 |
இதழ் 382 |
 |
செப்டம்பர் 15 2008
|

|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
Your Advertisement Here
|
| |
|
| |
 |
add nilacharal to your favourites |
 |
nilacharal as your homepage |
|
|
|
|
| | | 'வெல்கம்' என்று மெல்லிய புன்னகையோடு அவன் சொன்னபோது ஒரு மிருகம் கருவானதை இருவருமே உணர்ந்திருக்கவில்லை.
 "வாசு, இவங்க மிஸஸ் அஞ்சனா நாராயணன். லெக்சரரா ஜாயின் பண்றாங்க" பேராசிரியர் அறிமுகப்படுத்திய பெண்ணைப் பார்த்ததும் சரக்கென்று வாசுவைக் கவர்ந்தது அவளது கண்கள்தான். சமுத்திரம் போலப் பளபளத்த கண்களைச் சுற்றி கரை எழுப்பினாற் போல கருகருவென்று நீண்ட இமைகள்.
"அஞ்சனா, வாசுவைத் தெரியாம இந்தக் காம்பஸ்ல யாருமே இருக்க முடியாது. அவ்வளவு பாப்புலர். போகப் போக நீங்களே தெரிஞ்சுப்பீங்க" பேராசிரியரின் அறிமுகம் அவன் மேல் ஒரு சுவாரஸ்யத்தைத் தோற்றுவித்தது அஞ்சனாவுக்கு.
"வெல்கம்" என்று மெல்லிய புன்னகையோடு அவன் சொன்னபோது ஒரு மிருகம் கருவானதை இருவருமே உணர்ந்திருக்கவில்லை.
பேராசிரியருடன் அவள் அங்கிருந்து அகலுகையில், அவள் தோள்களில் ஊஞ்சலாடிய நீண்டு அடர்ந்த கேசத்தோடு தன் பார்வை நகர்ந்ததை உணர்ந்து ஒற்றைக் கண்ணைச் சுருக்கித் தன்னைச் செல்லமாய்க் கடிந்து கொள்கிறான் டாக்டர் வாசுதேவன் கண்ணன், முப்பத்தைந்து வயதான அசிஸ்டென்ட் ப்ரொ•பஸர்.
அலைபேசி 'அக்கம் பக்கம்' என்று பாடியது. புன்னகையோடு சட்டைப் பையிலிருந்து அதனை உருவினான். மனைவி ரேகாவுக்கு இசையென்றால் அத்தனை பிரியம். அவனை அதிகம் அழைக்கும் நபர்களுக்கென தனித்தனியாய் அவன் அலைபேசியில் தீம் ம்யூஸிக் போட்டு வைப்பதில் அவளுக்கொரு ஆர்வம்.
"சொல்லு, செல்லம்"
"ஏன் அட்டெண்டென்ஸ் தரலை?" செல்லக் கோபிப்பு.
வாசு திரும்பவும் ஒரு கண்ணைச் சுருக்க வேண்டியிருந்தது...
"ஸாரிடா... மறந்துட்டேன். ஆனா இதெல்லாம் உனக்கே கொஞ்சம் ஓவரா தெரியலை? ஒரே காம்பஸ்ல ஒண்ணரை கிலோமீட்டர் தூரம் கார் ஓட்டி வரதுக்கு உனக்கு நான் •போன் பண்ணிச் சொல்லணுமா?"
"ஆரம்பிச்சுடாதீங்க. சொல்லணும்னா சொல்லணும். அவ்வளவுதான். அது சரி, லீவு போட்டுட்டு எங்களை ஏற்காடு கூட்டிப் போற ப்ளான் என்னாச்சு?"
"போறோமே! இன்னிக்கு தேதியை •பிக்ஸ் பண்ணிடலாம். எனக்கு க்ளாஸ¤க்கு நேரமாச்சு. அப்புறம் பேசறேன்" பேசிக் கொண்டே கையில் நோட்ஸை எடுத்துக் கொண்டு தன் அறைக் கதவைச் சாத்தினான்.
"கண்டிப்பா பேசணும்" அவள் அப்படிச் சொல்லிவிட்டு வைத்தபோது வாசுவுக்கு மனதில் இதமான உணர்வு படர்ந்தது.
ஆறு வருட தாம்பத்யத்தில் இருவருக்குமுள்ளான பிணைப்பு மேலும் மேலும் இறுகிக் கொண்டு வருகிற நிறைவு தந்த இதம் அது. பெற்றோர் பார்த்துச் செய்த திருமணம் தான். ஆனால் ஒருநாளும் பெரிய பிரச்சினை என்று எதுவும் எழுந்ததில்லை. ஏதோ பிறந்ததிலிருந்து ஒருவரை ஒருவர் அறிந்திருந்தாற்போன்ற புரிதல் இயற்கையாய் வந்துவிட்டிருந்ததில் வாசுவுக்கு தான் பெரிய அதிர்ஷ்டக்காரன் என்ற எண்ணம் அடிக்கடி எழும். ஐந்து வயது அபிதாவும் இரண்டு வயது யுவனாவும் சேர்ந்து குடும்பம் சிக்கென அமைந்து போனதில் அவனுக்கு இன்னும் கர்வம். டாக்டர் அஞ்சனாவுக்கு இது பி.எச்.டி முடித்ததும் கிடைத்திருக்கும் முதல் பணி. முதல்நாள் என்பதால் பெரிதாய் வேலை எதுவும் இல்லை. அறையை ஒழுங்குபடுத்தி புத்தகங்களை அடுக்கியாயிற்று. மறுநாளுக்கான வகுப்புக்குத் தேவையானதைத் தயார் செய்தாயிற்று. இன்னும் நேரமிருக்க, கல்லூரியைப் பற்றி இன்னும் கொஞ்சம் தெரிந்து கொள்ளலாமென இணைய உலவியைத் திறந்ததும் கல்லூரியின் தளம் திரையில் வந்தது.
மின்னி மின்னி அணைந்த எழுத்துக்கள் 'கங்கிராஜுலேஷன்ஸ் டு டாக்டர் வாசுதேவன் கண்ணன்' என்றன முகப்பிலேயே.
அதனைச் சொடுக்கி உள்ளே சென்றவள் அவன் சமீபத்தில் வென்றிருந்த விருதினைப் பற்றியும், பின் அந்தக் கட்டுரையிலிருந்த ஹைபர்லிங்க் வழியாய் அவன் சரித்திரம் மொத்தத்தையும் தெரிந்து கொண்டாள். அவன் மாணவனாய்ப் பெற்ற தங்க மெடல்கள், ஐஐஎஸ்ஸியில் பி.எச்.டி செய்த போது வென்ற பரிசுகள், சர்வதேச ஏடுகளில் வெளியான அவன் கட்டுரைகள், பல்கலைக்கழகத்தின் க்விஸ் மாஸ்டர், கல்லூரி கலைக் குழுவின் கன்வீனர் என்று அவனின் நீண்டு விரிந்த சாதனைப் பட்டியல் அவளைப் பிரமிக்க வைத்தது. பேராசிரியர் சொன்னதன் முழு அர்த்தம் புரிந்தது போலிருந்தது. வாசுவின் மேல் பெரிய மரியாதை தோன்றிவிட்டிருந்தது அஞ்சனாவுக்கு.
மணியானதும் அறையைப் பூட்டிக் கொண்டு வெளியேறினாள் அஞ்சனா. டிபார்ட்மெண்ட் முழுவதுமே பளிச்சென்று சுத்தமாய் இருந்ததையும் ஆங்காங்கே தொட்டிகளில் அழகான குரோட்டன்ஸ் செடிகள் அதற்கு இன்னும் அழகு சேர்த்ததையும் ரசித்துக் கொண்டே நடந்தாள். ரத்தச் சிவப்பு நிறத்தில் கண்ணை ஈர்த்த ஒரு செடியை நெருங்கியபோது அதிலிருந்து புதிதாய்த் தோன்ற ஆரம்பித்திருந்த இளஞ்சிவப்பு நிறத் தளிர்கள் அவள் முகத்தில் ஒரு முறுவலைத் தோற்றுவித்தன. பச்சைக் குழந்தை போல அந்தத் தளிர்களில் ஏதோ ஒரு பரிசுத்தமிருந்ததாய்த் தோன்ற மெல்ல அவற்றை வருடிவிட்டாள் அஞ்சனா. அவளது ஸ்பரிஸத்தை விரும்புவது போல அவை தலையசைக்கவும், அவள் தன் முகத்தைத் தழைத்து அந்தத் தளிர்களைக் கன்னத்தில் பதித்துக் கொண்டாள்.
தன் அறை ஜன்னலின் வழியாய் இந்த நாடகத்தைப் பார்த்துக் கொண்டிருந்த வாசுவின் இதழ்களிலும் புன்னகை ஒன்று பூத்து 'இவள் மகா ரசிகையாய் இருக்கவேண்டும்' என்ற எண்ணத்தைத் தோற்றுவித்தது. அவள் முகத்திலிருந்த அந்தப் பரவசம் அவன் பார்வையை இறுக்கமாய்த் தன்னிடம் இருத்திக் கொண்டது.
தளிர்களோடான தன் கொஞ்சலை முடித்துக் கொண்டு நிமிர்ந்த அஞ்சனா அனிச்சையாய்த் திரும்பிய திசையில் நேர்வெட்டாய்ச் சந்திக்க நேர்ந்தது வாசுவின் பார்வையை. சுளீரென்று மின்னலொன்று பாய்ந்தாற்போலிருந்தது.
(தொடரும்)
|
| | நிலா அவர்களின் இதர படைப்புகள்.
| தொடர் பகுதியில் வந்த இதர படைப்புகள்.
|
|
|
|
|
|