Home  
இதழ் 393

டிசம்பர் 01 2008


www.guruji.com

Search

 

Nilacharal Web

Search in English

Help
 

Login

 

Username

Password

Click Here to Login

New Members!
Register Here..
 

Your Advertisement Here

 
  add nilacharal to your favourites nilacharal as your homepage  
Sameera Reddy
Wanted Freelancers!
Home>>கதை

கிளிக் கூண்டுகள் விற்கிறவன் (1)
- எஸ்.ஷங்கரநாராயணன்

உங்கள் கருத்துகள்நண்பருக்கு அனுப்பபிரதி எடுக்க

பூமியில் சலனங்கள் அடங்கியபோது காட்சிகளுக்கு ஓவியத்தன்மை அருளப்படுகிறது. ஒலிகளுக்கு இசைப்பிறவி கிடைக்கிறது அப்போது. இரைச்சல்கள் ஒலியாகக் குறைந்து போன அளவில் இருளில் ஒலிகள் கொண்டாடப் படுகின்றன

சிலந்தி வலை பசை காய்கிறதைப் போல அந்தி சாம்பல் பூத்து கருகி இறுகிவிடுகிறது. மல்லிகை கொட்டிக் கிடக்கிறாப் போல வெளிச்சம் உலகத்தில் ஆனால் வேறு வாசனைகளுடன் நிரம்பி யிருந்தது. இருளில் வாசனைகள் துல்லியப் படுகின்றன. கர்ச்சீப் மேஜிக் போல சட்டென இருள் வரக் காத்திருந்து குபீரெனப் பூத்துக் குலுங்கி வாசனையை விசிறியடிக்கும் மரமல்லி. எல்லாரும் ஜோரா கைதட்டுங்க!... ஓசைகள் தெளிவுற நம் காதுகளில் கேட்க வாய்க்கிறது அப்போது. வீட்டுக்குத் திரும்பி வந்த நாயகன் சட்டையைக் கழற்றும் கிசுகிசுப்பொலியும் அவன் சட்டையில் இருந்து நாணயம் ஒன்று வெளியேறி சிமென்ட் தரையில் சிலிங் எனச் சிதறி குடுகுடுவென, ஜெட்டி போடாமல் குளியலறையில் இருந்து வெளியேறும் பெண் குழந்தை போல ஓடுவதும். அது ஐம்பது காசா ஒரு ரூபாயா என்று அந்த ஒலிக்குறிப்பில் அடையாளம் சொல்ல முடிகிறது.

சமூகத்தின் ஓய்வு நேரம் அது. காட்டில் மிருகங்கள் இரவில் வெளிவருகின்றன. அலைச்சலும் இரையெடுத்தலுமாக காடு இரவில் விழித்துக் கொள்கிறது. தான் மேம்பட்டு விட்டதாகப் புரிந்த மானுடன் இரவினை ஓய்வுக்கும், பகலை உழைப்புக்குமாக வடிவமைத்துக் கொண்டதாய்த் தெரிகிறது. ஆக இரவு, ஓய்வு என்கிற அளவில் கலாபூர்வமாக,, உழைப்பும் லௌகிகமும் கடந்து, கனவுக் கிளர்ச்சியும் ரசனையும் அளிக்கிறதாக அவன் காலப் போக்கில் கண்டு கொண்டான். எங்கோ சரியாக மூட முடியாத தண்ணீர்க் குழாயில் இருந்து நழுவி பெருகி திரண்டு உருண்டு, இழுக்கும் பூமிக்கு இறங்கும் ஒரு நீர்க்குமிழியின் சொட், கண்டுகொண்ட காது அதை ருசிக்கிறது. பூமியில் சலனங்கள் அடங்கியபோது காட்சிகளுக்கு ஓவியத்தன்மை அருளப்படுகிறது. ஒலிகளுக்கு இசைப்பிறவி கிடைக்கிறது அப்போது. இரைச்சல்கள் ஒலியாகக் குறைந்து போன அளவில் இருளில் ஒலிகள் கொண்டாடப் படுகின்றன. அசையும் தென்னையோலை அடுத்த விருட்சத்தோடு என்ன ரகசியம் பேசுகிறதோ என திகட்டலான மயக்கம். கற்பிதங்கள் வாழ்க்கையைப் புன்னகையுடன் எதிர்கொள்ள வைக்கின்றன. துணையெழுத்தாய் அங்குமிங்கும் அலைந்து கொண்டிருக்கும் நாய்கள் தமக்குள் ஒடுங்கிச் சுருண்டு முட்டை வடிவம் எடுக்கின்றன. குட்டி போட்டுப் பால் ஊட்டும் நாய்கள்!

பகலிலேயே சற்று இருட்டிக் கிடக்கும் வீடு. வாசலில் நிற்கிறவரை ''வாங்க'' என்று உள்ளேயிருந்து கூப்பிடுவது கேட்கும். யார் கூப்பிடுகிறார்கள் என்று வெளியேயிருந்து பார்க்க முடியாது. உள்ளே வந்து வெளியைத் துழாவி கண்ணைப் பழக்கி சில பயிற்சிகளுக்குப் பின் உள்ளறைகள் மங்கலாக அடையாளம் பெறும். அந்த வீட்டின் தலைவர் தட்சிணாமூர்த்தி. இலக்கிய ரசிகர். சின்ன வயசில் ஊர்ப்பூங்கா பக்கத்தில் இருக்கும் நூல்நிலையம் தவறாமல் போவார். விகடனும் குமுதமும் வாரா வாரம் வாசிப்பார். சாண்டில்யனின் யவனராணி போன்ற தலையணைச் சரித்திரங்கள் வாசித்து மகிழ்வார். வருடக் கணக்கில் தொடரும் பெரிய தொடர்கதைகள் என்பதால் மட்டும் அவை தலையணைச் சரித்திரங்கள் அல்ல, மூணு வாரத்திற்கொரு தரம் அதில் தலையணை வர்ணனைகள் கட்டாயம் இருக்கும். அதில் வரும் ராஜஸ்திரீகள் ஸ்தனங்களும் பிற நெளிவு சுழிவுகளும் குறைவறப் பெற்றிருந்தார்கள், என்பதை ஆராய்ந்து எழுத்தாளர் எழுதியிருந்தார். சரித்திரக் கதை என்றால் ஆராய்ச்சி தேவைதான். அதை வாசிக்க வரிசையில் காத்திருக்க வேண்டும். நூலகத்தில் யாராவது வாசித்துக் கொண்டிருந்தால், ஒரு வார்த்தை, 'படிச்சிட்டுக் குடுங்க'. தூக்கத்துக்கு உதவுவதற்காகக் கண்டுபிடிக்கப் பட்ட தலையணைகள் தூக்கத்தைக் கெடுக்கிறதாக ஆகியிருந்தன. வயசு அப்படி.

அப்புறம் கொஞ்ச கொஞ்சமாக இலக்கிய ருசி தட்டி, சிறு பத்திரிகைகள் என்று கவனப்பட்டார். பெரும் இதழ்களிலாவது நாசூக்கும் பாவ்லாவும் இருக்கும். இந்தக் கம்னாட்டிகள் அப்டியே தோலை உரிச்சாப் போல பச்சை பச்சையா செக்ஸ் எழுதினார்கள். நூலகத்தில் காத்திருந்து அவைகளைப் படிக்க முடியாது. தனியே வாசித்து உடல் கிளர்ச்சியுற்று மகிழ வேண்டும். இச்சைகளைத் தேடல்களாக அவை அடையாளங் கண்டு தூக்கிப் பிடித்தாப் போலிருந்தது. வார்த்தைப் பர்தா இல்லாத எழுத்துக்கள். சொல் மங்கலம் என்று பள்ளிக் கூடத்தில் வாத்தியார் சொன்ன ஞாபகம். மங்கல வழக்கு, இலக்கணத்தில் உண்டு. இலக்கணத்தை எத்தறதே இலக்கியவாதிக்கு லட்சியம்ன்றான். அதும் தெரியாமலேயே எத்தறது. அவனுக்கென்னா தெரியும் இவனுக்கென்னா தெரியும்ன்றான்... தனக்கு எதுவுந் தெரியாமலே.

ஆங்கிலத்தில் வாசிக்க ஆசை உண்டு. அத்தனை விருத்தியாய் அவர் ஆங்கிலம் அறியார். பஜாரில் பிளாட்பாரங்களில் திடீரென்று பனியன்கள் சாக்சுகள் ரோல்டுகோல்டு செய்ன் அறுபது ரூபாய் வாட்ச் என்று சிறு குன்றாய்க் குவித்து விற்பார்கள். திடீர் மழை போல வந்ததும் தெரியாது, விற்றுப் போனதும் தெரியாது. ஏமாத்த அவ்ள அவசரம். அந்தப் பக்கம் வேலுச்சாமி பழைய புஸ்தகக் கடை வைத்திருந்தார். நிறைய ஆங்கில நாவல்கள் தூண் போல மேலேமேலே அடுக்கி நிற்கும். பிரமிட் போல குவிந்து கொட்டிக் கிடக்கும். அதிலும் ஒருமாதிரி புஸ்தகங்கள் ஆங்கிலத்திலும் 'coffee tea or me' போல, தமிழிலும் 'ஜுலியுடன் ஜாலி' - இப்படிக் கிடக்கும். அதை வீட்டில் வைத்துக்கொள்ள முடியாதவர்கள் வாசித்து விட்டுத் திருப்பி விடலாம், வாடகைக்கு உண்டு.

நல்ல வாசிப்பு ருசி உள்ள தமிழ் நாவல்கள் அந்தக் குவியலில் கிடக்கும். அடியில் இருந்து உருவி எடுக்க வேண்டும். மேலே இந்த வக்கிரங்கள் - அவைதானே பார்த்தவுடன் அள்ளிப் போகச் சொல்லுகின்றன என்று கடைக்காரன் போட்டிருப்பான். ஏறியமுக்கினாப் போல அடியே க.நா.சு. மூச்சுத் திணறிக் கிடப்பார். உருவும் போதே அவர் 'பாத்து பாத்து வலிக்குது' என்பார். கையில் எடுக்க 'தேங்ஸ்' என்பார். திருப்பிய முதல் பக்கத்தில் யாராவது பல்கலைக் கழக மாணவி ஆராய்ச்சிக்காக வாங்கியது தெரியும். சாந்தகுமாரி, பேர் எழுதி எம். ஏ. என்று போட்டிருக்கும். பாடம் முடிந்த ஜோரில் பழைய புத்தகக் கடைக்கு அவள் அனுப்பி இருக்கலாம். சிலர் இன்னும் சுவாரஸ்யமாக மின்சார வாரியம் போடுவதைப் போல எக்ஸ் வடிவ எலும்புகளும் நடுவே மண்டையோடும் போட்டு 'தொடாதே அபாயம்' என எழுதி வைத்திருப்பார்கள். இனி இந்த எழுத்தாளனை இந்த ஜென்மத்தில் வாசிக்க மாட்டேன் என்கிற சங்கல்பத்துடன் பழைய புத்தகக் கடைக்கு வந்து எறிந்துவிட்டுப் போயிருப்பார்கள். கிஸ் அடிக்காத ஆங்கிலப் படம் எவன் பார்ப்பான், என எழுந்து வெளியே வருவதைப் போல. அந்தப் புத்தகங்கள் அவருக்கு சுவாரஸ்யமாய் இருந்தன. மிக அபூர்வமான எழுதச் சிரமமான பாத்திரங்களை க.நா.சு.வும், வல்லிக்கண்ணனும் எழுத முனைந்தார்கள். ஜானகிராமன் கிச்சு கிச்சு மூட்டினாப் போல எழுதறாரு. மகா நோக்காடுடன் லேசான வெட்கம் பூசிய புன்னகையுடன் அசோகமித்திரன் எழுதறாரு. சு.ரா.வும், லா.ச.ரா.வும் வார்த்தை மூர்க்கர்கள். தும்மினாக் கூட இலக்கியத் தும்மல்தான். வார்த்தைகளை ராஜவீதியில் தேர் போல உலாவ விட்டார்கள். மூக்குப்பொடி சுகத்துடன் புகையிலை மணம்னா கி.ரா. அண்ணாச்சி. திண்ணைக் கதை மன்னன்.

பத்திரிகை வாசிப்பதை விட புத்தக வாசிப்பில் கிறுகிறுப்பு உண்டு தட்சிணாமூர்த்திக்கு. ஆளு யாரு எப்பிடி ஊர் என்ன நிலவரம் நாட்டு நடப்பு என்ன, என்றெல்லாம் விசாரித்து விலாவாரியாய்ப் பேசிப் போகின்றன நாவல்கள். புத்தக வடிவச் சிறுகதைகள். அடுத்தவன் பொண்டாட்டி, கொலை கொள்ளை சஸ்பென்ஸ் துப்பறிதல் திடுக்கிடும் திருப்பம்... இப்படிக் கதைகளை பத்திரிகைகள் வெளியிடுகின்றன. ஒரு பெண்டாட்டிக்கே வழி கிடையாது இங்கே. பாதிக் கம்னாட்டி பீச் பக்கம் சொறிஞ்சிக்கிட்டு அலைறான்... அந்த வாழ்க்கை அவருக்கு ஒட்டவில்லை. அதும் பெண் குழந்தைக்குத் தகப்பன் அவர்! பிறத்தியார் மனைவியா? தப்பாப் பாக்கலாமா? பாவமாச்சே! ஊர் சனம் என்ன சொல்லும், மனுசாள்னா மானம் மரியாதை வேணாமா? ஆசைப்படு ஆனா பாக்காதே, இப்டியும் இல்லாம அப்டியும் இல்லாமச் சொல்வார் ஜானகிராமன். சூடு ஒரு ருஜி, சிவப்பு ஒரு அழகுடா! ஜானகிராமனின் தத்துவம். இலக்கிய சில்மிஷம். நெருப்புல சூடும் இருக்கும் சிவப்பும் இருக்கும். தொட்றாதே சுட்ரும்!

ன்ன வேலை என்று சொல்ல முடியாத ஜவுளிக்கடை வேலை. கூட்டம் நிறைய இருந்தால் அவர் வெளியே விற்பனைக்கு வந்து புடவைகளைப் பிரித்துக் காட்டி வரும் வாடிக்கையாளப் பெண்களைச் சந்திக்க வேண்டியிருக்கும். விலை குறைந்த புடவையில் விலை பார்த்து விட்டு, விலை அதிகப் புடவையை எடுத்துக் கொண்டு, குறைந்த விலைக்குக் கேட்பார்கள். தோளில் அங்கவஸ்திரம் போல அதைச் சார்த்திக்கொண்டு கூட வந்த அப்பாவிடமோ, அப்பாவிக் கணவனிடமோ 'நல்லாருக்கா?' - எனக்கு நல்லாருக்கு, நீயும் நல்லாருக்குன்னு சொல்லு என்பது மறைபொருள்.

கணக்கு வழக்கு எழுதுதல் என்பது பரம்பரையாக வந்த வேலை. குலசொத்தை. மேல் சுவரில் இருந்து நீ...ளமாய்த் தரைக்கு இறங்கித் தொங்கும் இரண்டரை மீட்டர் வயரில் இணைந்த முட்டை விளக்கு. ரொம்ப சூடாய் இருக்கும். அரை மணிக்கு மேல் கணக்கு பார்க்க கண் எரியும். கண்ணில் இருந்து தண்ணீர் கொட்டிவிடும். இதே இடத்தில் தான் அப்பா உட்கார்ந்து இதே கணக்கு லெட்ஜர்களைப் பிரித்து விரித்து எழுதிக் கொண்டிருந்தார். தட்சிணாமூர்த்தி படிக்கவில்லை. அப்பா இறந்தபின் இதே வேலை அவர் ஏற்றுக் கொள்ள வேண்டியிருந்தது. அதற்கே கிராக்கி ஏற்பட்டு விட்டது. சூரத் போய் சரக்கு எடுத்துவரும் ஜம்புலிங்கத்தின் பையன் ஒருத்தன், அவன்கூட படிப்பு கிடிப்பு வராமல் வாழ்க்கை நிலைப்படாமல் இருந்தான். அவனும் இதே வேலைக்குப் போட்டி போட்டான். நாட்டில் படிப்பு வராமல் நிறைய இளைஞர்கள் எக்காலமும் இருக்கத்தான் செய்கிறார்கள்.

தட்சிணாமூர்த்திக்கு ஒரு பெண், ஒரு பையன். அவர்களுக்கும் படிப்பு வரவில்லை. அவர் சம்சாரமும் எட்டாங் கிளாஸ் தாண்டவில்லை என்பதையும் நினைத்துக் கொள்வது நல்லது. அவர் பரவாயில்லை, பத்து வரை படித்திருந்தார். எங்க, நல்ல படிப்பு படிக்கட்டும் என்று கல்லூரிக்குப் பணங் கட்டினால் வகுப்புக்கே போகாமல் சினிமாத் தியேட்டர் பக்கம், பஸ் ஸ்டாண்டுப் பக்கம் திரிகிறார்கள். சிகெரெட் லாகிரி வஸ்துகள் எனப் பழகிக் கொள்கிறார்கள். துட்டுச் செலவு? அப்பாவிடம் ஆயிரம் பொய் சொல்கிறார்கள்...

நான் இறந்துபோனால் கம்பாஷ்னேட் கிரவுண்ட்சில் என் பையனுக்கு இதே வேலை கிடைக்கலாம். ஜம்புலிங்கத்தின் பேரன் கேட்காமல் இருக்க வேண்டும். விற்ற பில்லில் பத்துக்கு ஒண்ணு வரவு வைத்து புது பில் எழுதி, செலவுகளை ஒண்ணுக்குப் பத்தாகப் பெருக்கிக் காட்டி, லெட்ஜர்களில் உ போட்டு ஆதாயம் பெருக என எழுதி சந்தன குங்குமம். ஐயங்கார்கள் அரசாங்கத்துக்கு நாமம் போடுவர் லெட்ஜர்களில்.

(மீதி அடுத்த இதழில்)

எஸ்.ஷங்கரநாராயணன் அவர்களின் இதர படைப்புகள். கதை பகுதியில் வந்த இதர படைப்புகள்.
                         
Your Comments
Comment
உங்கள் கருத்து
பெயர் :
மின் அஞ்சல் :
சுட்டி :

Comment In:

Tamil English
(Type here in Thanglish and see tamil text in bottom. Tamil conversion powered by : www.suratha.com)
NOTE : Please do not use single quote in your comments. You can use double quote in place.
(English / தமிழில் - யூனிகோட்)
What you see in this box gets posted as feedback.

Hot properties in India

ஜோதிடம் கேளுங்கள் பகுதி தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. விரைந்து கட்டண சேவை பெற இங்கே சுட்டவும்.

 

 


 

 


About us | Team | Contact Us | Press | Feedback | Favourites | Communities | Shopping | Services | Site map

tamil magazines, Hindu devotional songs, tamil links, tamil movies, tamil songs, tamil dvd, tamil news, tamil, tamil comedy, tamil movie, tamil music DVDs, bharatanatyam, Yoga DVDs, carnatic music, tamil cinema, sivaji movie, cricket world cup, tamil ebooks, web design, web design resources, global warming, outsourcing, mutual funds, India Pakistan cricket series, Kuselan, India Cricket, Sultan The Warrior

A web magazine from Nilacharal Ltd
Privacy Policy|Terms of use|Disclaimer| Copyright Nilacharal Ltd - All Rights Reserved Worldwide