 |
இதழ் 495 |
 |
நவம்பர் 22 2010
|

|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
Your Advertisement Here
|
| |
|
| |
 |
add nilacharal to your favourites |
 |
nilacharal as your homepage |
|
|
|
|
| மனித உடலியல் - 45
- டாக்டர்.விஜயராகவன் |
| | குழந்தையின் ஆளுமைத் திறன் அது பிறந்த உடனேயே வளர்ச்சியுறத் தொடங்குகிறது; பின்னர் வாழ்நாள் முழுதும் அது வளர்ந்து கொண்டே இருக்கிறது. நமக்கு எவ்வளவு ஆற்றல் (Energy) தேவைப்படுகிறது?
ஊட்டச்சத்து இயல் (Nutrition) என்பது நம் உணவு பற்றியும் உண்ணும் உணவை நம் உடல் எவ்வாறு பயன்படுத்துகிறது என்பது பற்றியும் விளக்கும் ஓர் அறிவியல். வாழும் அனைத்து உயிரினங்களைப் போலவே மனிதர்க்கும் வாழ உணவு தேவை. நாம் செய்யும் எல்லாச் செயல்களுக்கும், படிப்பது முதல் ஓடுவது வரை, அனைத்திற்கும் தேவையான ஆற்றலை உணவு அளிக்கிறது. திசுக்களைக் கட்டமைக்கவும், அவற்றின் சேதத்தைச் சீரமைக்கவும், உறுப்புகள் மற்றும் அமைப்புகளை ஒழுங்கு படுத்தவும் தேவைப்படும் பொருட்கள் அனைத்தையும் உடலுக்குத் தருவது உணவே.
உடலுக்குத் தேவைப்படும் ஆற்றல், உடலின் செயல்பாடு, ஆரோக்கியம், தட்பவெப்ப நிலை ஆகியவற்றிற்கு ஏற்பவும் வயதுக்கு ஏற்பவும் மாறுபடுகிறது எனலாம். பிறந்த குழந்தை நிலையிலிருந்து இளமைப் பருவம் வரை வயதுக்கு ஏற்ப, தேவைப்படும் ஆற்றலின் அளவும் மாறுபடும். பிறந்தது முதல் இரண்டு வயது வரை தேவைப்படும் ஆற்றலின் அளவு, மற்ற எந்த வயதையும் விட உடலளவு வீதத்திற்கு ஏற்ப மிகவும் அதிகமாகும்; வயதான காலத்தில் வளர்சிதை மாற்றம் (Metabolism) மிகக் குறைந்த அளவில் நிகழும் போது தேவைப்படும் ஆற்றல் மிகவும் குறைவு.
உடலுக்குத் தண்ணீரின் தேவை மிக அதிகம்; ஏனெனில் உடலின் பெரும்பகுதி நீரால் ஆனதே. உடலின் எடையில் 50 முதல் 75 விழுக்காடு வரை தண்ணீரால் உருவாக்கப்பட்டுள்ளது.
புரதங்கள் ஆற்றலில் சிலவற்றை அளிக்கிறது; ஆனால் மிக முக்கியமானது என்னவெனில் உடலின் பெரும்பகுதியைக் கட்டமைக்க உதவுவது இப்புரதங்களே ஆகும்.
நாம் எந்த வயதில் நடக்கக் கற்றுக்கொள்கிறோம்?
பிறந்த குழந்தை கிடத்தியபடி உள்ளது; அதன் கால்கள் மேல் நோக்கிய வண்ணம் உள்ளன. அதன் உள்ளங்கையைத் தொடும் பொருட்களை அது தானாகவே உணர்ந்து கொள்கிறது. நேராக நிமிர்த்திப் பிடித்து அதன் பாதங்கள் எதையேனும் தொட்டால், அதில் காலடி பதிக்கிறது. தானாகவே சப்புக்கொட்டி, தாயின் மார்பை உறிஞ்சி குழந்தை பால் குடிக்கத் தொடங்குகிறது. இவை அனைத்தும் தன்னியக்க ஆற்றல்களாகவே நடைபெறுகின்றன. ஒரு மாதக் குழந்தை தன் கால்களை நீட்டத் துவங்குகிறது. சுமார் ஆறு முதல் எட்டு வாரம் ஆகும்போது தலையைத் தூக்குகிறது. குழந்தை பெரும்பாலும் உறங்குகிறது எனினும், சில சமயங்களில் பொருட்களின் மீது தன் பார்வையைக் குவிக்கிறது. சுமார் எட்டு வார காலத்தில் குழந்தை புன்னகை பூக்கிறது எனலாம். ஆறு மாதம் ஆகும்போது அதன் எடை பிறந்த போது இருந்ததைப் போல இரு மடங்காக இருக்கிறது. இந்நிலையில் குழந்தை உட்காரத் துவங்குகிறது. எட்டு மாத அளவில் மழலை ஒலியை எழுப்புவதோடு, தன் கட்டை விரலைப் பயன்படுத்தவும் துவங்குகிறது. சுமார் பத்து மாத அளவில் குழந்தை தவழ முயலும்; அப்போது அதன் எடை பிறந்தபோது இருந்தததைப் போல் மும்மடங்காக இருக்கும். ஒரு வருடம் நிறைவுறும் போது தனது முதலடியை அது எடுத்து வைக்கத் துவங்கும். அடுத்த இரண்டு மூன்று மாதங்களில் தத்தித் தத்தி நடக்க முயல்வதோடு ஓரிரு சொற்களைப் பேசவும் செய்யலாம்.
குழந்தையின் ஆளுமைத் திறன் அது பிறந்த உடனேயே வளர்ச்சியுறத் தொடங்குகிறது; பின்னர் வாழ்நாள் முழுதும் அது வளர்ந்து கொண்டே இருக்கிறது.
|
| | டாக்டர்.விஜயராகவன் அவர்களின் இதர படைப்புகள்.
| அறிவியல் பகுதியில் வந்த இதர படைப்புகள்.
|
|
|
|
|
|