அறிவியலும் தொழில் நுட்பமும் ( 19)

தங்கத்தைத் தோண்டி எடுக்கும் தொழில் (Gold mining)

தங்கச் சுரங்கத் தொழிலின் துவக்க காலத்தைக் குறிப்பிட்டுக் கூற இயலாது எனினும், இது ஏறக்குறைய 5000 ஆண்டுகட்கு முன் தொடங்கியிருக்கலாம் என நம்பப்படுகிறது. மேலும் தங்கம் எகிப்து நாட்டில்தான் முதலில் தோண்டி எடுக்கப்பட்டதாக ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர்; தங்கச் சுரங்கத் தொழிலின் பல்வேறு படிநிலைகளைக் (stages) காட்டும் சுவரோவியங்கள் அங்கு காணப்படுகின்றன. ஆற்றுத் தண்ணீரிலிருந்தும் தங்கம் பெறப்பட்டது; நீரிலிருந்து ஆற்று மணலைச் சலித்து, எடை மிகுந்த தங்கத் துகள்களை வடிகட்டி எடுத்தனர். கி.மு. 3000 ஆண்டுகளில் தங்க மோதிரங்கள் ஒரு வகை ஊதியமாகத் தரப்பட்டதாம். நாணயங்களாகத் தங்கம் வழங்கப்பட்டதோடு, அணிகலன்களாகவும் அது பயன்படுத்தப்பட்டது. சுமார் கி.மு.2000 ஆண்டுகளில் தரைக்கு அடியில் இருந்து தங்கத் தாதுப் பொருட்களைக் (ores) கண்டறிந்து, அவற்றிலிருந்து தங்கம் பெறப்பட்டது.

கிரேக்கர்களும் ரோமானியர்களும் இத்தொழிலில் சிறந்து விளங்கினர். தங்கம் அதன் தரத்திற்கேற்ப நாணயத்திற்கு மாற்றாகவும் பயன்படுத்தப்பட்டு வந்துள்ளது. பிரிட்டனில் இந்த நாணய மாற்றுமுறை 1821ஆண்டு அறிமுகப்பட்டது என்று வரலாற்றாய்வாளர்கள் கூறுகின்றனர்.

வண்ணக் கண்ணாடிச் சாளரங்கள் (stained glass windows)

வரலாற்று ஆவணங்களும் அகழ்வுகளும் (excavations) 12ஆம் நூற்றாண்டிலேயே வண்ணக் கண்ணாடிகளின் பயன்பட்டைப் பற்றி அறிவிக்கின்றன. படக் கதைகள் (pictorial stories) பலவற்றைப் பற்றி விளக்கும் வண்ணக்கண்ணாடிச் சாளரங்கள் மேற்கு ஐரோப்பிய நாட்டின் கண்டுபிடிப்பைப் பற்றிய உண்மைகளை விவரிக்கின்றன.

கி.பி 240ஆண்டு வாக்கிலான சமயக் கட்டுரைகள் கிறித்துவ தேவாலயங்களின் சாளரங்களில் அமைந்திருந்த வண்ணக் கூறுகள் கொண்ட கண்ணாடிகளைப் பற்றி கூறுகின்றன. வரலாற்றின் இடைக்காலப்பகுதி [medieval period] (கி.பி 100 -1500க்கு இடைப்பட்ட காலம்) சார்ந்த வண்ணக் கண்ணாடிச் சாளரங்களே அவற்றிற்கு அடிப்படையாக அமைந்துள்ளவை. சாளரத்தின் கதவுகள் மெல்லிய சலவைக்கல் அல்லது மரத்திலான பலகைகளில் துளைகளுடன் அமைந்திருந்தன. இத்துளைகளில் வண்ணக்கண்ணாடிகள் பொருததப்பட்டிருந்தன; இது மொசைக் (mosaic) சாளரம் எனப்பட்டது. சாளரங்களில் கவர்ச்சியான வடிவமைப்புகளைக் கொண்ட கண்ணாடிகளை ஒன்றிணைக்க ஈயம் பூசும் முறையும் பயன்படுத்தப்பட்டதாகத் தெரிகிறது.

இடைக்காலப் பகுதியில் கட்டப்பட்ட கோட்டைகளின் வட்டவடிவ மணிக்கோபுரங்கள் (circular turrets) குறுகிய கீற்றுப் பிளவுகளுடன் (slits) அமைந்திருந்தன. இப்பிளவுகள் சாளரங்கள் போன்று அமைந்திருந்ததுடன், அம்புகள் நுழையாமல் தடுக்கும் அரண்களாகவும் விளங்கின.

About The Author