இந்த சமயத்தில் சுவாமிஜியை ஆழ்ந்த மன வேதனைக்குள்ளாக்கிய செய்தி ஒன்று வந்தது, முதலில் தந்தியாக, பின்னர் விரிவான கடிதமாக. அவருக்கும் ஒரு சோகம்
பயணத்தின் அடுத்த இலக்கு அல்மோரா. நடைப் பயணம். பல மணி நேரம் உணவின்றிப் போயிற்று. சுவாமிஜி களைத்துப் போய் ஏறத்தாழ மயக்கமடைந்த நிலையில் கீழே சாய்ந்து விட்டார். அந்த இடம் ஓர் இஸ்லாமியக் கல்லறைக்கு நேரே இருந்தது.
அந்தக் கல்லறையின் காப்பாளர் ஜுல்பிகர் அலி என்ற பக்கீர். சுவாமிஜி மயங்கி விழுந்ததைப் பார்த்து அவர் பதறி விழுந்து விட்டார். அவரிடம் கொடுக்கத்தக்கதாக இருந்தது ஒரே ஒரு வெள்ளரிக்காய். அதை அன்புடன் சுவாமிஜியிடம் கொடுத்து, "சாப்பிடுங்கள், சுவாமிஜி!" என்றார். சுவாமிஜி ஹீனஸ்வரத்தில், "என்னால் அதை எடுத்து சாப்பிடக்கூட முடியாது, நீயே ஊட்டிவிடு" என்று கேட்டுக் கொண்டார். பதறினார் அந்தப் பக்கீர். "நான் முஸ்லிம், சுவாமி" என்றார். "இருக்கட்டும், நாம் எல்லோரும் சகோதரர்கள்தான், ஊட்டி விடு" என்றார் சுவாமிஜி. பரிவுடன் ஊட்டினார் பக்கீர். மனமுவந்து அருந்தினார் சுவாமிஜி. புத்துயிர் பெற்று உற்சாகமாக எழுந்தார், குகன் என்ற வேடுவன் அளித்த உணவை, "பரிவொடு தழீஇய என்னில் பவித்திரம் எம்மனோர்க்கும்" என்று ராமபிரான் சொன்ன அதே மனப்பாங்கு சுவாமிஜிக்கும். இது பற்றிப் பிற்காலத்தில் சுவாமிஜி சொன்னது, "அந்தப் பக்கீர் அன்று எனக்கு புது வாழ்வு தந்தார்."
ஏழாண்டுகளுக்குப் பிறகு அமெரிக்கா சென்று வெற்றி வாகை சூடி, புகழ் பெற்ற விவேகானந்தராக இந்தியா வந்த பிறகு, அல்மோராவில் அவருக்கு அமோக வரவேற்பு. ஊர்வலமாக அழைத்துச் சென்றார்கள். வெள்ளரிக்காய் தந்த பக்கீர், கூட்டத்தில் நின்று கொண்டிருந்தார். அவருக்குப் பழைய சம்பவமே நினைவில்லை. சுவாமிஜி அவரை அடையாளம் கண்டுகொண்டார். அருகில் இருந்தவர்களிடம் பழைய சம்பவத்தை நினைவு கூர்ந்தார். அந்தப் பக்கீரால் தாம் புது வாழ்வு பெற்றதைச் சொன்னார். அவரை அருகில் அழைத்து அன்போடு பேசி, கொஞ்சம் பணமும் கொடுத்து அனுப்பி வைத்தார்.
சுவாமிஜியும் அகண்டானந்தாவும் அல்மோரா வந்தது ஆகஸ்ட் 1890ல். அங்கு லாலா பத்ரி சா என்ற அன்பர் அவர்களை வரவேற்று தங்க இடமளித்து உபசரித்தார். சுவாமிஜி அங்கு அமைதியும் தனிமையும் நிறைந்த ஒரு குகையைக் கண்டுபிடித்தார். ஆழ்ந்த தவமும் ஆன்மிக சாதனையும் புரிய சரியான இடமாக அது அமைந்தது.
குகையில் அமர்ந்து ஆன்மிக ஒளியில் உயர உயரச் செல்ல, அவர் முகமே ஒளிப் பிழம்பானது. இந்தக் கட்டத்தில் அவருக்கு, "சே! நான் ஒரு மகத்தான பணியை மேற்கொண்டுள்ள நிலையில், தனிப்பட்ட ஆன்மிக அனுபவத்தில் ஈடுபட்டு குறிக்கோளை மறக்கிறேனே!" என்று ஒரு கழிவிரக்கம் தோன்றியது.
குகையை விட்டு லாலா வீட்டுக்கே திரும்பி விட்டார். இது பற்றி அகண்டானந்தர் சொல்லுவது: "ஒவ்வொரு முறை சுவாமிஜி ஏகாந்தமாய் இருந்து அத்வைத அனுபூதியில் ஆழும்போதும், சூழ்நிலை அவர் அதைக் கைவிட வேண்டிய கட்டாயத்தை ஏற்படுத்தியது. அவர் அடைய வேண்டிய குறிக்கோள், அவர் ஆற்ற வேண்டிய மகத்தான பணி ஒன்று இருந்தது. அவரது இயல்பின் காரணமாக, அவர் தவ நெறியைக் கைவிட்டு, கொண்ட கடமையைத் தொடர வேண்டியதாயிற்று."
இந்த சமயத்தில் சுவாமிஜியை ஆழ்ந்த மன வேதனைக்குள்ளாக்கிய செய்தி ஒன்று வந்தது, முதலில் தந்தியாக, பின்னர் விரிவான கடிதமாக. சின்ன வயதில் அவரோடு விளையாடிப் பழகி, நெருக்கமான தோழியாக இருந்த அவரது சகோதரி தற்கொலை செய்து கொண்டு விட்டார். பால்ய விவாகம். வாழ்க்கைப்பட்ட குடும்பம் மிகவும் பத்தாம்பசலி எண்ணங்களுள்ள குடும்பம். சகோதரியால் ஒத்துப் போக முடியவில்லை. இது சுவாமிஜியின் மனதை வெகுவாகப் பாதித்தது.
சகோதரி நிவேதிதை சொல்வார்:- "சொந்த வாழ்வில் நடந்த இந்தத் துயர சம்பவம் சுவாமிஜியின் மனத்தில் துடிக்கும் வலியை ஏற்படுத்தி இருக்கிறது. இந்தியப் பெண் குலத்தின் கல்வி, முன்னேற்றம் குறித்த அவரது பிற்கால எண்ணப் போக்குக்கு, இந்தத் துன்பியல் நிகழ்வு காரணமாக அமைந்தது என்று சொல்லலாம்."
ஏறத்தாழப் பத்தாண்டுகள் கழித்து, சுவாமிஜி தமது சிஷ்யை ஒருவருக்கு எழுதுகிறார்: "திரும்பி வருவதில்லை என்ற தீர்மானத்துடன் பல ஆண்டுகள் முன்பு நான் இமயமலை சென்றேன். எனது சகோதரி தற்கொலை செய்து கொண்ட செய்தி என்னை சாந்தி மார்க்கத்திலிருந்து விரட்டி விட்டது!"
(தொடரும்) |