Home  
இதழ் 438

அக்டோபர் 12 2009


Weekly Newsletter Subscription

Name
Email

Login

 

Username

Password

Click Here to Login

New Members!
Register Here..
 

Your Advertisement Here

 
  add nilacharal to your favourites nilacharal as your homepage  
Ranbir Kapoor
Access consciousness bars
Home>>தொடர்

திடீரென்று... (26)
- அமர்நாத்

உங்கள் கருத்துகள்நண்பருக்கு அனுப்பபிரதி எடுக்க

“நான்தான் அப்பவே சொன்னேனே. முதல்லே உன்மேல அசாத்திய கோபம் இருந்தது உண்மைதான். ஆனா சீக்கிரமாவே கோபத்துக்குப் பதிலா பதிமூணுலேர்ந்து பதினெட்டு வயசு வரைக்கும் நடந்ததுதான் என் மனசிலே ஆழமா பதிஞ்சுபோயிடுத்து.”

அவள் ஏன் குறைபட்டுக் கொள்கிறாள் என்று பிரசன்னாவுக்குப் புரியவில்லை. “நான் இந்த கான்ஃபரன்ஸூக்கு வர ஒப்புக்கொண்டதே உன்னை ஒருவேளை பாக்கமுடியுமோங்கற நம்பிக்கைலேதான். எனக்கு அவார்ட் முக்கியமே இல்லை. உன்கிட்ட எதுக்கு நான் பெருமை அடிச்சிக்கணும்?”

“அது இருபது வருஷத்திலே நீ சாதிச்சதைக் காட்டறது” என்றாள் ராஜம் வேகமாக.

“நீ எனக்குக் கிடைச்சியே அதைவிட பெரிய ப்ரைஸ் என்ன இருக்கமுடியும்?” என்ற பிரசன்னாவின் கை அவளைச் சுற்றியணைக்க நீண்டது.

ராஜம் அதற்கு ஆதரவு தரவில்லை. “உன் கீழே இப்போ எவ்வளவு பேர் பி.எச்டி. பண்ணறா?”

“ஏழு.”

“இதுவரைக்கும்?”

“நாப்பதஞ்சு.”

“போஸ்ட்-டாக் எவ்வளவு பேர் வேலை செஞ்சிருக்கா?”

“அன்வர் கானுக்கும் எனக்கும் பொதுவா முப்பதுபேர் இருக்கலாம்.”

“எவ்வளவு பேப்பர் எழுதியிருக்கே?”

“முன்னூறுக்கு மேல தேறும், மத்தவங்க உதவியோட.”

“புத்தகங்கள்?”

“பதினொண்ணு, அதிலே நாலுக்கு நான் எடிட்டர்தான்.”

“அவ்வளவா?” என்று கண்களை விரித்து வியப்பில் ஆழ்ந்தாள். “என்னைக் கல்யாணம் பண்ணிண்டிருந்தா இந்த அளவுக்கு சாதிச்சிருக்க முடியுமா?”

“எப்படிச் சொல்ல முடியும்? மத்ததுமாதிரிதான், திறமை பாதி, அதிருஷ்டம் பாதி.” முன்கேள்வியின் மறுபுறமாக ‘உனக்காக நான் காத்திருந்து உன்னோடு வாழ்க்கை நடத்தியிருந்தா நான் இந்தியாவிலே என்ன செஞ்சிருப்பேன்?’ என்ற கேள்விக்கு அவனிடம் திருப்தி தரக்கூடிய பதிலில்லை. நல்லவேளை, அவள் அதைக் கேட்கவில்லை.

“என்மேல இருந்த கோபத்திலேதான் முரட்டுப் பிடிவாதத்தோடு உழைச்சியோன்னு பாத்தேன்” என்று அவனை நேரே பாராமல் சொன்னாள்.

“நான்தான் அப்பவே சொன்னேனே. முதல்லே உன்மேல அசாத்திய கோபம் இருந்தது உண்மைதான். ஆனா சீக்கிரமாவே கோபத்துக்குப் பதிலா பதிமூணுலேர்ந்து பதினெட்டு வயசு வரைக்கும் நடந்ததுதான் என் மனசிலே ஆழமா பதிஞ்சுபோயிடுத்து.”

அந்த பதில் ராஜத்தை ஓரளவு அமைதி அடையச்செய்தது. ஆனால் கேள்விகள் வேறு திசையில் திரும்பின.

“நம்ம எதிர்காலத்தைப் பத்தி யோசிச்சியா?”

“குழந்தைகள் கதைலே வர்ற மாதிரி ரொம்ப நாளைக்கு சந்தோஷமா வாழப்போறோம்.”

“அவ்வளவுதானா?”

“வேறென்ன வேணும்?”

“ஒரு கேள்விக்கு இன்னொரு கேள்விதான் பதிலா?”

பிரசன்னாவுக்கு இது புதிய அனுபவம். என்ன சொல்வதென்று தெரியவில்லை. இப்படி ராஜம் கேள்வி கேட்பாள் என்று முன்பே தெரிந்திருந்தால் சாமியிடம் அறிவுரை வாங்கி வந்திருக்கலாம்.

“சாமி ஏன் உள்ளே வரலை?”

“நாங்க இங்கே வரும்போதே ஆறரை ஆயிடுத்து, வழிலே ஏதோ ஆக்சிடென்ட். ஏழுமணிக்குள்ள நார்த்விக்கைப் பாக்க அவன் திரும்பிப் போயாகணும். நாளைக்குப் பாத்தா போறது.”

“அவருக்கு நம்ம பத்தி எவ்வளவு தெரியும்?”

“எல்லாம்.”

“எல்லாம்னா?”

“இந்தி க்ளாஸ்லே ஆரம்பிச்சு கடைசிலே பிரிஞ்சது வரைக்கும், ஒண்ணுவிடாம.”

“ஒருநாள் பாத்தவன்கிட்ட நம்ம காதல் விவரத்தை எதுக்கு சொன்னே? அது நம்முடைய ரகசியமில்லையா?”

“ஒருநாள் பாத்தவன்கிட்ட ஒரு பெண்ணைக் கண்டுபிடிச்சுக் கொடுன்னா செய்வானா. அப்படி சொன்னப்பதான் என்னோட, இல்லை நம்மோட உறவின் ஆழம் நன்னா தெரிஞ்சிது.”

“நான் கேக்கறதுக்கெல்லாம் நீ சரியாவே பதில் சொல்லமாட்டேங்கறே.” மிகவும் பிடித்தமான விளையாட்டுப் பொருளைத் தொலைத்துவிட்ட குழந்தை மாதிரி இருந்தாள்.

“நீ என்ன எதிர்பாக்கறேன்னு எனக்குத் தெரிலியே.”

“முக்கியமா எதையோ கேட்டாகணும்போல இருக்கு. எப்படி கேக்கறதுன்னுதான் தெரியலை.”

“எனக்கு அந்தக் குழப்பமெல்லாம் கிடையாது. நான் இப்போ கேக்கப்போறது ஒரே ஒரு கேள்விதான்.”

வியாழன் காலை

நேற்றைய காலையோடு ஒப்பிட்டால் பிரசன்னாவுக்கு ராஜம் மகிழ்ச்சியோடு இருப்பதாகப்படவில்லை. அவள் சிரிப்பு வாடிய பூ மாதிரியான சிரிப்பு. அவள் மனதை அரிப்பது எதுவென்று தெரியவில்லை. அவளை நேரடியாகக் கேட்க வாய் வரவில்லை. ஒருவேளை அவளே அதை உணர்ந்திரா விட்டால்? விருந்தினர் அறையில் படுத்திருந்தாலும் எங்கோ தண்ணீர் கொட்டும் ஓசையில்தான் அவன் விழித்தான். பக்கத்தில் ராஜம் இல்லை. படுக்கையிலிருந்து எழுந்து அறையைச் சுற்றி நடந்தான். ஓசை நின்ற சிலநிமிடங்களில் அவளே கதவு வழியாக எட்டிப்பார்த்தாள். உடலைச் சுற்றி ஒரு நீள அங்கி, ஈரத் தலைமயிரைச் சுற்றி ஒரு துண்டு.

“நீ நடக்கற சத்தம் கேட்டுது. குளிச்சிட்டு கீழேவா! நான் காப்பி போடறேன். மாவு ஃப்ரிஜ்லே இருக்கு. இட்லிக்கு வைக்கட்டுமா?”

நல்லவேளை! நேற்றுமாலையில் கேட்டதுபோல் பதில்சொல்ல முடியாத கேள்வியில்லை.

“தாராளமா. எட்டாவது சாப்பிடுவேன்.”

அவள் படியில் இறங்கிச் சென்றதும் முதல் காரியமாக செல்பேசியை எடுத்தான். “குட் மார்னிங் சாமி! எழுப்பிட்டேனா?”

“தீபாவளி அன்னிக்கிக்கூட நீ என்னை அப்படி கேக்கமுடியாது. நான் எழுந்தாச்சு. இன்னிக்கிதான் சுலபமா எடுத்துக்கலாமேன்னு செவன்த் இன்னை மெதுவா சுத்திவந்திண்டிருக்கேன்.”

பிரசன்னாவின் குரலில் ஒருதயக்கம். “சாமி! பர்சனலா ஒரு விஷயம் கேக்கலாமா?”

“இதுவரைக்கும் நாம பேசினதெல்லாமே பெர்சனல் மாதிரிதானே இருந்தது.”

“இது புதுப்பிரச்சினை.”

“நேர்ல பாக்கும்போது சொல்லேன்.”

“உடனே எதாவது செஞ்சா நல்லது. நீ அனுபவப்பட்டவன்.” மெல்லிய குரலில் தொடர்ந்தான். “முதல்நாளைவிட நேத்திக்கி ராத்ரி நான் அனுசரணையா நடந்துண்டேன். ஆனா ராஜத்துக்கு மனநிறைவு கிடைச்சமாதிரி தெரியலை. முதல்நாளின் வேகம் குறைஞ்சுபோயிடுத்தா, இல்லை அவளுக்குக் குற்ற உணர்வான்னு தெரியலை.”

கவனமாகக்கேட்டு சிறிதுநேர சிந்தனைக்குப்பின் சாமி நிதானமாகப் பதில்சொன்னான். “நான் ஓரளவு எதிர்பார்த்ததுதான். அதுக்கு முன்னாடி நாம இன்னொரு விஷயத்தைக் கவனிச்சாகணும். நேத்து நார்த்விக்கோட சாப்பிடப்போனப்போ இன்னிக்கிக் காலைலே உனக்காக ஒரு மீட்டிங் ஏற்பாடு பண்ணியிருக்கேன்னு சொன்னார். உன்னைக் கேக்காமயே நான் அழைச்சிண்டு வரேன்னு சொல்லிட்டேன். ஒருமணிலே நான் அங்கே வந்தா சரிப்படுமா?”

“நீ வர வேண்டாம்! ராஜத்தைக் கேக்கப்போறேன்.”
“அப்படி வரும்போது ப்ரியா அனுப்பின பெட்டியை எடுத்துண்டு வரச்சொல்! பெட்டியைப் பிரிச்சிருந்தா அதிலிருந்த புத்தகத்தைக் கொண்டுவந்தா போரும்.”

“என்ன புத்தகம்?”

“அது அவளுக்கு.”

“சரி, பாப்போம்.”

விருந்தினர் குளியலறைக்குள் சென்றான். இந்த தடவை, பிரசன்னா மாற்றுடை கொண்டுவந்திருந்தான். அரைமணியில் அவன் கீழே வந்தபோது இட்லியும் காப்பியும் வட்டமேஜைமேல் தயாராக இருந்தன. ராஜமும் தலையை உலர்த்திப் புடவைக்கு மாறியிருந்தாள்.

நாற்காலியில் உட்கார்ந்த அவன்முன் இரண்டு தட்டுக்களை வைத்தாள். “நேத்தி பண்ணின சாம்பாரைச் சுடப்பண்ணட்டுமா, இல்லை மிளகாய்ப்பொடி போட்டுக்கறியா?”

“மிளகாய்ப்பொடி.” தள்ளியிருந்த அலமாரியிலிருந்து அதையும், கீழே குனிந்து சிறிய எண்ணெய் பாட்டிலையும் எடுத்துவந்தாள்.

“உன் புடவையைப் பாத்தா என்ன ஞாபகம் வர்றதுன்னு சொல்லட்டுமா?”

“என்ன?” என்று நின்றாள்.

“உன்னோட பன்னீர் பூப்போட்ட மஞ்சள் தாவணி.”

“அதே கலர்லே பட்டுப் பாவாடை போட்டுப்பேனே, அது உனக்கு ஞாபகம் இருக்கா?”

‘தாவணியைக் கவனித்த அளவுக்கு நான் பாவாடையில் கவனம் செலுத்தவில்லை’ என்கிற வார்த்தைகள் வாயிலிருந்து வெளிவரும்போது, “இல்லையே” என்று ஒரு வார்த்தையில் ஏமாற்றத்தோடு முடிந்தன.

“ப்ராத்மிக் சேர்றதுக்கு முன்னால சொந்தக்காரா கல்யாணம், மாம்பலத்திலே நடந்தது. அதுக்குப் பட்டுப்பாவாடை இருந்தாத்தான் போவேன்னு அழுது அடம்பிடிச்சேன். அம்மா அவளோட ஒரேஒரு ஒன்பதுகஜம் புடவையைக் கிழிச்சு எனக்குத் தெச்சா. அப்பதான் அம்மாவோட நிலைமை புரிஞ்சிது. அதுவரைக்கும் மத்த பெண்கள்மாதிரி நிறைய துணி இல்லையேங்கற ஏக்கம் இருக்கும். அப்பறம் துணியைப் பத்தியெல்லாம் கவலைப்படாம பொறுப்பா நடந்துக்க ஆரம்பிச்சேன்.” சொல்லி முடித்துவிட்டு அவனெதிரில் உட்கார்ந்தாள்.

அவன் தட்டில் மிளகாய்ப் பொடியைப் போட்டு, “குழைச்சுக்கோ!” என்று எண்ணெயை ஊற்றினாள்.

“காரம் கம்மியா இருக்கும்.”

சாப்பிடும்போது அவளுக்குத் திடீரென நினைவு வந்தது. “குமுதத்திலே போடறேன்னு என்னை ஃபோட்டோ எடுத்தியே. எனக்கு காப்பி தரணும்னு கேட்டேன், நீ அப்புறம் தரவேயில்லை.”

“பல வருஷம் கழிச்சு உனக்கு ஞாபகார்த்தப்பரிசா கொடுக்கணும்னு பத்திரமா எடுத்து வச்சேன்.”

“முன்னாடியே கொடுத்தா என்ன?”

“நான் எங்கம்மாவுக்குத் தெரியாம படங்களை மறைச்சு வைக்கமுடியும். உன் வீட்டிலே உன்னால முடியுமான்னு தெரியாது.

உங்கம்மா கையிலே கிடைச்சா என்னைக் கோச்சுப்பாளோன்னு பயம்.”

“எங்கம்மாகிட்ட அவ்வளவு பயமா?”

“என்ன இருந்தாலும் ட்யூஷன் டீச்சர்.”

“நான்கூடத்தான் உனக்குப் பாடம் சொல்லிக்குடுத்தேன்.”

“உன்மேலயும் எனக்குப் பயம் பக்தி எல்லாம் இருந்துது.” ‘இப்பவும் இருக்கு.’ ராஜம் அதை ரசித்தாள், சிரிக்க முயற்சித்தாள். அதுவே பிரசன்னாவுக்கு திருப்தியைக் கொடுத்தது.

சாப்பிட்டபிறகு தைரியத்தை வரவழைத்துக்கொண்டு, “காலைலே சாமியைக் கூப்பிட்டு ராஜத்தோட செவன்த் இன் வரேன்னு சொன்னேன்” என்றான்.

“நான் உன்னை அழைச்சிண்டு போறதாத்தான் இருக்கேன். நான் அவரைப் பாக்கவேண்டாமா?”

பிரசன்னா மறக்காமல் கூடத்து மேஜைமேலிருந்த பெட்டியை எடுத்துக்கொண்டு சாமியிடம் கிளம்பப் போவதாகச் சொன்னான். காரில் செல்லும்போது நார்த்விக்கைச் சந்திக்க ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது என்று ராஜத்திற்குத் தெரிவித்தான்.

(தொடரும்)

அமர்நாத் அவர்களின் இதர படைப்புகள். தொடர் பகுதியில் வந்த இதர படைப்புகள்.
                         
Your Comments
Comment
உங்கள் கருத்து
பெயர் :
மின் அஞ்சல் :
சுட்டி :

Comment In:

Tamil English
(Type here in Thanglish and see tamil text in bottom. Tamil conversion powered by : www.suratha.com)
NOTE : Please do not use single quote in your comments. You can use double quote in place.
(English / தமிழில் - யூனிகோட்)
What you see in this box gets posted as feedback.

Hot properties in India

ஜோதிடம் கேளுங்கள் பகுதியில் விரைந்து பதில் பெற, விரிவான விளக்கம் பெற கட்டண சேவையைப் பயன்படுத்தலாம். மேலும் விவரங்களுக்கு...

 

 


 

 


About us | Team | Contact Us | Press | Feedback | Favourites | Communities | Shopping | Services | Site map

tamil magazines, Hindu devotional songs, tamil links, tamil movies, tamil songs, tamil dvd, tamil news, tamil, tamil comedy, tamil movie, tamil music DVDs, bharatanatyam, Yoga DVDs, carnatic music, tamil cinema, sivaji movie, cricket world cup, tamil ebooks, web design, web design resources, global warming, outsourcing, mutual funds, India Pakistan cricket series, Kuselan, India Cricket, Sultan The Warrior

A web magazine from Nilacharal Ltd
Privacy Policy|Terms of use|Disclaimer| Copyright Nilacharal Ltd - All Rights Reserved Worldwide

We use cookies on this website. By using this site, you agree that we may store and access cookies on your device. Find out more and set your preferences here . X