வாரத்திற்கு ஒரே ஒரு (நாவல், கதை என்றில்லாத இதர பொருள் பற்றிய) புத்தகத்தையேனும் நீங்கள் படிக்கவில்லை எனில் நீங்கள் நவீன காலத்தில் பின்னேறிக் கொண்டே இருக்கிறீர்கள் என்று பொருள்!
முழு மூளைச் செயல்பாட்டை ஊக்குவிப்பதற்காக பல்வேறு பயிற்சிகளை நாம் இங்கு பார்த்து வருகிறோம். இவை அனைத்தும் அறிவியல்பூர்வமாக வடிவமைக்கப்பட்டவை. பலன் தருபவை. இந்தப் பயிற்சியின் நேரம் 30 வினாடிகள் முதல் இரண்டு நிமிடம் முப்பது வினாடிகள் வரை மட்டுமே இருக்கும்படி வடிவமைக்கப்பட்டுள்ளன. ஆகவே இதைப் பயிற்சி செய்வோர் அதிக நேரத்தை இதற்கென ஒதுக்கத் தேவை இல்லை. ஓய்வாக இருக்கும்போது பயிற்சிக்கு உகந்த இடம் எதுவாக இருந்தபோதிலும் அங்கு இவற்றை மூன்று நிமிடங்களுக்குள் செய்து முடித்து விடலாம் என்பதே இந்தப் பயிற்சிகளின் சிறப்பு.
பனிரெண்டாவது வழி :
இந்தப் பயிற்சியின் நோக்கம் உங்கள் படைப்பாற்றல் திறனை புதிய தரமான அறிவு மூலம் ஊக்குவிப்பதே ஆகும். உங்கள் மனதிற்கான உணவு இது!
படைப்பாற்றல் திறன் கொண்ட படைப்பாளிகள் நிறைய தகவல்களைத் தன் கைவசம் வைத்திருப்பவர்கள்! புதிய அறிவுபூர்வமான செய்திகள், புதிய கருத்துக்கள் ஆகியவற்றை இவர்களின் மனம் நாடிக்கொண்டே இருக்கும். வாரத்திற்கு ஒரே ஒரு (நாவல், கதை என்றில்லாத இதர பொருள் பற்றிய) புத்தகத்தையேனும் நீங்கள் படிக்கவில்லை எனில் நீங்கள் நவீன காலத்தில் பின்னேறிக் கொண்டே இருக்கிறீர்கள் என்று பொருள்! உங்கள் படைப்பாற்றல் பசிக்கு சில தீனிகள் இதோ:
1. நீங்கள் படிக்கவேண்டியவற்றை கவனமாகத் தேர்ந்தெடுங்கள். பல்வேறு பொருள்கள் பற்றிய கண்ணோட்டம் விடுங்கள். ஆனால் தேர்ந்தெடுப்பதில் கவனமாக இருங்கள். “இது எனது படைப்பாற்றல் மனதிற்கு உதவியாக இருக்குமா?” என்ற கேள்விக்கு ‘ஆம்’ என்று பதில் வந்தால் அதைத் தேர்ந்தெடுங்கள். ‘இல்லை’ என்றால் விட்டுவிடுங்கள்.
2. நிச்சயமாக மார்ஜின் நிறைய இருக்கும்படி பார்த்துக் கொள்ளுங்கள். மார்ஜினில் உங்கள் பார்வைகள், கருத்துக்கள், கேள்விகள் ஆகியவற்றைக் குறிக்கத் தவறாதீர்கள். புத்தகம் சிறிது பாழாகிவிடும் என்பது உண்மை தான்! ஆனால் இதனால் நீங்கள் பெறும் பயன் மிகவும் பெரிது! அடுத்த முறை நீங்கள் குறித்தவற்றை மட்டும் பார்த்தால் மீண்டும் முழுப்புத்தகத்தைப் படித்த பயன் கிட்டும். புத்தகத்தின் சாரத்தைத் தான் நீங்கள் முக்கிய குறிப்புகளில் அடக்கி விட்டீர்களே! இதே வழியைத் தான் பிரபல எழுத்தாளர் மார்க் ட்வெயின் முதல் எல்விஸ் ப்ரீஸ்லி வரைக் கடைப்பிடித்திருக்கிறார்கள். உலகப் புகழ் பெற்றிருக்கிறார்கள்.
3. புத்தகத்தைப் படிக்கும் முன்னர் அதன் நோக்கம் அல்லது சுருக்கத்தை ஒரு நோட்டம் விடுங்கள். அல்லது ஒன்றிரண்டு அத்தியாயங்களைப் படித்த பின்னர் புத்தகம் என்ன சொல்ல வருகிறது என்று மதிப்பிடுங்கள். ஒரு நாவலைக்கூட எடுத்து இதே போலப் படியுங்கள். அதன் முடிவு என்னவாக இருக்கும் என்று ஊகித்துப் பாருங்கள். ஜார்ஜ் பெர்னார்ட் ஷா இந்தக் கற்பனை விளையாட்டைச் செய்து மகிழ்வது வழக்கம்.
4. புத்தகக் கடைக்குச் செல்லுங்கள். இதுவரை படித்திராத ஒரு பத்திரிக்கையைத் தேர்ந்தெடுங்கள். பில்கேட்ஸ் இப்படிச் செய்வது வழக்கம். இதே வழியைப் பல்வேறு துறைகளில் வெற்றி பெற்றோர் செய்து வருகின்றனர். புதிய பத்திரிக்கை உங்களுக்குத் தெரியாத ஒரு விஷயம் பற்றிய முக்கிய தகவலைத் தரக்கூடும். உங்கள் விற்பனையைக் கூட்டுவது எப்படி அல்லது புதிய வகை சித்திரங்களை வடிவமைப்பது எப்படி என்று அது வழி காட்டக்கூடும்.
5. நாவல் அல்லாமல் இதர புத்தகங்களில் வரும் பிரச்சினைகளுக்கு அதன் முடிவை புத்தகத்தில் பார்க்காமல் நீங்கள் அதைத் தீர்ப்பீர்கள் என்று எண்ணிப் பாருங்கள். தீர்வை நீங்கள் முதலில் கண்ட பின்னர் அந்த புத்தகத்தின் ஆசிரியர் என்ன தீர்வு சொல்லி இருக்கிறார் என்பதை ஒப்பிட்டுப் பாருங்கள். ஜான் கென்னடி இப்படிச் செய்வது வழக்கம். அதனால்தான் அவரால் ஜனாதிபதியாக இருந்த போது சரியான முடிவுகளை உடனுக்குடன் எடுக்க முடிந்தது.
6. எப்படி முன்னேறுவது போன்ற புத்தகங்களைப் படிக்கத் தவறாதீர்கள். அதில் புத்தக ஆசிரியர் கூறும் யோசனைகளை உங்கள் கருத்துக்களை ஏற்றி மாற்றிப் பாருங்கள். இது வரை நீங்கள் படித்திராத பொருள் பற்றிய புத்தகங்களில் ஆர்வம் காட்டுங்கள்.
7. வாழ்க்கை வரலாறுகளை ஊன்றிப் படியுங்கள்.
8. எப்படி முன்னேறினோம் என்பது பற்றிப் பல்வேறு துறைகளில் வெற்றி பெற்றோர் தங்கள் வழிமுறைகளை பிரஸன்டேஷனாகத் தந்துள்ள 5 முதல் 20 நிமிடம் வரை ஓடும் வீடியோக்கள் வெப் சைட்டுகளில் ஏராளம் உள்ளன. அவற்றை ஆர்வத்துடன் பாருங்கள். (எடுத்துக்காட்டான ஒரு சைட் www.TED.com) ஊக்கமூட்டும் இவர்களின் பேச்சு உங்கள் வாழ்க்கைப் பாதையையே வெற்றிகரமாக மாற்றும். கலை, சினிமா, வணிகம், பண்பாடு, உலகப் பிரச்சினைகள் பற்றி இவர்களின் முன்னேற்றக் கருத்துக்களையும் நீங்கள் அறிய முடியும்.
9. நீங்கள் புதிதாக அறிந்த ஒரு விஷயம் எப்படி மற்ற துறையுடன் இணைந்து இருக்கிறது என்பதை எண்ணிப் பாருங்கள். இப்படித் தொடர்புபடுத்திப் பார்ப்பது இனி எதிர்காலத்தில் வரவிருக்கும் நடையையும் (trend) இணைப்பான விஷயங்களையும் உங்களை உணரச் செய்து விடும். பழைய பிரச்சினைகளுக்கு உங்களின் புதிய அறிவு மூலம் தீர்வைக் கண்டுபிடித்துச் சொல்லுங்கள்.