காஞ்சி மகாமுனிவரின் சமஸ்கிருத குருவாகத் திகழ்ந்த தண்டாங்கோரை சுப்பையா தீட்சிதர் அவர்களின் வம்சாவழி வந்தவர் ஜோதிடர் காயத்ரி பாலசுப்பிரமணியன். தகப்பனார் தெய்வ யக்ஞ ரத்னா ஜோதிடக் கடல் எஸ்.வைத்தியநாதன். தாவரவியலில் இளநிலை அறிவியல் பட்டம் பெற்ற காயத்ரி பாலசுப்பிரமணியன், இதழியல் துறையில் பட்டயம் பெற்றவர். பாண்டிச்சேரி அட்சயா அளித்த 'திருக்கணித மேதை' பட்டமும் திருவாவடுதுறை ஆதீனம் நடத்திய சைவ சித்தாந்தத் தேர்வில் தேர்ச்சி பெற்று, சித்தாந்த நன்மணி பட்டமும் பெற்றார்.
1994 முதல் பன்னிரண்டு ஆண்டு காலம் தகப்பனாரின் வழிகாட்டுதலோடு பெற்ற ஜோதிட அனுபவம், பாண்டிச்சேரி அட்சயா 2006-2007 பஞ்சாங்கம் என்ற முதல் படைப்பாக மலர்ந்தது. இலங்கையிலிருந்து வெளிவரும் 'வீர கேசரி' என்ற தினசரி பத்திரிகை ஆரம்பித்த 'சோதிடகேசரி' என்னும் மாத ஜோதிடப் பத்திரிகையின் பிரதான சோதிடராக ஒரு வருடம் பணியாற்றியவர். மூலிகை மணி மற்றும் ஜோதிட அரசு பத்திரிகைகளில் இவரது பல ஜோதிடக் கட்டுரைகள் வெளிவந்துள்ளன. நிலாச்சாரலிலும் வாராவாரம் ஜோதிடக் கேள்விக்கான பதில்களை அளித்துக்கொண்டு வருகிறார். அஸ்ட்ரோ டைமர்ஸ் டாட் காமின் பிரதான ஜோதிடராக உள்ளார். மேலும் சில இணைய தளங்களுக்கும் ஜோதிட ஆலோசனை வழங்கி வருகிறார்.