 |
இதழ் 334 |
 |
அக்டோபர் 15 2007
|

|
|
| |
 |
add nilacharal to your favourites |
 |
nilacharal as your homepage |
|
|
 | Home
>> | Kids Corner |
| குன்றினைத் துளைத்திட்ட வேர்கள்
- ஆர்.கே.தெரெஸா |
| | "சகோதரி! உனக்குத் தீங்கு செய்த கூட்டத்தைச் சேர்ந்தவன்தான் நான். உன்னுடைய கணவர் உயிருடன் தானிருக்கிறார்" என்றான்.
<<<சென்ற வாரம்
முகத்தைக் கறுப்புத் துணியால் மூடியிருந்த அவனது உடம்பின் பல இடங்களிலிருந்து ரத்தம் கசிந்து கொண்டிருக்க மூச்சிரைத்துக் கொண்டிருந்த அவனைப் பார்த்து பிள்ளைகள் பரிதாபப்பட்டு அவனைத் தூக்கி உட்கார வைத்தனர்.
குட்டி நஜ்மா ஓடிச்சென்று பழைய துணியைக் கொண்டு வந்து காயத்தைத் துடைக்க முனைய பாத்திமா வெந்நீர் கொண்டு வந்து கொடுத்து அதில் துணியை நனைத்து பிழிந்து காயத்தைத் துடைக்கச் செய்தாள். ஹஸன் அவனது காயங்களில் மருந்து தடவினான்.
சுடச்சுட ரொட்டி, சப்ஜி எடுத்து வந்து அவனைச் சாப்பிடச் சொன்னாள் பாத்திமா. தயங்கித் தயங்கிச் சாப்பிட்டுத் தேநீர் குடித்தான். சிறிது தெம்பு வந்தவனாக பக்கத்துச் சுவரில் சாய்ந்து உட்கார்ந்தவன் எதிர்ச்சுவரில் தெரிந்த புகைப்படத்தைப் பார்த்தான். பாத்திமாவைப் பார்த்தான். பிள்ளைகளைப் பார்த்தான். திகைத்தபடி மாறி மாறிப் பார்த்தவன் திடீரென பாத்திமாவின் பாதங்களைப் பற்றியபடி கேவிக் கேவி அழுதான். விழிகள் விரிய அவனையே பார்த்தபடி நின்றனர் பிள்ளைகள். பதறியபடி பாதங்களை இழுத்துக் கொண்டு செய்வதறியாது நின்றாள் பாத்திமா. தன்னை ஆசுவாசப்படுத்தியபடி எதிரிலிருந்த புகைப்படத்தைக் காட்டி, "சகோதரி இது உங்கள் கணவர் புகைப்படம்தானே?" என்று கேட்டதும், "ஆமா, அவர் எங்கள் அப்பாதான்" என்றான் ஹஸன். பாத்திமாவின் கண்களில் கண்ணீர்.
"சகோதரி! உனக்குத் தீங்கு செய்த கூட்டத்தைச் சேர்ந்தவன்தான் நான். உன்னுடைய கணவர் உயிருடன் தானிருக்கிறார்" என்றான்.
நம்ப முடியாமல் அவனைப் பார்த்தாள் பாத்திமா. தீவிரவாதக் கூட்டத்தினர்தானே திடீரென ஒரு நாள் இரவில் வீட்டினுள் நுழைந்து சாப்பிட்டுக் கொண்டிருந்த அவள் கணவரை இழுத்துச் சென்றனர் பத்து ஆண்டுகளுக்கு முன். அதன்பின் அவர் என்ன ஆனார் என்று தெரியாமல் பிள்ளைகளுக்காக விட்டேற்றியாக வாழ்ந்து கொண்டிருக்கிறாள்.
பிள்ளைகளிடம் இன்றுவரை இந்த உண்மையைச் சொல்லாமல் தன் இதயத்தில் பூட்டி வைத்திருந்தாள். ஒரேடியாக அவர் இல்லை என்ற நினைப்பிலேயே பிள்ளைகள் வளரட்டும். அந்தப் பிஞ்சு நெஞ்சங்களில் ஏன் பயத்தையும், பாரத்தையும் ஏற்ற வேண்டுமென்று எண்ணி எல்லாப் பாரத்தையும் அவளே சுமந்து கொண்டிருந்தாள்.
பன்னிரண்டு வயது ஹஸன், பத்து வயது நஜ்மா இருவருக்கும் ஓரளவு புரிந்தது. நம் அப்பா உயிரோடு இருப்பதாகச் சொல்கின்றானே இந்த மனிதன் என்ற ஆனந்தத்தில் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டனர்.
"அங்கிள் எங்கள் அப்பா எங்கே இருக்கிறார்? அவரை உடனே பார்க்கணும். ப்ளீஸ் அங்கிள்" என அந்த மனிதனை உலுக்கினர். அவர்களைப் பரிவுடன் தடவிக் கொடுத்தவன் பத்து ஆண்டுகளுக்கு முன் நடந்ததைக் கூறலானான்.
"அம்மா! எங்கள் கூட்டத்தினர் இங்கு வந்து பல இளைஞர்களை இழுத்துச் சென்று பல வழிகளில் முயன்று எங்களுக்கு அடிபணிய வைத்தனர். படைப்பயிற்சி தந்து நாசகார வேலைகளில் ஈடுபடுத்தினோம். ஆனால் உன் கணவர் அரட்டல், மிரட்டல், சித்ரவதை எல்லாவற்றையும் தாங்கிக் கொண்டு நாட்டின் மீதுள்ள பற்றினால் எங்களுக்கு அடிபணிய மறுத்துவிட்டார். ஆரம்பத்தில் அவர்மீது ஆத்திரப்பட்டாலும் அவரது பொறுமை, நன்னடத்தை, கடவுள் பக்தி, தன் துன்பத்தையும் கடந்து பிறர்க்கு பணிவிடை செய்யும் பாங்கு இவற்றைப் பார்த்தபின், சித்ரவதை செய்வதை நிறுத்திவிட்டு மற்ற வேலைகளில் அவரை ஈடுபடுத்திக் கொண்டோம்".
ஹஸன் ஒரு காகிதத்தில் ஏதோ எழுதி வந்து "அங்கிள்! இந்தக் கடிதத்தை உங்கள் தலைவரிடம் கொடுங்கள். கட்டாயம் அவர் எங்கள் அப்பாவை விட்டு விடுவார்" என்று அவன் கையில் கொடுத்தான்.
"தம்பி, அந்தத் தலைவனே நான்தானப்பா. தீவிரவாதி எனத் தெரிந்தும் எனக்கு உணவு கொடுத்து, உயிர் கொடுத்தவர் நீங்கள். கட்டாயம் உங்கள் அப்பாவை உங்களிடம் திருப்பி விடுகிறேன்" என்றவன் எழுந்து விருட்டென வெளியேறினான்.
தன் கணவரை அந்தத் தீவிரவாதி திருப்பி அனுப்புவான் என்ற நம்பிக்கை பாத்திமாவுக்கு இல்லை. வீட்டுக்குள் வந்த தீவிரவாதியைப் பிடித்துக் கொடுக்க முடியாமல் போய்விட்டதே என்ற வருத்தமே அவளுக்கு மிஞ்சியது.
விடிந்தும் விடியாத அந்தக் காலைப் பொழுதில் தடதடவென கேட்ட மனிதர்களின் காலடியோசை அவர்கள் வீட்டினருகே வந்து நின்றது. கதவு தட்டப்பட்டது. நடுங்கியபடிக் கதவைத் திறந்த பாத்திமாவோடு குழந்தைகளும் சேர்ந்து கொண்டனர்.
பாத்திமாவுக்கு ஆச்சரியம் காத்திருந்தது. அவளது கணவர் தாடியுடன், சோர்ந்த உடலோடு, ஆவல் நிரம்பிய விழிகளுடன் நின்றிருந்தார். அவருக்குப் பின்னால் தீவிரவாதத் தலைவன் மகிழ்ச்சி ததும்பும் முகத்தோடு நின்றிருந்தான். பாத்திமாவுக்குப் பின்னால் நின்றிருந்த பிள்ளைகளைக் கட்டிப்பிடித்து, முத்தமிட்டார் தந்தை. அந்தக் காட்சியை கண்கள் விரிய பார்த்து நின்ற தலைவனிடம், "நன்றி அண்ணா! நீங்கள் சொன்னபடி நடந்து கொண்டீர்கள்" என்று கரங்களைக் கூப்பினாள் பாத்திமா.
"நான் வணங்கத் தகுதியற்றவன். ஈவிரக்கமில்லாமல் எத்தனை விலை மதிப்பில்லா உயிர்களைப் பறித்திருக்கிறேன்! எத்தனை இளைஞர்களின் வாழ்க்கையைத் தொலைத்திருக்கிறேன்! என்னை மனிதனாக்கியது நீயும், உன் பிள்ளைகளும் தான். நீங்கள்தான் வணங்கப்பட வேண்டியவர்கள்" என்று கைக்கூப்பினான். பின், "சகோதரி, இப்போதே நானும் என் குழுவினரும் சரணடையச் செல்கிறோம்" என்று கூறித் தலைகுனிந்தபடித் திரும்பினான்.
"அங்கிள்! பக்கத்துவீட்டு அங்கிளையும் விட்டுவிடுங்களேன்" என்று பிள்ளைகள் பரிவோடு கேட்க, திரும்பிய அவன் "அவர்கள் மட்டுமல்ல. கைதிகளாக இருக்கும் அனைவருமே விரைவில் திரும்பிவிடுவார்கள்" என்றபடி பிள்ளைகளின் கரங்களில் கனிவாக முத்தமிட்டுச் சென்றான் அவன்.
மேலும் பல.....
|
|
|
|
|
Source: suratha.com
|
|