Home  
இதழ் 447

டிசம்பர் 14 2009


Weekly Newsletter Subscription

Name
Email

Login

 

Username

Password

Click Here to Login

New Members!
Register Here..
 

Your Advertisement Here

 
  add nilacharal to your favourites nilacharal as your homepage  
Rajinikanth
Astrology consultation
Home>>தொடர்

உறுதுணை தேடுமின்! (1)
- அமர்நாத்

உங்கள் கருத்துகள்நண்பருக்கு அனுப்பபிரதி எடுக்க

கல்லூரிகளில் சொல்வது போல செமஸ்டர் என்ற வார்த்தையைக் கேட்டதும் சாமிக்குப் புல்லரித்தது, மேதாவியான தன் மகனை அப்படிப்பட்ட இடத்தில் சேர்த்துவிட வேண்டியதுதான்.

பச்சை அட்டை கையில் கிடைப்பதற்கு முன், சரவணப்ரியாவும் சாமியும் அவர்கள் பங்கிற்கு யு.எஸ். குடியேற்ற அலுவலகத்தின் அனுக்கிரகத்திற்காக கவலையும், ஆதங்கமும் வேண்டிய அளவு பட்டிருக்கிறார்கள். சூரன் பிறந்த பிறகு விசா பற்றிய கவலையெல்லாம் இல்லாமல் நிம்மதியாக வாழலாமென்ற நிலையில், அவர்களுக்குத் தொல்லை தர குடியேற்றச் சட்டம் மறுபடி புதிய உருவில் வந்தது.

வேலைநாட்களில் சரவணப்ரியா தினமும் நாலரைமணிக்குமுன்பே சூரனை அழைத்து வருவாள். அவள் வேலை செய்யும் ட்யூக் பல்கலைக்கழகத்திலிருந்து வீட்டிற்கு வருவதற்கு வழியில் கும்பல் இல்லையென்றால் இருபது நிமிடங்கள். கிட்டத்தட்ட அதே நேரத்தில்தான் சாமியும் வீட்டிற்குத் திரும்புவான். குடியரசுத் தலைவர் ரேகன் இரண்டாம் முறை ஆட்சி துவங்கிய காலம். செப்டம்பர் மாதத்தின் மூன்றாவது புதன்கிழமை. சாமி கவலையோடு வீட்டுவாசலில் காத்திருந்தான். சரவணப்ரியா பயன்படுத்தும் நீலக்கார் இன்னும் வரவில்லை. நாலேமுக்கால் ஆகிவிட்டது. ஐந்துமணிக்குப் பிறகு நெடுஞ்சாலையின் போக்குவரத்து நெரிசலில் மாட்டிக்கொள்வாளோ என்கிற பயம். பின்-இருக்கையில் ஒன்றரை வயதுக் குழந்தை பொறுமையின்றிக் கத்தும் போது காரோட்டுவதில் கவனம் சிதறாமல் இருக்க வேண்டுமே என்கிற அச்சம்.
இலையுதிர் காலத்தின் அறிகுறியாகக் தெருவில் நாலைந்து பள்ளிச் சிறுவர்கள் கால்பந்தைத் தூக்கியெறிந்து பிடித்தார்கள்.

"மிஸ்டர் சாம்! நீயும் எங்களுடன் சேர்ந்து ஆடுகிறாயா?"

"பந்தை எறிகிறேன், ஆனால் பிடிக்க வராது."

சாமி வீசிய பந்தை ஒருபையன் எட்டிப் பிடித்து, மற்றவர்கள் கைகளில் பிடிபடாமல் தெருக்கோடி வரை ஓடிச்சென்று, ‘டச் டௌன்!" என்று கத்திக்கொண்டே சிதறு தேங்காயை உடைப்பது போல் பந்தைத் தரையில் எறிந்தான். அப்போது பிரதான தெருவிலிருந்து யேல் கோ ரோட்டில் திரும்பிய காரின் நீலம் கண்ணில் பட்டதும் சாமிக்கு நிம்மதி.

"நான் போக வேண்டும். பை!"

கார் வீட்டுப் பாதையில் வந்து நின்றதும் சரவணப்ரியா ஒரு பக்கத்திலிருந்து இறங்க, சாமி இன்னொரு பக்கத்துக் கதவைத் திறந்து குழந்தை இருக்கையிலிருந்து சூரனைக் கையில் தூக்கினான். சரவணப்ரியா குனிந்து தன் கைப்பையையும், சூரனின் குழந்தை பையையும் எடுத்துக் கொண்டாள். அப்பாவைப் பார்த்த மகிழ்ச்சியில் சூரனுக்கு சிறு கத்தல்தான், இன்னும் பேசவரவில்லை. அவனை தினம் கவனித்துக் கொள்ளும் சரளாவுக்கு மூன்று வயதில் ஸ்வேதா என்ற பெண். அவளிடமிருந்து வேகமாகப் பேசக் கற்றுக் கொண்டுவிடுவான் என்று எதிர்பார்த்தார்கள். அவள் பேசுவது தெலுங்கு. இங்கே வீட்டில் தமிழ். அவன் விரும்பிப் பார்க்கும் செசமி ஸ்ட்ரீட்டில் ஆங்கிலமும், சிறிது ஸ்பானிஷூம். இந்தக் குழப்பத்தினால் பேச்சு வருவதில் தாமதமென்று சாமியும் சரவணப்ரியாவும் சமாதானப்படுத்திக் கொண்டார்கள்.

"வழிலே கும்பலா?"

"இல்லை, சீக்கிரமே வேலை முடிஞ்சு நாலுமணிக்கு முன்னாலேயே சரளா வீட்டுக்குப் போயிட்டேன். அவளோட பேசிட்டிருந்ததிலே நேரமாயிடிச்சு. மூர்த்தியை இந்தவாட்டியும் ஏமாத்திட்டாங்களாம்" என்றாள் வருத்தத்துடன்.
அந்தச் செய்தி அவனையும் பாதிக்கத்தான் செய்தது. வீட்டில் நுழைந்தபோது சரவணப்ரியா, "இன்னைக்கி சாதம் மட்டும்தான் புதிசா செய்யணும். மிச்சமெல்லாம் இருக்கு. முக்காமணிலே சாப்பிடலாம்" என்றாள்.

"அப்போ, நான் சூரனோட ஒரு ரவுண்டு அடிச்சுட்டு வரேன்."

சாமி பந்து விளையாடும் சிறுவர்களை சூரனுக்குக் காட்டினான். ‘சினிமாவில் வருவது போல் நானொரு பாட்டுப்பாடி முடிக்கும்போது அவர்கள் வயதிற்கு நீ உடனே வந்துவிட்டால் எவ்வளவு நிம்மதி! வேலைக்குப் போகும் போது உன்னை எங்கே விடுவது என்கிற பிரச்சினை இருக்காது. நீ பாட்டுக்கு பள்ளிக்கூடம் சென்று வரலாம். உன்னுடன் பந்து விளையாடுவேன். உனக்கு டென்னிஸ் ஆடக் கற்றுக் கொடுப்பேன்’ என்று அவனிடம் சொல்லிக் கொண்டு தெருவில் நடந்தான்.

சூரன் பிறப்பதற்கு முன்பே ஹைதராபாத்தில் பிஎச்.டி. வாங்கி போஸ்ட்-டாக்காக வந்த மூர்த்தியையும், பி.ஏ. பட்டம் பெற்ற அவன் இளம் மனைவி சரளாவையும், அவர்களின் பெண் குழந்தையையும் சந்தித்தது அதிருஷ்டமென்று சாமியும் சரவணப்ரியாவும் நினைத்தார்கள். சூரனுக்கு நான்கு மாதம் ஆனதிலிருந்து அவனைச் சரளாவின் கவனிப்பில் விட்டுவிட்டு வேலைக்குச் சென்ற சரவணப்ரியாவுக்கு எந்தவிதக் குற்றவுணர்வும் இருந்ததில்லை. சரோஜாவுக்குத்தான் வாய் சும்மா இருக்கவில்லை. "நாலுமாசக் குழந்தையை எப்படி யார்கிட்டையோ விட்டுட்டுப் போக முடியறது?" என்று குற்றம் சாட்டுவது போலக் கேட்டாள். "அவ தன் பொண்ணைக் கவனிச்சிக்கிற மாதிரி உன் குழந்தையைப் பாத்துப்பாளா?" சரோஜா வேலைக்குச் செல்லவேண்டிய அவசியமில்லை. வீட்டிலேயே தங்கி தன் குழந்தைகளைப் பார்த்துக் கொள்ள முடியும். சுரவண ப்ரியாவுக்கு அந்த சௌகரியமில்லை. அத்துடன் சரோஜாவுக்கு ஒத்தாசை செய்ய அவள் அம்மா, இல்லையென்றால் மாமியார் என்று இந்தியாவிலிருந்து யாராவது மாறிமாறி வந்தார்கள்.

மூர்த்தி யு.எஸ்.ஸில் நிரந்தரமாகத் தங்குவதற்கு உதவுவதாகச் சொன்ன கம்பெனி ஏமாற்றியிருக்கிறது. ஓராண்டு காலமாகவே ஏதேதோ காரணங்களால் இழுபறி. எப்படியும் அனுமதி கிடைத்துவிடும் என்றுதான் சாமி நம்பினான். மூர்த்தி மேல் அக்கறையா, இல்லை சூரனைக் கவனித்துக்கொள்ள சரளா இருப்பாளோ என்கிற தன்னலமா?
நடந்துவிட்டுத் திரும்பியபோது சாப்பாடு தயாராக இருந்தது. பிசைந்து வைத்த பருப்பு சாதத்தை சூரன் வேகமாகச் சாப்பிட்டான்.

"சரளா மாதிரி ஒருத்தி எங்கே கிடைக்கப் போறா? இதுவரைக்கும் சொந்த அம்மா மாதிரி பாத்துண்டா" என்று கவலைப்பட்டாள் சரவணப்ரியா.

சாமிக்கும் அது தெரியும். சரளாவைப் பார்த்து சூரன் அழுததில்லை. காப்பகத்திற்குச் செல்லும் குழந்தைகள் போல் அவனுக்குக் காதில் கிருமிகள் தொற்றியதில்லை. "ஏதோ இதுவரைக்குமாவது அப்படி ஒருத்தி கிடைச்சாளேன்னு சந்தோஷப்பட வேண்டியதுதான்."

"சூரனுக்கு வேற இடம் பாக்கணும்."
"எப்போ திரும்பிப் போறாங்களாம்?"
"நவம்பர் கடைசிலே."
"இன்னும் ரெண்டு மாசத்துக்குமேலே இருக்கே."
"நல்ல இடமா கிடைக்கணுமே."
"நாளைக்கே தேட ஆரம்பிச்சுடறேன்."

சாப்பிட்ட பிறகு சாமி பாத்திரங்களை அலம்பியபோது சரவணப்ரியா சூரனுடன் விளையாடினாள். பிறகு வேலைகள் கைமாறின. சாமி சூரனின் கார்களைத் தள்ளி அவனுக்கு வேடிக்கை காட்டினான். அவற்றில் ஒன்றுக்கு பெட்ரோல் போட்டார்கள். இன்னொன்றைக் கார் வாஷிற்கு ஓட்டிச் சென்றார்கள். பழையதை விற்று புதிதாக ஒன்று வாங்கினார்கள். சரவணப்ரியா குழந்தைப் பையைத் திறந்து அழுக்குத் துணிகளையும், பால் பாட்டிலையும் எடுத்தாள். துணிகளைத் துவைக்கப் போட்டுவிட்டு, பாட்டிலைக் கழுவினாள். மறுநாளுக்குத் தேவையான உடைகள், டயபர் துண்டுகள், குழந்தை சீரியல் ஒருபொட்டலம், எல்லாவற்றையும் பையில் வைத்தாள். பிறகு சூரனைக் குளிப்பாட்டவேண்டிய நேரம். அந்தநாள் கிட்டத்தட்ட முடிந்து போனது.

மறுநாள் சாமி வேலைக்குச் செல்லவில்லை. சரவணப்ரியாவும் சூரனும் கிளம்பிச் சென்றபிறகு மொரினாவை அழைத்தான். அவள் லெபனான் நாட்டிலிருந்து தப்பி வந்தவள். அவள் ஐவி சரக்கிலில் பக்கத்திலேயே இருப்பதால் சூரனை விடுவதும் அழைத்து வருவதும் சௌகரியம். இரண்டு வயது வரையிலாவது வீட்டுச் சூழலில் குழந்தை வளர்ந்தால் நல்லதென்று நினைத்தான். அவர்களுக்கு எதிர்வரிசையில் இருந்த டேவிட் பார்க்கர் மாலை வேளைகளில் அவளிடமிருந்து மத்தியகிழக்கு உணவு வாங்கி வருவதைப் பார்த்திருக்கிறான். அவள் வீட்டிலேயே குழந்தைகள் காப்பகம் நடத்துகிறாளென அவன் சொன்னதாக நினைவு.

"ஹாய் மொரீனா! நாங்கள் டேவிட் பார்க்கரின் வீட்டிற்கு எதிரில் இருக்கிறோம்."
"பார்த்திருக்கிறேன்."
"வீட்டில் தயாரித்த உணவை விற்பதோடு பகல்நேரத்தில் குழந்தைகளையும் கவனித்துக் கொள்கிறாய் என்று கேள்விப்பட்டேன்."
"அப்படித்தான்."
"எங்கள் பையனை..." வாக்கியம் தொடரவில்லை.

அதற்குள், "நான் அதை நிறுத்தப் போகிறேன். வீட்டிலிருந்து உணவை விற்காமல் ஒரு கடை வைக்க பலநாளாக ஆசை. வைல்ட்வுட் ஷாப்பிங் சென்டரில் இடம் கூட குத்தகைக்கு எடுத்துவிட்டோம். அடுத்தமாதம் கடையைத் திறக்கப்போகிறோம். அதற்கு என் முழுநேரமும் தேவைப்படும்" என்றாள்.

"வியாபாரத்தில் குட்லக்!"
"தாங்க்யூ."

அடுத்து வேறு வழியின்றி மஞ்சள் புத்தகத்தின் உதவியை நாடினான். சர்ச்சுகள் குழந்தைகளிடம் அன்பு காட்டுவார்களென அவற்றைச் சார்ந்த காப்பகங்களை அழைத்தான். இடமில்லை என்றுதான் பதில் வந்தது.

கடைசியில் ‘பாஸ்டோரல் டாட்லர் அகடெமி’. ஒன்றரை வயதானால் போதும். ஒரு குழந்தைக்கு ஜனவரியிலிருந்து இடமிருந்தது. ‘ஆஹா! பிரச்சினை தீர்ந்தது’ என்று சாமி எண்ணியபோது,

"வாரத்தில் எந்தெந்த நாட்கள் வேண்டும்?"

இதென்ன கேள்வி? "ஐந்து நாட்களும்தான்."

"நாங்கள் எல்லாநாட்களும் பார்த்துக் கொள்வதில்லை. திங்கள், புதன் காலையில் மூன்று மணி. வியாழனும் வெள்ளியும் பிற்பகல் ஒன்றிலிருந்து ஐந்துவரை." என்ன கணக்கோ தெரியவில்லை.

"எனக்கது ஒத்துவராது... தாங்க்யூ!"

மறுபடியும் மஞ்சள் புத்தகம். மான்டிசோரி முறைப்படி நடத்தப்படும் ஒரு குழந்தைகள் பள்ளியில் கின்டர்கார்டனுக்கும் முந்தைய வகுப்புகள் இருந்தன. சௌகரியமான இடம்.

"என் பையனுக்கு இடம் வேண்டும்."

"இந்த செமஸ்டருக்கு இல்லை." கல்லூரிகளில் சொல்வது போல செமஸ்டர் என்ற வார்த்தையைக் கேட்டதும் சாமிக்குப் புல்லரித்தது, மேதாவியான தன் மகனை அப்படிப்பட்ட இடத்தில் சேர்த்துவிட வேண்டியதுதான்.

"அடுத்த செமஸ்டருக்கு; இடம் தந்தால் போதும்." செமஸ்டர் வார்த்தையை அழுத்திச் சொன்னான்.
"ஜனவரியில் அவனுக்கு என்ன வயதிருக்கும்?"
"இருபத்திரண்டு மாதங்கள்."
அவள் குரல் மங்கியது. "இரண்டு வயதுக்குக் குறைவான குழந்தைகளை நாங்கள் எடுத்துக் கொள்வதில்லை."
"கவலையே படவேண்டாம்! அவன் பார்ப்பதற்கு இரண்டரை வயதுக் குழந்தை மாதிரி பெரிய பையன்."
"எங்கள் விதிமுறை அதற்கு அனுமதிக்காது. மார்ச் மாதம் கூப்பிடுங்கள்! அநேகமாகக் கிடைக்கும்."

மார்ச்சிலிருந்து ஒருவழி தெரிகிறது... அதுவரையில்?

ட்யூக், நார்த் கரோலைனா பல்கலைக்கழகங்களின் தொலைபேசிப் புத்தகங்களை சாமி ஆராய்ந்தான். ஆர், எஸ், வீ ஆகிய எழுத்துகளில் தொடங்கும் இந்தியப் பெயர்களைத் தேடினான். பேராசிரியர் பதவியில் இருப்பவர்களையும், கணவன், மனைவி இருவரும் வேலையில் இருந்தால் அவர்களையும் ஒதுக்கினான். கடைசியில் நாலைந்து பெயர்கள் தேறின. உங்களுக்கு மனைவியிருந்தால் அவளால் என் பையனைக் கவனித்துக்கொள்ள முடியுமா என்று நேரடியாகக் கேட்பது நாகரிகமாகாது. முதலில் அவர்களுடன் தொடர்பை ஏற்படுத்திக் கொள்ளவேண்டும்.

சரவணப்ரியா அழைத்தாள். "எதாவது இடம் கிடைச்சுதா?"

"ஐடியா கிடைச்சிருக்கு. இரண்டு வயசுக்குள்ள சூரனுக்கு ப்ளேன்ல டிக்கெட் பத்து பர்சன்ட்தான். டிசம்பர் மாசம் எல்லாரும் இந்தியாவுக்கு போயிட்டு வந்துடுவோம். மார்ச்லேர்ந்து மான்டிசோரிக்கு அனுப்பிடலாம். நடுவிலே ஜனவரி பிப்ரவரிக்குத்தான் யாரையாவது பிடிக்கணும்."

(தொடரும்)

அமர்நாத் அவர்களின் இதர படைப்புகள். தொடர் பகுதியில் வந்த இதர படைப்புகள்.
                         
Your Comments
Comment
உங்கள் கருத்து
பெயர் :
மின் அஞ்சல் :
சுட்டி :

Comment In:

Tamil English
(Type here in Thanglish and see tamil text in bottom. Tamil conversion powered by : www.suratha.com)
NOTE : Please do not use single quote in your comments. You can use double quote in place.
(English / தமிழில் - யூனிகோட்)
What you see in this box gets posted as feedback.

Hot properties in India

ஜோதிடம் கேளுங்கள் பகுதியில் விரைந்து பதில் பெற, விரிவான விளக்கம் பெற கட்டண சேவையைப் பயன்படுத்தலாம். மேலும் விவரங்களுக்கு...

 

 


 

 


About us | Team | Contact Us | Press | Feedback | Favourites | Communities | Shopping | Services | Site map

tamil magazines, Hindu devotional songs, tamil links, tamil movies, tamil songs, tamil dvd, tamil news, tamil, tamil comedy, tamil movie, tamil music DVDs, bharatanatyam, Yoga DVDs, carnatic music, tamil cinema, sivaji movie, cricket world cup, tamil ebooks, web design, web design resources, global warming, outsourcing, mutual funds, India Pakistan cricket series, Kuselan, India Cricket, Sultan The Warrior

A web magazine from Nilacharal Ltd
Privacy Policy|Terms of use|Disclaimer| Copyright Nilacharal Ltd - All Rights Reserved Worldwide

We use cookies on this website. By using this site, you agree that we may store and access cookies on your device. Find out more and set your preferences here . X