வியர்வை உடலில் இருந்தவாறே, உடலைக் கழுவதற்கு உதவும் ஷவர் போலப் பணியாற்றுகிறது
நமது உடலில் தோல் பகுதி அமைந்திருப்பது ஏன்?
நம் உடலை வெளியுலகிலிருந்து காப்பாற்ற, மென்மையான தண்ணீர் புகாத மூடு பொருளாக விளங்குவதுதான் தோல் அமைப்பாகும். தீமை விளைவிக்கும் நோய்க்கிருமிகள் உடலுக்குள் நுழையாமல் தோல் அவற்றைத் தடுக்கிறது. தோலானது உடலின் மிகப் பெரிய உறுப்பாகும். தொடு உணர்வு, வெப்பநிலை, வலி ஆகியவற்றிற்கு எளிதில் உடபடக்கூடியதாகும். நமது உடலைச் சுற்றி நடைபெறுவது என்ன என்பதைத் தோல்தான் நமக்குத் தெரிவிக்கிறது. உடலுக்கு வெளிச்சூழலால் ஊறு ஏற்படாவண்ணம் தடுக்கப்படுகிறது. கதிரவனின் புற ஊதாக் கதிர்களில் இருந்தும் உடலைத் தோல் காப்பாற்றுகிறது. வியர்வையின் மூலமாக உடலின் கூடுதல் வெப்பம் குறைக்கப்படுவதற்கும், உடலின் வெப்பநிலை ஒழுங்குபடுத்தப்படவும் கூட தோலே காரணமாக அமைகிறது.
காலப்போக்கில் உடலின் தோல் பகுதி மாற்றமடைகிறது; இதனால் தோலில் சுருக்கமும் தளர்ச்சியும் உண்டாகின்றன. மனிதர்க்கு வயது கூடக் கூட தோலில் அமைந்துள்ள எலும்புப் புரத (collagen) இழைகள் மென்மையாகி தோல் தளர்வுறுகிறது.
நமக்கு வியர்த்துப்போவது (perspiration) ஏன்?
நமது உடலின் வெப்பநிலை 98.6o பாரன்ஹீட் அளவில் இயல்பான நிலையில் அமைவதற்குப் பயன்படும் வழிமுறைகளுள் உடல் வியர்த்துப்போவதும் ஒன்றாகும். நம் உடல் மிகவும் வெப்பமாக இருக்கும்போது, தோலின் நாளங்கள் திறந்து கூடுதல் வெப்பம் வெளியேற உதவுவதற்கு வியர்வை பயன்படுகிறது. வியர்வை உடலில் இருந்தவாறே, உடலைக் கழுவதற்கு உதவும் ஷவர் போலப் பணியாற்றுகிறது எனலாம். தோலிலுள்ள கோடிக்கணக்கான நுண்துளைகள் வழியே வியர்வை துளிகளாக வெளியேறுகிறது. உடல் வெப்பத்தால் வியர்வை ஆவியாகி தேவைப்படும்போது உடலையும் குளிர்விக்கிறது.
உடல் வெப்பத்தை விரைந்து தணிவிக்கும், உடலிலேயே அமைந்துள்ள ஒரு முறையாக வியர்வை அமைகிறது. திரவம் ஆவியாகும்போது அது உள்ள இடம் குளிவிக்கப்படுவதைப் போன்றதே இதுவும்.