இந்தியாவின் பாரம்பரியக் கலாசாரத்தைப் பண்பட்டவர்களும் படித்தவர்களும் ஏற்றுக் கொள்ள வேண்டுமானால், அவை மேல் நாட்டுக்கு ஏற்றுமதியாகி, அங்கிருந்து மீண்டும் இங்கு வந்தால்தான் செலாவணியாகும் எல்லையற்ற பேராற்றல்
இந்த நாட்களில் சுவாமிஜியிடம் ஓர் இனம் புரியாத தவிப்பு காணப்பட்டது. “உலகத்தையே உலுக்கியெடுக்கும் சக்தி உன்னிடம் இருக்கிறது” என்று குருதேவர் சொன்னதின் உண்மை அவருக்கு உணர்வு பூர்வமாகப் புலப்பட ஆரம்பித்தது. அவரது மனத்தில் மேலோங்கியிருந்த சிந்தனை, பாரதத்தின் ஆன்மிகப் புனரமைப்பு.
வைதிக மனப்பான்மை கொண்டவர்கள் ஒருபுறம். ”சீர்திருத்தவாதிகள்” மறு புறம். ஆக இரு தரப்பினரும், பாரதத்தின் உண்மைக் கலாசாரத்தைப் புரிந்து கொள்ளாதவர்களாகவே இருந்தார்கள். எங்கு பார்த்தாலும் கீழ்த்தரமான பொறாமை உணர்வு, பகைமைகள், வேறுபாடுகள்! சுவாமிஜியின் அகக் கண்முன், மாட்சிமை மிக்க, சொல்லவொண்ணாக் கீர்த்தி மிக்க, புராதன பாரத கலாசாரம் மீட்டெடுக்கப்பட்டு உலகுக்கே வழி காட்டுகிற இந்தியா தெரிந்தது. ஆனால் அவர் புறக்கண்கள் நிதரிசனமாகக் கண்டதோ, பாழ்பட்டு, வறுமை மிஞ்சி விடுதலை தவறிக் கெட்டிருந்த பாரதம். அவர் கண்டது வாய்ச்சொல் வீரர்களை; நமது புராதனப் பெருமைகளை அறிந்து கொள்ளாமல், இருளடைந்த நாடிது என்று எவரோ சொன்னால், அதுவும் ஒரு பெருமை என எண்ணி வாழ்ந்தவர்களை; கஞ்சி குடிப்பதற்கு இல்லாமல் அதன் காரணங்கள் இவை என்ற அறிவுமில்லாதவர்களை; மேல் நாட்டு மோகத்தில் மூழ்கி, நமது பாரம்பரியக் கலாசாரத்தையே, கைவிட்டு அழிக்க முனைந்தவர்களை. வேத சாஸ்திரங்களையும் ஆரிய முனி புங்கவர்களின் தத்துவ நூல்களையும் ஆழ்ந்து படிக்கப் படிக்க, பாரதம்தான் சமயங்களின் தாய், ஆன்மிகத்தின் ஊற்றுக் கண், நாகரிகத்தின் தொட்டில் என்பது அவருக்கு உறுதியாயிற்று.
தமது அன்பர்களிடம் எல்லாம், புதிய பாரதத்தை உருவாக்க வேண்டிய நாள் நெருங்கி விட்டது என்று கூறிக் கொண்டிருந்தார் சுவாமிஜி. இந்திய மன்னர்களையும் திவான்களையும் சந்திக்கும் போதெல்லாம் இந்த செய்தியையே வலியுறுத்திக் கூறிக் கொண்டிருந்தார். இந்தியாவின் பாரம்பரியக் கலாசாரத்தைப் பண்பட்டவர்களும் படித்தவர்களும் ஏற்றுக் கொள்ள வேண்டுமானால், அவை மேல் நாட்டுக்கு ஏற்றுமதியாகி, அங்கிருந்து மீண்டும் இங்கு வந்தால்தான் செலாவணியாகும் என்ற யதார்த்த உண்மை அவருக்குப் புரிந்து விட்டது. எல்லா உயிர்களும் அமர நிலை எய்தும் நன்முறையை இந்தியா உலகுக்களிக்கும். அதற்கான வழி, நமது பன்னரும் உபநிடத நூல்களின் சிறப்பையெல்லாம் மேல்நாடுகளில் சென்று கொட்டி முழக்கவேண்டும் என்ற தீர்மானம் அவர் மனத்துள் எழுந்து விட்டது.
இந்த சந்தர்ப்பத்தில், சாரதா என்ற பூர்வாசிரமப் பெயர் கொண்ட திரிகுணாதீதர், பலுசிஸ்தானத்தைச் சேர்ந்த தேசாந்திரத் துறவிகளுடன் வந்து கொண்டிருந்தார். கால் நடையாக மைல் கணக்கில் வந்தவர்கள் பாதங்கள் புண்ணாக, உடல் களைப்பு மேலிட, தொடர்ந்து ஒட்டகத்தில் பயணம் செய்யலாம் என்று எண்ணினார்கள். சுவாமிஜி போர்பந்தரில் இருந்தபோது யதேச்சையாக அங்கு வந்தார்கள். அவர்களின் நோக்கம், பாண்டுரங்கரிடம் பொருள் உதவி கேட்கலாம் என்பது. பாண்டுரங்கர் இல்லத்தில் ஒரு ஆங்கிலம் பேசும் துறவி இருக்கிறார் என்று தெரிந்ததும் அவர் மூலமாக பாண்டுரங்கரை அணுகலாம் என்று முடிவு செய்தார்கள்.
அவர்கள் வந்தபோது, சுவாமிஜி மேல்மாடியில் உலவிக் கொண்டிருந்தார். திரிகுணாதீதருக்கு, சுவாமிஜியைப் பார்த்ததும் இரட்டிப்பு மகிழ்ச்சி. சுவாமிஜியை நெடு நாட்களுக்குப் பிறகு பார்த்தது ஒன்று, அடுத்தது, பழம் நழுவிப் பாலில் விழுந்தது, நம் நரேந்திரனே, நிச்சயம் பாண்டுரங்கரிடம் சொல்லிப் பண உதவி வாங்கித் தருவார் என்பது.
திரிகுணாதீதரைக் கண்டதும் சுவாமிஜிக்கு அளவற்ற மகிழ்ச்சி ஏற்பட்டது என்றாலும், அதை வெளியில் காட்டிக் கொள்ளவில்லை. “நான் தனியே செல்கிறேன் என்று சொல்லி விட்டு வந்து விட்டேனே? பின்னும் ஏன் என்னைத் தொடர்கிறீர்கள்?” என்று கடிந்து கொண்டார்.
திரிகுணாதீதர் அதிர்ந்து போனார். “நான் எங்கே உங்களைத் தொடர்ந்தேன்? என் பாட்டுக்கு வந்தேன். உங்களைக் கண்டேன்.” என்றார். “அது போகட்டும், எனக்கு ஒரு உதவி செய்யுங்கள்” என்று சொல்லிக் கோரிக்கையை முன் வைத்தார். சுவாமிஜி “நான் யாரிடமும் பணம் தரும்படி சிபாரிசு செய்ய முடியாது” என்று மறுத்து விட்டார். திரிகுணாதீதர் தலை குனிந்தபடி வெளியேறினார்.
சுவாமிஜியின் நெஞ்சில் ஈரம் கசிந்தது. குருதேவர் காலத்திலிருந்து கூடப் பழகியவர்களாயிற்றே, ஒரே சாலையில் உடன் பிச்சை எடுத்தவர்கள் ஆயிற்றே? வராக நகர் மடம் உருவாக்கத்தில் தோளோடு தோளிணைந்து பணியாற்றியவர்கள் ஆயிற்றே? பழைய நண்பர் “சாரதா”வை அப்படி எப்படி விட்டுவிட முடியும்? “நில்லுங்கள்” என்றார் சுவாமிஜி.
சென்று ஆரத் தழுவிக்கொண்டார். பழைய கதைகள் எல்லாம் மனம் விட்டுப் பல விஷயங்கள் பேசினார்கள். “சாரதா” கேட்ட உதவியை நிறைவேற்றித் தந்தார் சுவாமிஜி. பிரிகையில் சாரதாவிடம் சுவாமிஜி சொன்னது:-
“சாரதா! குருதேவர் என்னைப் பற்றிப் பல விஷயங்கள் சொல்லுவாரே? அவற்றையெல்லாம் இப்போது உணர ஆரம்பித்திருக்கிறேன். உலகத்தையே உலுக்க வல்ல எல்லையற்ற ஆற்றல் என்னிடம் இருப்பதை உணர்கிறேன்.”
(தொடரும்)
|