Home  
இதழ் 382

செப்டம்பர் 15 2008


www.guruji.com

Search

 

Nilacharal Web

Search in English

Help
 

Login

 

Username

Password

Click Here to Login

New Members!
Register Here..
 

Your Advertisement Here

 
  add nilacharal to your favourites nilacharal as your homepage  
sachin
carnatic_music
Home>>ஸ்பெஷல்ஸ்

வீரத்துறவி விவேகானந்தர் (40)
- டி.எஸ்.வெங்கடரமணி

உங்கள் கருத்துகள்நண்பருக்கு அனுப்பபிரதி எடுக்க

“காசியை விட்டு இப்போது செல்கிறேன். சமுதாயத்தின் முன் ஒரு வெடிகுண்டை வெடிக்க வைத்து விட்டுத்தான் நான் திரும்புவேன். அப்போது சமுதாயமே, ஒரு நாய்க்குட்டிபோல் என் பின்னால் ஓடி வரும்!”

இமயப் பயணத்தில் இமயம்!

பந்த பாசங்களைப் புறந்தள்ளிவிட்டு, கருமமே கண்ணாக, அகண்டானந்தருடன் தமது இமயப்பயணத்துக்குப் புறப்பட்டார் சுவாமிஜி. கங்கை நதிக்கரை ஓரமாக, கால் நடையாக, கிடைத்ததை உண்டு, ஆன்மிக சாகசமாக, ஆனந்தமாக நடந்தனர் இருவரும். கவலைகளும் மற்ற சிந்தனைகளும் பின்னோடிப் போயின!

அவர்கள் தங்கிய முதல் இடம் பாகல்பூர். அங்கு அவர்கள் சந்தித்த முக்கிய அன்பர்கள் மதுராநாத், மன்மதநாத் சவுத்ரி ஆகியோர். மதுராநாத் பின்னொரு நாளில் சுவாமிஜி பற்றிச் சொல்லுவது: “அவரது போதனைகளின் ஆன்மா தீவிர தன்னலக் கலப்பில்லாத தேசப்பற்று ஆகும். சிகாகோவில் சர்வ சமயப் பாராளுமன்றத்தில் அவர் பெற்ற பெருவெற்றியைப் பற்றிப் பலரும் ஏகமாகப் புகழ்ந்து பேசும்போது இந்தியா தனது தலைவனைக் கண்டறிந்துவிட்டது என்று உணர்ந்து கொண்டேன்.”

மன்மதநாத், “ஊரிலுள்ள பணக்காரர்களிடம் எல்லாம் உங்களை அழைத்துச் செல்கிறேன்; எனது வண்டியிலேயே போகலாம்” என்ற போது, “துறவிகளுக்கு அது அழகில்லை” என்று மறுத்துவிட்டார் சுவாமிஜி. “சுவாமிஜியின் தொடர்பால் பல ஆன்மிக உண்மைகளைக் கண்டு கொண்டேன்; இலட்சியத்தை உருவாக்கிக் கொண்டேன்” என்றார் மன்மதநாத்.

மன்மதநாத் அவரிடம் ஒரு யோசனையைச் சொன்னார். “நாம் இருவரும் பிருந்தாவனம் போவோம். கோவிந்தனைத் தரிசித்துக் கொண்டு, அமைதியான பக்தியில் வாழ்நாளைக் கழிப்போம்.” “நல்ல யோசனைதான். ஆனால் இது எல்லாருக்கும் உகந்ததல்ல” என்று விட்டார் சுவாமிஜி. அவரது குறிக்கோளும் பாதையுமே வேறானவையாயிற்றே?

பாகல்பூரில் சுவாமிஜி சமண சமயத் துறவிகளைக் கண்டு உரையாடினார். சமண சமயமும் சனாதன சமயத்தின் பகுதியே என்பது அவரது துணிபு. புத்த சமயத்துடன் சமண சமயத்துக்கு நெருங்கிய தொடர்பு இருக்கிறது என்றும் அவர் கூறினார்.

அடுத்து சுவாமிஜி வைத்தியநாதம் என்ற இடத்துக்குச் சென்றார். அங்கு மேற்கத்திய நாகரிகத்திலேயே மூழ்கிக் கிடந்து, பின்பு மனம் மாறி இந்திய வழியே உயர்ந்தது என்று புரிந்து கொண்ட ராஜ் நாராயண் போஸ் என்பவரைச் சந்தித்தார். ராஜ்நாராயண் வங்காளி மொழியிலேயே பேச வேண்டும், ஆங்கில வார்த்தை உச்சரிப்பதுகூடத் தவறு என்று கருதியவர். நெடு நாட்கள் அவருடன் பழகிய போதும், ஆங்கிலம் தமக்குத் தெரியும் என்று கூட சுவாமிஜி காட்டிக்கொள்ளவில்லை. ஒரு முறை ப்ளஸ் என்ற வார்த்தையைச் சொல்ல வேண்டி வந்தபோது, அதைச் சொல்லிவிட்டு, சுவாமிஜிக்குப் புரியுமோ புரியாதோ என்று இரண்டு விரல்களையும் வைத்து ராஜ் நாராயண் ஜாடை காட்டியபோது அகண்டானந்தாவால் சிரிப்பை அடக்க முடியவில்லை.

சுவாமிஜி உலகப் புகழ் பெற்ற விவரம் அறிந்ததும் ராஜ்நாராயண் சொன்னது: “அப்படியா சங்கதி? அவருக்கு ஆங்கிலம் தெரியும் என்ற விஷயமே எனக்குத் தெரியாதபடி நடந்து கொண்டாரே? அற்புதமான் மனிதர் அவர்!”

வைத்தியநாதத்தை விட்டு அவர்கள் சென்ற ஊர், காஜிப்பூர். பின்னர் காசி. காசியில் அவர்கள் பிரமததாஸ் என்ற அன்பர் வீட்டில் தங்கினார்கள். அங்கிருந்து புறப்பட்ட போது சுவாமிஜி சொன்ன வாசகம், அவரது தன்னம்பிக்கைக்காகவும், தீர்க்க தரிசனத்துக்காகவும், பிரசித்தி பெற்றது: “காசியை விட்டு இப்போது செல்கிறேன். சமுதாயத்தின் முன் ஒரு வெடிகுண்டை வெடிக்க வைத்து விட்டுத்தான் நான் திரும்புவேன். அப்போது சமுதாயமே, ஒரு நாய்க்குட்டிபோல் என் பின்னால் ஓடி வரும்!”

அகண்டானந்தாவுக்கு அயோத்தி செல்ல வேண்டும்; அங்கு பக்தி யோகத்தில் உயர் நிலை கண்ட ஜானகிபர் சரண் என்ற பக்தரை சுவாமிஜி சந்திக்க வேண்டும் என்று பேராவல். சுவாமிஜி மறுத்து விட்டார். “இந்த அறிவீனம் எல்லாம் எனக்கு வேண்டாம்! மேலும் மேலும் தாமதப்படுத்தாமல் இமயமலை போய்ச் சேருவோம்!” என்று விட்டார்.

அகண்டானந்தா பதிலே பேசவில்லை; என்றாலும் அயோத்திக்கு இரண்டு டிக்கெட் வாங்கி வந்து சுவாமிஜியுடன் வண்டியில் ஏறி விட்டார். சுவாமிஜி ஒன்றும் சொல்ல முடியவில்லை. அன்னை சாரதாதேவி, அவரைப் பார்த்துக் கொள்ளும் பொறுப்பை அகண்டானந்தாவிடம் கொடுத்திருக்கிறாரே? ஜானகி சரணைச் சந்தித்துத் திரும்புகையில் சுவாமிஜி சொன்னது, “நீ என்னை இங்கு அழைத்து வந்தது குறித்து ரொம்ப சந்தோஷம். ஒரு மாமனிதரை, புனிதரைச் சந்தித்து விட்டேன்!”

மலையடிவாரம் வழியாக அவர்கள் அடுத்து நடந்து வந்த இடம் நைனிடால். கையில் பைசா இல்லாமல், சந்தர்ப்பவசமாகக் கிடைத்த உணவையே உண்டு, ஒரு சாகசப் பயணம்! வழியில் இரவு ஓர் அரச மரத்தடியில் சுவாமிஜி ஆனந்தமாக தியானத்தில் ஆழ்ந்தார். தியானம் கலைத்து எழுந்த அவர் சொன்னது: “இந்த அரச மரத்தடியில் என் வாழ்வின் பெரிய பிரச்சினைகள் எல்லாம் தீர்வாயின. அண்டமும் பிண்டமும் ஒன்றுபட்டவை என்பதை உணர்ந்து கொண்டேன். அண்டத்தில் உள்ளது அனைத்தும் பிண்டத்திலும் உள்ளது. பிரபஞ்சம் முழுமையையுமே ஓர் அணுவுக்குள் கண்டேன்!”

மேலை நாட்டில் இந்தக் கருத்தையே விரிவுபடுத்தி, “பிரபஞ்சம் - அண்டமும் பிண்டமும்” என்ற தலைப்பில் அவர் ஒரு சொற்பொழிவு நிகழ்த்தினார்.

(தொடரும்)

டி.எஸ்.வெங்கடரமணி அவர்களின் இதர படைப்புகள். ஸ்பெஷல்ஸ் பகுதியில் வந்த இதர படைப்புகள்.
                         
Your Comments
Comment
உங்கள் கருத்து
பெயர் :
மின் அஞ்சல் :
சுட்டி :

Comment In:

Tamil English
(Type here in Thanglish and see tamil text in bottom. Tamil conversion powered by : www.suratha.com)
NOTE : Please do not use single quote in your comments. You can use double quote in place.
(English / தமிழில் - யூனிகோட்)
What you see in this box gets posted as feedback.

Cunard Cruise Lines
Hot properties in India

ஜோதிடம் கேளுங்கள் பகுதி தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. விரைந்து கட்டண சேவை பெற இங்கே சுட்டவும்.

 

 


 

 


About us | Team | Contact Us | Press | Feedback | Favourites | Communities | Shopping | Services | Site map

tamil magazines, Hindu devotional songs, tamil links, tamil movies, tamil songs, tamil dvd, tamil news, tamil, tamil comedy, tamil movie, tamil music DVDs, bharatanatyam, Yoga DVDs, carnatic music, tamil cinema, sivaji movie, cricket world cup, tamil ebooks, web design, web design resources, global warming, outsourcing, mutual funds, Cunard Cruise Lines, India Pakistan cricket series, Kuselan, India Cricket, Sultan The Warrior

A web magazine from Nilacharal Ltd
Privacy Policy|Terms of use|Disclaimer| Copyright Nilacharal Ltd - All Rights Reserved Worldwide