அறிவியலும் தொழில் நுட்பமும் (10)

எஃகு (steel):

இரும்பில் மிகுதியான கார்பன் (carbon) இருப்பதால், மிக எளிதாக அது பிளவுபடக் (crack) கூடியதாக இருக்கிறது. ஓரளவு கார்பனை அதிலிருந்து நீக்கினால், இரும்பு மிக வலிமையான எஃகாக மாற்றமடைகிறது. எஃகிலிருந்து ஏராளமான பொருட்களை உற்பத்தி செய்ய இயலும்; சாதாரண காகிதப் பிடிப்பான்கள் (paper clips) முதல் வானளாவிய கட்டடங்களில் (sky scrappers) அமைக்கப்படும் கட்டுமானத் தூலங்கள் (girders) வரையான பல பொருட்கள் இதில் அடங்கும். எஃகின் மிக முக்கியமான பண்பு நலன் (property) என்னெவெனில், அதனை மீள்சுழற்சி (recycle) செய்து மீண்டும் மீண்டும் பயன்படுத்த இயலும் என்பதே. கார் போன்ற வாகனங்களில் எஃகின் பயன்பாடு மிகுதி. பெரும்பாலான திருகாணிகள் (screws), ஆணிகள், மரைகள் (nuts), தாழ்ப்பாள்கள் (bolts) மற்றும் பாரந்தூக்கிகளின் (cranes) கட்டுமானம் ஆகியவற்றில் எஃகின் பயன்பாடு மிக அதிகம். புத்தம் புதிய கட்டங்களிலும் எஃகு மிகுதியாகப் பயன்படுத்தப்படுகிறது.

துருவேறா (stainless steel) எஃகில் சிறிதளவு நிக்கல் மற்றும் குரோமியம் கலந்திருப்பதால், அதில் துரு பிடிப்பதில்லை. குழாய், தையல் ஊசி, கத்தரிக்கோல், கத்தி போன்ற பல அன்றாடப் பயன்பாட்டுப் பொருட்களும் எஃகினால் ஆனவையே.

ஊது உலைகள் (blast furnaces):

உலோகங்கள் பலவற்றுள்ளும் இரும்பு தான் மிக அதிகமாகப் பயன்படுத்தப்படுவதாகும். காரணம், இது மலிவானது மற்றும் வலிமையானது; எனவே மிகப் பெரிய கட்டடங்கள், பாலங்கள் போன்றவற்றின் கட்டுமானங்களில் மிகுதியாகப் பயன்படுத்தப்படுகிறது. உருக்குதல் (smelting) என்பது வினைகளைக் (reaction) குறைக்கும் முறை; இது இரும்புத் தாதுவிலிருந்து (ore) இரும்பைப் பிரித்தெடுக்கும் முறையாகும். இந்த உருக்குதல் செயற்பாடு ஊது உலையில் மேற்கொள்ளப் படுகிறது. வெப்பக் காற்றானது இந்த உலையினுள் ஊதப்படுவதால் ஊது உலை என்னும் இப்பெயர் உண்டாயிற்று. இரும்புத் தாது, சுண்ணாம்புக்கல், கரி (ஒரு வகையான கார்பன்) ஆகியவற்றை இவ்வுலையினுள் வெப்பமடையச் செய்து, வெப்பக்காற்று இதன் உள்ளே செலுத்தப்படுகிறது. கரியிலுள்ள கார்பன் காற்றிலுள்ள உயிர்வளியுடன் (oxygen) வினை புரிந்து கார்பன் மோனோ ஆக்சைட் (carbon monoxide) உருவாகிறது. தொடர்ந்து இரும்புத் தாதுவிலுள்ள உயிர்வளியை இது எடுத்துக்கொள்வதோடு, இரும்பு ஓரளவு கார்பனோடு கலக்கிறது. இந்நிலையில் உலையினுள் வெப்பநிலை 20000செ.கி. அளவை அடையும்.

எஃகோடு பிற உலோகங்கள் கலக்கப்பெற்று, எஃகு கலந்த கலப்பு உலோகங்கள் (alloys of steel) உண்டாக்கப்படுகின்றன. இவை மிகவும் பயனுள்ளவை. எடுத்துக்காட்டாக, தொடர் வண்டிப் பாதைகள் மாங்கனீஸ் கலந்த எஃகுக் கலப்பு உலோகத்தால்தான் உருவாக்கப்படுகின்றன.

About The Author