அறிவியல் முத்துக்கள் (15)

உயிரியல் கடிகாரம் (Biological clock)

உயிர் வாழும் அனைத்து உயிரினங்களிடமும் காணப்படும் நேர அமைப்பின் உள் கட்டமைப்பே உயிரியல் கடிகாரம் எனப்படும். உயிரினங்களின் பல்வேறு நடவடிக்கைகள், பகல்-இரவு போன்ற வழக்கமான சுற்றுச் சூழல் சுழற்சிக்கு ஏற்ப, நேரக் கட்டமைப்பில் ஒழுங்குபடுத்தப்படுகின்றன. உறங்குதல், விழித்தெழுதல் மற்றும் பல்வேறு உடற் செயற்பாடுகள் ஆகியவை 24 மணி நேரக் காலச் சுழற்சியில் ஒவ்வொரு நாளும் மீண்டும் மீண்டும் வருகின்றன. எனவேதான் இதனை ஒத்திசைவு (rhytham) என்கிறோம். பகல் மற்றும் இரவு, கடல் அலைகளின் இயக்கம், நிலவின் மாற்றங்கள், ஆண்டின் பருவ வேறுபாடுகள் போன்ற ஒத்திசைவு மாற்றங்கள் ஒரு ஒழுங்குமுறையோடு நடைபெற்று வருகின்றன. இந்த ஒத்திசைவுகள் மாற்றப்படவும் அதன் வாயிலாக உயிரியல் கடிகாரத்தை மாற்றவும் இயலும்; எடுத்துக்காட்டாக ஒரு குறிப்பிட்ட வெப்ப நிலையில் தாவரம் ஒன்றை வளர்த்தல், விலங்கு ஒன்றை இயல்பான நிலைக்கு மாறாக ஒளி வெள்ளத்தில் மூழ்கச் செய்தல் போன்றவற்றைக் கூறலாம்.

இருபத்திநான்கு மணி நேரக் காலகட்டச் சுழற்சிகள் இருக்கின்றன. மனித உயிரினங்களுக்கு நாள், வார, மாத, ஆண்டு உயிரியல் கடிகாரங்கள் உள்ளன. இக்காலங்கள் ஒவ்வொன்றிலும் ஹார்மோன் அளவு, இரத்தத்திலுள்ள பிற வேதிப் பொருட்களின் அளவு ஆகியவை மாறலாம்.

உயிரியல் கடிகாரத்தின் விளைவுகளுள் ஒன்றாக நீண்ட தூரம் பயணம் செய்வோருக்கு ஏற்படும் விமானப் பயணக் களைப்பைக் (jet lag) குறிப்பிடலாம்.

உடல் திசு ஆய்வு (Biopsy)

ஓர் உடலுறுப்பில் வழக்கத்திற்கு மாறான வளர்ச்சி இருக்குமானால், நுண்ணோக்கி மூலம் பரிசோதனை செய்வதற்கு, தேவைப்படும் திசுக்களை பாதிக்கப் பட்ட அவ்வுறுப்பிலிருந்து பெறும் எளிமைப் படுத்தப்பட்ட செயல்முறையே உடல் திசு ஆய்வு எனப்படும்.

கல்லீரல் (liver) அல்லது சிறுநீரகம் போன்ற ஆழமான பகுதிகளில் இருக்கும் உடலுறுப்புகளிலிருந்து திசுவைப் (tissue) பெற உட்புழை (hollow) கொண்ட ஊசி ஒன்று பயன்படுத்தப்படும். மென்மையான எலும்பு மஜ்ஜை (marrow) போன்றவையும் ஊசி மூலம் உறிஞ்சி எடுக்கப்படும்.

திசுவை எடுத்த பின்னர், அதைப் பாதுகாக்கும் பொருட்டு, உறையவைக்கப்படும் அல்லது மெழுகில் பதிக்கப்படும். பின்னர் துண்டுகளாக நறுக்கப்பட்டு, தெளிவுக்காக வண்ணம் பூசப்படும்; நுண்ணோக்காடி (microsope) வாயிலாகச் சோதித்து, திசு புற்று நோயால் பாதிக்கப்பட்டுள்ளதா, இல்லையா என்பது கண்டறியப்படும்.

சில வகைப் புற்று நோய்களில், திசுவில் நடத்தப்பெறும் உடல் திசு ஆய்வு முக்கியமானது. முன்னமே கண்டறியப்பட்டால், அறுவை சிகிச்சை அல்லது வேதியியல் சிகிச்சை (Chemotherapy) வாயிலாக புற்று நோய் உயிரணுக்கள் உடலின் பிற பகுதிகளுக்குப் பரவாமல் தடுக்கப்படும்.

உடல் திசு ஆய்வு நடத்தப்பட்ட பிறகு, பின் விளைவுகள் உண்டாவதில்லை; இதற்குப்பின் ஏற்படும் வலியும் இரண்டொரு நாட்களில் மறைந்துவிடும். இரத்தக் கசிவுக்குப் பின் தோலில் ஏற்படும் இரத்தக் கறையும் கூட உடனடியாக மறைந்து போகும்.”

About The Author