 |
இதழ் 489 |
 |
அக்டோபர் 11 2010
|

|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
Your Advertisement Here
|
| |
|
| |
 |
add nilacharal to your favourites |
 |
nilacharal as your homepage |
|
|
|
|
| | | மாறன் ஆண் கன்றினைத் தேர்ந்தெடுத்து, “இதனை நான் வீரமாக வளர்ப்பேன். ஊரிலுள்ள அனைத்துக் காளைகளையும் என் காளை வெல்லும்” என்று இறுமாப்புடன் கூறினான். (மூலம்: உகாண்டா)
ஒரு ஊரிலிருந்த பெற்றோருக்கு மாறன், மதியன் என்ற இரு புதல்வர்கள் இருந்தார்கள். அவர்களில் மூத்தவனான மாறன் மிகவும் கோபக்காரன். ஊரிலுள்ள மற்ற சிறுவர்களோடு எப்போதும் வம்பிழுத்து சண்டையிட்டுக் கொண்டிருப்பான். இரண்டாமவன் மதியன் பொறுமைசாலி. கடுமையான உழைப்பாளியும் கூட. வீட்டில் தன் தாய்க்கு உதவியாகவும் வயலில் தன் தந்தைக்கு உதவியாகவும் இருப்பான்.
அவர்களிக்கு ஒரு குறிப்பிட்ட வயது வந்ததும் அவர்கள் தந்தை அவர்களை அழைத்து, “நீங்கள் முழுமையாக குடும்பப் பொறுப்பை ஏற்றுக் கொள்ளும் காலம் நெருங்குகிறது. அதனால் உங்களுக்குத் தனித்தனியாக இப்போதே பொறுப்புத் தரப் போகிறேன். அது உங்களுக்கு நல்ல அனுபவமாக அமையும்” என்று கூறி இருவரையும் மாட்டுத் தொழுவத்துக்கு அழைத்துச் சென்றார்.
அங்கே பசு ஒன்று இரட்டைக் கன்றுகளை ஈன்றிருந்தது. அவற்றைக் காட்டி, “ஆளுக்கு ஒவ்வொரு கன்றைத் தேர்ந்தெடுத்து பராமரிக்க வேண்டும்” என்று சொல்லி மூத்தவனான மாறனுக்கு முதலில் தேர்ந்தெடுக்கும் சலுகையை வழங்கினார்.
மாறன் ஆண் கன்றினைத் தேர்ந்தெடுத்து, “இதனை நான் வீரமாக வளர்ப்பேன். ஊரிலுள்ள அனைத்துக் காளைகளையும் என் காளை வெல்லும்” என்று இறுமாப்புடன் கூறினான்.
மதியன் விரும்பியபடியே அவனுக்குப் பெண் கன்று கிடைத்தது. அது பசுவாகித் தனக்குப் பாலும் மேலும் கன்றுகளும் தருமென்று அதனை மகிழ்ச்சியோடு ஏற்றுக் கொண்டான்.
கன்றுகள் வளர்ந்து பெரிதாகின. மாறனின் காளை அவன் எதிர்பார்த்தபடியே முரட்டுத்தனமாக இருந்தது. அவனைத் தவிர வேறு யாரையும் அதனருகே விடுவதேயில்லை. மாறன் பெருமையுடன் கட்டுமஸ்தான தன் காளையின் மீது சவாரி செய்வான். மதியனின் பசு ஆரோக்கியத்துடன் மற்ற பசுக்களை விட அதிக அளவு பால் சுரந்தது. கருமை நிற உடலும் நெற்றியில் வெள்ளை நிறத்தில் திலகமிட்டற்போன்ற திட்டுமாயும் மிக அழகுடையதாக இருந்தது அந்தப் பசு.
ஒரு நாள் கால்நடைகளை மாறனைப் பார்த்துக் கொள்ளச் சொல்லிவிட்டு தன் தந்தைக்கு உதவி செய்ய வயலுக்குச் சென்றிருந்தான் மதியன். அப்போது மதியனின் பசு ஒரு பெண் கன்றினை ஈன்றது. அது தன் தாயை அச்சு எடுத்தாற் போன்று கருமை நிற உடலும் வெள்ளை நிற நெற்றித் திட்டுமாயும் காணப்பட்டது.
மதியனின் பசு பால் தருவதையும் கன்று ஈன்றதையும் கண்ட மாறன், தனக்கும் ஒரு பசு வேண்டும் என்று எண்ணி அந்தக் கன்றினைக் கவரத் திட்டமிட்டான். அந்தக் கன்றினை இழுத்துக் கொண்டு போய் காளையின் அருகில் விட்டான். காளை அந்தக் கன்றினை உதைத்துக் கீழே தள்ளியது. அவன் மீண்டும் மீண்டும் காளையிடம் கன்றினைச் சேர்க்க முயல அது திரும்பத் திரும்ப கன்றினை உதைத்துத் தள்ளிக் கொண்டே இருந்தது.
அப்போது அங்கு வந்த மதியன், தன் சகோதரனின் காளையினருகில் ஒரு கன்று இருப்பதையும் அது தன் பசு போலவே இருப்பதையும் கண்டு, “அண்ணா, என் பசு கன்று ஈன்றதா?” என்று ஆர்வமாகக் கேட்டான்
“இல்லை, இல்லை. இது என் காளை ஈன்ற கன்று” என்றான் மாறன்
அதிர்ச்சியடைந்த மதியன், “அண்ணா, காளை எப்படி கன்று போடும்?” என்று கேட்டான்
“என் காளை போட்டிருக்கிறதே” என்று பெருமையோடு அதனைத் தடவிக் கொடுத்தான் மாறன்.
தன் சகோதரனின் பொய் அப்பட்டமாகத் தெரிந்தாலும் அதற்கு மேல் அவனிடம் வாக்குவாதம் செய்ய விரும்பாமல் வீட்டுக்குச் சென்று தன் பெற்றோரிடம் நடந்ததை விவரித்தான். அவன் பெற்றோர் மாறனுக்கு பாடம் கற்பிக்க முடிவு செய்தார்கள்
அத்திட்டத்தின்படி, மதியன் தங்கள் வீட்டின் முன் நின்று வாய் விட்டுக் கதறினான். அவன் அழுத அழுகை மாடு மேய்த்துக் கொண்டிருந்த மாறனுக்குக் கேட்க, அவன் ஓடி வந்து தன் தம்பியிடம் என்னவென்று விசாரித்தான். ஆனால் மதியன் பதிலொன்றும் சொல்லாமல் கீழே விழுந்து புரண்டு அழுதான். தன் சகோதரனின் துக்கம் மாறனை மிகவும் பாதித்தது.
“தம்பி, என்ன பிரச்சினை என்று சொல். நான் உதவி செய்கிறேன். நீ இப்படி அழுவது எனக்கு வேதனையாக இருக்கிறது” என்று பாசத்துடன் கூறினான் மாறன்.
“அண்ணா, நம் தந்தை பிரசவத்தில் இறந்துவிட்டார்” என்று அழுது கொண்டே கூறினான் மதியன்
அதனைக் கேட்ட மாறன் மிகுந்த கோபம் கொண்டு, “உனக்கென்ன பைத்தியம் பிடித்துவிட்டதா. ஒரு ஆண் எப்படி குழந்தை பெற முடியும்?” என்று கேட்டான்
அப்போது வீட்டினுள்ளிருந்து வந்த அவன் தாய், “ஆணான உன் காளை கன்று போட முடியுமானால் ஆணான உன் தந்தைக்குக் குழந்தை பிறக்காதா?” என்று வினவினார். அவரின் பின்னாலேயே தன் தந்தையும் வந்ததைக் கண்ட மாறன் தனக்குப் பாடம் புகட்டவே தன் குடும்பத்தார் இப்படி ஒரு நாடகம் ஆடியிருக்கிறார்கள் எனப் புரிந்து கொண்டான்.
தன் சகோதரனின் பசு ஈன்ற கன்றினை அவனிடமே திரும்பக் கொடுத்து மன்னிப்புக் கோரினான் மாறன்.
(முற்றும்)
|
| | நிலா அவர்களின் இதர படைப்புகள்.
| பூஞ்சிட்டு பகுதியில் வந்த இதர படைப்புகள்.
|
|
|
|
|
|