ஒலி அலை ஆராய்ச்சி வெற்றி பெற்றவுடன் நேச நாடுகள் ஜெர்மானிய யூ போட்டுகள் எங்கு உள்ளன என்று சரியான இடத்தை ஒலி அலை மூலமாகக் கண்டுபிடித்தன, இதன் மூலம் அவற்றை நேச நாடுகள் அழித்தன. ஆண்கள் மட்டுமே உள்ள உலகம்
விஞ்ஞானிகளையும் மருத்துவர்களையும் சாமான்யர்களையும் ஈர்க்கும் வகையில் எழுதப்பட்ட ஒரு நூல் இன்று உலகில் பரபரப்பாக விற்பனையாகிறது. ஆண்கள் மட்டுமே உள்ள உலகம் - இதைக் கற்பனை செய்து பார்க்க முடியுமா! அந்த அபாயம் நெருங்குகிறது என்று எச்சரிக்கிறது இந்தப் புத்தகம்! புத்தகத்தின் பெயர் சற்று நீளமானது தான்! அன்-நேசுரல் செலக்ஷன்: சூஸிங் பாய்ஸ் ஓவர் கேர்ள்ஸ் அண்ட் தி கான்ஸிகுவன்ஸஸ் ஆப் எ வோர்ல்ட் ஃபுல் ஆஃப் மேன் (Unnatural Selection: Choosing Boys over Girls and the Consequences of a World Full of Men) பெண் குழந்தைகளை விட ஆண் குழந்தைகளையே தேர்ந்தெடுக்கும் இயற்கையல்லாத தேர்வும் அதன் விளைவாக ஆண்கள் மட்டுமே இருக்கும் உலகமும் என்ற பெயரை உடைய இந்த புத்தகத்தை மாரா விஸ்டென்தால் என்ற பிரபல எழுத்தாளர் இதை எழுதி இருக்கிறார்.
குழந்தை ஆணா பெண்ணா என அறியும் சோதனை
கருப்பையில் இருக்கும் குழந்தை ஆணா பெண்ணா என்பதைக் கண்டுபிடிக்கும் சோதனையை மேற்கொள்வது சட்ட பூர்வமாக பல நாடுகளிலும் தடை செய்யப்பட்டிருக்கிறது. இந்தச் சோதனை, கப்பல் எங்கு செல்கிறது என்பதை அறிவதற்காகக் கண்டுபிடிக்கப்பட்டதில் ஆரம்பித்தது என்றால் ஆச்சரியமாக இல்லை! ஆனாலும் அதுதான் உண்மை!!
1794ஆம் ஆண்டு ஒரு இத்தாலிய உயிரியல் விஞ்ஞானி வௌவால்கள் எப்படி ஒலி அலைகளை வைத்தே தங்கள் செல்லவேண்டிய பாதையை நிர்ணயிக்கிறது என்பதை ஆராய ஆரம்பித்தார். பல ஆண்டுகள் உருண்டோடிய பின்னர் இரண்டாம் உலக மகாயுத்தம் ஆரம்பித்த போது ஜெர்மானிய யூ போட்டுகள் கடலின் அடியில் மூழ்கியவாறே யாரும் அறியாமல் சென்று பெருத்த அபாயத்தை நேச நாடுகளுக்கு ஏற்படுத்தின. அப்போது கடலில் போகும் கப்பல்களை எப்படிக் கண்டுபிடிப்பது என்ற ஆராய்ச்சி தீவிரமடைந்தது. அல்ட்ராசானிக் சவுண்ட் எனப்படும் அல்ட்ராசானிக் ஒலி அலைகள் மூலமாக கடலுக்கு அடியில் செல்வதைக் காணலாம் என்ற யோசனையைத் தொடர்ந்து அது பற்றிய ஆராய்ச்சி மிகுந்த முக்கியத்துவம் பெற்றது...
இந்த ஆராய்ச்சியில் அமெரிக்கா பிரிட்டன் மற்றும் பிரெஞ்சு அரசுகள் இணைந்தன.. ஒலி அலை ஆராய்ச்சி வெற்றி பெற்றவுடன் நேச நாடுகள் ஜெர்மானிய யூ போட்டுகள் எங்கு உள்ளன என்று சரியான இடத்தை ஒலி அலை மூலமாகக் கண்டுபிடித்தன, இதன் மூலம் அவற்றை நேச நாடுகள் அழித்தன.
அல்ட்ராசானிக் சவுண்டின் பயன்பாடு
உலக மகா யுத்தம் முடிந்தவுடன் இந்த அல்ட்ராசானிக் ஒலி மூலம் மருத்துவத்தில் பல வியாதிகளைக் குணப்படுத்தலாம் எனக் கண்டுபிடிக்கப்பட்டது. அறுவை சிகிச்சையில் இதைப் பயன்படுத்தியபோது ஒலி அலைகளால் உஷ்ணத்தை உண்டாக்கி திசுக்களை அழிப்பது பயன்பாட்டில் வர ஆரம்பித்தது.
1949இல் மேரிலேண்டில் பெதெஸ்டா என்ற இடத்தில் உள்ள நேவல் மெடிகல் ரிஸர்ச் இன்ஸ்டிடியூட்டைச் சேர்ந்த ஒரு விஞ்ஞானி ஒரு புதிய உத்தி மூலமாக நாய்களின் சிறு நீரகத்தில் இருந்த கற்களை அகற்றினார். அவர் இந்த சிகிச்சையை செய்வதற்கு அல்ட்ராசானிக் சவுண்ட் பெரிதும் உதவியது. இதற்குப் பின்னர் டாக்டர்களுக்கு அல்ட்ராசவுண்ட் ஒரு பெரிய வரபிரசாதமாக அமைந்தது. எப்படி கடலுக்கடியில் அல்ட்ராசவுண்டை வைத்து ஒரு கப்பல் இருக்கும் இடத்தைக் கண்டுபிடிக்க முடிந்ததோ அதே போல உடலுக்குள் ஒலி அலைகள் பயணம் செய்து வெவ்வேறு கண்டுபிடிப்புகளைச் செய்ய உதவியதோடு பல்வேறு வியாதிகளுக்கான சிகிச்சையில் முக்கிய அங்கம் வகிக்க ஆரம்பித்தது! காலப் போக்கில் ஒலி அலை பயன்பாடு மருத்துவத்தில் எல்லா சிகிச்சைகளிலும் இடம் பெற ஆரம்பித்தது.
பல்லைச் சுத்தம் செய்ய உதவுவதிலிருந்து சிறுநீரகக் கற்களைப் போக்குவது வரை எதிலும் அல்ட்ராசானிக் ஒலிதான்! 1959இல் ஸ்காட்லாந்தை சேர்ந்த ஐயான் டோனால்ட் என்பவர் கர்ப்பவதியான ஒரு பெண்ணின் உடலில் இந்த ஒலியைப் பாய்ச்ச கர்ப்பத்திலிருந்த கருவிடமிருந்து எதிரொலி வந்தது. இதனால் ஆச்சரியம் அடைந்த அவர் கர்ப்பமான பெண்களின் மீது எக்ஸ்ரே கதிர்களைப் பாய்ச்சக் கூடாது என்பதால் இந்த ஒலி அலைகளைப் பாய்ச்சி சில மருத்துவ சிகிச்சைகளை மேற்கொள்ளலாமே என எண்ணினார். உடனே இந்த சிகிச்சை முறை கர்ப்பம் தரித்த பெண்மணிகளிடம் பிரபலமானது.
16 கோடி பெண் குழந்தைகள் பிறப்பு தடுக்கப்பட்டுள்ளது
ஆனால் அதில்தான் வந்தது வினை. இந்த ஒலி அலை மூலம் கர்ப்பத்தில் வளரும் சிசு பற்றிய ஏராளமான தகவல்களைப் பெற முடிந்தது. அதில் சிசு ஆணா பெண்ணா என்பதை அறியும் சோதனையும் உருவானது. அதைக் கண்டுபிடிக்கவும் முடிந்தது! இதன் விளைவாக இன்று வரை உலகத்தில் 16 கோடி பெண் குழந்தைகள் உருவாவது தடுக்கப்பட்ட அவல நிலைமை ஏற்பட்டது.
மேலைநாடுகளில் குடும்பப்பெயர்கள் ஆண் வாரிசுகளின் பெயர்களுடனேயே இணைக்கப்படுவதால் அங்கு அனைவருமே ஆண் குழந்தைகளையே பெரிதும் விரும்பினர்.
நம் நாட்டிலோ 'பொட்டை பிள்ளை' என்பது தாங்க முடியாத சுமையாகக் கருதப்பட்டதால் பெண் சிசுக் கொலைக்கு இந்த அல்ட்ராசவுண்ட் சோதனை காரணமானது!
ஆரம்ப காலத்தில் இந்தக் கண்டுபிடிப்பை பத்திரிக்கைகள் பெரிதும் வரவேற்று அளவுக்கு அதிகமான புகழுரைகளால் அதைப் போற்றின. 'கருப்பையைப் பார்க்கும் கண்' என்று ஒரு பத்திரிக்கை இந்த சோதனையைப் பற்றி எழுதியது! அல்ட்ராசானிக் சவுண்டை 'எலக்ட்ரானிக் டாக்டர்' என்று ஒரு பத்திரிக்கை புகழ்ந்தது. 'ஆணா, பெண்ணா உங்கள் குழந்தையை நீங்களே தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம்' என்ற தலைப்புடன் இது பற்றி பிரபல நியூஸ்வீக் தனது 2004ஆம் ஆண்டு இதழில் உற்சாகமான கட்டுரையை வெளியிட்டது. ஆனால் உலகெங்கும் உள்ள சிந்தனையாளர்களும் மதத்தின் அடிப்படை நெறிகளைப் போற்றும் அற உணர்வாளர்களும் இதை எதிர்த்தனர். அவர்கள் பயந்தது போலவே இப்போது ஆகி வருகிறது. உலகில் பெண்களின் பிறப்பு விகிதம் வெகுவாகக் குறைந்து விட்டது. ஆகவே தான் இந்த சோதனை மேற்கொள்வதை அரசுகள் தடை செய்ய ஆரம்பித்தன.
இந்த நிலையில் தான் பெண்களே இல்லாத ஆண்கள் மட்டுமே இருக்கும் உலகம் என்ற புத்தகம் விழிப்புணர்வை ஏற்படுத்தும் ஒரு நூலாக மலர்ந்துள்ளது. பெண்கள் இல்லாத உலகத்தில் அன்பு, ஈரம், தாய்மை, இரக்கம் எதுவுமே இருக்காது. வாரிசை உருவாக்க தாய்க்குலம் இல்லையெனில் ஆண்கள் மட்டும் உலகில் என்ன செய்வார்கள்! தங்களுக்குள் சண்டையிட்டு அழிந்து கொள்வார்களா! சிந்திக்க வைத்து பதிலைக் காணும் வகையில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் புத்தகம் பெண்மையே வெல்லும் எனச் சொல்ல வைக்கிறது.
ஆணும் பெண்ணும் ஒரு குடும்பத்தின் இரு கண்கள் என்ற மேலான தத்துவம் உலகெங்கும் பரவினால் மனித குலம் தொடர்ந்து தழைக்கும்.
************************* அறிவியல் அறிஞர் வாழ்வில்....
சர் ஹம்ப்ரி டேவி இங்கிலாந்தின் பிரபல விஞ்ஞானி. (1778-1829) லண்டனில் ராயல் இன்ஸ்டிடியூட்டில் அவர் இரசாயன பேராசிரியராகப் பணியாற்றி வந்தார்.பொட்டாசியத்தையும் இதர பல இரசாயனங்களையும் இவர் கண்டு பிடித்ததால் மிகவும் பிரபலமானார். நைட்ரஸ் ஆக்ஸைடை மயக்க மருந்தாக உபயோகிக்கலாம் என்பதையும் இவரே கண்டுபிடித்தார். ஆனால் சுரங்கத்தில் விபத்துக்களைத் தவிர்க்க இவர் கண்டுபிடித்த ‘பாதுகாப்பு விளக்கு' (சேஃப்டி லேம்ப்) இவரைப் புகழ் ஏணியின் உச்சிக்கு ஏற்றியது.
உலகில் இவரது புகழ் எந்த அளவுக்குப் பரவி இருந்தது என்பதைக் காட்டும் வண்ணம் ஒரு சிறிய சம்பவம் நடந்தது. ஒரு நாள் அவருக்கு இத்தாலியிலிருந்து வந்த ஒரு கடிதம் டெலிவரி செய்யப்பட்டது. அதில் முகவரியை எழுதும் இடத்தில் இரண்டே இரண்டு வார்த்தைகள்தாம் அரைகுறையாக எழுதப்பட்டிருந்தன. ஸர்டேவி, லாண்ட்ரா இது தான் முகவரியாகத் தரப்பட்ட சொற்கள்! இந்தச் சொற்களுக்கு உரிய அர்த்தம் என்ன என்பதை அஞ்சல் அதிகாரிகள் உடனடியாகக் கண்டுபிடித்து விட்டனர்! இத்தாலியிலிருந்து கடிதம் லண்டனுக்கு வந்ததோடு போஸ்ட்மேன் சரியாக அவரிடம் கடிதத்தைச் சேர்ப்பித்து விட்ட.¡ர்!!
பிரபலங்களுக்கு முகவரியே தேவை இல்லை என்பது சரிதான்!
************************** நன்றி : பாக்யா
|