“உண்மையாகவா கூப்படறீங்க? நான் உங்க கூட வர சம்மதமா?” என மனைவி அப்படி வியப்போடு கேட்ட கேள்விதான் ஒரு புகழ் மிக்க பாட்டாக என்னுள் பரிணமித்தது.
சம்மதமா - நான் உங்கள் கூட வர சம்மதமா?
பானுமதிக்குப் புகழ் சேர்த்த படமான நாடோடி மன்னன் படத்தில் அவர் பாடிய பாடல்கள் இரண்டு. ‘சும்மா கிடந்த நிலத்தைக் கொத்தி' பாடலைப் பற்றி ஏற்கெனவே பார்த்தோம். இன்னொரு பாடல் ‘சம்மதமா - நான் உங்கள் கூட வர சம்மதமா' பாடல்.
பாடலை எழுதியவர் ந.மா.முத்துக்கூத்தன். எம்.ஜி.ஆரின் ஆரம்ப காலத்தில் இணைபிரியாமல் இருந்த இவர் கால வசத்தால் மறக்கப்பட்டார் என்றே கூறலாம். சினிமா என்ற மாயத்திரையில் என்னென்ன நடக்கும் என்பதை நன்கு புரிந்து கொண்டவர் கவிஞர் முத்துக்கூத்தன்.
“என் பாடல்கள் மற்றவர்கள் பெயரில் வெளி வந்ததைக் கண்ட கோபத்தினால் நான் எழுதிய பாட்டு வரிகள் மட்டும் இன்னும் நினைவிலிருக்கின்றன:
வேறொருத்தன் பாட்டெழுத பேரொருத்தன் போட்டுக்கிட்டு விளம்பரம் பெறுவதோர் பிசுனசு - நல்ல பேரெடுத்த ஆசிரியன் பேரெடுத்துப் போட்டுக் கதை ஃபிராடுதனம் செய்வதொரு பிசினசு”
இந்தப் பாடலை உடனடியாக எச்.எம்.வி கிராமபோன் இசைத் தட்டில் ஆசான் உடுமலை நாராயண கவிராயரிடம் உதவியாளராக இருந்து வந்த அண்ணன் கே.ஆர்.செல்லமுத்து அவர்களைக் கொண்டு பாடவைத்து பதிவு செய்து விட்டேன். அதனால் சிலரின் கோபத்துக்கும் ஆளானேன்”
என்று முத்துக்கூத்தன் தன் கசப்பான அனுபவத்தை நினைவு கூர்கிறார், பாதை மாறாத பாட்டுப் பயணம் என்ற தனது நூலில்.
எம்.ஜி.ஆர் பற்றிய ஏராளமான அந்தரங்கமான அழகிய குறிப்புகளைத் தன் நினைவுகள் மூலமாக வாசகர்களுடன் பகிர்ந்து கொள்கிறார் கவிஞர். எம்.ஜி. சக்ரபாணியை பெரியவர் என்றும் எம்.ஜி.ஆரை சின்னவர் என்றும் அழைப்பது திரை உலக வழக்கம்.
எம்.ஜி.ஆர் தன் அண்ணனை ‘ஏட்டா' என்று மலையாள மொழியில்தான் குறிப்பிடுவார்; கூப்பிடுவார்.மகிழ்ச்சி ஏற்பட்டால் ‘பஜாவ்' என்ற சொல்லை அவர் பயன்படுத்துவது வழக்கம். அது போலவே நெருங்கிய நண்பர்களுடன் பேசும்போது ‘ஆண்டவனே' என்ற சொல்லையும் பயன்படுத்துவார்.
இப்படி நெருக்கத்தால் ஏற்பட்ட பல அரிய தகவல்களையும் தனது பாட்டு அனுபவத்தையும் குறிப்பிடும் முத்துக்கூத்தன், சம்மதமா பாட்டு பிறந்த கதையை விரிவாகக் குறிப்பிடுகிறார். அவர் சொற்களில் அந்த சம்பவம்:-
“செந்தமிழே வணக்கம் என்ற பாட்டும் சம்மதமா என்ற பாட்டும் படத்தில் இடம் பெற்றன. பேரும் புகழும் பெற்றன. இந்தப் பாடல்களை எழுதச் சொல்லி இரண்டு மூன்று நாட்கள் ஆகியும் சரியான பல்லவி கிடைக்காததால் நான் பாட்டு எழுதுவதற்குக் கால தாமதமாகியது. எம்.ஜி.ஆர் என்னைக் கோபித்துக் கொண்டார். நான் மன சங்கடத்தோடு வீட்டிற்குச் சென்றேன். சூழ்நிலை மாற்றத்திற்காக என் மனைவி மரகதத்திடம் திரைப்படம் பார்க்கப் போகலாமா என்று கேட்டேன்.
அவருக்கு ஒரே ஆச்சரியம்! திருமணமானதிலிருந்து நாங்கள் இருவரும் சேர்ந்து திரைப்படம் பார்க்கப் போனதே இல்லை. அக்கம்பக்கத்து வீட்டுப் பெண்களோடு அனுப்பி வைப்பதுதான் வழக்கம். அன்று நானாக சினிமாவுக்குப் போவோமா என்று கேட்டது அவருக்கு அதிசயமாகவும் ஆச்சரியமாகவும் இருந்ததால்..
“உண்மையாகவா கூப்படறீங்க? நான் உங்க கூட வர சம்மதமா?” என மனைவி அப்படி வியப்போடு கேட்ட கேள்விதான் ஒரு புகழ் மிக்க பாட்டாக என்னுள் பரிணமித்தது. ஒரு சிறு மாற்றத்தோடு பாட்டின் பல்லவி இப்படி அமைந்தது:- சம்மதமா - நான் உங்கள் கூட வர சம்மதமா சரிசமமாக நிழல் போலே நான் கூட வர சம்மதமா
அன்று இரவே முழுப்பாட்டையும் எழுதி முடித்து அடுத்த நாள் எம்.ஜி.ஆரிடம் காட்டினேன். பாட்டைப் படித்துப் பார்த்தவர் அதில் ஒரு எழுத்தைக் கூட மாற்றம் செய்யாமல் அப்படியே ஏற்றுக் கொண்டு உடனே என்.எஸ்.பாலகிருஷ்ணனிடம் கொடுத்து இசையமைக்கச் சொன்னார். அவர் பல மெட்டுகளில் பாடிக் காட்டாமல் முதலில் பாடிய மெட்டையே எம்.ஜி.ஆர் ஒப்புக் கொள்ளும்படி அருமையாகப் பாடிக் காட்டினார்.
பானுமதி அம்மையாருக்கு அந்தப் பாட்டைச் சொல்லிக் கொடுக்க வேண்டும். இன்றைக்கு இருப்பது போல் ஒலி நாடா வசதியெல்லாம் அன்றைக்குக் கிடையாது. நேரிலேதான் பாடிக் காட்ட வேண்டும். அன்றைய சூழ்நிலையில்.. பானுமதி அம்ம¨யார் இருக்கும் இடத்தைத் தேடிச் சென்றுதான் இசையமைப்பாளர்கள் பாடிக் காட்ட வேண்டும். ஆனால் எம்.ஜி.ஆர் அந்த முறையை விரும்பவில்லை.
பானுமதி அம்மையார் 160, லாயிட்ஸ் சாலை (இன்று ஔவை டி.கே.சண்முகம் சாலை)யில் இருந்த எம்.ஜி.ஆர் இல்லத்திற்கு வரவழைக்கப்பட்டார். அவரும் சம்மதித்து அங்கு வந்து ‘சம்மதமா' பாட்டைப் பாடுவதற்கான பயிற்சி எடுத்துக் கொண்டு போனார். அவர் அப்படி வந்து போனது பற்றி எல்லோரும் அதிசயப்பட்டார்கள்.
அன்றைக்குத் தமிழ் திரையுலகில் அல்லிராணி போலவும் சகலகலாவல்லியாகவும் திகழ்ந்து கொண்டிருந்தவர் தன் பிடிவாதத்தை எம்.ஜி.ஆருக்காகப் பெருந்தன்மையோடு விட்டுக் கொடுத்த அந்த அம்மையாரின் செயலைக் கண்டு வியந்து போனார்கள்.
அவர் பாடிய சம்மதமா பாடலை எழுதியவன் நான்தான் என்று என்னை அவருக்கு எம்.ஜி.ஆர் அறிமுகப்படுத்திய போது என்னைப் பார்த்துச் சிரித்தபடி, “கவிகாரு, .. பா. பாக உந்தி” என்று கொஞ்சும் தெலுங்கில் கூறினார்.
பானுமதியின் திரைப் பயணம் நீண்ட நெடிய ஒன்று. அதில் சில சம்பவங்களையும் பாடல்களையும் பார்த்தோம். முழுவதையும் பார்க்க தனி நூல்தான் வேண்டும். பானுமதி பாடிய பாடலை எழுதியவர் யார் என்று இன்றளவும் தொடரும் சர்ச்சைக்கு முடிவு கட்டினார் முத்துக்கூத்தன்.
இப்படி வேண்டுமென்றே பாடலைப் புனைந்தவர் ஒருவராக இருக்க பேரை இன்னொருவர் கொண்டு செல்வதைக் கண்டுதான் அந்தக் கவிஞர் மனம் நொந்தது.
அதனால் தான்
வேறொருத்தன் பாட்டெழுத பேரொருத்தன் போட்டுக்கிட்டு விளம்பரம் பெறுவதோர் பிசுனசு என்று மனம் நொந்து பாடினார் போலும்!
We use cookies on this website. By using this site, you agree that we may store and access cookies on your device. Find out more and set your preferences here . X