 |
இதழ் 382 |
 |
செப்டம்பர் 15 2008
|

|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
Your Advertisement Here
|
| |
|
| |
 |
add nilacharal to your favourites |
 |
nilacharal as your homepage |
|
|
|
|
| உனக்கெனவே காத்திருப்பேன்...!
- விமலா ரமணி |
| | "கல்யாணி... நீ என்னுள் வீழ்ந்து மண் மூடிப் போன விதை. உன்னை விருஷமாக்கிக் காட்டுவேன் கல்யாணி. நீ ஒதுக்கப்பட்டவள். உன்னை செதுக்கிக் காட்டுவேன்...கல்யாணி. இதுதான் என் ஆசானுக்கு நான் செலுத்தும் குருதட்சிணை!" ஸ்வாமிநாதனுக்கு ஆச்சரியமாக இருந்தது. இது அந்தக் கிராமம்தானா? இவன், தன் தாத்தாவுடன் தங்கி இருந்தபோது இருந்த அதே கிராமம்தானா? முதல் வகுப்பிலிருந்து ஏழாம் வகுப்பு வரை, ஒரு முனிசிபல் பள்ளியில் படித்தானே.. அதே கிராமம்தானா?
சில சமயம் மழை நாட்களில் கிராமப் பள்ளியின் ஓட்டுக் கூரை ஒழுகும்போது, அந்த வகுப்பறையைவிட அந்த ஆலமரத்தடி பாதுகாப்பானது என்று இவர்கள் அனைவரும் ஓடிச்சென்று, அந்த மரத்தின் விழுதுகளுடன் ஒட்டி அமர்ந்து பாடம் பயின்ற நாட்கள் அவை!
இதோ பெயருக்கு ஆறு என்று மணலும், குட்டையுமாகக் காட்சி தரும் இந்த ஆறு. அன்று எப்படி பிரவாகமாய்ப் பெருக்கெடுத்து ஓடியது! இவனுக்கு நீச்சல் தெரியாது. இவனுக்கு நீச்சல் கற்றுக் கொடுத்ததே... கல்யாணிதான்.
கல்யாணி என்றதும் 'ஜில்'லென்று ஒரு ஜீவராகம் நெஞ்சில் சுரந்தது.
காலிக்குடத்தின் மேல் படுத்தபடி தண்ணீரில் இறங்கி, குடம் நிமிர்ந்து விடாமல் 'சர்க்கஸ்' செய்தபடி கைகளையும், கால்களையும் உதைத்து உதைத்துக் கற்றுக்கொண்ட நீச்சல்...
இன்று நினைவுக்குடங்கள் காலி! இவன் நீந்த முடியாமல் மூழ்கி மூழ்கி... கல்யாணி...
பாட்டு வாத்தியார் பரமேஸ்வர அய்யரின் பெண்தான் கல்யாணி. கூட்டத்தோடு கூட்டமாக இவனும் பரமேஸ்வர அய்யரிடம் பாட்டுக் கற்றுக்கொள்ளப் போனான். தாத்தாவின் கட்டாயம்.
பாட்டு வந்ததோ இல்லையோ பார்வைகள் வந்தன!
கல்யாணி, அப்பாவின் சிஷ்யப் பிள்ளைகள் அனைவருக்கும் காபி போட்டுக்கொண்டு வந்து தருவாள்.
"கல்யாணி, ஸ்வாமிநாதனுக்கு நல்ல சூடா காபி கொடு. சங்கீதம் தான் வரல்லை. காபி குடிச்சா சங்கதியாவது வரதா பாக்கலாம்."
கல்யாணி சிரிப்பாள்.
காபி அமிர்தமாக இருக்கும். 'டிகிரி' காபி என்பார்களே... அது மாதிரி...
ஆற்றங்கரையில் கழுத்தளவு தண்ணீரில் நின்றபடி அகார சாதகம் செய்தால், சங்கீதம் வரும் என்றார்கள்.
இவன் ஆற்றில் இறங்கி... குளிரில் நடுங்கி அகார சாதகம் செய்வான். அதற்கு காரணம்... சங்கீதமல்ல... கல்யாணி!
கல்யாணி குளித்துக்கொண்டிருக்கும் நேரம், அதே ஆற்றில் நானும் முங்கி இருக்கிறேன். மூழ்கி இருக்கிறேன் என்ற நிம்மதி! கல்யாணியை வருடிச் செல்லும் ஆற்றின் அலைகள் தன்னையும் தீண்டும் என்கிற எண்ணம்.
இந்த மூழ்கல் காதல் மூழ்கல்! கனவுகளின் 'சில்'லென்ற தெறிப்பு...
இவனுக்குச் சுட்டுப் போட்டாலும், பொரித்து எடுத்தாலும் சங்கீதம் வராது என்று பாட்டு வாத்தியாருக்குப் புரிந்தது. ஆனால், ஸ்வாமியின் தாத்தாவுக்குப் புரியவில்லை.
"சிரத்தையா கத்துக்கோடா குழந்தை... நீயும் பெரிய வித்வானா வரணும்."
பெரிய சங்கீத வித்வானாக வரவேண்டும் என்கிற தனது ஆசையை, பேரன் மூலம் நிறைவேற்றிக்கொள்ள ஆசைப்படுகிறாரா தாத்தா? அதுதான் இவனை சங்கீதம் பயில பரமேஸ்வர அய்யரிடம் அனுப்பினாரா?
அது எப்படியோ, இவன் சங்கீதம் பயிலச் சென்றதும் ஒரு நன்மைக்குத்தான்; கல்யாணி ராகத்தை அறிய முடிந்ததே!
திடீரென்று ஒருநாள் தாத்தா காலமாகி விடவே, ஊரிலிருந்து இவன் அப்பா வந்தார். பாட்டு வாத்தியார் மட்டும் துக்கம் கேட்க வந்தார். சிரமாந்திரம் செத்த வீட்டுக்குச் சிறு பெண்ணை அனுப்பி வைப்பார்களா? கல்யாணி வரவே இல்லை.
அந்த ராகம் காற்றோடு கலந்துவிட்டது. இவன் தன் அப்பாவோடு நகரம் திரும்பினான். கல்யாணி ராகதேவதை அவ்வப்போது கனவில் வருவாள்.
இன்று இருபது வருடங்களுக்குப் பிறகு, மீண்டும் அதே கிராமம். அதே இடம்.
இவன் இங்கு வந்த காரணம்?
இருக்கிறது. அமெரிக்காவில் இவன் டிரஸ்டியாக இருக்கும் ஒரு கோயிலுக்குப் பூஜை செய்ய ஒரு சாஸ்திரிகள் தேவை. இந்தக் கிராமத்தின் விலாசம் கொடுத்து, ஏதோ ஒரு பெயரையும் சொல்லி, இவன் இந்தியா போகும்போது பார்த்து வரச்சொல்லி இருந்தார்கள். சாஸ்திரிகள் அமெரிக்காவில் குடி பெயர வேண்டுமாம். இரண்டு வருடங்களாக இவனால் யூ.எஸ்.ஸை விட்டுக் கிளம்ப முடியவில்லை. இப்போது... இப்போதுதான் அதற்கு நேரம் வந்திருக்கிறது அதோடு கூட...
கல்யாணியை மீண்டும் பார்க்கலாம் என்கிற உந்துதலில்தான் இவன் கிளம்பி வந்தான்.
கல்யாணி இப்போது எப்படி இருப்பாள்?
யாரோ இரண்டு பெண்கள் அரசமரத்தின் மறுபக்கம் நின்றபடி பேசிக்கொண்டிருந்தனர்.
"ஏன்.. கல்யாணிக்கு என்னாச்சு?"
"என்ன ஆறது? அப்பா பாட்டுச் சொல்லிக் கொடுத்து ஏதோ சம்பாரிச்சுண்டு இருந்தார். வியாதியிலே படுத்து ஒருநாள் போயிட்டார். இவ அனாதை ஆயிட்டா. அப்பாகிட்டே பாட்டுக் கத்துண்ட சிஷ்யப் பசங்க யாராவது உதவி பண்ணுவாள்ன்னு எதிர்பார்த்து வருஷக் கணக்கா காத்திருந்தா. யாரும் வரல்லை. ஆற்று நீர் வத்தினதும் பறந்து போற பறவைக் கூட்டம். அப்புறம் வயிறுன்னு ஒண்ணு இருக்கே. இவளே பாட்டுக் கத்துக்கொடுக்க ஆரம்பிச்சா. ஆனா இவகிட்டே பாட்டு கத்துக்க வரவாளை விட... இவளைப் பதம் பாக்க வந்தவாதான் ஜாஸ்தி. அப்புறம் வீட்டு வேலை செஞ்சா. கடைசியிலே கடைசியிலே..."
கதை சொன்ன அந்தப் பெண் 'சஸ்பென்ஸை' விடுவிக்காமல் அவசரமாகப் போய்விட்டாள்.
இவன் திகைத்தான். கல்யாணிக்கு என்ன ஆகி இருக்கும்? வித்தை கற்க வந்தவர்களில் எவனாவது வினை விதைத்துவிட்டுப் போய்விட்டானா?
இவன் பரபரப்புடன் நடந்தான்.
இதோ... இதோ இதுதான் பரமேஸ்வர அய்யரின் வீடு... இங்குதான் இவன் பாட்டுக் கற்றுக் கொள்ள வந்திருக்கிறான்.
"யார் நீங்க?" யாரோ ஒரு பெண்மணி.. மத்திம வயதிருக்கும்.
"பரமேஸ்வர அய்யர்."
அந்தப் பெண்மணி நொடித்தாள். "அந்த ப்ராமணன் செத்து பத்து வருஷமாச்சு."
"நான்... நான் அவர்கிட்டே சங்கீதம் கத்துண்டு இருந்தேன். அதான்..."
அவள் இவனை ஏளனமாகப் பார்ப்பது போல் தோன்றியது.
"அ... அவரோட பெண் கல்யாணி..." "உம்... இருக்கா..."
"பா... பாக்கலாமா?"
"உள்ளே போய்ப் பாருங்கோ... பத்திரம்..."
அங்கே?
உடல் மெலிந்து... தலைவிரி கோலமாய்... கிழிந்து உடையுடன்... சங்கிலியால் ஒரு தூணில் கட்டப்பட்டிருக்கும் கல்யாணி... இவளா கல்யாணி? தன் கலைகளை இழந்த கல்யாணி கலைந்து கிடந்தாள்.
"கல்யாணி..." இவன் கதறினான்.
"கல்யாணி இல்லை... பைத்தியம். இந்த பைத்தியத்துக்கு ஊழியம் செஞ்சே என் பாதி பிராணன் போயிட்டது. ஒண்ணுவிட்ட அண்ணா பெண்ணாச்சே... ஏதோ அண்ணா இந்த வீட்டை நீ வைச்சுக்கோ. கல்யாணியை பாத்துக்கோன்னு சொன்னானேன்னு ஒத்துண்டேன். ஒரு அரைப் பைத்தியத்தை என் தலையிலே கட்டிட்டான். வரவர வெறி ஜாஸ்தியாயிட்டது. சமாளிக்க முடியவில்லை. அதான் கட்டிப் போட்டிருக்கோம்."
கல்யாணி திடுக்கிட்டு கண் விழிக்கிறாள்.
"கல்யாணி... எ... என்னைத் தெரியல்லை? நான் ஸ்வாமிநாதன். ஸ்வாமி... நீ காபி குடுப்பியே... அந்த ஸ்வாமி கல்யாணி.."
"ஸ்வாமி..." சிரிப்பும் அழுகையுமாக கல்யாணி கத்துகிறாள். "ஸ்வாமி என்னைக் கூட்டிண்டுப் போ.. என்னை இவா கொடுமைப்படுத்தறா. நான் இங்கே இருக்கமாட்டேன். என்னைக் கூட்டிண்டுப் போ ஸ்வாமி... கூட்டிண்டு போ.."
சங்கிலிகளால் கட்டப்பட்ட கைகளால் தலையில் அடித்துக் கொண்டு கல்யாணி கத்துகிறாள். சிரிக்கிறாள். ஸ்வரங்கள் ஒலித்த வீட்டில் இப்போது அபஸ்வரங்கள்.
"கல்யாணி... நீ என்னுள் வீழ்ந்து மண் மூடிப் போன விதை. உன்னை விருஷமாக்கிக் காட்டுவேன் கல்யாணி. நீ ஒதுக்கப்பட்டவள். உன்னை செதுக்கிக் காட்டுவேன்.. கல்யாணி. வெட்டப்பட்ட உன் கரங்களை மீண்டும் துளிர்க்கச் செய்வேன் கல்யாணி. இதுதான் என் ஆசானுக்கு நான் செலுத்தும் குருதட்சிணை!"
இவனுக்கு சாஸ்திரிகள் கிடைக்கவில்லை. ஆனால் கல்யாணி கிடைத்துவிட்டாள். சிதைந்த ஓவியம்தான். ஆனால் சீர்த்திருத்தி விடலாம்.
(நன்றி : குமுதம்) |
| | விமலா ரமணி அவர்களின் இதர படைப்புகள்.
| கதை பகுதியில் வந்த இதர படைப்புகள்.
|
|
|
|
|
|