அவரது வீர உரைகளைப் படித்தால் கோழையும் வீறு கொண்டு எழுவான். சோர்வு நிலையின் அடி பாதாளத்தில் உள்ளவன் கூட உற்சாகத்தால் துள்ளி எழுவான். செயல் வீரன் ஆவான்.
சுவாமி விவேகானந்தரின் வாழ்க்கை வரலாற்று நூல்கள் நிறையவே வெளிவந்துள்ளன. ஆராய்ச்சிப் பூர்வமானவை, நெருங்கிப் பழகியவர்களின் அனுபவ அடிப்படையிலானவை, ‘பக்திச் சுவை நனி சொட்டச் சொட்ட’ எழுதப்பட்டவை, இப்படிப் பல. இந்த நிலையில் ஒரு பாமரன் இன்னுமொரு வாழ்க்கை வரலாற்று நூல் எழுதி விவேகானந்த இலக்கியத்துக்கு என்ன பிரமாதப் பங்களிக்க முடியும்? சிந்திக்க வேண்டிய விஷயம்தான்.
விவேகானந்தர் பல பரிமாணப் பெருந்தகை. நாத்திகத்தின் விளிம்புக்கே சென்று முடிவில் ஸ்ரீராமகிருஷ்ண பரமஹம்சரின் பேரருளால் இறை அனுபவம் பெற்றவர். பாரத நாட்டின் ஆன்மிகச் சிறப்பைக் கடல் கடந்து சென்று பறையறைந்தவர். இந்து சமயத்தில் ஆழ்ந்த பற்று அதே நேரத்தில் சர்வ சமய சமரச நோக்கு. பல துறைகளில் பேரறிவு. எதையும் எளிதில் கிரஹித்துக் கொள்ளும் ஏகசந்தகிராஹி. ‘ஸ்ரீராமகிருஷ்ணப் பேரியக்கம் தோன்றக் காரணமானவர். சிறந்த பேச்சாளர். கர்மயோகி. எல்லாம் உண்மைதான்.
எனினும் சுவாமிஜியிடம் நம்மை ஈர்த்த விஷயங்கள் இன்னும் பல உள. அவரது வீர உரைகளைப் படித்தால் கோழையும் வீறு கொண்டு எழுவான். சோர்வு நிலையின் அடி பாதாளத்தில் உள்ளவன் கூட உற்சாகத்தால் துள்ளி எழுவான். செயல் வீரன் ஆவான். அவரது எழுத்துக்கள் எழுச்சி ஊட்டக் கூடியவை. ‘காவிய நாயகன் நேதாஜி’யை உருவாக்கியதில் சுவாமிஜியின் எழுத்துக்களுக்குப் பெரும் பங்கு உண்டு. அவரது வாழ்வியல் கருத்துக்கள் ஆளுமை வளர்ச்சி பெறவும், அன்றாட வாழ்வின் சின்ன சின்னக் காரியங்களைச் செவ்வனே செய்வதிலிருந்து, மிகப் பெரிய சாதனைகள் புரிவது வரை-- அத்தனைக்கும் வழிகாட்டியாக, உந்து சக்தியாக அமையும். மூக்கைப் பிடித்துக் கொண்டு மூலையில் உட்கார்ந்து மோட்சம், மோட்சம் என்று புலம்பிக் கொண்டிருப்பது மட்டுமே ஆன்மிகம் அல்ல, தரித்திர நாராயணர்களுக்கான சேவையும் சேர்ந்ததுதான் ஆன்மிகம் என்று சொல்லி, அத்தகைய ஒரு சாது சங்கத்தை அமைத்து வழி நடத்திய புரட்சியாளர்தாம் சுவாமி விவேகானந்தர்.
அவரது வாழ்வின் இத்தகைய அம்சங்களின் மீது அதிக ஒளி பாய்ச்சிக் காட்டினால் அது பாரதி கண்ட “இளைய பாரத” இளைஞர்களை உருவாக்க உதவும் என்பதே நமது நம்பிக்கை.
வரலாற்றின் முழுமை கருதி, மற்றப் பகுதிகளையும் எழுதத்தான் வேண்டும். இப்படிச் சொல்லுகையில் இன்னுமொரு விஷயம். சுவாமிஜி மண்ணில் கால் பதித்து மக்களொடு ஒருவராகப் பழகியவர்தாம். என்றாலும் அவர் வாழ்வில் மனிதப் புலன்களுக்கும், அறிவுக்கும் புலப்படாத அதி மானுட நிகழ்ச்சிகள் நடந்திருக்கின்றன. அவற்றை விட்டு விட்டால் இந்த வாழ்க்கை வரலாற்று நூல் முழுமையாக இருக்காது. எனவே, கதைப் போக்கோடு இசைந்து வரும் அளவில் அவற்றையும் சேர்த்துச் சொல்லத்தான் உத்தேசம். இவற்றில் அவ்வளவாக ஈடுபாடு இல்லாதவர்களுக்கு ‘சதைப் பற்றுள்ள’ வாழ்வியல் பகுதிகள் இருக்கின்றன. பின் என்ன? உற்சாகப் பயணத்தைத் தொடங்க வேண்டியதுதான்.
We use cookies on this website. By using this site, you agree that we may store and access cookies on your device. Find out more and set your preferences here . X