு வெட்கமாக இருந்தது.'
'அதுமட்டும் போதாது. ஒருபெண்ணை உன் இச்சைக்குப் பயன்படுத்தியது மிகப்பெரிய தவறு என்பதை நீ உணரவேண்டும். அது அவளுடைய மனநிலையைப் பாதிக்கலாம்.'
'என்ன நடக்கிறதென்று நான் உணருவதற்குள் முடிவு வந்துவிட்டது. நான் அவளைக் கட்டாயப்படுத்தவே இல்லை.'
குமாரி அவனை நெருங்கி மெல்லக் கட்டிக்கொண்டாள். 'அது எனக்குத் தெரியும். அந்தவிதத்தில் எனக்குத் திருப்திதான்.' முதல்நாள் மாலை மிஸ்டர் குட்லிங்குடன் பேசியதிலிருந்து தான் மோகனை நல்லபடியாக வளர்க்கவில்லையோ என்கிற குற்றஉணர்வு அவளுக்கு இருக்கத்தான் செய்தது.
அவனைப் பிடியிலிருந்து விடுவித்தாள். 'இது யார்மூலமாக எனக்குத் தெரிந்ததென்று நீ கேட்கவில்லையே.' மோகன் அதை யோசித்திருக்கலாம், ஆனால் கேட்கத்தோன்றாமல் நின்றிருந்தான்.
'நீ எப்படிப்பட்ட ஆபத்தில் சிக்கியிருந்தாய் என்று உனக்குத்தெரியாது. விளைவுகளை யோசிக்காமல் நீங்கள் செய்தது சட்டப்படி ஒருபெரிய குற்றம். அதற்காக லின்டாவின் அப்பா உன்மேல் வழக்குத்தொடுத்து உன்னைச் சிறைக்கு அனுப்ப முயற்சிசெய்கிறார்.'
தாயின் வார்த்தைகள் மெல்லப்புரிந்தபோது அச்சத்தில் அவன் உறைந்து நின்றான்.
'இன்று பிற்பகல் அவரோடு பேசியபோது அந்த முயற்சியில் வெற்றியும் அடைவாரென்று நான் பயந்தேபோனேன். என்ன செய்வதென்று தெரியாமல் தவித்தேன். நல்லவேளையாக, அப்படி நடக்காமலிருக்க ஒருவர் காப்பாற்றியிருக்கிறார்.' அவர் யாரென்று ஏறிட்டுப்பார்த்தான்.
'அவரைத்தான் சாப்பிட அழைத்திருக்கிறேன்.'
'மிஸ்டர் பெர்ரியா?'
'ஆமாம்.'
'அன்றைய உங்கள் உரையாடல் அவருடைய கணினியில் பதிவாகியிருக்கிறது. அதன் பிரதியை அவர் இப்போது எடுத்துவருவார். மிஸ்டர் குட்லிங்கின் மனதை மாற்ற அது பயன்படும் என்று நம்புகிறேன். கவலைப்படாதே! பிறகு அதை அழித்துவிடலாம்.'
மோகனின் முகத்தில் சிறிது நிம்மதி.
'இன்னொன்று பாக்கி. நீ லின்டாவிடம் நேரில் மன்னிப்பு கேட்கவேண்டும். நான் என்பங்கிற்கு ஏற்கனவே அதைச் செய்துவிட்டேன். அவளுக்கு உன்மேல் கோபமில்லை என்றுதான் தோன்றுகிறது.'
'என்னால் அவளைத் தனியாக சந்திக்க முடியவில்லை.'
'நேரம் கிடைக்கும்போது நீ கட்டாயம் செய்தாக வேண்டும்!' குரலில் இறுக்கத்தைக் குறைத்து முகத்தில் புன்னகையைச்சேர்த்து, 'ஒருபெண்ணுடன் சிலகாலம் அன்புடன் பழகியபிறகு உறவுகொண்டால் வருத்தமும் குற்றஉணர்வும் வராது' என்றாள்.
அவன் அதைப் புரிந்துகொள்ளுமுன், மாடியில் சவிதா குளியலறையிலிருந்து வெளியேவரும் சத்தம் கேட்டது.
'நீ மாடிக்குப் போகலாம்.'
'மாம்! இனி நான் பொறுப்போடு நடந்துகொள்வேன்.'
'எனக்கு அந்த நம்பிக்கை இருக்கு.'
|
| | அமர்நாத் அவர்களின் இதர படைப்புகள்.
| தொடர் பகுதியில் வந்த இதர படைப்புகள்.
|
|
|
|
|
|