அறிவியல் முத்துக்கள் (19)

கார்பன்-வயது (carbon-dating)

Carbon-datingமிகப் பழைய பொருள்களின் வயதை அல்லது காலத்தைக் கண்டறியும் தொழில் நுட்ப முறையே ரேடியோ கார்பன் வயது எனப்படுகிறது. 12c, 13c மற்றும் 14c எனப்படும் மூன்று ஐசோடோப் (ஓரகத்தனிமம்) வடிவங்களில் கார்பன் அமைந்துள்ளது. வளிமண்டலத்தின் (Atmosphere) மேற்பகுதியில் காற்றிலுள்ள நைட்ரஜன், காஸ்மிக் கதிர்களுடன் வெடிப்புறும் போது சிறிய அளவிலான, 14c எனப்படும் கதிர்வீச்சு (radioactive) ஐசோடாப்கள் உருவாகின்றன. இந்த 14c, புவியின் வளிமண்டலம் முழுவதும் கார்பன்-டை-ஆக்சைடாக (CO2) பரவி தாவரங்களால் ஏற்றுக் கொள்ளப்பட்டு பின்னர் விலங்குகளிடமும் உணவின் வாயிலாகச் சென்று சேர்கிறது. தாவரங்கள் 12cஐயும் கார்பன் டை ஆக்சைடாகப் பெறுகிறது. எனவே 12cக்கும் 14cக்கும் இடையேயான விகிதம் வளிமண்டலத்திலும், உயிரினங்களிலும் மாறாமல் அமைகிறது. இருப்பினும் உயிரினங்கள் மடியும்போது, 14cஇன் வழங்கல் புதுப்பிக்கப்படாமல் அதன் அளவு கதிர்வீச்சின் சிதைவினால் படிப்படியாகக் குறைகிறது; ஆனால் 12cஇன் அளவு மட்டும் அப்படியே மாறாமல் இருக்கிறது. இதனால் 5760 ஆண்டுகள் இறுதியில் கதிர்வீச்சு அளவு சரியாகப் பாதியாகக் குறைந்து விடுகிறது; இவ்விதமாக 5760 ஆண்டு இறுதியில் 12cக்கும் 14cக்கும் இடையேயான விகிதம் பாதியாகக் குறைந்து விடுகிறது. ஒரு குறிபிட்ட நிலையில் உயிரினங்கள் மடியும் காலத்திற்கு ஏற்ப இது எத்தகைய பகுதியாகவும், கூறாகவும் அமையலாம். இவ்வாறு ஒரு மரத்துண்டு அல்லது எலும்பு போன்ற பொருளின் வயதை, அப்பொருள்களின் 12cக்கும் 14cக்கும் இடையேயான விகிதத்தைக் கணக்கிட்டு அதனை வளிமண்டலத்தில் உள்ள அவ்விரு ஐசோடாப்களின் விகிதத்தைத் தொடர்புபடுத்தித் தீர்மானிக்க முடியும்.

சி டி/சி ஏ.டி ஸ்கேன் (CT/CAT Scan)

CT Scanசி ஏ டி ஸ்கேன் என்பது Computerised Axial Tomography Scan என்பதன் சுருக்கமாகும். சில நேரங்களில் இதனை சி டி ஸ்கேன் எனவும் அழைப்பர். தமிழில் இதனை "கணினி ஊடுகதிர் உள்தளப்பட முறை" எனக் கூறலாம். உடலின் மெல்லிய துண்டுப்பகுதிகளில் அறுவை ஆயுதம் எதனையும் பயன் படுத்தாமல் எக்ஸ்-கதிர்ப் (X-ray) படங்களைப் பெறும் கணிப்பொறி உத்தியாகும் இது. வழக்கமான எக்ஸ்-கதிர் உத்திகளைப் பயன்படுத்தி ஒளிப்படம் எடுக்க இயலாத மூளை போன்ற மென்மையான திசுக்கள் அல்லது ஈரல் போன்ற உறுப்புகள் ஆகிய உடற்பகுதிகளில் உள்ள கட்டிகள் அல்லது அடைபட்ட இரத்த நாளங்கள் ஆகியவற்றைக் கண்டறிவதற்கு இந்த சி டி ஸ்கேன் வழிமுறை உதவி செய்கிறது.

எனவே சி டி ஸ்கேனிங் என்பது வழக்கமான எக்ஸ்-கதிர் தொழில் நுட்பத்தின் மாற்றியமைக்கப்பட்ட (modified) முறை எனலாம். இம்முறையில் ஸ்கேன் செய்யப்பட வேண்டிய உடற்பகுதி ஒரு வளையத்தின் உட்பகுதியில் இருக்குமாறு வைக்கப்படுகிறது. வளையத்தின் ஒரு பக்கம் எக்ஸ்-கதிர் கருவியும் (X-ray gun), எதிர்ப்பக்கம் உற்றறி கருவியும் (detector) அமைந்திருக்கும். எக்ஸ்-கதிர் ஒளிக்கற்றை (beam) உடல் வழியே கடந்து உற்றறி கருவியைச் சென்றடையும்.

ஸ்கேன் செய்யும் போது, உடலின் ஒவ்வொரு பகுதியும் எக்ஸ்-கதிர் கருவியில் படுமாறு வளையம் முழுதும் மெதுவாகச் உடலைச் சுற்றி வரும். உடலை விட்டு வெளிவரும் எக்ஸ்-கதிரின் தீவிரம் (intensity) எக்ஸ்-கதிர் ஒளிக்கற்றையின் வழியே வரும் உடலுறுப்பின் அடர்த்தியைப் (density) பொறுத்து அமையும். இவ்வாறு உடலில் இருந்து வெளிவரும் பல்வேறுபட்ட எக்ஸ்-கதிர்களை உற்றறி கருவி பதிவு செய்யும். இக்கருவியுடன் இணைக்கப்பட்டுள்ள கணினியில் அவை ஸ்கேன் செய்யப்பட்ட படங்களாகப் பதிவாகும்.

About The Author