அறிவியலும் தொழில் நுட்பமும் (8)

கப்பல்களில் திசையறிவதற்கான நுண்ணலைகள் (microwaves)

நுண்ணலைகள் என்பவை ஒரு வகையான கதிர்வீச்சு (radiation) ஆகும். சாதரண வானொலி அலைகளைத் தடுக்கும் மழை, பனி போன்றவற்றையும் கூட இவை ஊடுருவிச் செல்லக்கூடியவை. நுண்ணலைகளைக் குவியச் செய்து (focus) குறுகிய ஒளியாகவும் (narrow beam) அனுப்ப இயலும்; இதனால் நீண்ட தூரத்துக்கு வானொலிச் செய்திகளை ஒலி பரப்ப இயலுகிறது.

கப்பல்கள் இந்த நுண்ணலைகளைத் திசை காட்டுவதற்குப்/அறிவதற்குப் பயன்படுத்துகின்றன. கப்பலில் உள்ள ரேடார் திரை (radar screen), தூரத்திலுள்ள பொருட்களை நுண்ணலைக் கதிர்வீச்சின் வாயிலாகக் கண்டறிகிறது. நுண்ணலைகள் பொதுவாக ஒரு வட்டத்தில் ஸ்கேன் (scan) செய்து அதனால் அனுப்பப்படும் எதிரொலிகள் (echoes) திரையில் ஓர் உருவத்தை (image) உண்டாக்குகின்றன.

விமானப் பயணக் கட்டுப்பாடுகளிலும் இதே அமைப்பு, விமானம் குறிப்பிட்ட நேரத்தில் எங்கிருக்கிறது என்பதைத் துல்லியமாக அறிவதற்குப் பயன்படுத்தப்படுகிறது. விமானம் புறப்படும் போதும், தரையிறங்கும் போதும் பாதுகாப்பாக இருப்பதை உறுதி செய்வது முக்கியம்; இதற்கு இவ்வமைப்பு பெரிதும் துணை நிற்கிறது.

மின்னல் (lightning) பளிச்சென ஒளி வீசுதல் (flash):

வளி மண்டலம் (atmosphere) வெப்பமடையும் போதும், குளிர்ச்சி அடையும் போதும், விரிவடைந்து மற்றும் சுருக்கமடைந்து, அதனால் காற்றின் அசைவிலும் அழுத்தத்திலும் மாற்றங்கள் ஏற்படுகின்றன. முகில்களுக்குள்ளே இருக்கும் நீர்த் திவலைகள் (water droplets) முகிலுக்கு மேலே நேர் மின்னூட்டமும் (positive electrical charge) கீழே எதிர் மின்னூட்டமும் (negative electrical charge) கொண்டுள்ளன. முகிலின் எதிர் மின்னூட்டமானது, கீழே புவியின் மேலுள்ள அல்லது வேறொரு முகிலில் உள்ள நேர் மின்னூட்டத்துக்கு அருகில் வரும்போது, மின்னாற்றலானது ஒளிக்கற்றையாக வெளிப்படுத்தப் படுகிறது. அதே நேரத்தில் பேரொலியுடன் கூடிய இடியும் கூட உண்டாகலாம். அருகிலுள்ள காற்று மின்னொளியால் பெருமளவுக்குத் திடீரென வெப்பமடைந்து விரிவடைவதால் மிகுந்த ஒலியுடன் கூடிய இந்த இடிச் சத்தம் கேட்கிறது. இருப்பினும், ஒளியானது ஒலியை விட வேகமாகப் பயணம் செய்வதால் மின்னல் முதலிலும் இடியொலி பின்னரும் உண்டாகின்றன.

About The Author